எனது மகிழ்வான வணக்கம். இனிதான தீபாவளி நல்வாழ்த்துக்கள் உடன்பிறப்புகள் அனைவருக்கும்
முன்னுரை
தீபாவளியை முன்னிட்டு “மறக்க முடியாத தீபாவளி” என்கிற அழகிய தலைப்பின் கீழ், எனது மனம் நிறைந்த நினைவலைகளில் இடம் பெற்ற ஓர் தீபாவளியைப் பற்றி உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி
நான் ஒரு இஸ்லாமிய சகோதரி, எனது சிறிய வயது தீபாவளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்வே, ஏனெனில் நமது ஒற்றுமை சகோதரத்துவமே, அதனை பிரதிபலிக்கும் நோக்கத்தில் இதை பகிர்கிறேன்
தீபாவளி அனைவருக்கும் பிரியமான பண்டிகை, சகோதர சகோதரிகள் ஆவலோடு காத்துக் கொண்டு இருப்பார்கள். பிள்ளைகள் அடம் பிடித்து வெடிகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள்
அதிலும் இன்றைய பிள்ளைகள் அட்டை பெட்டிகளாக வாங்கி வெடிக்க தயாராக இருப்பார்கள். உடைகள் அடிக்கடி பிரித்து பிரித்து பார்த்து பரவசப்பட்டு மூடி வைத்து விடுவார்கள்
பண்டிகை என்றாலே இதெல்லாம் ஓர் சுவாரசியம்தானே…!!!
தீபாவளிக்கு முன்னான கொண்டாட்டங்கள்
நான் சிறுமியாக இருந்த காலத்தில், மற்றவர் போலவே சக தோழிகளுடன் இனிய காலத்தை அதிகம் கழித்துள்ளேன். பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி நல்ல தோழிகள் உண்டு
பாரபட்சமின்றி அனைவரையும் “நீ உடை எடுத்திட்டியா என்ன நிறம் அப்படி இப்படி”னு எல்லாம் கேட்டுக் கொண்டே இருப்போம்
நாளை தீபாவளி என்றால், பள்ளியில் நாளை விடுமுறை என சொல்லி, ஆசிரியருக்கு வாழ்த்தை கூறிக் கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்துக்கள் சொல்லி ஓடுவோம் …..!!!
சிறுவயது தீபாவளி
நாங்கள் இருந்தது நகர்ப்புறம், எங்களின் தெருவில் பல குடும்பங்கள் இருந்தன, நாங்கள் இஸ்லாமிய குடும்பம் சிறிய அளவு தான் எங்கள் தெருவில்
அனைத்து பண்டிகைக்கும் போல் தீபாவளி சமயமும், எங்களின் தெருவில் உள்ள மளிகை கடைகளில் “அதை எடுங்க, இது தாங்க” என்ற சத்தத்துடன் கூட்டம் நிரம்பி வழியும்
அந்த கடை எதிரில் ஒரு தாத்தாவின் பொட்டிக்கடை உள்ளது, எனக்கு மிகவும் பிடித்த கடை அது. தீபாவளி வந்தாலே அவரின் கடையில் சிறிய சிறிய பட்டாசு பாக்கெட்கள் தொங்கும். மிளகாய் வெடி பாம்பு வெடி என மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டு போவேன் வீட்டுக்கு
நான் சிறுபிள்ளை என்பதால், எனது பெற்றோரும் எனக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. மற்ற பிள்ளைகளுடன் விளையாட வெடிகள் கொஞ்சம் வாங்கித் தந்தார்கள். அன்று இரவே அதையெல்லாம் கொளுத்தி விளையாடுவேன், அப்பா எனது அருகிலேயே அமர்ந்திருப்பார்
தீபாவளி நாள்
மறுநாள் தீபாவளி அன்று காலையில் மடமடனு எழும்பி பட்டாசு சத்தம் கேட்கும் முன்பே தயாராக தெருவில் நிற்பேன். அதேப் போல் அனைவரும் அப்பொழுது தான் தயாராகி, அவர் அவர் வீட்டு வாசலில் பட்டாசு பெட்டியுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.
அனைவரும் பட்டாசுகளை பகிர்ந்துக் கொள்வோம், எல்லாரும் ஒரே தெருவில் வெடிப்பதால் இடம் விட்டு வரிசையாக வெடிப்போம். பெரும்பாலும் எனக்கு தருவது மிளகாய் பட்டாசு தான், அதைத்தான் நட்புகளுடன் வெடிப்போம்
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு கணவன் மனைவி இருந்தனர், அவர்களுக்கு என் மீது பிரியம். அந்த சகோதரி எனக்கு ஒரு தோடு அன்பளிப்பாக அளித்தார்கள். அது எனக்கு மேலும் சந்தோசத்தை அளித்தது
அதை போட்டுக் கொண்டு, அவர்கள் அள்ளித் தந்த பட்டாசும் இருக்க, எல்லாம் வாங்கி ஒரு பாட்டாசு பொட்டி சேமிச்சிட்டேன். நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது
எதிர் வீட்டு அண்ணா பெரிய பெரிய வெடி வெடிக்க, எவ்ளோ தைரியம் இந்த அண்ணனுக்கு என காதை பொத்திக் கொண்டு ஓடினேன் அன்று. அண்டை விட்டாரிடமிருந்து பாயசம் வடை கொண்டு வந்து தருவார்கள், சுவையான பாயசம் வடை இனிக்க சாப்பிட, அப்படியே ஒரு நடை, தெருவில் சென்று வருவோம்
சிலர் பெரிய வெடி வைத்துக் கொண்டு சிறிய வெடியை எங்களுக்கு கொடுத்து விடுவார்கள். பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்ட மயக்கத்தில் இருக்க, நாங்கள் மீண்டும் வெடிக்க ஆரம்பித்து, இரவு வரை சலிக்காமல் வெடித்துக் கொண்டே கழிப்போம்…!!!
தீபாவளி இரவு
அன்று இரவு வரை, கால் நோக அழகான வான வெடிகள் வெடிக்கும் போது அழகாக மின்னும் வானை அண்ணாந்து பார்ப்பேன். எல்லாரும் சேர்ந்து கூட்டமாக வெடிப்போம், அவ்ளோ மகிழ்வா இருக்கும்
இரவு ஒரு கட்டத்தின் பின், இறுதியாக குப்பை நிறைந்த சாலைகளை வேடிக்கை பார்ப்போம். அதிலும் சில தோழமைகள் பட்டாசுகளை பிரித்து உள்ளிருக்கும் மருந்தை மொத்தமாக கொட்டி கொளுத்தி விளையாடுவது ஓர் சுகமே
பிறகு பெண்கள் அனைவரும் அவரவர் வீட்டு வாசலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து விட்டு, உறங்கச் செல்வார்கள்
முடிவுரை
எதிர்பார்ப்பின்றி அன்பை பகிர்ந்து, சிரித்து பேசி விளையாடி, ஆண் பெண் என்ற பாரபட்சமின்றி, மதங்கள் எனும் பேதமின்றி, குழந்தை மனமாய், ரோடே கிடையாய் கிடந்து மகிழ்ந்த நாட்கள் அவை
நட்புகளுடன் ஆடி மகிழ்ந்து, பரஸ்பரம் பிணைந்து, அண்டை விட்டாருடன் நேசம் கொண்டு, சங்கமித்த அன்றைய தீபாவளி என் வாழ்வில் நீங்கா இடம் பெற்றுள்ளது. இதனைத்தும் நிறைந்த தீபாவளி கொண்டாட்டம் பேரின்பமே.
இனிமையான சிரித்த முகமாய் கழித்த அந்நாள் என்றும் வராதல்லவா? அந்நாளை இங்கு நினைவு கூறுவது மீண்டும் பயணம் செய்தது போல் உள்ளது, சில நினைவுகள் என்றும் மறையாது மறவாது அழியாது.
காலத்தை கடந்த பின்பும் நினைவுகள் உயிர்பெற்றது என்ற மனநிறைவுடன் முடித்துக் கொண்டு மகிழ்வான நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்…!!! மீண்டும் என் அத்தனை தமிழ் சொந்தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!!!
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
GIPHY App Key not set. Please check settings