in

திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 5) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

திசையறியா பயணம் (அத்தியாயம் 5)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அத்தியாயம் 1  அத்தியாயம் 2   அத்தியாயம் 3   அத்தியாயம் 4

ண்களில் கண்ணீருடன் பூஜா அவளது கையை சுஜித்தின் கைப்பிடியிலிருந்து எடுக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள். சுஜித்தின் ஒவ்வொரு வார்த்தையும் பூஜாவின் நெஞ்சில் அம்பைக் கொண்டு தாக்குவது போல அவ்வளவு வேதனையை கொடுத்தது.

ப்ரியா வரும் சத்தம் கேட்டதும் வேகமாக பூஜாவின் கையை விடுவித்தான் சுஜித். பணத்தை அவன் முகத்திலே தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிச் சென்றாள் பூஜா.

காமவெறிப் பிடித்த சுஜித், பூஜாவின் கைகளை இறுக்கிப் பிடித்ததில் அவளது கை இரத்த கலரில் சிவந்து போயிருந்தது.

சுஜித்தின் செயல், மேலும் பூஜாவின் மனதில் எப்பாடுபட்டாவது வெளிநாட்டு வேலைக்கு சென்றே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்திவிட்டது.

‘ஒவ்வொரு நாளும் இப்படி மானத்த காப்பாத்த என்னால பயந்துகிட்டே போராட முடியாது. நான் ஏழையா பிறந்தது என் தப்பா கடவுளே? இல்ல கொஞ்ச வயசுலேயே என் புருஷனை பறிகொடுத்து இப்படி தனி மரமா நிக்குறேனே அது தப்பா? இல்ல நான் பொண்ண பிறந்ததே தப்பா? பிள்ளைங்கள வச்சிக்கிட்டு நான் கஷ்டப்படுறதுலாம் உனக்கு தெரியுதா இல்லையா? என்னால இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி இல்ல. என் பிள்ளைங்கள காப்பாத்த நான் உசுரோட இருந்து தான் ஆகனும். நீதான் எனக்கு ஒரு நல்ல வழிக்காட்டனும்’ என்று வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் கடவுளிடம் அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டு புலம்பிக் கொண்டே கண்ணீருடன் நடந்து சென்றாள் பூஜா.

நாட்களும் கடந்து சென்றன. பூஜாவிற்கு எந்தவித சந்தேகமும் வராத அளவுக்கு ட்ரெயிணிங் முடிந்தது. பாஸ்போட் விசா எல்லாம் கைக்கு கிடைத்து, வெளிநாட்டிற்கு செல்ல ஆயத்தமானாள் பூஜா.

“ஓகே பூஜா! ஆல் தி பெஸ்ட்…. நாளைக்கு ப்ளைட். எல்லாம் பேக்கிங் பண்ணியாச்சுல? முடிஞ்சா மறுபடியும் பார்க்கலாம்….” என்றான் மேனேஜர்.

“சார்… என்ன சொல்லுறீங்க?”

“நாலு வருஷம் அக்ரீமெண்ட்ல பூஜா, அதான் முடிஞ்சா வெளிநாட்டுல உங்கள சந்திக்க வாய்ப்பு கிடைச்சா பார்க்கலாம்னு சொன்னேன்.”

“ஓகே சார், பேக்கிங்லாம் பண்ணிட்டேன். ரொம்ப நன்றி சார்” என்று கூறிவிட்டு வாழ்வின் புதிய தொடக்கத்திற்கான நாள் நெருங்கி விட்டதை நினைத்து சந்தோஷமாக வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் பூஜா.

றுநாள் அதிகாலைப் பொழுதே எழுந்து விட்டாள் பூஜா. பூஜாவின் குழந்தைகள் இருவரும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தனர். எப்போதும் குழந்தைகள் இருவருக்கும் நடுவில் படுத்து உறங்குவது தான் பூஜாவின் வழக்கம்.

பூஜாவின் மகனோ, அவளுடைய சேலையை கையில் சுற்றிக் கொண்டு படுப்பான். மகளோ, அவளுடைய காலை பூஜாவின் மீது போட்டுக் கொண்டு படுப்பது வழக்கம். நாளை நம் குழந்தைகள் யார் மீது கை கால்களைப் போட்டு படுப்பார்கள் என்று கவலையுடன் அவர்களது தலையை கோதி விட்டு சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

கண்களில் கண்ணீருடன் மகனின் கையை சேலையிலிருந்து எடுத்து விட்டாள். தன் மீது போட்டிருந்த மகளது காலை மெதுவாக எடுத்து கீழே வைத்தாள். குழந்தை மீண்டும் தூக்கத்திலே காலோடு  கையையும் சேர்த்து போட்டு இறுகப் பற்றிக் கொண்டது.

கண்ணீரை அடக்க முடியாதவளாய் மீண்டும் குழந்தையுடைய கை கால்களை மெதுவாக இறக்கி படுக்கையில் வைத்துவிட்டு, குழந்தைகளின் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு பயணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சரி பார்க்கத் தொடங்கினாள்.

மதியம் மூன்று மணிக்கு ஃப்ளைட். பூஜாவின் மனதில் ஒரே படபடப்பு. அவளால் நிதானமா இருக்க முடியவில்லை. ஒருபுறம் வீட்டு சூழ்நிலைக்காகவும், மறுபுறம் அவளுடைய மானத்திற்கான போராட்டமாகவும் மாறிய சூழலை நினைத்து மனதில் குமுறிக் கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பும் வரை குழந்தைகளை தன் மடியிலிருந்து கீழே இறக்கி விடவே இல்லை பூஜா.

குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் போது, என்றுமில்லாமல் அன்றைக்கு என்று பார்த்து பூஜாவிற்கு அவனுடைய மகன் ஊட்டி விட்டான்.

அவன் ஊட்டுவதைப் பார்த்ததும் மகளும், “அம்மா… ஆ…” என்றாள்.

இருவரையும் கட்டியணைத்து கதறி அழுது விட்டாள் பூஜா. பூஜாவை பார்த்து முத்தம்மாளும் துடித்து விட்டார்.

“பூஜா, நான் சொல்லுறத கேளுடி. இப்பவே உன்னால பிள்ளைகள விட்டுட்டு இருக்குறத நினைச்சு தாங்க முடியல. நீ எப்படி போய் அங்க இருப்ப? பேசாம வரலைனு சொல்லிரு, வேற ஏதாவது வேலைய பார்த்து புழப்ப நடத்தலாம்” என்றார்.

“புரியாம பேசாதம்மா… பெத்த மனசுக்கு எப்படிம்மா பெத்த பிள்ளைங்கள விட்டுட்டு போய் அங்க நிம்மதியா இருக்க முடியும். என்னம்மா செய்ய? அந்த ஆண்டவன் என்னுடைய தலையெழுத்த இப்படி எழுதியிருக்கான். என் தலையெழுத்து தான் இப்படியிருக்கு. என் பிள்ளைங்க தலையெழுத்தாவது நல்லா இருக்கனும் நினைச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். கிளம்புற நேரத்துல ஏதாவது சொல்லி என்னை மேலும் கஷ்டப்படுத்தாதம்மா…”

திருப்பி பதிலேதும் பேச முடியாமல் தன் மகளின் நிலைமை குறித்து கதிகலங்கி கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டு பூஜா கிளம்புவதற்கான வேலைகளை மேற்கொண்டு பார்க்க சென்று விட்டார் முத்தம்மாள்.

“மணி… அம்மா வர்ற வரைக்கும் தங்கச்சிய நீ பத்திரமா பாத்துக்கனும்ப்பா…”

“நீ அழாதம்மா! நான் தங்கச்சிய பத்திரமா பாத்துக்குவேன். நீ பத்திரமா போய்ட்டு வாம்மா” என்று தன்னுடைய அம்மாவிற்கு தைரியம் கூறினான் மணி.

“செல்லக்குட்டி… அண்ணணோட சண்டை போடாம சமத்துக்குட்டியா இருக்கனும் சரியா?”

“சரிம்மா… அம்மா! நீ வரும்போது எனக்கு ஊதா கலர் படம் போட்டிருக்கும்ல அந்தச் சாக்லேட் வாங்கிட்டுவா…” என்று அம்மா வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு திரும்பி விடுவாள் என்று நினைத்து கூறியது அக்குழந்தை.

“சரிடா செல்லம்…” என்று கூறினாள் பூஜா.

தன்னுடைய வீட்டில் உள்ள இரும்பு பெட்டியைத் திறந்து தன்னுடைய கணவருடைய போட்டோவை கையில் எடுத்து மார்ப்போடு ஒத்திக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“மச்சான் நான் கிளம்புறேன்…” என்று கூறிவிட்டு தன் கணவருடைய போட்டோவிற்கு முத்தமிட்டு வீரனுடைய போட்டோவை அவளுடைய ஹேன்பேக்கில் வைத்துக் கொண்டாள்.

தன்னுடைய அம்மாவைக் கட்டியணைத்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர், “பிள்ளைங்கள பத்திரமா பாத்துக்கோம்மா… நீயும் கவனமாயிரு!” என்று கூறினாள்.

குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்தாள். பூஜாவை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவளுடைய வீட்டின் வாசலில் கார் வந்து நின்று கொண்டிருந்தது.

காரில் ஏறி அமர்ந்தவள், தன் கரங்களை அசைத்து அங்கிருந்து விடைப்பெற்று விமான நிலையத்திற்கு சென்றாள்.

ப்போது எங்கு செல்வதாக இருந்தாலும் கால்நடையாக சென்று வருபவளுக்கு காரில் போவது புது அனுபவமாக இருந்தது. கார் விமான நிலையத்தை வந்தடைந்தது. பூஜாவை அழைத்துச் செல்வதற்காக பிரவீன் காத்துக் கொண்டிருந்தான். பூஜா காரிலிருந்து இறங்கியதும் விமானநிலையத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“ஹாய் பூஜா…” என்று அவளைப் பார்த்த சந்தோஷத்தில் பூஜாவின் கையை தொடுவதற்காக கை குலுக்கி வரவேற்பது போல பாசாங்கு செய்து கையை நீட்டினான் ப்ரவீன்.

“வணக்கம் சார்…” என்று கூறி ப்ரவீனுக்கு கை கொடுக்காமல் மறைமுகமாக பதிலடி கொடுத்தாள்.

ஆரம்பத்திலிருந்தே ப்ரவீனின் பார்வையும் தோற்றமும் பிடிக்காத பூஜாவிற்கு, வேலை தான் முக்கியம் என மனதில் நினைத்து கொண்டாள்.

வேலைக்காக வேறு வழியில்லாமல் அவனோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியது எண்ணி வருந்தினாள். பூஜா வணக்கம் தெரிவித்ததும் ப்ரவீன் முகம் மாறியது. இருந்தாலும் மறுபக்கம் என்னோடு தான வந்தாக வேண்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று பூஜாவைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தான்.

இவளோடு சேர்ந்து ஐந்து பெண்கள் வேலைக்கு வருவதாக சங்கர் கூறியிருந்தான். ஆனால் விமானநிலையத்தில் பூஜாவைத் தவிர வேறெந்த பெண்களும் இல்லை. சுற்றி முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“என்ன பூஜா? யாரையே எதிர்பாக்குற மாதிரி இருக்கு” என்று கேட்டான் ப்ரவீன்.

“ஆமாம் சார்… மத்த பொண்ணுங்களாம் எங்க சார்? இன்னும் காணோம்?”

“ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ஆளா கூட்டிட்டு போவோம். அது அந்த நாட்டோட ரூல்ஸ்” என்றான் ப்ரவீன். அதைக் கேட்டதும் பூஜாவிற்கு கூடுதல் படபடப்பு ஏற்படத் தொடங்கியது.

“வா பூஜா போலாம்… டைமாச்சு” என்று அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் செல்லும் நாட்டிற்கான செக்கிங் கேட்டிற்குள் நுழைந்தான்.

பூஜாவின் லக்கேஜ், பாஸ்போர்ட் மற்றும் பயணச்சீட்டு செக்கிங் முடிந்தவுடன் விமானத்தில் ஏறுவதற்காக அரைமணி நேரம் அவர்களது தளத்தில் காத்துக் கொண்டிருந்தனர். பூஜாவிற்கு மனதிற்குள் ஏதோ ஏதோ எண்ணங்கள் ஓடத் தொடங்கியது.

விமானத்திற்குள் ஏறுவதற்கான நேரம் நெருங்கியது. பயணிகள் அனைவரும் வரிசையாக விமானத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். விமான பணிப்பெண் பூஜாவையும் வரவேற்று அவளுக்கான இருக்கை உள்ள இடத்தின் திசையை காட்டினார். பூஜாவிற்கு அடுத்த சீட்டிலே பிரவீனுடைய இருக்கையும் இருந்தது.

பூஜாவிற்கு இதெல்லாம் மிகவும் புதியதாக இருந்தது. மனதிற்குள் இதயத்தின் துடிப்பு ரொம்ப வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.

சீட் பெல்ட் போட எப்படி போட வேண்டும் என்று அங்குள்ள விமான பணிப்பெண் கூறிக் கொண்டிருந்தார், ஆனால் பயத்தில் பூஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

இன்னும் சில நிமிடங்களில் விமானம் புறப்பட தயராக இருக்கிறது அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணியுமாறு அறிக்கை செய்து கொண்டிருந்தனர்.

பூஜா பெல்ட் மாட்டுவதற்கு தடுமாறுவதைக் கண்டு ப்ரவீன் அவளது சீட் பெல்டை மாட்டி விட வேகமாக அவளது பெல்டை எடுக்க கையை அவளது இடைக்கு அருகில் கொண்டு செல்லும் சமயம் பார்த்து அங்குள்ள விமான பணிப்பெண்ணை உதவிக்கு அழைத்தாள் பூஜா.

மீண்டும் மூக்கு அறுபட்டது போலவே உணர்ந்தான் ப்ரவீன். விமானம் புறப்பட தொடங்கியதும், பூஜா பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள். ஒரு பதினைந்து நிமிடம் வரை அவளது காதுகளிரண்டும் அடைத்துக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து சீட் பெல்டை கழற்றி விடுமாறு அறிக்கை சத்தம் கேட்டதும் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள் பூஜா.

தன்னுடைய வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக திசையறியா பயணத்தை நோக்கி விமானத்தில் சென்று கொண்டிருந்தாள். பூஜாவிற்கு ப்ரவீனுடைய தொல்லை வேற தாங்க முடியவில்லை.

எப்படியாவது அவளைத் தீண்டி விட வேண்டுமென்று பயணத்தின் போது ஏதாவது வம்புகென்று செய்து கொண்டிருந்தான்.

கடவுளே! இது என்ன பெரிய தலைவலியா போச்சு. அங்க பயந்து இங்க வந்து நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, போகும் போதே இவ்வளவு இம்சையா இருக்கே என்று மனதில் நினைத்து புலம்பி தவித்துக் கொண்டிருந்தாள் பூஜா.

நான்கு மணி நேரத்திற்கு பிறகு இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் தரையிறங்க போவாதாக விமான ஓட்டி அறிவித்துக் கொண்டிருந்தார். பூஜாவிற்கு அப்போது தான் மூச்சு வந்தது.

ப்ரவீனின் அருகிலிருந்து சீக்கிரம் தப்பிவிடலாம் என்று நினைத்தாள். விமானம் தரையிறங்கியதும் பூஜாவிடம் ஒரு உடையை கொடுத்து பாத்ரூமிற்கு சென்று அணிந்து வருமாறு கூறினான் ப்ரவீன்.

“இது எதுக்கு சார்?”

“இந்த நாட்டுக்குள்ள பெண்கள் போனும்னா இந்த உடையை அணிய வேண்டும்” என்று கூறினான்.

“சரி” என்று கூறிவிட்டு உடையை அணிந்து வந்தாள். அவள் முகத்தில் உள்ள இருகண்கள் தவிர முழுஉடலையும் மறைக்கும் வண்ணம் பர்தா அணிந்திருந்தாள் பூஜா. விமான நிலையத்தில் இவர்களை அழைத்துச் செல்ல பெரிய உருவத்துடன் இருநபர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ப்ரவீனைப் பார்த்ததும் அவர்கள் பூஜாவை கை நீட்டி ஏதோ கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசும் மொழி பூஜாவிற்கு விளங்கவில்லை.

வண்டியில் ஏறுமாறு ப்ரவீன் கூறினான். வண்டியில் ஏறியதும் பூஜா மற்றும் ப்ரவீனுடைய கண்களை கருப்பு நிறத்துணியால் கட்டி விட்டனர்.

“என்ன சார் இதெல்லாம்?” என்று ப்ரவீனிடம் பதறிப்போய் கேட்டாள் பூஜா.

“இதெல்லாம் இங்க வழக்கம் தான், பயப்படாத பூஜா!” என்றான். பூஜாவிற்கு தலையிலிருந்து முகத்தில் வியர்வை கொட்டத் தொடங்கியது.

போகும் வழியெல்லாம் வெளியிலிருந்து வரும் சத்தத்தை கூர்ந்து கவனிந்து வந்தாள். குறிப்பிட்ட தூரம் சென்றதும் எந்தவித சத்தமும் கேட்காதவாறு ஜன்னல்களை க்ளோஸ் செய்தனர்.

பூஜாவிற்கு மேலும் பயம் அதிகரிக்க தொடங்கியது. ஒரு இடத்தில் கார் நின்றது.

கண்களில் கட்டியுள்ள துணியை அவிழ்காமலே ஒரு அறைக்குள் பூஜாவை மட்டும் அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் துணிக்கட்டை அவிழ்த்தனர். சிகப்பு நிற வண்ண விளக்கு ஒன்று மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

அங்கு வந்த பெண், “பத்து நிமிடத்தில் தயராகு” என்று கூறி வேறொரு புடவையும் மல்லிகை பூவும் வாசனைத் திரவியமும் கொண்ட பையைக் கொடுத்தாள்.

“எதுக்கு இது?”

“சீக்கிரம் கிளம்பிட்டு வா… இன்னைக்கு பெரிய பணக்காரர் வர்றாரு. அவர் மனம் நோகாம நடந்துக்கோ” என்று கூறினாள்.

“நான் கார்மெண்ட்ஸ் வேலைக்கு வந்திருக்கேன். நீங்க என்ன வேலை சொல்லுறீங்க, எனக்கு புரியல” அந்தப் பெண் பூஜா வரவழைத்திருக்கும் காரணத்தைக் கூறியதும் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுகத் தொடங்கிவிட்டாள்.

“ஐயோ! கடவுளே உனக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லையா?” என்று கதற தொடங்கி விட்டாள்.

“ஒழுங்கா நாங்க சொல்லுற பேச்சு கேட்டு நடந்துகிட்ட உன் வீட்டுக்கு உயிரோட போகலாம். இல்லாட்டி உயிரோட போக முடியாது பார்த்துக்கோ” என்றாள்.

பதிலேதும் பேசாமல் துணியை வாங்கிக் கொண்டு உடையை மாற்ற பாத்ரூமிற்குள் சென்றாள்.

“என்னுடைய மானத்தை இழந்து இந்த புழைப்பு புழைக்கிறதுக்கு நான் செத்தே போயிரலாம் கடவுளே. நான் செத்துட்டா என்னுடைய பிள்ளைங்க ஆனாதையாகிருங்களே… நான் சாகவும் முடியமா வாழவும் முடியாத நிலைமைய உருவாக்கிட்டேயே கடவுளே… நான் இப்போ என்ன பண்ணுவேன்” என்று பாத்ரூமிற்குள் கதறி அழுதாள்.

பாத்ரூமின் மேலே ஒரு ஜன்னல் இருந்தது. அது வழியாக தப்பிக்க வழியிருக்கா என்று பார்த்தாள்.

வீட்டைச் சுற்றி பல பேர் கையில்ல ஆயுதங்களுடன் கண்காணித்து கொண்டிருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனமாக தென்பட்டது. வேறு வழியில்லாமல் புடவையை அணிந்து கொண்டு விதவை கோலத்தை மாற்றி பூச்சூடி வாசனை திரவியம் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

“சும்மா சொல்லக்கூடாது… சங்கர் இந்த முறை தரமான ஆளத்தான் அனுப்பியிருக்காரு” என்று கூறி பூஜாவை வேறொரு அறைக்குள் அனுப்பி வைத்தாள்.

பூட்ஸ் சத்தம் ஒன்று அவள் இருக்கும் அறையை நோக்கி வருவதை கேட்டு படபடத்து போனாள்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முதல் கல்யாணம் (சிறுகதை) – ✍ நாமக்கல் எம்.வேலு

    உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 1) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை