இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 107)
சென்னை விமான நிலையம்
நான் வெளியே வந்த போது விடிந்து விட்டது. எப்பொழுது எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பது என் சுய நினைவுக்கு இன்னும் வரவில்லை
நேற்றே வந்திருக்க வேண்டும்.ஹெட் ஆபிசிலிருந்து பாஸ்போர்ட் வருவதற்கு தாமதமாகி விட்டது. செய்தி கிடைத்தவுடன் டிக்கெட் புக் செய்து, ஆடைகளை பேக் செய்து, துபாயிலிருந்து விமானம் புறப்படும் வரை கூட இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது நண்பர்கள் தான்.
அதிர்ச்சியும் பதட்டமும் தற்போது சற்று தணிந்து இருக்கிறது. ஆழ்ந்து சுவாசித்தேன். ஒவ்வொரு முறையும் தாயகம் வரும்பொதெல்லாம் “ஆஹா…நம்ம ஊர்காத்து…!” என்று ரசித்து சுவாசிக்கும் மனநிலை இன்று இல்லை
“அண்ணா” என்று அழைத்தபடி வந்தான் தம்பி கனகு. கண்கள் சிவந்து முகம் வீங்கிப் போய் இருந்தது
“நைட் டிவி பார்த்துட்டு படுத்தார்ணா, காலையில கண்முழிக்கல. நல்லா தூங்கறாருன்னு தான் நாங்க நினைச்சோம். டாக்டர் வந்து சொன்னப்ப கூட யாரும் நம்பல. அப்பா எந்திருச்சு உட்காருவாருன்னு தான் நினைச்சோம்”
அதற்கு மேல் அவனால் கோர்வையாக பேச முடியவில்லை
கார் அரை வட்டமாய்த் திரும்பி, சிதம்பரத்தை நோக்கி நகரத் தொடங்கியது.
அப்பா… இனிமேல் அப்படி வாயார கூப்பிட வழியில்லை. நினைக்கும் போதே இதுவரை இல்லாத ஒரு வெறுமை என்னை சூழந்தது.
“எண்பது வயசுல ஏன் இப்படி தனியா இருக்கனும். அம்மாவுக்கும் முடியல. நாங்க நாலு பிள்ளைங்க இருக்கோம் அப்பா” என்று கடுமையாக அவரிடம் நாங்கள் வாக்குவாதம் செய்யும் போதெல்லாம்
“உழைச்சு பழகின உடம்புய்யா, உட்கார்ந்து சாப்பிட முடியாது. கை கால் நல்லா இருக்கற வரைக்கும் நானே பாத்துக்கறேன். முடியாம போயிருச்சுனா நீங்க தான செய்யப் போறிங்க” என்று சிரித்தபடி சொல்வார்.
டியுப் லைட்டின் வெள்ளை வெளிச்சத்தில் ஓடிசல் தேகமும், மூக்குகண்ணாடியுமாய் மரபெஞ்சில் குனிந்தபடி அப்பா நகை வேலை செய்யும் காட்சி, ஒரு உயிரோட்டமாய் என் மனதுக்குள் விரிந்தது.
அவர்… முருகேச பத்தர். “அங்காளம்மன் கோவில் தெருவில இருக்கற கடைசி வீடு தாங்க நம்ம ஆசாரி வீடு” என்று, சிதம்பரம் பஸ்ஸடாண்டில் இருக்கும் எந்த ஆட்டோக்காரரை கேட்டாலும் அப்பாவை பற்றி சொல்லி விடுவார்கள்
நகைத்தொழில் எங்களின் பரம்பரைத் தொழில். கிட்டத்தட்ட அறுபது வருட அனுபவம். கடின உழைப்பின் மறுபெயர் எங்கள் அப்பா. இரவு,பகல் பார்க்காத அசுர உழைப்பு.
வீட்டின் பெரிய திண்ணையிலேயே பட்டறை நடத்தி வந்தார். வெறும் உழைப்பு மட்டுமல்ல
“நம்மள நம்பி நகையை கொடுக்கிறாங்க. ஒரு க்ராம் தங்கம் கூட குறைஞ்சா அது நாம தொழிலுக்கு செய்ற நம்பிக்கை துரோகம்” என்ற நாணயத்துடன் கூடிய உழைப்பு.
நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு, எப்பொதும் புன்சிரிப்புடனே இருப்பார். நாள் தவறாமல் அர்த்தஜாமம் பார்க்க நடராஜர் கோவிலுக்கு சென்று விடுவார்
வீட்டுக்கு எதிரே இருக்கும் அங்காளம்மன் கோவிலுக்கு எங்கள் குடும்பம் தான் பரம்பரை அறங்காவலர். வருடந்தொரும் நடக்கும் மயானக் கொல்லை அன்று, அம்மனுடன் வீதி உலா வருவார் அப்பா.
ஊரில் எந்த சாதிக்காரரின் திருமணமாக இருந்தாலும், தங்கத்தை தாம்பூலத்தட்டில்வைத்து மரியாதையுடன் அப்பாவிடம் ஏந்தி வருவார்கள். எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும், தலைமுறைகளாக அந்த குடும்பத்து பெண்களின் கழுத்தில் தொங்குவது பெரும்பாலும் எங்கள் வீட்டார் செய்த தாலியாகத் தான் இருக்கும்.
காது குத்து முதல் கல்யாணம் வரை எல்லா சுபகாரியங்களுக்கும் அப்பாவின் கைராசி சிதம்பரத்தில் பிரசித்தம்.
எப்போதும் சிரித்த முகம் – அப்பாவுக்கு கோபமே வராதா என்று நாங்கள நினைப்பதுண்டு. அதிகபட்சமாக “வெங்காரம் வெச்சா தான் சரிபட்டு வருவ” என்பார் பல்லை கடித்தபடி
ஆனால், அம்மா அவருக்கு நேர் எதிர். அம்மா…! ராஜாத்தி அம்மாள். நெற்றி நிறைய குங்குமம், மஞ்சள் பூசிய முகம் என எப்பொழுதும் பெயருக்கு ஏற்றார் போல இருப்பாள்
எல்லா அம்மாக்களையும் போலவே குடும்பம் தான் அவளுக்கு உலகம். முன் கோபமும், கண்டிப்பும் நிறைந்தவள்.
மதிப்பெண் குறைந்து விட்டால், அன்றைய தினம் முதுகில் கல் தோசை தான். அப்பாவுக்கு பட்டறை என்றால், அம்மாவுக்கு சமையலறை. எழுபது வயதிலும் குறையாத சுறுசுறுப்பு.
எங்களை மட்டுமின்றி, அப்பாவையும் இன்றும் ஒரு குழந்தை போல பாவித்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்
“எனக்கு அந்த நடராஜபெருமான் ஒரு குறையும் வைக்கல. நீங்க நாலு பேரும் குடும்பத்தோடு இப்படியே ஒத்துமையா, எப்பவும் சந்தோஷமா இருக்கனும். அதை தான் நான் தினமும் வேண்டிக்கிறேன்” என்று அடிக்கடி சொல்வார் அம்மா.
அப்பாவின் கனிவும், அம்மாவின் கட்டுப்பாடும் தான் எங்களை வளர்த்தன. நாங்கள் மொத்தம் நான்கு பேர்.
மூத்தவள் செல்வி. சேத்தியா தோப்பில் இருக்கிறாள். கணவர் அரசு பள்ளி ஆசிரியர். அவளுக்கு ஒரு மகள்
இரண்டாவதாக நான். பணி நிமித்தம் துபாயில் இருக்கிறேன். மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை சென்னையில் இருக்கிறார்கள்.
மூன்றாவதாக, கனகு என்ற கனகசபை. பரம்பரை தொழிலை ஏற்று, அப்பாவின் பெயரை காப்பாற்றி வருகிறான். சிதம்பரத்திலேயே இருப்பதால், தினமும் அப்பா,அம்மாவை பக்கத்தில் இருந்து பார்த்து கவனித்து கொண்டு, சொந்தமாக பட்டறை, சொந்த வீடு என உள்ளூரில் இன்று வளர்ந்து நிற்கின்றான்
எங்கள் வீட்டு கடைக்குட்டி கஸ்தூரி. திருமணம் முடிந்து தஞ்சாவூரில் இருக்கிறாள்.
அம்மாவின் ஆசிர்வாதத்தின் படியே நாங்கள் நால்வர் மட்டுமல்ல, எங்களின் குடும்பங்களும் ஒன்றாக இருந்து வருகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுதராத பாசத்தையும், அன்பையும் பகிரும் சொந்தங்களாக
அப்பாவின் பொறுமை, பக்குவம், குடும்பத்தில் வரும் பிரச்சனையை அணுகும் முறை, ஆகியவற்றை நானே ஒரு முறை நேரில் கண்டேன்.
ஒருமுறை என் வீட்டிற்கு எங்கள் பெரியம்மா ஒருவர் வந்திருந்தார். ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை கொண்டதோடு மட்டுமில்லாமல், தனக்கு ஜோசியம்நன்றாக தெரியும் என்றும் கூறினார்.
“உன்னோட பொண்டாட்டியோட ஜாதகம் பார்த்தேன். அதுல தோஷம் இருக்கு. அதுக்கு பரிகாரமா அவ தாலியை அறுத்து நம்ம அங்காளம்மன் கோவில்ல இருக்கற உண்டியல்ல போடனும். வேற தாலிய கட்டிக்கணும்” என்று அவர் என்னிடம் கூறி விட்டார்.
அவர் சொன்ன தொனியை பார்த்து நான் சற்று மிரண்டு தான் போனேன். ‘உண்மையாக இருக்குமோ’ என்று கூட நினைத்தேன்.
என் தயக்கம் எங்கள் குடும்பத்தில் முதல் முறையாக பூகம்பத்தை ஏற்படுத்தியது என் மனைவிக்கு இந்த அளவுக்கு கோபம் வரும் என்று அன்று தான் பார்த்தேன்.
“நமக்கு கல்யாணம் ஆகி இந்த பத்து வருஷத்துல இல்லாத தோஷம், இப்ப என்னால உங்களுக்கு வந்துடுச்சா? உங்க பெரியம்மா சொல்றபடி செய்யுன்னு நீங்க சொன்னா, தாலியை உங்க கையில கொடுத்துட்டு நான் போயிட்டே இருப்பேன்” என்று அவள் தெருவுக்கே கேட்டுகும்படி கத்தியது, இன்றும் அப்படியே நினவில் நிற்கிறது.
அப்பா தான் தலையிட்டு சமாதானம் செய்தார்
“இந்த குடும்பத்துல எல்லாருக்கும் தெய்வபக்தி இருக்கு. ஆனா, இந்த ஜோசியத்துல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்ல. அதெல்லாம் பார்த்திருந்தா எங்க குடும்பம் இந்தநிலைக்கு வந்திருக்காது. எங்க எல்லாரும் செய்ற தொழில் மேல, உழைப்பு மேல மட்டும் தான் நம்பிக்கை இருக்கு. அது தானே ரொம்ப முக்கியம்” என்றவர்
“யாருக்கும் கெடுதல் செய்யாம மனசாட்சிப்படி வாழந்தாலே போதும். மத்த எல்லாத்தையும் அந்த அங்காளம்மனே பார்த்துப்பா. நாங்க எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுகோங்க பெரியம்மா” என்று பக்குவமாகவும், உறுதியாகவும் மறுத்து பேசினார் அப்பா. அம்மாவும் அதை ஆமொதித்தாள்.
எவ்வளவு தெளிவு. எவ்வளவு நம்பிக்கை. அப்பா கொடுத்த அந்த நம்பிக்கை எனக்குள் அன்று விதையாய் உள்நுழைந்து, இன்று விருட்சமாய் கிளைபரப்பி இருக்கிறது.
குடும்பத்துக்குள் ஒரு பிரச்சனை வந்தால், அதை எவ்வாறு நிதானமாக, அலசி ஆராய்ந்து அணுக வேண்டும் என்று நான் அன்றைய தினத்தில் கற்றுக் கொண்டேன்.
நல்ல குடும்பம் என்னும் கட்டிடத்துக்கு, பொறுப்பான பெற்றோர்கள் தான் அஸ்திவாரம் இல்லையா? பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் எங்கள் அம்மாவும், அப்பாவும் என நாங்கள் அனைவரும் உணர்ந்திருந்தோம்
“எங்க அப்பா, அம்மா போல நாமளும் கடைசி வரை வாழ்வாங்கு வாழனும்டி” என்று என் மனைவியிடம் அடிக்கடி சொல்வேன்.
“அது எப்படி, மன்ஸ்தாபமே வராம…..” என்ற கேள்வி அவளுக்கு
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சண்டையே வந்ததில்லையா? சிறிய சிறிய சண்டைகள் நடந்திருக்கின்றன. அதுவும் கூட எங்களால் தான்
“பசங்ககிட்ட உங்க கஷ்டத்தை சொல்லி வளங்க. கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காதீங்க” என்று அடிக்கடி சண்டையிடுவாள் அம்மா.
