in

இருக்கும் இடத்தை விட்டு (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

இருக்கும் இடத்தை விட்டு

ன் வீட்டு வாசலில் வந்து நின்ற கால் டாக்ஸியை ஆச்சர்யத்துடன் பார்த்தார் லக்ஷ்மி. அதிலிருந்து இறங்கிய நந்திதாவை அதை விட ஆச்சரியமாகப் பார்த்தார்
வெள்ளிக்கிழமையும் அதுவுமாக, விளக்கு வைத்த பிறகு கையில் இரண்டு குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு பெட்டிகளோடு வந்த மகளைப் பார்த்து  ஆச்சர்யப்படாமல் என்ன செய்வார்?
“பாட்டி” என  கத்திக்  கொண்டு அம்மாவின் கைகளை உதறி விட்டு பாட்டியின் கைகளை ஓடி வந்து  பிடித்துக் கொண்டனர் பேரன் தீபக்கும், பேத்தி திவ்யாவும்.
“என்னடி நந்திதா, மாப்பிள்ளை வரவில்லையா? நீ மட்டும் தனியாவா வந்த?” எனக் கேட்டார் லட்சுமி.
“எல்லா விசாரணையும் தெருவிலேயா அம்மா?  வந்தவளை வா என்று கூப்பிடாமல் என்ன அம்மா நீ” என்று கடுகடுத்த நந்திதா வேகமாக உள்ளே சென்றாள்.
சோபாவில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அவள் அப்பா, ”வாம்மா, மாப்பிள்ளை வரவில்லையா?” எனவும்
“வந்தவளை விட்டுட்டு வராதவரை பத்தி என்ன விசாரிப்பு வேண்டியிருக்கு?” என நொடித்தாள் நந்திதா

சப்தம் கேட்டு அவள் அண்ணிகள் சாந்தா, நளினி இருவரும் மாடியிலிருந்து, இறங்கி வந்தனர். தலையை மட்டும் அசைத்து அவளை வரவேற்றார்கள்.

வந்தவளை  “வா” என்று கூட  அவர்கள் எப்போதும் கூப்பிடுவதில்லை. நந்திதாவும் அதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. என் அப்பா வீடு என்று அவளும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை

நந்திதா மிக அழகாக இருப்பாள். சந்தனமும் பாலும்  கலந்த ஒரு நிறம்,  சுருண்டு நீண்ட கூந்தல், பரந்த நெற்றி. விசாலமான அழகிய  கண்கள் லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்த உதடுகள், கொடி போல் மெலிந்து உயர்ந்த உடல்

இஞ்ஜினீயரிங்கில் முதுநிலைப் பட்டதாரி. பெரிய ஐ.டி. கம்பெனியில்  டீம் லீடராக இருக்கிறாள், கொஞ்சம் அமைதியானவளும் கூட. இதையெல்லாம் பார்த்து மயங்கிய அவளுடன் பணிபுரிந்த  திவாகர், பிடிவாதமாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டான்

எங்கு சென்றாலும் அவளையே சுற்றி வருவான். அவள் அம்மா வீட்டிற்கு வந்தால் கூட தனியாக விட மாட்டான். அப்படிப்பட்டவள்  குழந்தைகளை அழைத்துக் கொண்டு  பெட்டிகளோடு  வருவதென்றால், சாந்தாவும்  நளினியும் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்

நந்திதாவின் அழகைப்  பார்த்து, அவள் படிப்பு, வேலையைப் பார்த்து  அவள் அண்ணிகள் இருவருக்கும் பொறாமை. நந்திதாவிடம் திவாகர் காட்டும் நெருக்கம் கண்டு எரிச்சல் கொண்டனர்

அப்படி நகமும் இதையும் போல் இருந்தவர்கள், எப்படி இவள் மட்டும் தனியே குழந்தைகளோடு வந்தாள் என்று ஆச்சரியப்பட்டனர். புரியாமல் ஒருவரைப் பார்த்து ஒருவர் கேலியாக புன்னகைத்துக் கொண்டு, மீண்டும் மாடி படியேறிச் சென்று விட்டனர்.

நந்திதாவின் முகத்தைப் பார்த்த அவள் பெற்றோர் நிலைமை ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டனர். ஆனால் இப்போது கேட்டால் ஒழுங்காக பதில் சொல்ல மாட்டாள், நாளைக் காலை பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாக இருந்தார்கள்.

