ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
காந்தமாய் ஈர்த்திடும் உன் கருவிழிகளும்
கூறி விடுகிறது உன் காதலை..
அலையெனப் பறந்திடும் உன் கார்குழலும்
விளம்பிவிடுகிறது உன் காதலை..
நித்தமும் வெளிவரும் உன் சுவாசமும் கூட
உரைத்துவிடுகிறது உன் காதலை.. –ஆனால்
தீந்தமிழ் பொழியும் தீஞ்சுவை இதழும்
மௌனம் கொள்ளும் காரணம் யாதோ?
மொட்டவிழாமல் மணம் பரப்புவதில்லை மெளவல் …
உன் உதடு பிரியாமல் கரைசேர்வதாயில்லை நம் காதல்…
கைக்கிளையால் கரைந்திடும் என்னை
கரைசேர்த்து உயிர் காக்க – உந்தன்
இதழ்கள் பிரித்து நம் காதல் சேர்த்து
இரு இதயம் கோர்த்திடு கண்மணியே..
கிருஷ்ணாவுடனான தனது சந்திப்புகளைப் பற்றி, அவனுடன் தான் கழித்த காலங்கள் பற்றித் தன்யா ஞாபகப்படுத்தியதும் அபிக்கு மனதெங்கும் பட்டாம்பூச்சியாய் அவன் நினைவுகள்.
ஆனால் எதையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் இருந்தவளோ, தன் முகத்தைச் சலனமின்றி வைத்துக் கொண்டு அமைதியாயிருந்தாள்.
தன்யா மேலும், “என்ன அபி… பதிலையே காணோம்?” என்று வினவவும்
“என்ன பதில் சொல்லணும்?” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.
அதற்கு அவளை முறைத்த தன்யா, “ஹ்ம்ம்.. என் அண்ணன் எதுக்கு உன் கால்ல விழுந்தான்ற கேள்விக்கு நீ பதில் சொல்லணும்” என்று கேட்டாள்.
ஆனால் அதற்கு அபி, “அப்படியெல்லாம் எதுவும் நடக்கல தனு, உன் அண்ணன் ஏதோ விளையாட்டா சொல்லியிருப்பார்” என்று கூறிவிட்டு, “எனக்குக் கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருக்கு” என்று சொல்லி கண்களை இறுக்க மூடிக்கொண்டு உறங்குவதாய்ப் பாவனைச் செய்தாள்.
அவளை யோசனையுடன் நோக்கிய தன்யாவும், அதற்குமேல் அவளிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாது விட்டுவிட்டாள்.
வீடு வந்து சேர்ந்ததும், வீட்டின் கூடத்தில் இருந்த யாரையும் கண்டுகொள்ளாது, கோவேந்தனின், “என்னமா ஷாப்பிங் எல்லாம் எப்படிப் போச்சு?” என்ற கேள்விக்கும் பதிலுரைக்காது விறுவிறுவெனத் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள் அபி.
அவளை ஆச்சர்யமாகப் பார்த்த கோவேந்தன், அடுத்து வந்த தன்யாவிடம், “என்ன டா… அபி இப்படிப் பதிலே பேசாம கண்டுக்காம போறா? இப்படி எல்லாம் அவ நடந்துக்க மாட்டாளே? என்ன ஆச்சு?” என்று வினவினார்.
அதற்கு அப்பொழுது தான் அங்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்த்துக் கொண்டே, “ஹ்ம்ம்… அது ஒண்ணுமில்லப்பா.. ஒருத்தரப் பத்தி பேச்செடுத்ததுமே, அபி அரண்டு மிரண்டு போய்ப் பயந்துட்டா. கொஞ்சம் தலைவலி வேற, அதான் நீங்க பேசினதக் கண்டுக்காம போய்ட்டா. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று கூறினாள்.
உடனே கோவேந்தனோ, “ச்சே.. ச்சே.. நான் தப்பா எல்லாம் எடுத்துக்கலடா. அவளுக்கு மறுபடியும் அவ அப்பா ஞாபகம் வந்து மனசு வேதனை படறாளோன்னு தான். நீ யாரோ ஒருத்தரோட பேச்சு எடுத்தேன்னு சொன்னியே? யார் அது? அவளை அவ்வளவு டிஸ்டர்ப் பண்றது?” என்று வினவினார்.
“அதுவா… அது வந்து ஒருத்தர்… அது எதுக்கு உங்களுக்கு? ஒரு அப்பாவா, மாமாவா இதெல்லாம் நீங்க கண்டும் காணாம இருந்துக்கணும். வயசு தான் ஆகிடுச்சுல்ல, இன்னும் சின்னப் பசங்க விசயத்துல தலையிட்டுட்டு இருக்கீங்க?” என்று சற்று அவரிடம் எகிறி அவரின் வாயை ஒருவாறு அடைத்தவள், அபியின் சாமான்களை அவளிடம் ஒப்படைப்பதற்கு அவளின் அறையை நோக்கித் திரும்பினாள் அவள்.