பெரிய அளவில் மனஸ்தாபம்…. ம்… ஒருமுறை அதற்கான சூழல் வந்தது. அன்றைய இரவு நன்றாக என் நினைவில் இருக்கிறது. நான் அப்போது ப்ளஸ் டூ.
“முருகேசு, பாண்டியிலேருந்து ரத்னா வந்திருக்காய்யா” கண்சிமிட்டி, நமட்டுச் சிரிப்புடன் தொடர்ந்தார் பக்கத்து வீட்டு ரமேஷ்பத்தர்.
“இன்னைக்கு சரக்கு அடிச்சிட்டு, சொட்டாங்கி போடலாம்” என்று ரகசியகுரலில் பேசி அப்பாவை அழைத்துக் கொண்டு போனார். இதை அப்பாவுக்கு உதவியாக பாலிஷ் போடடுக் கொண்டிருந்த கனகு என்னிடம் வந்து சொன்னான்
’சொட்டாங்கி’ என்ற வார்த்தையின் அர்த்தம் சிதம்பரத்தில் இருக்கும் என் வயது பசங்களுக்கு தெரியும்
அன்று இரவு… தள்ளாடி வந்த அப்பாவுக்கு, எதுவும் பேசாமல் உணவு பரிமாறினாள் அம்மா. பின்னர் தோட்டத்திற்கு அழைத்து சென்று உறங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு குரல் கேட்காத வண்ணம் மெதுவாக பேசினாள்.
“கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க. என்னைக்கோ ஒரு நாள் குடிக்கறது தப்பில்லங்க. ஆனா, இந்த பொம்பள சவகாசம், வேணாங்க. வீட்ல வயசுக்கு வந்த குழந்தைங்க இருக்காங்க. நம்ம குடும்பத்துக்கும், நீங்க செய்யற தொழிலுக்கும் ஊர்ல மரியாதை இருக்குன்னா, அதுக்கு காரணம் ஒழுக்கம்தாங்க. தயவுசெஞ்சு அதை கெடுத்துக்காதீங்க”
முன் கோபத்திற்கு பெயர் போன அம்மா, கனிவான குரலில், அன்பாக கைகூப்பி கேட்டது அப்பாவை நொறுக்கியது. அம்மாவுக்கு எப்படி தெரிந்தது? அதுதான் இத்தனை வருட தாம்பத்தியமா?
அப்பா திணறினார். உடைந்து போன குரலில்… “போதையில் தப்பி பண்ணிட்டேன் ராஜாத்தி, மன்னிச்சிடு. நம்ம புள்ளைங்க மேல சத்தியமா இனிமே அப்படி பண்ண மாட்டேன்” என்று கண்ணீர் விட்டு அம்மாவின் கைகளை பற்றிக் கொண்டு பெருங்குரலில் அழுதார்
ஒரு பெரிய சண்டையை எதிர்பார்த்து, நான் அன்றைக்கு தூங்குவது போல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன். வாழ்வில் மறக்கமுடியாத நாள் அது
அந்த சம்பவத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையிலான நேசமும், உறவும் பலமடங்கு அதிகமானதாக நான் உணர்ந்தேன்.
கார் சிதம்பரத்தை அடைந்து என் நினைவுகளை கலைத்தது. ஒவ்வொரு தெருவாக நழுவி எங்கள் தெருவுக்கு வந்தது. உற்றார் உறவினர், நண்பர்கள் என தெரு முழுவதும் நிரம்பி இருந்தார்கள்
வீட்டின் முன் பெரும் கூட்டம். வீட்டின் அருகே சென்றதும் தான் அவர்களை கவனித்தேன். கேமராக்கள் எந்திய பத்திரிக்கைகாரர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஏன் இங்கு? இவர்களுக்கு இங்கே என்ன வேலை? ஏதோ ஒன்று நெருடியது. ஏதோ ஒரு பிரச்சனை. அது என்ன?
உள்ளிருந்து, எங்கள் குடும்ப பெண்களின், குழந்தைகளின் அழுகுரல் என்னை உலுக்கி உருக்கியது. அப்பாவின் உடலை பார்க்க மனதை திடப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தேன்
கனக என் கையை பிடித்து அழைத்து சென்றான்
அங்கே…. கடவுளே,,,,,!!! என் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
நான் கண்ட காட்சியை மனம் ஜீரணிக்கவில்லை. உடல் நடுங்க, கால்கள் பூமிக்குள் புதைந்தன. அய்யோ என்று உடைந்துபோய் ‘ஒ’வென்று என்னை மீறி கதறி அழ ஆரம்பித்தேன்.
