மனிதா!!!
விண்ணை தாண்ட முயற்சி செய்தாய்
அதில் என் இதயத்தையும்
ஓட்டை செய்து விட்டாயே
ஆடம்பர வாகனத்தில் நீ பவனி வர
என் உடலை கரும் புள்ளியால்
கோலம் போட்டு விட்டாயே
இது நியாயமா!!!
கண்ணுக்கு பசுமையாய் மரம்
என் இதயத்தை குளிர்விக்கும் மரம்
உன் மனதில் மட்டும் ஏன்
வெட்டச் சொல்கிறது?
அழிவிலிருந்து பிறப்பதும் ஆக்கம்
ஆனால் ஒன்றை அழித்து பிறப்பது
ஆக்கமல்லவே
உனக்கு ஆறறிவு, ஆம்
அப்படி தான் சொல்கிறது விஞ்ஞானம்
அதில் ஒன்றுகூட
என் நிலமையை உனக்கு
எடுத்து சொல்லவில்லையோ!!
மனிதா!!
எதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறாய்
உன் அறிவியல் வளர்ச்சி எல்லாம்
உலகம் என்னும் ஆதாரம் இருக்கும் வரைதான்
ஆனால் அந்த பூமியை சூடாக்கி
எதை சாதிக்க பயணித்து கொண்டிருக்கிறாய்
உன் வேகத்திற்கு தடை போடு
சிறிது சிந்தித்து பின் விழித்தெழு
நான் தான் பிராணவாயு படிமம்
என்னை பாதுகாத்து
உன்னை காத்துக் கொள்
மனிதா!!!