உடனே தனது தங்கையைத் தடுத்த கிருஷ்ணா, “நில்லு தனு. எங்க போற?” என்றான்.
“இது எல்லாம் அபியோட திங்ஸ், அத அவகிட்ட கொடுக்கப் போறேன்”
“சரி கொடு நானே அவகிட்ட கொடுத்துக்கறேன்” என்று கூறிவிட்டு, தன்யாவிடமிருந்து பிடுங்காத குறையாக அபியின் சாமான்களைப் பெற்றுச் செல்லவும், கோவேந்தன் அவனிடம், “எனக்கென்னமோ இது சரியாப்படல டா மகனே.. ” என்று கூறினார்.
அவரைத் திரும்பிப் பார்த்த கிருஷ்ணாவோ, “ஓஹோ.. உங்களுக்குச் சரியாப்படலயா.. அப்போ எல்லாம் சரியா தான் நடக்கும்” என்று கூறிவிட்டு ஒரு மென்சிரிப்புடன் சென்றான்.
இதையெல்லாம் பெரியவர் அரங்கநாதன் யாரும் அறியாமல் ஒரு ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
இங்குக் கிருஷ்ணா, பேருக்கு அபியின் அறைக்கதவை இருமுறை தட்டிவிட்டு அந்த அறையினுள் சென்றான்.
அவன் வருகையை உணர்ந்த அபி, அடித்துப் பிடித்துப் படுக்கையில் இருந்து எழுந்து அவனைக் கோபமாய்ப் பார்த்து முறைத்தாள்.
“ஹப்பா.. உன் ரூம் ஏன் இவ்வளவு சூடா இருக்கு?” என்று மறைமுகமாய் அவளது கோபத்தைக் கேலி செய்தவன், “AC ஆன் பண்ணி வச்சுக்கலாம் இல்ல?” என்று கேட்டுக் கொண்டே அதை இயக்கினான்.
அபி அவனை முறைக்கும் செயலை மட்டும் குறைவின்றிச் செய்து கொண்டிருந்தாள்.
திரும்பி அவளைப் பார்த்த கிருஷ்ணா, “என்ன அபி.. இப்படி என்ன முறைச்சுட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்றதும், அவனை விட்டுப் பார்வையை விலக்கியவள், திரும்பி வெளியே செல்ல எத்தனித்தாள்.
அதைக் கண்ட கிருஷ்ணா, அவளைத் தடுத்து விட்டு… “ஏன்… ஏன் அபி இப்படி என்ன விட்டு விலகிப் போற?” என்று அவளது கையைப் பிடித்துக் கேட்டதும் படபடப்புடன் தனது கையை உதறிக் கொண்டு பயந்து போய் நின்றாள்.
அவளது பயந்த முகத்தினைக் கண்டவன் மனம் சற்று இளகியது.
“நீ இப்படி என்ன பார்த்தது பயப்படற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னு தான் தெரியல. உன் கண்ணுல என் மேல அளவு கடந்த காதல் இருக்கு. ஆனா அதுக்குக் கொஞ்சம் கூடக் குறைவில்லாம பயமும் இருக்கு. அதுக்கான காரணம் என்னன்னு தெரில. நீ ஏன் என்ன ஏத்துக்க மறுக்கறன்னும் புரியல. காலேஜ்ல படிக்கறப்போ தான் உனக்கு மெச்சூரிட்டி இல்லன்னு சொன்ன. அதுக்காக நான் உனக்கு அஞ்சு வருஷம் டைம் குடுத்தேன். ஆனா அந்த அஞ்சு வருஷம் கழிஞ்சும் கூட நீ மனசு மாறல. ஏன்… ஏன் என்ன விட்டு விலகனும்னு நினைக்கற?” என்று இத்தனை வருடங்களாக அவன் மனதில் இருந்த ஆதங்கமெல்லாம் கரைபுரண்டு காட்டாற்று வெள்ளமாய்ப் பெருக்கெடுக்க, அவளைக் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டான்.
ஆனால் அத்தனைக்கும் அபி நிதானமாகவே பதில் தந்தாள்.
“நீங்க என்ன காதலிக்கறீங்கன்றதுக்காக நான் உங்கள காதலிக்க முடியாது கிருஷ்ணா. உங்களுக்கு என்ன பார்த்ததும் காதல் வந்துருக்கலாம். ஆனா… எனக்கு இந்த அஞ்சு வருஷத்துல.. உங்கள முதல் முதலா பார்த்த நாள்ல இருந்து கணக்கு எடுத்தா.. மொத்தம் ஆறு வருஷத்துல.. உங்கமேல காதல் வரல. ஐம் சாரி..” என்று கூறி முடித்தாள்.
அவளது இந்தப் பதிலைக் கேட்டதும், வம்சி கிருஷ்ணாவின் முகம் உணர்ச்சியற்றதாய் ஆனது.
ஆனால் வேறெதுவும் வாதாடாது, அவளது நிதானத்தைத் தானும் கையிலெடுத்தான். அவன் ஒற்றை வார்த்தையில் அவள் கூறியதை “பொய்” என மறுத்தான்.
“இது பொய் இல்ல கிருஷ்ணா.. எனக்கு நிஜமாவே உங்க மேல காதல் வரல” என்று கூறியவளைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.
“நீ எவ்வளவு தான் திறமையா நடிச்சாலும் உன்னோட கண் உன்ன காட்டிக் கொடுத்துடுது அபி. அது மட்டுமில்லாம, உன்னப் பத்தி நல்லா புரிஞ்சவன் நான். சோ இதெல்லாம் என்கிட்டே செல்லுபடி ஆகாது” என்று கூறியதும் சிறு கோபம் வந்தது அபிக்கு.
“உங்களுக்கு என்னப் பத்தி எதுவும் தெரியாது கிருஷ்ணா, நீங்க தெரிஞ்சுக்கவும் வேணாம். இன்னும் எத்தனை வருஷம் கேட்டாலும் என் முடிவு மாறப் போறது இல்ல. நீங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்று அவனை விரட்டாத குறையாகக் கிளப்பினாள்.
“ஹ்ம்ம் எனக்கு உன் பேர் என்னனு தெரியாம இருந்திருக்கலாம். நீ தான் என் அத்தை பொண்ணுனு தெரியாம இருந்திருக்கலாம், இன்னும் என்னென்ன உண்மைகள் வேணாலும் எனக்குத் தெரியாம இருந்துருக்கலாம். ஆனா.. உன் மனசுல நான் தான்… நான் மட்டும் தான் இருக்கேன்னு எனக்கு நல்லாத் தெரியும்.” என்று கூறிவிட்டு வெளியேற நினைத்தவன்..
சற்று திரும்பி, “கண்டிப்பா.. இந்தக் கிருஷ்ணாவோட வம்சி நீ தான்” என்று கூறியதும் தூக்கி வாரிப்போட்டது அபிக்கு.
“இது எப்படி அவனுக்குத் தெரியும்? ஒருவேளை என்னோட டயரிய அவன் பார்த்திருப்பானோ?” என்று பதட்டத்துடன், மேஜை இழுப்பறையில் அவள் தேடத் துவங்கிய நேரம்
அவன் மீண்டும் அவளருகே வந்து, “இந்த மாயோனின் வேங்குழல் நானாகிடவோனு அவ்வளவு காதலோடு எழுதியும் கூட ஏன் இப்படி என்ன ஒதுக்கற?” என்று கிசுகிசுப்புடன் கேட்டான்.
அதில் மேலும் அதிர்ந்தவள்.. இரண்டெட்டு பின்னே நகர, மேலும்.. “உன் டயரில கடைசிப் பக்கங்களைப் பாரு” என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பி விட்டான்.
அவன் வெளியேறியதும் சட்டென ஓடிச் சென்று அறைக்கதவை தாளிட்டவள், அவசர அவசரமாகத் தனது டயரியைத் தேடி எடுத்து, அதன் கடைசிப் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தாள்.
அதில் அவளுக்காய் அவன் உருகி உருகி இழைத்த காதல் கவிதைகளின் வரிகள் அவளையும் அறியாது அவளது கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளியை துளிர்க்கச் செய்தன.
அவளது சம்மதம் என்ற ஒற்றை வார்த்தைக்காய்.. அவன் எதற்காக இத்தனை நாட்கள்.. இத்தனை காலங்கள் தவம் இருக்க வேண்டும்?
இவன் இப்படி என்னைக் காதலிக்க… தான் இவனுக்கு என்ன செய்தோம். எதன் பொருட்டு கிருஷ்ணாவுக்குத் தன் மேல் இத்தகைய காதல்? அவனின் காதலில் திளைக்கத் தனக்குத் தான் முழுத்தகுதி இல்லை என்று எண்ணினாள் அபி.
‘ஆனால் இத்தனை காதலும், தன்னைப் பற்றிய முழுஉண்மை தெரிந்தால் என்னாகுமோ?’ என்ற பயம் பெரும் பூதமாய் எழுந்து அவளை விழுங்கிட முனைந்தது.
இத்தனை சிந்தனைகளும், அச்சங்களும் சேர்ந்து அவள் தலையை மேலும் அழுத்த… நிஜமாகவே தலைவலி வந்து விட்டது அவளுக்கு.
எனவே சிறிது மனச்சாந்தி வேண்டுமென்பதற்காக, தனது குடும்பப் புகைப்படத்தை எடுத்தவள், அதில் தன் இரு அன்னைகளிடமும் தனது மனத்தினை மானஸீகமாகக் கொட்டினாள்.
பின்னர் சிறிது நேரத்திலேயே அறைக்கதவு மீண்டும் தட்டப்பட, அவசரமாக அந்தப் புகைப்படத்தினைத் தனது துணி வைக்கும் அலமாரியில் ஒளித்து வைத்துவிட்டு கதவைத் திறக்கப் போனாள்.
அந்தப் புகைப்படமோ, பல மர்மங்களைத் தன்னுள் புதைத்து அமைதியாக அலமாரியில் துயிலத் தொடங்கியது.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
GIPHY App Key not set. Please check settings