சாந்தாவால் தன் மனதை அடக்க முடியாமல், நளினியின் அறைக்கு சென்று, “நளினி, நந்திதா ஏன் வந்திருக்கிறாள் என்று தெரியுமா?” எனக் கேட்க

“தெரியவில்லையே அக்கா, ஆனால் நாளைக் காலை வேலைக்காரி  அம்சா  வந்தால் கட்டாயம் தெரிந்து விடும். நந்திதாவின் சிறு வயது முதலே அவள் இங்கே வேலை செய்வதால், அம்மா அப்பாவிடம் சொல்லாதது கூட அவளிடம் ஷேர் பண்ணிக் கொள்வாளாம்” என்றாள் நளினி

“கத்திரிக்காய் மலிந்தால் கடைத் தெருவிற்கு வந்து தானே ஆக வேண்டும், நாளை பார்த்துக் கொள்ளலாம் “என அறைக்கு சென்று விட்டாள்

அடுத்த நாள் காலை, சனிக்கிழமை விடுமுறை ஆதலால், லட்சுமியைத் தவிர மற்ற யாவரும் கொஞ்சம் நேரம் கழித்தே எழுந்தனர். வேலைக்கு வரும் அம்சாவும் வழக்கத்தை விட இன்னும் தாமதமாகவே வந்தாள்.

யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள். அவள் தான் அந்த வீட்டு எஜமானர் போலவும், மற்றவர்கள் அவள் சொல்லிற்கு கட்டுப்பட்டவர்கள்  போலவும் கலாட்டா செய்வாள். நந்திதா அவளுடைய சிறந்த ரசிகை

நந்திதாவைப் பார்த்தவுடன், “அட, சின்னம்மா”  என்றவள், “குழந்தைகள், மாப்பிள்ளை எல்லோரும் தூங்குகிறார்களா?” என்றாள்

“நானும், குழந்தைகளும் மட்டும் தான் வந்தோம்” என்றாள் நந்திதா

“ஏன் மாப்பிள்ளை வரவில்லை?” என அம்சா கேட்க

 “அதையே தான் நாங்களும்  கேட்கிறோம், ஆனால் பதில் இல்லை”  என்றார் லட்சுமி.

“பத்துப் பாத்திரம் எல்லாம் அப்படியே இருக்கிறது பார். முதலில் உன் வேலையை முடி, மற்ற கதையெல்லாம் பிறகு” என விலகினாள் நந்திதா

“அது எப்படி? முதலில் நீ விஷயத்தைச் சொல்லு. மாப்பிள்ளை ஏன் வரவில்லை?” என்றாள் அம்சா விடாப்பிடியாக

மாடிப்படியில் கதை கேட்பதற்குத் தயாராக இரண்டு அண்ணிகளும்  நின்றிருந்தார்கள். ஆனால் அவர்களைப் பற்றி நந்திதா கவலைப்படவில்லை.

“அவரும் இங்கே வரமாட்டார், இனிமேல் நானும் அங்கே போக மாட்டேன். போதுமா? போய் வேலையைப் பார்” என்றாள் நந்திதா கோபமாய்          

“ஏன்? கண்ணுபட்டுப் போச்சா?” என்றாள்  அம்சா  மாடிப் படியைப் பார்த்துக் கொண்டே

“இல்லை,  புத்தி கெட்டுப் போச்சு. கெட்ட சிநேகிதம், கடந்த இரண்டு மாதமாக ஒரே குடி தான்” என நந்திதா எரிச்சலாய் கூற

“ஐயே இதுக்குத் தானா கோச்சிக்கிட்டு வந்துட்ட, இந்த காலத்தில் குடிக்காதவர்கள் யார்?” என அங்கலாய்த்தாள் அம்சா

“இந்த தீபக் கையில் தண்ணீர் டம்ளரை வைத்துக் கொண்டு அப்பனைப் போலவே ஆடி நடிக்கின்றான், அப்ப தான் கோபம் அதிகமா வந்து சண்டையும் பலமாகி இங்கே கிளம்பி வந்து விட்டேன்” என நந்திதா கூற

“அங்கேயே இருந்து கொண்டு தான் சாதிக்க வேண்டுமே தவிர, உன் வீட்டை விட்டு வரக் கூடாது” என புத்திமதி கூறினாள் அம்சா

“ஏன் இது கூட என் வீடு தான?” என நந்திதா சிலிர்த்து கொண்டு கேட்க

“ம்க்கும்… நெனப்புத் தான் பொழப்பைக் கெடுக்கும். படித்தவர்களுக்கே கொஞ்சம் மேல் மாடி காலி தான். இங்கேயிருந்தால் புலிக்கு வால் போலத் தான். நீ உன் வீட்டில் தான் தலை, நான் சொல்வது இப்போது புரியாது” என்றவள் ” இருக்கும் இடத்தை விட்டு  இல்லாத இடம் தேடி” என்ற பழைய சினிமாப் பாடலைப் பாடிக் கொண்டு பாத்திரம் தேய்க்கச் சென்றாள்

அவள் சொன்னதை நந்திதா காதில் வாங்கவில்லை. அவள் படிக்காதவள், அப்படித் தான் பேசுவாள் என ஒதுக்கினாள்

அவள் அம்மாவோ அல்லது அப்பாவோ ஏதாவது சொன்னால் “நான் இங்கே இருப்பது பாரமாக இருக்கிறதா? உங்கள் செலவிற்கு நான் பணம் கொடுத்து  விடுகிறேன்” என்று சண்டை பிடித்தாள்

தங்கள் மகள் பிடிவாதத்தால் எங்கே வாழ்க்கையைத் தொலைத்து விடுவாளோ என்று அவர்கள் பயந்தனர்

பிள்ளைகளும் அம்மா வீட்டிலிருந்து அதே பள்ளிக்குப் போக, பள்ளிக்கூட பேருந்தில் ஏற்பாடு செய்து விட்டாள்

அவளுடன் பேச போன் மூலமாகவோ நேரிடையாகவோ பல முறை திவாகர் முயற்சி செய்தும், மறுத்து விட்டாள். அலுவலகத்திலும், திவாகர் குழுவிலிருந்து வேறு குழுவிற்கு மாற்ற விண்ணப்பித்தாள்

வீட்டிலும் ஒரு பத்து நாட்கள் தான் நிலைமை ஒழுங்காக இருந்தது. அதன் பிறகு அவள் அண்ணிகள் இருவரும் பேசுவதே நின்று விட்டது. அண்ணன்களும் அண்ணிகள் எதிரில் பேசுவதில்லை

தீபக், திவ்யாவுடன் கூட பேசுவதில்லை. அவர்கள் குழந்தைகளையும் இந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட விடவில்லை. லட்சுமி தான் இதையெல்லாம் கவனித்து, வருத்தத்துடன் தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டார். அம்சாவிடமும் கூறி வருத்தப்பட்டாள்.

ப்ரோஜெக்ட்டின் இறுதிக் கட்டமாதலால், நந்திதாவின் அலுவலகத்தில் வேலை இரவு பத்து மணி வரை நீடித்தது. திவாகரும் அதே ப்ராஜெக்ட்டில் இருந்ததால், அவளுக்கு மன உறுத்தல் இல்லாமல் வேலை  செய்ய முடிந்தது

வேலை முடிந்த பிறகு திவாகரே அந்த க்ரூப்பில் பணிபுரிந்த நால்வரையும் அவரவர் வீட்டில் அலுவலகக் காரில் விட்டு விட்டு செல்வது வழக்கமானது. ஆனால் அப்போது கூட, இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

இவர்களின் பனிப்போர், நெருக்கமானவர்களுக்கும்  தெரியும். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

தினமும் இரவு நந்திதாவை வீட்டில் இறக்கி விட்டபின், திவாகர் காரில் அமர்ந்து கொள்ள, உடன் பணிபுரியும் யாரேனும் ஒருவர் நந்திதா வீட்டினுள் செல்லும் வரை நின்று பார்த்து விட்டு காரில் ஏறுவது வாடிக்கையானது

திவாகர் காரில் அமர்ந்து இருப்பதை கவனியாமல், தினம் ஒரு ஆளுடன் இரவு நந்திதா காரில் வருவதாய் எண்ணினாள் நந்திதாவின் அண்ணி

வெறும் வாயை மெல்லுபவளுக்கு அவலுடன் சர்க்கரையும் போட்டாற் போல் ஆக, இன்னும் மசாலா சேர்த்துத் தன் கணவனிடமும், ஓர்படியிடமும் கூறலானாள்

அவர்களும், இரண்டு நாட்களாக அதை கவனித்தனர். இதெல்லாம் நந்திதாவிற்குத் தெரியாது. இப்போது காரில் வீட்டிற்கு போகும் கூட நேற்று நடந்த நிகழ்ச்சியை எண்ணிப் பார்த்தாள்.

நேற்றும் இப்படித் தான் இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்பினாள். வழக்கமாக அந்த நேரத்தில் தூங்கிவிடும் தீபக்கும், திவ்யாவும் தூங்காமல் அவர்கள் துணிகள் அடங்கிய பையுடன் கிளம்புவதற்கு தயாராக அமர்ந்திருந்தனர்

“ஏ கண்ணுங்களா தூங்கலயா, இதென்ன கோலம் பையுடன்?” என்றாள் சிரித்தபடி. அவர்களைப் பார்த்தால் நிஜமாக அவளுக்கு சிரிப்புத் தான் வந்தது

“அப்பாகிட்ட போகணும்” என்றனர் இருவரும் ஏகோபித்த குரலில்

“என்ன திடீர்னு இந்த நேரத்துல?” என திகைத்தாள் நந்திதா

“நீ மட்டும் உங்க அப்பா, அம்மா கூட இருப்ப. நாங்க மட்டும் தாத்தா, பாட்டியோட இருக்கணுமா?” என்றாள் திவ்யா கோபமாக

“சரி சரி  இப்ப திடீர்னு இன்னைக்கி என்னாச்சு?” என நந்திதா புரியாமல் பார்க்க  

“நம்ம வீட்ல இருந்தா அப்பா தினமும் எங்கள வெளிய கூட்டிட்டு போவார். இங்கே ஆன்ட்டியும் அங்கிளும் அவங்க பசங்கள மட்டும் வெளிய கூட்டிட்டு போறாங்க. பாட்டி சொன்னா கூட எங்கள கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க” என தீபக் புகார் வாசித்தான் 

“பெரியவங்களை பத்தி அப்படி தப்பா பேசக் கூடாது, இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை” என நந்திதா கண்டிப்புடன் கூற, தந்தையிடம் செல்லவேண்டுமென இருபிள்ளைகளும் அடம் பிடித்தனர் 

ஆளுக்கு ஒன்று முதுகில் கொடுத்து இருவரையும் தங்கள் அறைக்கு இழுத்துச் சென்றாள் நந்திதா

பின்னாலேயே வந்த அவள் தந்தை, “எல்லாத் தப்பையும் நம்ம மேல வெச்சுகிட்டு குழந்தைகள அடிப்பது தவறு நந்திதா” என போகிற போக்கில்  சொல்லி விட்டுப் போனார்

குழந்தைளை சமாதானப்படுத்தி படுக்க வைத்து இவளும் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். ஆனால், தூக்கம் மட்டும் வரவில்லை. மனம் முழுவதும் திவாகர் வியாபித்து நின்றான்

எவ்வளவு  அன்பான கணவன். இருபத்தி நான்கு மணி நேரமும் அவளுடனும், குழந்தைகளுடனும் கொஞ்சி விளையாடிக் கொண்டு, நினைத்தால் கார் எடுத்துக் கொண்டு இவர்களுடன் சுற்றுவான்

அம்சா  சொன்னது போல்  திருஷ்டி தான் பட்டு விட்டதோ? தலையணையில்  முகம் புதைத்து  அழுதாள். எங்கிருந்து வந்தான் அந்த நண்பன்? கெடுதல்கள் மொத்தமாகக் குத்தகை எடுத்தவனோ? ஆனால் அவனையும்  இப்போது திவாகரனுடன்  காண்பதில்லை. இப்போது குடிப்பதில்லை என்று திவாகரனும் பேசும் போதெல்லாம் சத்தியம் செய்கிறான்

திவாகரனுக்கு இப்போதெல்லாம் ஆன் லைன் மீட்டிங், ப்ராஜெக்ட் வேலைகள் என நேரமின்றி சுற்றிக் கொண்டிருந்தான். நந்திதா அவனை விட்டு வந்த பிறகு, பிரிவின் துயரத்தை  மறக்க, அவனாகக்  கேட்டு வாங்கிய வேலைகள் நிறைய. பலவாறு எண்ணியவாறே, தன்னையும் அறியாது உறங்கினாள் நந்திதா 

மறுநாளும் வழக்கம் போல் வேகமாக சென்றது 

“சிஸ்டர் தூங்கிட்டிங்களா? உங்க வீடு வந்துடுச்சு” என்றார் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஒருவர் 

தன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்த்தாள் நந்திதா. அவளையே பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான் திவாகர். அந்தப் பார்வையில் கன்னம் சிவந்தாள் நந்திதா

உடன் வந்த நண்பர் முதலில் இறங்கி நந்திதாவிற்காக கார் கதவைத் திறந்து விட்டார். காரை விட்டு இறங்கிப் பார்த்தால், வீட்டு மனிதர்கள் எல்லோரும் வெளியே நின்றிருந்தனர் 

வீட்டினுள் நுழையும் போதே  அவளைத் தடுத்த பெரிய அண்ணன், “எவன் கூட வந்தயோ அவன் கூடவே போய்டு. கண்ட நேரத்தில் கண்ட ஆட்களோடு வர்ற உனக்கு இனி இந்த வீட்ல இடமில்ல” என உறுமினான் 

“அண்ணா, என்ன உளர்ர? வெளியே நின்னுட்டு எதுக்கு இப்படி பேசற? எல்லோரும் பாக்கறாங்க, வழிய விடு” என கலங்கிய கண்களுடன் மெதுவாக கூறினாள்  நந்திதா 

“ஓ, உனக்கு மான,அவமானம் எல்லாம் இருக்கா? ஒரு குடும்பப் பெண் வீட்டுக்கு வர்ற நேரமா  இது? உன் புருஷன் ஒரு குடிகாரன். நீ ஒரு… ” என்றவன்,  கோபத்தில் வார்த்தை வராமல் தடுமாறினான்

“உன் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போ” என்றாள் அண்ணி சாந்தா. அவமானத்தில் கூனி குறுகி நின்றாள் நந்திதா

அதுவரை அமைதியாக காரின் உள்ளே அமர்ந்திருந்த திவாகரன், வெளியே வந்து தன் மனைவியின் தோள் மேல் கைகளை வைத்து லேசாகத் தட்டிக் கொடுத்தான்.

“இது தான் நந்திதா, ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ங்கரது” என்றவன், “தீபக், திவ்யா” என்று குரல் கொடுத்தான். 

குழந்தைகள் இருவரும் ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொண்டு, “நாங்க ரெடிப்பா” என ஓடி வந்தனர்

பிள்ளைகளை அள்ளி அணைத்து முத்தமிட்டவன், கையோடு அழைத்துச் சென்று காரினுள் அமர வைத்துவிட்டு திரும்பி வந்தான் 

“மாப்பிள்ளை ஐ ஆம் வெரி ஸாரி, கூட வந்தது நீங்கனு தெரியல” என நந்திதாவின் அண்ணன் கூற, கையை உயர்த்தி அவனை அடக்கினான் திவாகர் 

“தப்பு என் மேல தான், என் மனைவி விருப்பப்படி நான் நடக்கல. ஆனா அதுக்காக, அவளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்னு அர்த்தமில்லை” என கோபமாய் உரைத்தவன், “இனி மேலும் இந்த வீட்ல இருக்கப் போறியா நந்து?” என திவாகரன் அவள் கைகளைப் பற்றிக் கேட்க 

அவன் கையோடு தன் கைகளைக் கோர்த்தவள், “நம்ம வீட்டுக்கு போலாம்” என்றாள் 

அன்போடு அணைத்தவன், மௌனமாய் அவளை நடத்தி சென்று காரினுள் அமரச் செய்தான்

நந்திதாவின் தாய் லட்சுமி, ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

#ad

      

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. என்ன தான் தங்கை மனம் மாறிச் செல்ல என்று வைத்துக்கொண்டாலும் கூட இந்தக்கால கட்டத்தில் இப்படி எல்லாம் சந்தேகப்படுபவர்கள் இருக்காங்களா என்றே தோன்றுகிறது. இப்போதெல்லாம் ப்ராஜெக்ட் காரணமாக ஆணும், பெண்ணும் இரவு நேரங்களில் கூடச் சேர்ந்து வேலை செய்வதும், ஒரே வண்டியில் கம்பெனியின் சிக்கன நடவடிக்கை காரணமாகப் பயணிப்பதும் சகஜமான ஒன்று. என்றாலும் மனம் மாறிக் கணவன், மனைவி ஒன்று சேர்ந்தது சிறப்பு.

பனீர் பட்டர் மசாலா – ✍ ராஜதிலகம் பாலாஜி

அறம் செய விரும்பு (சிறுவர் கதை) – ✍ ஞானம் பிரகாசம்