அருகருகே அப்பா, அம்மாவின் உடல்கள். மாலைகளுக்கு இடையே முகத்தில் பெருமிதமும், நிறைவும் நிரம்பி வழியும் அவர்களின் முகங்கள். அதில் நிம்மதியான,ஆழந்த உறக்கத்தில் இருப்பது போன்ற அமைதி
“அப்பா போன நாலு மணி நேரத்திலேயே அம்மாவும் மயங்கி விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரி கொண்டு போறதுக்குள்ள உசிரு போயிருச்சி. நீ தாங்க மாட்டேன்னு தான் நான் சொல்லாம இருந்தேன்” என்று என் அழுகை கொஞ்சம் ஒய்ந்ததும் சொன்னான் கனகு
அப்பா இல்லாத உலகில் தனக்கும் இடம் இல்லை என்று கூடவே போய் விட்டாள் அம்மா. பரிபூரணமான அரை நூற்றாண்டு இல்வாழ்க்கை. இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே பிறப்பார்கள் என்று எனக்கு தோன்றியது
“நாம அழ வேண்டிய சாவு இல்லைண்ணா. சந்தோஷமா கொண்டாட வேண்டிய சாவு. ரெண்டு பேருக்கும் கல்யாண சாவு” என்று உரத்த குரலில் சொன்னான் கனகு.
நாங்கள் கல்யாண ஊர்வலம் போலவே நடத்தினோம். இருவரும் உட்கார்ந்த நிலையில் பல்லாக்கு போல பாடை அமைத்தோம். நகரின் வீதிகளில் மேள தாளம் முழங்க வலம் வந்தோம். வழி நெடுக மக்கள் குழந்தைகளோடு நின்று தலை குனிந்து, கை கூப்பி வணங்கினார்கள்
மயானத்தின் தகனமேடையில் இரு உடல்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து, ஒரேநேரத்தில் தகனம் செய்தோம்.
அப்பாவும், அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்கும்பொழுது அய்யன் வள்ளுவனின் குறள் நினைவுக்கு வருகிறது.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
அன்பும் அறனும் பிண்ணிப்பிணைந்த வாழ்க்கை இங்கே எத்தனை பேருக்கு வாய்த்திருக்கறது? ஒரு சிறிய மனத்தாங்கலுக்கு எல்லாம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் நிற்கும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தானே வருகிறது?
இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு இல்வாழ்க்கை நமக்கெல்லாம் சாத்தியம் தானா என்று ஒரு கேள்வி எழும்பியது
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லும் மாசற்ற அன்பு இருந்தால் சாத்தியமே என்று பதிலும் எனக்கு கிடைத்த நாள் இது.
பத்தாவது நாள் காரியம் முடிந்த பின், அனைத்து குடும்பங்களும், உறவுகளும் கூடி இருந்தார்கள். அவர்களுக்கு முன் நின்று நான் பேச ஆரம்பித்தேன்.
“அப்பா, அம்மா வாழ்ந்த இந்த வீடு தான் இனிமே நம்ம எல்லாருக்கும் இன்னொரு குலதெய்வ கோவில். அவங்களோட ஒவ்வொரு நினைவு நாளும், யார் எங்க இருந்தாலும் இங்க ஒண்ணா வந்து படைச்சிட்டு போவோம். நம்ம குடும்பத்துல நடக்கற காதுகுத்து, நிச்சயதார்த்தம் இப்படி எந்த விசேஷமானாலும் அது இங்க தான் நடக்கனும்”.
அனைவரும் நெகிழ்ச்சியோடு தலையசைத்து ஆமோதித்தார்கள்
ஆம்… இனி எங்கள் குடும்பத்துக்கு மட்டும் இல்லை. அனைத்து தம்பதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக, எங்கள் இல்லத்தில் இருந்தபடி ஆசிகளையும், வாழத்துக்களையும்வழங்கி கொண்டிருப்பார்கள், மரணத்திலும் இணைபிரியாத முருகேசன் – ராஜாத்தி அம்மாள்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
நிறைய நிகழ்வுகள் இப்படிக் கேட்டிருந்தாலும் இந்தக் கதையின் முடிவு உண்மையிலேயே அதிர வைத்துவிட்டது. நல்ல கதையம்சம். பாராட்டுக்கள்.