சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 73)
காலிங் பெல் சத்தம் கேட்கவும், மகள் பூவிதாவைக் கீழே இறக்கி விட்டுட்டு தெருக் கதவை நோக்கி வந்தான் சங்கர். பின்னாலேயே தளிர் நடை போட்டு வந்தாள் இரண்டு வயது பூவிதா.
வந்திருப்பது மனைவி அமுதா தான் என்பது தெரிந்ததும், முகம் இறுகியது சங்கருக்கு. இது அமுதா எதிர்பார்த்தது தான்.
குழாயின் அருகிலேயே சோப்பு வைத்துவிட்டுத் தான் நர்ஸ் டூட்டிக்குச் சென்றிருந்தாள் அமுதா. ஆனால் சோப்பைக் காணோம்.
தோளில் மாட்டியிருந்த பேகின் ஜிப்பைத் திறந்து சோப்பை எடுக்கும் போதே “அம்மா அம்மா” என்று குழந்தை அவளை நெருங்கிக் கொண்டிருந்தது.
அமுதா அவசர அவசரமாக சோப்புப் போட்டுக் குழாயில் கைகழுவியபடியே “இருடா கண்ணா.. அங்கியே இரு” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். குழந்தையை அப்படியே விட்டுச் சென்ற கணவன் சங்கரை மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.
சட்டென்று முகக் கவசத்தையும் கழற்றி ஜிப்பைத் திறந்து வைத்து விட்டு, பையை அங்கேயே வைத்து விட்டு, வேறு வழியின்றி குழந்தையின் அழுகையை நிறுத்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“ஏங்க… நேரா பாத்ரூம் போயி குளிச்சிட்டு வந்து தான் குழந்தையைத் தூக்குவேன்னு தெரிந்தும், கதவைத் திறந்துட்டு கடமை முடிஞ்ச மாதிரி அழுதுகிட்டிருக்கிற குழந்தையைக் கூட தூக்காம நீங்க பாட்டுக்கு வந்துட்டீங்களே”
இதற்கு மேல் பேசினால் வேறு மாதிரி சத்தக்காடாகி அக்கம் பக்கம் அசிங்கமாகி விடும் என்று அமைதியாகி, உடைகளைக் களைந்து நைட்டிக்கு மாறினாள் அமுதா. சங்கரின் அமைதி, புயலுக்கு முன் வருவதாகவே பட்டது அமுதாவுக்கு.
“அம்மா இன்னும் வரலியா?”
இந்தக் கேள்விக்கும் பதிலில்லை சங்கரிடம்.
நாத்தனார் கணவன் கொரோனாவில் இறந்து ஒரு வாரம் ஆனது. இந்த ஒரு வாரமாக கைபேசியில் நாத்தனாரோடும் மாமியாரோடும் சங்கரோடும் பேசியதோடு சரி. அமுதா வரவில்லை. அவள் வராதது தான் எல்லோருக்கும் பெருங் குற்றமாகி விட்டது.
குழந்தையின் முகத்தைத் தண்ணீரைக் கொண்டு துடைத்துக் கொண்டிருக்கும் போதே, பக்கத்து வீட்டு சின்ன மாமியார் பேசியபடி உள்ளே வருவதை உணர்ந்தாள்.
மாஸ்க் இல்லாமல் அருகில் வந்து கொண்டிருப்பதை அறிந்த அமுதா, மேசையின் மீது ஏற்கெனவே வைத்திருந்த மாஸ்கை மாட்டிக் கொண்டு, “வாங்க மாமி..மாஸ்க் போடாம வெளியே வராதீங்க. படிச்சிப் படிச்சி சொல்லியும் அனாவசியமா அவர் பாட்டுக்குத் திரிந்ததால, என் நாத்தனார கதிகலங்க வச்சிட்டுப் போயிட்டார் அவரோட வீட்டுக்காரர்”
இடைமறித்த சின்ன மாமியார், “அதிருக்கட்டும், டூட்டி முடிஞ்ச மறுநாள் தான் அவர் காலமாயிட்டார். நீ வந்திருக்கலாம்ல. அதான் வரல, மூனாநாள் ஆத்தா வீட்டுக்கு சங்கர் கூட்டியாந்தப்பவாவது வீட்டுக்கு நீ வந்திருக்கலாம், அதுவுமில்ல. சங்கருக்குத் தான் அசிங்கமும் சங்கடமுமாச்சு.”
சின்ன மாமியார் விடாமல் பேசிக் கொண்டிருந்ததில், இப்போது சங்கர் குறுக்கிட்டான்.
“சித்தி.. நீ சொல்றது பூரா வேஸ்ட்.. இந்த செவுத்துக்கிட்ட சொல்றதும் அவகிட்ட சொல்றதும் ஒன்னதான். இங்க நான் ஒண்டிக் கட்டையா இவ்வளோ துன்ப துயரங்களுக்கு மத்தியில் இந்தக் குழந்தையை வச்சிக்கிட்டு அல்லாடறேன். அவளுக்கென்ன, ஆஸ்பத்திரி என்னவோ, கொரோனா பேஷண்ட் என்னவோன்னு இருக்கா. படிச்சிப் படிச்சி போன்ல சொன்னதெல்லாம் வேஸ்டாயிடுச்சி..”
இடுப்பிலிருந்து குழந்தை அமைதியாக ஒவ்வொருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்
குழந்தையைக் கீழே இறக்கி விட்டுவிட்டு, “எல்லாமே அவருக்குத் தெரியும் மாமி.. உங்களுக்காவது சில விசயங்கள் புரியாது” என்றவுடன், சங்கரின் முகம் இறுகியது. அவள் தொடர்ந்தாள்.
“கொரோனா டூட்டி ஒரு வாரம் பார்த்த கையோடு நேரா வீட்டுக்கு வந்துட முடியாது. அப்படி வந்தா அது எவ்வளவு ஆபத்தானதுன்னு ஆஸ்பத்திரியில் வேல செய்யறவங்களுக்குத் தான் தெரியும். ஒரு வாரம் கொரோனா டூட்டி முடிஞ்ச கையோட, ஒரு வாரம் எங்களை நாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளனும். அதுக்காக ஆஸ்பிடல் நிர்வாகம் ஏற்பாடு செய்யறாங்க
மேலும் எங்களுக்குக் கொரோனா தொற்று இருக்குமான்னு டெஸ்ட் எடுத்து அதனோட ரிசல்ட் நெகடிவ்னு வந்தப்புறம் தான் வர முடியும். அதை மீறி சாவு வாழ்வுக்காக இடையில் நான் வந்து எனக்கு கொரோனா தொற்று இருந்திருக்கும் பட்சத்தில், அது என்னோட தொடர்பில் இருக்கும் எல்லோருக்கும் பரவிடும்.
நான் வந்தாலே கொழந்த என்னோட ஒட்டிக்குவாங்கறது எல்லோருக்கும் தெரியும். இப்ப ரெண்டாவது அலையில் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கல கொரோனா. இந்த சூழ்நிலையில் நாத்தனார் இங்க வரும் போது நான் வரன்னு வைங்க, என்னால அவங்களுக்குக் கொரோனா வர வாய்ப்பிருக்கு. ஏற்கெனவே அவரோட வீட்டுக்காரர் பலியாகி ரெண்டு குழந்தைங்க அப்பா இல்லாம அல்லாடுதுங்க”
சப்புக் கொட்டிக் கொண்டே சங்கர் பேசலானான், “சித்தி..நான் என்ன சொன்னேன்..சொன்னது சரியாப் போச்சா?”
“எது எப்படியோ அமுதா, நீ இல்லாததால கண்ட நாயிங்க கண்டபடி பேசுச்சிங்க”
“எனக்கு அவங்களப் பத்தி கவலையில்லை. புரிய வேண்டியவங்களுக்கே புரியலையே”
அமுதா சங்கரைப் பார்க்கவும், அவன் பாத்ரூமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். பூவிதா ஓடி வந்து அமுதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். முத்த மழை பொழிந்தாள் அமுதா.
நான்கு மாதமாக பதினைந்து நாளைக்கொரு முறை தான் வீடு வருகிறாள் அமுதா. ஒவ்வொரு முறையும் டெஸ்ட் ரிப்போர்ட் நெகடிவ் ஆக வேண்டும் என்று எட்டியம்மனை வேண்டிக் கொள்வாள்.
என்ன தான் கட்டுப்பாடாக இருந்தாலும், தன்னை மீறி ஏற்படும் அஜாக்கிரதையால் தொற்று பரவிவிடுமோ என அஞ்சி அஞ்சி அரற்றும் அமுதாவின் மனம்.
பெருமூச்செறிந்தபடி நகரத் தொடங்கிய சின்ன மாமியாரிடம், “ஏம் மாமி..நான் நாளைக்கே போகனும்கிறது எங்க மாமியாருக்குத் தெரியும் தானே. பொண்ணு வீட்லயே போய் உட்கார்ந்துகிட்டிருந்தா இங்க ஒண்டிக்கார மனுசன் என்ன செய்வாரு”
“என்ன செய்யறது அமுதா..அவளோட ஒரே பொன்னு அறுத்துட்டு ரெண்டு கொழந்தைங்களோட நிக்கும் போது, எப்படி அப்படியே விட்டுவிட்டு வந்துட முடியும்?”
சின்ன மாமியார் சொல்வதும் நியாயமாகத் தான் பட்டது அமுதாவுக்கு. முந்தா நாள் போனில் விசாரிக்கும் போது கூட, அமுதா தன்னுடைய மாமியாரைத் துணைக்கு வைத்துக் கொள்ள ஆலோசனை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
மேலும் கொரோனா கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என வகுப்பே எடுத்து விட்டதையும் நினைத்துக் கொண்டாள் அமுதா.
சின்ன மாமியாரை வழியனுப்பி விட்டு வந்தவள், தெருப்பக்க அறையில் வைத்து விட்டு வந்த பையிலிருந்து ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
மேசையின் மீது வைத்து விட்டு சங்கரைப் பார்த்தாள் அமுதா. மேசையின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து அமைதி காத்தான்.
இது தான் சமயம் என்றெண்ணியவள், “தோ பாருங்க..இது கப சுரக் குடிநீர். தினமும் ஒரு டீஸ்பூன் பவுடரை இரண்டு தம்ளர் தண்ணீரில் கலந்து காய்ச்சி ஒரு தம்ளராக்கி நீங்களும் உங்க அம்மாவும் தலா அரை தம்ளர் குடிங்க..பாப்பாவுக்கு ஒரு ஸ்பூன் கொடுக்க முயற்சி பண்ணுங்க..
இது பாராசிட்டமால் உள்ளிட்ட செட் மாத்திரைங்க..சளி, இருமல், உடம்பு அசதி, காய்ச்சல்னு ஏதாச்சும் அறிகுறி தெரிந்தா எனக்கு போன் பண்ணிக் கேட்டுக்கிட்டு மாத்திரை எடுத்துக்குங்க..பிளாஸ்க் வாங்கி வந்திருக்கிறேன். காய்ச்சிய வெந்நீரைக் குடிக்கிற மாதிரி பிளாஸ்கில் ஊத்தி வச்சிக்கிட்டு எல்லோருமே குடிங்க..
தினமும் கல் உப்பை வெந்நீரில் கலந்து தொண்டை வரைக்கும் கொண்டு சென்று கொப்புளித்துத் துப்புங்க..எந்தக் காரணம் கொண்டும் வெளியே சுத்த வேணாம். தெருவில் காய்கறிகள் வாங்க வரும் போதும், யாராவது உங்களைப் பார்க்க வரும் போதும், மாஸ்க் இல்லாமல் போகாதீங்க..தினமும் ஒரு முறை இந்தக் கருவி மூலமாக ஆவி பிடிங்க..”
சொல்லிக் கொண்டே ஒவ்வொரு பொருளாக மேசையில் பரப்பினாள் அமுதா. நாளைக்கு மீண்டும் ஆஸ்பத்திரிக்குப் போக இருப்பதை சொல்லாமல் சொல்வதாகவே சங்கருக்குப் பட்டது.
அமுதா வேலைக்குப் போவதால் தான் குடும்பம் ஏதோ கௌரவமாக போய்க் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு கொரோனாவிலேயே தன்னுடைய வேலையைப் பறித்துக் கொண்டது தனியார் கம்பெனி. ஆனால் அதை அப்படியே மறைத்து விடுகிறது உள் மனம்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் அமுதா.
அமுதாவுக்கான அரவணைப்பு சங்கரிடமிருந்து கிடைக்கவில்லை. கொரோனா கொடூரத்தில் ஆஸ்பத்திரியில் அனுபவிக்கும் வேதனைகளைத் தானாகவே விளக்க அமுதாவுக்கு விருப்பமில்லை.
எதுவும் புதிதல்ல. எல்லாம் சங்கர் அறிந்தது தான் என்றாலும், தன் மீது பச்சாதாபப்பட்டு வார்த்தைகளாலான மயிலிறகால் ரணங்களுக்கு மருந்திடுவான் என உள்மனம் ஏங்கியது.
ஆனால் வழக்கம் போல அமைதி காத்து, நள்ளிரவில் உரிமையுடன் தன் இச்சையை மட்டும் தீர்த்துக் கொண்டான் சங்கர்.
விடியலில் எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து அன்றைய காலை உணவு, மதிய உணவு என சமையல் முடித்து காலை எட்டு மணிக்குத் தயாராகி விட்டாள். இன்னும் பத்து நிமிடங்களில் உள்ளூரிலுள்ள டாக்டர் கார் வந்துவிடும்.
அவருடன் பக்கத்து டவுன் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பது இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வசதியாகி விட்டது அமுதாவுக்கு.
சங்கர் வழக்கம் போல் அவள் புறப்படும் நாளில் எந்த வேலையையும் செய்யாமல் குழந்தையை மட்டும் பார்த்துக் கொண்டு கடனே என்றிருந்தான். இதோ கார் ஹாரன் ஒலி கேட்கிறது.
சங்கரிடமிருந்து தாவிய குழந்தையை வாங்கிக் கொஞ்சி அவளது கைவிரல்களை மெல்லப் பிரித்து சங்கரிடம் கொடுத்து விட்டு, இரண்டு பெரிய பைகளுடன் சென்று காரின் பின் சீட்டில் ஏறினாள்.
நல்ல வேளையாக டாக்டரைப் பார்த்து சங்கர் கும்பிட்டது அமுதாவின் நெஞ்சில் பால் வார்த்தது.
“டீ சாப்பிட்டுப் போகலாமே சார்”
கையில் குழந்தையுடன் சங்கர் சொன்னது ஒப்புக்காகத் தான் என்றாலும், அது ஒரு வகையில் அமுதாவுக்கு இதமாக இருந்தது. டாக்டர் கையசைத்து விட்டு காரைக் கிளப்பினார். குழந்தை அமுதாவின் கையசைவிற்கும் டாக்டரின் கையசைவிற்கும் சேர்த்தே கையசைத்தாள்.
மறையும் வரை காரையே பார்த்துக் கொண்டிருந்த சங்கர், தெரு கேட்டைத் தாளிட்டு உள்ளே நுழைந்தான். மேசை வரை சென்றவனின் காதுகளில், காலிங் பெல் ஒலித்தது.
குழந்தையுடன் திரும்பி வந்த சங்கர், கேட் அருகே நடுத்தர வயது பெண் முகத்தில் மாஸ்குடனும் கையில் பையுடனும் நிற்பதைக் கண்டான்.
கேட்டைத் திறந்தவன் அமுதா சொன்னதை நினைத்துக்கொண்டு தான் மாஸ்க் போடாமல் வெளி ஆளை அணுகுவது உறுத்தியது. கேட்டுக்கு வெளியே நின்றவள் சங்கரை மாஸ்க் போட்டு வருமாறு சைகையால் உணர்த்தினாள்.
திரும்பிச் சென்றவன் மாஸ்க் போட்டுக் கொண்டு வந்தான். உள்ளே வந்தவள் தான் கொண்டு வந்த பையை ஒரு ஓரமாக வைத்து விட்டுப் பேச முற்பட்டாள். அவளை உள்ளே வந்து உட்காரச் சொல்லியும், சைகையால் வேண்டாமென மறுத்து விட்டு மாஸ்குடனே பேசலானாள்.
“உங்க சம்சாரம்..கண்கண்ட தெய்வத்த தரிசிக்கலாம்னு தான் வந்தேன். ஆனா நான் நடந்து வரும் போதே எதிரில் டாக்டர் கார் வேகமாகப் போனதப் பார்த்தேன். பின் சீட்ல நர்சம்மா தான் இருந்திருக்கனும். அப்படித் தானே”
“ஆமாம்..அவங்க போயிட்டாங்க”
“லாக் டவுன்ல என்னால் டைம்ல வர முடியல..மேலும் இவ்வளவு காலையிலேயே அடுத்த டூட்டிக்கு கிளம்பிடுவாங்கன்னு நான் நெனைக்கல..ஆனா எங்க வீட்டுக்காரர் என்னவோ சொன்னார் சீக்கிரமாகவே கிளம்புன்னு. ஆனா நான் அவருக்குச் செய்ய வேண்டியதை ஓரளவுக்கு செஞ்சிட்டு வர்ரதுக்குள்ள லேட் ஆயிடுச்சி..வருத்தமாக இருக்கு.”
மேலும் தொடர்ந்தாள் அவள், “அமுதா அம்மா இல்லன்னா நான் எங்க வீட்டுக்காரரை உயிரோட பார்த்திருக்கவே முடியாது. மூச்சுத் திணறலோட போன அவருக்கு பெட் கிடைக்கிறதிலிருந்து, ஆக்சிஜன் கிடைக்கிறதிலிருந்து, அவருக்குத் தேவையான உணவு, மருந்து மாத்திரைகளைக் கொடுத்து அவரைக் கவனிச்சிக்கிட்டதிலிருந்து எல்லாத்துக்கும் சேர்த்து நன்றிக் கடன் பட்டவங்க நாங்க.
தொற்று பரவும்னு உறவுக்காரங்க யாரையும் அனுமதிக்கல. ஆனா தங்களோட உயிரை துச்சமாக மதிச்சி டாக்டர்களும் நர்சுகளும் செய்யுற சேவை விலை மதிப்பில்லாதது. உயிர் விலை மதிப்பில்லாதது தானே.
எல்லாத்துக்கும் மேலே காலையில் எட்டு மணிக்கு சாப்பிட்டு டூட்டிக்கு வர்ரவங்க மாலை நாலு மணிக்கு டூட்டி முடிஞ்சி போற வரைக்கும் பச்சைத் தண்ணிகூட பல்லுல படாம நின்ன கால் நெடுங்காலா செய்கிற சேவை சாதாரணமில்ல. உடம்பு பூரா ஒன்னு மேலே ஒன்னுன்னு அவங்க போட்டிருக்கிற டிரஸ் இந்த வெயில் காலத்துல நரக வேதனைக் கொடுமை.
அமுதாவப் போல நர்சுங்க செய்கிற தியாகத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை. இதுவரைக்கும் கடவுளை சிலையாத் தான் பார்த்துக்கிட்டிருந்தோம். இப்பத் தான் மனித வடிவத்தில் பார்க்கிறோம். அவங்க காலில் விழனும்னு வந்தேன். முடியல. அவங்களுக்காக வீட்டளவில் எல்லா சிரமங்களையும் பொருத்துக்கிட்டு வாழற உங்களோட வாழ்வும் தியாக வாழ்வு தான். உங்க கால்ல விழறதும் அமுதாம்மா கால்ல விழறதும் ஒன்னு தான்”
சட்டென சங்கரின் காலில் அவள் விழுவதை எதிர்பாராதவனாய்..
குழந்தையைக் கீழே இறக்கி விட்டு அவளைத் தடுக்க முனைந்து தோற்றான்.
“இந்தப் பையில் மாம்பழம் இருக்கு..வீட்டுத் தோட்டத்தில் காய்ச்சிப் பழுக்க வைத்தது. மறுக்காம எடுத்துக்கங்க. எங்க வாழ்நாளில் மறக்க முடியாத மனித தெய்வம் அமுதா சிஸ்டருங்க..இது எங்க வீட்டுக்காரர் உங்க கிட்ட சொல்லச் சொன்னார். நான் வரேங்க”
சங்கரின் கண்களில் இயல்பாய் கண்ணீர் வழிந்தது. அவள் சேலை முந்தானையால் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டை சாத்திவிட்டுச் சென்றாள்.
இப்போது குழந்தையைத் தூக்கியவாறு அவள் தனது டூவீலரில் செல்வதை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்
மனைவியை அணைத்து ஆறுதல் சொல்ல பரபரத்தது நெஞ்சம். அவள் எந்த ஆபத்துமின்றி, விரைவில் வீடு வர வேண்டுமென மனம் பிராத்தித்தது
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
Good story. Reality speaking