‘இது ஒரு பொன்மாலை பொழுது…’ என்ற பாடல் ஒலிக்க, அதில் மின்னிய தன்னவனின் பெயரை ரசித்தவாறு போனை எடுத்தாள் வருணமாலிகா
“ஹலோ” என்று தன் தேன் சிந்தும் குரலில் அழைக்க
“வந்துட்டயா வரு?” என்று கேட்க
” இப்ப தான் வந்தேன், நீங்க”
“சாரி டா, என்னால் வர முடியாது”
இத்தனை நேரம் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கலைந்து, சோகத்தின் சாயல் பரவியது
எதுவும் பேச பிரியம் இல்லாமல், போனை அணைத்து விட்டாள்.
எழுந்து செல்லலாம் என நினைத்த போது, “வரு” என்றவாறு அவளின் கரம் பற்றினான் இசையரசன்
அந்த ஸ்பரிசத்தில் யார் என்பதை உணர்ந்து அமைதியாக அமர, “வரு மா” என்றான்
மெளனமாக இருந்தாள்.
“விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன் டா” என்று சமாதானம் செய்ய முயல, அடுத்த நொடி சரமாரியாக பல அடிகளை வாங்கினான் அந்த காதலன்.
“அய்யோ வரு” என்று அலற
“என்ன என்ன வரு” என்று கூறி இன்னும் மொத்தினாள்.
“வலிக்குது டா” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல
“வலிக்குதா? நல்லா வலிக்கட்டும்” என்று தலையில் ஒரு அடியை இலவசமாக வாங்கினான்.
“அம்மா” என கத்தியவன், அவளின் இருகைகளையும் பிடித்துக் கொண்டு, “இது தான் கடைசி, இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன்” என்று கெஞ்சினான்
அவள் சந்தேகமாக பார்க்க, “நிஜம் டா” என்றான்
சரி போனால் போகிறது என்பது போல் அவனை விட்டாள்.
இருந்தும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்
அதை பார்த்தவன், “அதான் சாரி சொல்லி அடியும் வாங்கிட்டனே, அப்புறம் என்ன?”
“உங்களுக்காக எவ்வளவு ஆசையா வந்தேன்… ஆனா நீங்க…” என்று கூறி மறுபடியும் ஒரு அடி வைத்தாள்.
“சரி போதும், வீட்டில் கல்யாண வேலை எப்படி நடக்குது?”
“ம்ம்ம்… வேகமா எல்லா ஏற்பாடும் பண்றாங்க. அம்மா என்னை எங்கேயும் போகக் கூடாதுனு சொல்றாங்க. உங்களால தான் வந்தேன், எதுக்கு வர சொன்னீங்க?”
“சொல்றேன் டா, நீ கண்களை மூடு”
“எதுக்கு அரசு?”
“சொன்னதை மட்டும் செய்”
“சரி” என்று கண்களை மூடினாள்.
அவள் கழுத்தில் தங்க செயின் ஒன்றை அணிவித்தான் அவன்
தொடுதலில் கண்விழித்து, அதை கரங்களால் வருடினாள்.
இதய வடிவில் ஒரு டாலர் இருக்க, அவர்களுடைய பெயரின் முதல் எழுத்து IV என்று சிவப்பு கற்கள் பதித்து இருந்தது.
“பிடித்திருக்கிறதா?” என்று கண்களில் வழியும் காதலோடு கேட்க
“ரொம்ப” என்று கூறி அவன் தோள் சாய்ந்தாள்.
இருவரும் தங்களின் எதிர்கால வாழ்வை பற்றிய கனவுகளில் மூழ்கினர்
திருமணத்திற்கு ஒரு மாதம் இருந்த நிலையில், வீட்டுக்குள் வந்த அவள் தந்தை கலைதாசன், தன் மனைவி லலிதாதேவியை அழைத்தார்
“என்னங்க?” என்று கைகளை புடவையில் துடைத்தவாறு வந்தார்.
“இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று அவர் கூற
“என்ன வார்த்தை சொல்றீங்க?” என பதறினார் லலிதா
“கல்யாணம் வேண்டாம்னு அவங்க தான் சொன்னாங்க” என்றார் அவளின் தந்தை
“அவங்களா? யார்?” என்று கேட்டவாறு வந்து நின்றாள் வருணமாலிகா
“இசையரசன் வீட்டில்”
“நான் நம்ப மாட்டேன்” என்று வாதாட
“நான் பொய் சொல்லல”
“காரணம் என்ன சொன்னாங்க?”
அவர் மெளனமாக நின்றார்.
“என்ன? சொல்ல கூடாதுன்னாங்களா? நான் போய் பேசிட்டு வரேன்” என கோபமாக கிளம்பினாள் வருணமாலிகா
பெண் பார்க்க வந்தவனை பிடித்துப் போய், மனதில் பல கனவு கோட்டைகளை கட்டி இருந்தவளுக்கு, இந்த செய்தி அதிர்ச்சியை தந்தது
சில நாட்களாக அவனிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் இருந்தது அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது
தந்தை கூறிய செய்தியை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல், இசையரசன் வீட்டுக்குச் சென்றாள்.
அவளை கண்டவுடன் ஓடிவந்து அணைத்து கொண்டார் அவன் தாய் கற்பகவேணி.
“எதுக்கு அத்தை கல்யாணத்தை நிறுத்தச் சொல்றீங்க? நான் வேண்டாமா உங்களுக்கு?” என தேம்பினாள் வருணமாலிகா
“அய்யோ அப்படி இல்லைடா, உனக்காக தான் அப்படி சொன்னேன்”
அவர் கூறியதை கேட்டு புரியாத பார்வை பார்க்க, “நீ தம்பி அறைக்கு போ, அவன் சொல்லுவான்” என அவளை அனுப்பி விட்டு, அவர் பூஜையில் அமர்ந்து கொண்டார்.
அறையில் நுழைந்து அவனைத் தேட, அங்கே ஒரு மூலையில் தாடி வளர்ந்த முகத்தோடு, எதையோ இழந்தது போல் அமர்ந்திருந்தான்
“அரசு” என அவள் அழைக்க
அவளை பார்த்தவனின் முகத்தில், வலியை மீறிய ஒரு புன்னகை.
“நான் உனக்கு வேண்டாம் வரு” என்றான்
“எதுக்கு இப்படி பேசறீங்க?”
“எந்த கேள்வியும் கேட்காத, நான் உனக்கு வேண்டாம்” என்று மந்திரம் போல் திரும்ப திரும்ப அதையே கூறினான்
“நீங்க இப்ப உண்மையை சொல்லலைனா…” என்று கூறியவாறு, ஆவேசமாக தன் தலையை சுவற்றில் மோதிக் கொள்ள
“வரு வேண்டாம் டா… வேண்டாம்” என பதறினான்
தலையில் இரத்தம் வழிய, கண்களில் நீர் பெருக நின்றவளின் அருகே கூட வராமல் அமர்ந்து இருப்பவனை, வெறித்து பார்த்தாள்.
“ஏன் எழுந்து வராம இருக்கீங்க?”
“என் இரண்டு கால்களையும் நான் இழந்து விட்டேன்” என்று, இருவரும் சந்தித்து விட்டு திரும்பும் போது, விபத்தில் கால்கள் பறி போனதை கூறினான்
“புரிந்து கொள் வரு… நீ நன்றாக வாழ வேண்டியவள்” எனவும்
“உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இதுபோல் ஒரு விபத்து எனக்கு நடந்துருந்தா, உங்கள் முடிவு என்னவா இருக்கும்”
“உன்னை தான் கல்யாணம் செய்திருப்பேன்”
“அப்போ நான் மட்டும் விலகணுமா?”
“இல்ல டா… நான்”
“இங்க பாருங்க, நீங்க போட்டுவிட்ட இந்த செயினை நான் தாலியா நான் நினைக்கிறேன், மதிக்கிறேன். என்னைப் பொறுத்த வரைக்கும் நம் திருமணம் முடிஞ்சுருச்சு”
“வரு நான்…”
“நீங்க தான் என் கணவர், மறுத்தா நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக கூற
அவள் வார்த்தையை மீறும் சக்தியின்றி, தன் முடிவை மாற்றிக் கொண்டான்
அடுத்து வந்த நல்ல நாளில், இருவருக்கும் எளிமையாக திருமணம் நடந்தேறியது
தோழியாக, காதலியாக, தாரமாக, தாயாக அவனை தாங்கி கொண்டாள் வரு
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings