in ,

பிராய்லர் கோழிகள் (சிறுகதை) – ✍ கு. அசோக்குமார், சென்னை

பிராய்லர் கோழிகள்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 55)

றையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் ரிவர்சில் ஓடுவது போல் வேகமாக  சுற்றிக்  கொண்டிருக்க, தீபிகாவின் மனப்புழுக்கம்  அறைக்குள்  சுழன்று கொண்டிருந்தது

நாலைந்து நாட்களாக அப்பா ஒழுங்காக பேசுவதில்லை. அம்மாவும் ஒருவித   சிடுசிடுப்புடன் தான் இருந்தாள். வாழ்வின் நோக்கங்கள் உடலின் வியர்வையோடு ஆவியாகிக் கொண்டிருந்தன. இளம்பச்சை நிறத்திலிருந்த மணி பிளான்ட் பற்றுவதற்கு கொம்பின்றி காற்றில் அலையாடிக் கொண்டிருந்தது.

“இந்தா டீ குடி”

கையில் சமைக்கும் போது  சுட்டுக்கொண்ட தழும்பு,  கலைந்த தலை,   முகத்தில் களைப்புடன் சாயமிழந்த சேலையில் உள்ளே வந்த அம்மாவைப் பார்க்கும் போதே சலிப்பாய் இருந்தது. இனி தனது வாழ்வும் இப்படித் தான் நிறமிழந்து இருக்குமோ என்று. 

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன் மா, அப்புறம் செஞ்சுக்கலாம்”

“வேலை கெடக்குடி, நாமென்ன வேலைக்காரங்களா வச்சிருக்கோம்?”

அம்மா சுத்தி சுத்தி எங்கே வருகிறாள் என்று தெரிந்தது.

தீபிகா வீட்டின் மூத்த பெண். சிறுவயதிலிருந்தே படிப்பில் சுட்டி. காலேஜ் முடித்த கையோடு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து பெங்களூர் கம்பெனியில் கம்ப்யூட்டர் புரோகிராமராக சேர்ந்தாள்.  

காண்ட்ராக்ட் பீரியட் முடிந்ததும் சென்னை இன்போசிஸின் பரிட்சைகளில்  தேறி சென்னைக்கு மாறியிருந்தாள். விரைவில் டீம் லீடர் மற்றும் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் என்று எதிர்காலம் கிளை விரிக்கக் காத்திருந்தது.

சிறியவள் மாளவி, இவள் காட்டிய பாதையிலேயே கோயம்புத்தூரில்  கம்ப்யூட்டர் படித்து வந்தாள். 

தீபிகாவின் பெற்றோர் அவளின் திருமணத்துக்கு வரன் பார்க்கத் துவங்கிய போது, முதன்முதலாய் வந்த  சம்பந்தமே பெரிய இடமாய் இருந்தது.  பல ஏக்கர் கணக்கில் காடு, நாலைந்து வீடுகள், இரண்டு கார் இத்யாதிகள் என்று ஏகப்பட்ட சொத்து. தீபிகாவின் வீடு சேலத்துக்கு அருகில் வாழப்பாடியில் இருக்க, மாப்பிள்ளையின் வீடு சேலத்தில் இருந்தது.

 நல்ல நிறத்தில், உயரமாய் திருத்தமாக இருந்த தீபிகாவை உறவினரின் திருமணம் ஒன்றில் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், அவளைப் பற்றி விசாரித்து தெரிந்தவர் ஒருவர் மூலம் பெண் கேட்டு அனுப்பியிருந்தனர்

“நாலஞ்சி நாய்ங்க, ரெண்டு மூணு வேலைக்காரங்கனு பெரிய இடம். பெண்ணை நல்லா பாத்துக்குவாங்க” என்று தெரிந்தவர் மூச்சுக்கு முன்னூறு தடவை கூற

“சரி பேசுவோம், ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வரச் சொல்லுங்க” என்றார் தீபிகாவின் அப்பா.  

மாப்பிளை வீட்டார் சொந்தக்காரர்களுடன் இரண்டு இன்னோவா கிரிஸ்ட்டாக்களில் அமர்க்களமாய்ப் பெண் பார்க்க வந்தாலும், எளிமையான மனிதர்களாய் தெரிந்தனர். சேலத்தில் கார்மெண்ட்ஸ் கம்பெனி ஒன்றை அப்பாவும் மகனும் நடத்துவதாகவும், திருப்பூரில் ஒரு கம்பெனி இருப்பதாகவும் கூறினர்.

“மாப்பிள்ளையோட அப்பா சாதாரண நிலைமையிருந்து சொந்த உழைப்பால் மேலுக்கு வந்தவர், சிம்பிளானவர்” என்று அவர்களுடன் வந்த உறவினர் பத்திரம் வாசித்தார்

மாப்பிள்ளை கெளதம் எம்.எஸ்.சி படித்து பார்ப்பதற்கும் நன்றாய் இருக்க, அனைவருக்கும் பிடித்துப் போனது. பவுன் போடுவது என்று எதைப் பற்றியும் பேசாமல், “பெண்ணை திருமணத்தில் பார்த்தோம், எங்களுக்கு பிடிச்சிருந்தது. அதான் கேட்டு அனுப்பினோம், எங்க  பொண்ணு மாதிரி பாத்துக்குவோம்” என்று ஓப்பனாய் பேசினார் மாப்பிள்ளையின் அப்பா.

“வெளிநாட்டிலிருந்து ஆர்டர் வாங்கறது, எக்ஸ்போர்ட்டை கவனிக்கிறது    இதெல்லாமே இவன் தான் பாத்துக்கிறான்” என்றாள் மாப்பிள்ளையின் அம்மா.

“தங்கமான குடும்பம். மாப்பிளையோட தங்கச்சியை கட்டி குடுத்தாச்சி,  அமெரிக்காவுல இருக்கா. எந்த பிரச்சனையும் இருக்காது” என்றார் மாப்பிள்ளையின் அத்தை

அனைவருக்கும் சரியென்று தோன்றிய போது, “கல்யாணத்துக்கு அப்புறம் தீபிகா வேலைக்குப் போக வேண்டாம், வீட்லயே இருந்தா போதும்” என மாப்பிள்ளையின் அம்மா கூற, தீபிகாவின் மனது திடீரென எதிர்ப்பட்ட ஸ்பீட் பிரேக்கரில் தடுமாறியது

“சின்ன வயசுலருந்து பொண்ணு வேலைக்குப் போக ஆசைப்பட்டா” என்று இழுத்தார் தீபிகாவின் அப்பா.

“சாஃப்ட்வேரில் வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம், பிரஷர் அதிகம். எனக்கு தெரிஞ்சி நாலஞ்சி பேரு வேலையைவே விட்டுட்டு வந்துட்டாங்க” என்றார் மாப்பிள்ளையின் அப்பா.

“பொண்ணு எதுக்கு ஒருத்தர்கிட்ட கை கட்டி வேலை செய்யணும். போரடிச்சா எங்க கம்பெனிக்கே போயிட்டு வரட்டும்.  பையன் பாரின் போகும் போது கூடவே போய்ட்டு வரலாம்” என்றாள் மாப்பிள்ளையின் அம்மா

“இப்பெல்லாம் பெண்ணுங்க வெளிய போறது பாதுகாப்பே இல்ல” என்றார் ஒருவர்.

இரண்டு பிள்ளைகளையும் சிறுவயதிலிருந்தே ‘பர்ஸ்ட் ரேங்க் வாங்கணும், பெரிய வேலைக்குப் போகணும், வாழ்க்கையில் எதையாவது சாதிக்கணும்’ என்று சொல்லி வளர்த்தவர் தீபிகாவின் அப்பா.

ஒவ்வொரு பரிட்சைக்கும் போட்டி போட்டுக் கொண்டு ராப்பகலாய் படிக்கையில், முதலாய் வரும் வெறியே தீபிகாவை துரத்தும். இன்போசிஸின் ஆறு கட்ட இன்டர்வியூவையும்  ஒரே அட்டெம்ப்டில் தாண்டி வந்த பெண் அவள். 

மாப்பிள்ளை வீட்டார் போனதும், “எனக்குப் பிடிக்கல” என்று தீபிகா கூற, பிரச்சனை  ஆரம்பித்தது

“இதை விட நல்ல குடும்பமே கிடைக்காது” என்றாள் அம்மா, பல வருடம் அவர்களுடன் பழகியது போல

“ஏன் பிடிக்கல?” என்றார் அப்பா

“இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சி நல்ல வேலைக்கு வந்துருக்கேன், எதுக்கு அதை விட்டுட்டு கல்யாணம் பண்ணனும்?”

“நீ வேலைக்குப் போயி எதுக்கு கஷ்டப்படணும்? உன்னோட டீம் லீடர் வேற திட்டுவான்னு அடிக்கடி சொல்லுவல்ல. இப்போ பாரு அவங்ககிட்டயே அம்பது பேரு வேலைக்கு இருக்காங்களாம்”

“உன்ன மாதிரியே வீட்லயே சமைச்சி போட்டுட்டு இருக்கச் சொல்றியா?”

“ஆமாடி, வீட்லயே இருக்கிறதால நான் எது சொன்னாலும் உனக்கு எளக்காரம் தான்”

“அதைத் தாம்மா நானும் சொல்றேன், நாளைக்கு என்னையும் இதே மாதிரி இளக்காரம் பண்ணக்கூடாது இல்ல”

தவறாக திசையில் பேசியதை உணர்ந்து “ஓங்கிட்ட பேச முடியாது” என்று அம்மா போய் விடுவாள்.

தீபிகாவின் தாத்தா, பாட்டிகள் மூலம் “இந்த மாதிரி நல்ல வரன் மீண்டும் அமையாது” என்று கூறி ப்ரெயின் வாஷ் செய்ய முயன்றனர்.

“பையனுக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, இந்த காலத்துல இப்படி ஒரு பையன் அமையறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

“கல்யாணம்னா எதையாவது ஒண்ணை விட்டுத் தந்து தான் ஆவணும். அழகான மாப்பிள்ளை, வசதி, வேலை, சொத்து இப்படி எல்லாம் அமையாது. உனக்கு எது முக்கியமோ அது இருக்குதான்னு பாரு.  வேற வழியில்லை, பெண்களுக்கு இவ்வளவு தான் கிடைக்கும்” என்று அருகில் அமர்ந்து பொறுமையாக பேசிப் பார்த்தார் அவளின் அப்பா.

“கொஞ்சம் டைம் குடுங்க” என்று தீபிகா பெற்றோரிடம் கூற, சென்னைக்கு போனால் இவளை மாற்ற முடியாதென்று, “நீ கொஞ்ச நாள் வீட்லருந்தே வேலை செய்ய பெர்மிஷன் வாங்கிக்க” என்றார்.

தீபிகாவின் மனதில் பெரிய கனவு இருந்தது

‘சென்னையில் தனியான ஒரு வீடு. இருவரும் வேலைக்கு செல்ல வேண்டும். முடிந்தால் ஒரே ஆஃபீஸுக்கு மாறிக் கொள்ள வேண்டும். நாலைந்து வருடங்கள் பாரினில் வேலை செய்ய வேண்டும். தன்னுடைய ஊர் ஸ்கூல், லைப்ரரிக்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்.

சென்னையில் ஜோடியாக சுற்றும் பாரின் தம்பதிகளை பார்க்கும் போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளி வைத்து விட்டு இதே போல நாமும் வெளிநாடுகளுக்கு வருடம் ஒரு முறை போய் வர வேண்டும். எதுவும் வாங்கா விட்டாலும் வாரமொரு முறை அருகிலிருக்கும் மாலுக்கு சென்று வர வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். காரில் நெடுந்தூர பயணம் செய்ய வேண்டும்’ என்று எண்ணற்ற ஆசைகள்

இப்போது அனைத்தையும் மறந்து விட்டு சேலத்தில் கல்யாணம் செய்து கொண்டு கிச்சனில் முடங்கியிருப்பதை நினைக்கவே பயமாயிருந்தது. வாழ்க்கை முழுதும் வீட்டிலேயே இருக்க வேண்டுமா?

சொந்தக்காரர்களின் விசேசங்களில் உடலெங்கும் நகையுடன் பெரிய வீட்டு பெண்ணாய் போய் விட்டு வந்தால் போதுமா? சொத்து கம்மியாக இருந்தாலும் மனதுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கு அனுமதி கிடையாதா? சொத்து மட்டுமே வாழ்க்கையா என்ற கேள்வி எஞ்சி நின்றது

அவளுடன் பேசிய அனைவரும் திரும்ப திரும்ப அதைத் தான் கூறினர். “பெரிய இடம், ராணி மாதிரி இருக்கலாம்”

ஒரு வாரம் காத்திருந்த மாப்பிள்ளை வீட்டார், நண்பர் மூலமாக விசாரிக்க “வேலைக்கு போக வேணாம்னு சொன்னதால பொண்ணு தயங்கறா, கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்கோம்” என்று தகவலனுப்பினார் தீபிகாவின் அப்பா.

“நமக்கு வேண்டியதெல்லாம் வீட்லயே இருக்கு, பொண்ணுங்க எதுக்கு வெளிய போயி கஷ்டப்படணும்” என்று மாப்பிள்ளையின் அம்மா கூறியதாக நண்பர் கூறினார்.   

“இப்ப எதுக்கும்மா ஆளாளுக்கு மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்கீங்க?” என்றாள் தீபிகா அம்மாவிடம்

“டீ ஆறிடப் போவுது, குடி. நாங்கெல்லாம் சொன்னா எங்க கேட்கறீங்க? நிறைய படிச்ச திமிரு”

“மேல மேல படின்னு நீங்க தான சொன்னீங்க, இப்ப என்னாச்சு?”

“படிக்கிறதே நாலு காசு சம்பாரிச்சி நல்ல நிலையை அடையணும்னு தான். இப்ப நேரடியா நல்ல நிலையை அடையப் போற. அப்புறம் என்ன? நாளைக்கு குழந்தை பெத்துக்க வேலையை விட்டுத் தானே ஆகணும்”

“அதை ஏம்மா ஏதோ பெண்களோட சாபம் மாதிரி சொல்ற? அந்த ஒரு மாசம் வீட்லருந்து வேலை செஞ்சிட்டு மறுபடி வேலைக்கு போனா குத்தமா என்ன?  பாரின்ல எல்லாம் குழந்தை பிறந்ததும் வீட்டை பாத்துக்குற மெஷினா மாறிடறாங்களா? அதுக்கப்புறம் முன்னேறக் கூடாதா?”

“குழந்தையை யாரு பாத்துக்குவா?”

“நீ வந்து இரு, இல்லாட்டி டே கேர்ல விட்டுட்டு போறேன்”

“நீ விட்டாலும் விடுவடி, திமிரு புடிச்சவ” என்றபடி அம்மா சென்றாள். 

இதுவரையில் எந்த விஷயத்திலும் எதிர்த்து பேசாதவள் தீபிகா. முதன் முறையாக ஒரு வாரத்திற்கு மேல் பிரச்னை நீடித்தது. திருமணத்திற்கு மறுத்து விட்டால், பெற்றோர் மனமுடைந்து போய் விடுவார்களோ என்பது தான் தீபிகாவுக்கு  இப்போது பெரும் பிரச்னையாய் இருந்ததது. 

இவர்களை திருப்திபடுத்த திருமணம் செய்து கொண்டால், காலமெல்லாம் வீட்டிலேயே இருக்க வேண்டுமே என்று பயமாகவும் இருந்தது.

“நீ என்ன நினைக்கிறியோ அதைப் பண்ணு” என்று தங்கை ஒதுங்கிக் கொண்டாள். 

பக்கத்து ஊரிலிருந்து அவளது மாமா வந்தார். “அம்மா சொல்றதைக் கேளு தீபிகா, உன் வாழ்க்கையை முடிவெடுக்க கூடிய வயதில்லை உனக்கு. பின்னாடி வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை” என்று அட்வைஸ் பண்ணி விட்டு கிளம்பினார்.

“அப்பா சொல்றதை கேளு, வேலைக்கு போயி என்ன பண்ணப் போற?” என்று போனில் ஒரு மணி நேரம் அட்வைஸ் செய்தாள் அத்தை

பொற்கிரீடம் அணிவித்து தன்னை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதாய் அனைவரும் நினைத்தனர். தங்கக்கூண்டில் கிளியாய்ப் போவதாய் அவளுக்குத் தோன்றியது.

பிராய்லர் கோழிகளை உணவிட்டு கொழுகொழுவென்று வளர்த்து நல்ல இடம் கிடைச்சவுடன் வெட்டி விடுவது தான் பெண்களின் வாழ்க்கையா. அவர்களுக்கென்று தனித்த உணர்வுகள் கிடையாதா?

அவளின் மகிழ்ச்சியை விட, சொசைட்டியில் பெருமையும், பாதுகாப்பும் பெற்றோருக்கு முக்கியமாய் தெரிந்தது. அவளின் விருப்பம் பெரிதாகப்படவில்லை.

அனைவரையும் எதிர்த்து நிற்க திராணியின்றி, மனதின் ஆசைகளைப் புதைத்து விட்டு திருமணத்திற்கு தலையசைத்தாள் தீபிகா. வானத்தை அளக்க விரும்பிய மனச்சிறகுகளை இழக்க தயாரானாள்.

நடக்க மட்டுமே பயின்ற பறவைகள், அவள் சிறகிழப்பதே சரியான முடிவென்று கூறின. வீட்டில் மீண்டும் சந்தோஷம் காலடி எடுத்து வைத்தது. “தீபிகா குடுத்து வச்சவ” என்றாள் அம்மா

மாப்பிள்ளை வீடு பார்க்கச் சென்ற சொந்தங்கள், வீட்டைப் பார்த்து மலைத்து நிற்க, அவர்களின் தென்னந்தோப்பைப் பார்த்து சிலர் மயங்கி நின்றனர்.

மாப்பிள்ளை வீட்டார் நிச்சயப்புடவை அரை லட்சத்துக்கும், உறுதி பண்ணுவதற்கு பத்து பவுன் செயினும் தீபிகாவுக்கு போட்டு அழகு பார்த்தனர்.

சேலத்திலேயே பெரிய ஏசி ஹாலில் கல்யாணம் நடத்த முடிவாயிற்று. லைட்டிங்குக்கு இரண்டு லட்சமும், மலர் அலங்காரத்திற்கு ஒரு லட்சமும் ஆனது.

திருமணத்திற்கு முதல் நாள் இரவில் ஸ்டேஜ் போட்டு செண்டை மேளமும் கேரள டான்ஸும் வைக்கலாம் என்றனர். சேலத்திலேயே காஸ்ட்லி சமையற்காரர் புக் செய்யப்பட்டார்.

ஐஸ்கிரீம், பீடா, பலூன், ஜவ்வு மிட்டாய், புரூட்ஸ் என்று ஒரு கண்காட்சியே இரவு விருந்துக்கு புக் செய்யப்பட்டது. கல்யாணச் செலவு அனைத்தையும் மாப்பிள்ளை வீட்டார் ஏற்றுக் கொண்டனர்.

வேலையை ரிசைன் செய்ய சென்னை வந்தாள் தீபிகா. அவளைத் தனியே விட மனமில்லாமல் பெற்றோரும் உடன் வந்தனர். ஆபீசில் வேலை செய்யும் நண்பர்களிடம் வேலையை விடுவதாக கூறிய போது, அனைவரும் அதிர்ந்தனர்.

“இந்த வேலை கிடைக்க எத்தனை லட்சம் பேரு கனவு காணுறாங்க தெரியுமா”

“வீட்ல உட்கார்ந்துகிட்டு என்ன பண்ணப் போற?”

“இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு படிச்சிதை வேஸ்ட் பண்ணப் போறியா. எப்படி ஒத்துக்கிட்ட?”

அனைவருக்கும் சிரிப்பை பதிலாய் தந்து விட்டு பிரிகையில், மனம் நொடித்து போனது. லேடீஸ் ஹாஸ்டல் ரூமை காலி செய்கையில், கனவுகள் குறைப்பிரசவமாய் கலைந்து போனது. வாழ்க்கையின் இலட்சியங்கள் கலைடாஸ்கொப்பின் துணுக்குகளாய் சிதறிப் போனது

பகல்களை சிரிப்புடனும், இரவுகளை கண்ணீருடனும் கடத்தினாள் தீபிகா.  அம்மாவுக்கு ஓரளவு புரிந்தாலும், அவள் பெரிதாக கவலைப்படவில்லை

“மாப்பிள்ளை வீடு எவ்வளவு பெருசு தெரியுமா?” என்று பார்ப்பவர்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனாள்.

முதல் நாள் இரவு நிச்சயதார்த்தமும், மறுநாள் காலையில் திருமணமும் வைத்துக் கொள்ள முடிவாக, முகூர்த்தப்புடவை இரண்டு வாங்கினார்கள். ஏழு பவுனில் லேட்டஸ்ட் மாடல் தாலிக்கொடி. மெகந்தி பங்ஷனில் தொடங்கி முகூர்த்தம் வரை பெண்ணுக்கு  அலங்காரம் செய்ய பிராண்டட் பியூட்டி பார்லருக்கு சொல்லி வைத்தனர்.

கெளதம் போன் செய்து பேசத் துவங்கினான். சிறிய தயக்கம், மொக்கை காமெடி, ஏராளமாய் சிரிப்பு என்று பேசினர்.  பேசும் போதெல்லாம், நம்ம கம்பெனி , நம்ம ப்ராடக்ட்ஸ் என்று அவளையும் இணைத்துக் கொண்டு அன்பாகப் பேசினாலும், அவளுடைய படிப்பு, வேலை அது குறித்த அவளுடைய ஆசைகள்  என்ற பேச்சே அவன் எடுக்கவில்லை. 

அப்படி ஏதாவது கேட்டால் மெல்ல அவனிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தாள் தீபிகா. அவன் அந்த வழிக்கே வரவில்லை.

பொறுத்துப் பார்த்துவிட்டு அவளாகவே ஒருநாள் “கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகக் கூடாதுனு ஏன் உங்கம்மா சொல்றாங்க?” என்று நைசாக கேட்டாள் தீபிகா.

“ஆபீசுக்கும் போயிட்டு வீட்டையும் ஒழுங்கா பாத்துக்க முடியாதில்ல, அதான் அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்றாங்க. எங்க அப்பா இவ்வளவு முன்னேறியதுக்கு காரணமே, எங்க அம்மா வீட்டை ஒழுங்கா பாத்துக்கிட்டது தான். உனக்கு வேலைக்குத் தான் போகணும்னு ரொம்ப ஆசையா இருந்தா, எனக்கு ஹெல்ப்பா இரு தீபிகா. வாரத்துல சில நாள்  வந்தா  போதும். அதை விட்டுட்டு  வெளிவேலைக்கு அலைஞ்சு எதுக்கு கஷ்டப்படணும் செல்லம்” என்று கொஞ்சிப் பேசினான். 

அவள் ஆசைகளை மறுக்கிறோம் என்று புரியாமலே, அவன் உள்பட எல்லாரும்   தாங்கள் நினைப்பதை நல்லது என்று அவளுக்கு அறிவுரை  சொல்லிக் கொண்டிருந்தார்கள்

‘படிக்காத உங்க அம்மாவால உங்க அப்பாவின் முதுகுக்கு பின்னால் இருக்க முடிந்தது. உனக்கு சமமாய் படித்த நான் ஏன்  முன் நிற்கக் கூடாது?’ என்ற கேள்வியை, தணலை விழுங்கும் தீக்கோழியாய் விழுங்கினாள்.

வானம் சுருங்கி வீட்டின் சீலிங்காய் மாறியதாய் நினைப்பாள் தீபிகா. சொல்லாமல் எங்கேயாவது ஓடிப் போகலாமா என்று தோன்றும்.  சீனப்பெருஞ்சுவராய் வீடு குறுக்கே நின்றது. நெஞ்சத்தின் விம்மல்கள் இதயத் துடிப்பில் கலந்தன.

திருமணத்துக்கு முதல் நாள்  மதியத்திலிருந்து, விசேஷங்கள் துவங்கின. மண்டபம் கல்யாணக் கலகலப்பில் மூழ்கியிருக்க, தீபிகாவின் சோகம் முகத்தின் மேக்அப்பில் புதைந்தது

“மாப்பிள்ளையோட தங்கச்சி மட்டும் தான் இன்னும் வரல. கனெக்டிங் பிளைட் கிடைக்கலயாம், நாளைக் காலையில் தான் வருவாங்க” என்றார் தீபிகாவின் அத்தை. 

நிச்சயதார்த்தம் முடிந்ததும் நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை போட்டோ செஷன் நடந்தது. காலையில் சீக்கிரம் எழுந்ததும் மீண்டும் அலங்காரங்கள் துவங்கின. 

நல்ல நேரமென்று குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட, தீபிகாவின் அம்மாவுக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது. சாப்பாட்டு மண்டபத்தை நோக்கி கும்பல் படையெடுக்க, புது மணத்தம்பதியருக்கு பரிசுகள் கொடுக்கவும், போட்டோ எடுத்துக் கொள்ளவும் உறவினர்களும், நண்பர்களும் வரிசையாய் நின்றனர்.

மாப்பிள்ளையின் தங்கை வந்து விட்டதாய் போன் வர, பெருமகிழ்வுடன் சென்று அழைத்து வந்தார் மாப்பிள்ளையின் அப்பா.

“ஏன் இவ்வளவு லேட்?”

“சேலம் பிளைட் கொஞ்சம் லேட் ஆயிருச்சு”

“வந்துட்டேன் பார்த்தியா” என்று சிரித்தபடி வந்த மாப்பிள்ளையின் தங்கை,  “கங்கிராட்ஸ்” என்று தீபிகாவுக்கு கை கொடுத்தாள்.

“என்னோட மகள் பூர்ணா, மாப்பிள்ளை விக்னேஷ். அமெரிக்காவில் ரெண்டு பேரும் சாப்ட்வேர் எஞ்சினியரா இருக்காங்க” என்றாள் மாப்பிள்ளையின் அம்மா பெருமையுடன்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. என்ன அநியாயம்.. ஊரார் வீட்டுப்பொண்ணோட ஆசைக்கிளைகளை அவங்க தோட்டத்துக்குள்ள புதைச்சிட்டு தன் பொண்ணோடத மட்டும் வானம் வரை வளர்ந்துட்டதா பெருமைப்பட்டுக்கறாங்க.. மிடில் கிளாசோட சாபமே இதான்.. பணம் மட்டும் வந்துட்டா எல்லா நிம்மதியும் கெடைச்சிடும்னு நெனைக்கிறாங்க.. நிதர்சனத்தை அப்படியே எழுத்தின் மூலம் படிப்போருக்கு கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.. அருமை.. வாழ்த்துகள்💐💐💐

  2. பெண்களை எல்லா தகுதிகளோடும் வளர்த்து, வீட்டுச்சிறையில் அடைக்கும் எண்ணத்தை ப்ராய்லர் கோழிகளின் வாழ்க்கையோடு ஒப்பீடு செய்திருப்பது மிகச்சிறப்பு.
    “வீட்டுக்குள்ளே பெண்ணைப்
    பூட்டி வைப்போம் என்ற விந்தை
    மனிதர் மாய்ந்து விட்டார்” னு பாரதி
    பாடியே 75 வருஷம் ஆச்சு. இன்னும் அவங்க மாயல.
    அவங்க பொண்ணு அமெரிக்கா ல வேலை பார்ப்பதை பெருமையா சொல்லும் அந்த மாமியார் முகத்தில் ஒரு குத்து விடலாம் போல இருக்கு.
    நடைமுறையை சொல்லும் அருமையான கதை . வாழ்த்துக்கள்

  3. பிராய்லர் கோழிகள் எத்துணை கொழு கொழுவென்று வளர்கிறதோ..அத்துணை விலை வியாபாரச் சந்தையில்..அது போல ஒரு பெண் எவ்ளோ திறமையானவளாக இருக்கிறாளோ அந்த அளவு மதிப்பு கல்யாணச் சந்தையில்..பிராய்லர் கோழி சட்டியில் குழம்பாய் கொதிக்க..பெண்ணோ அடுப்படியில் கொதிக்க..
    ஆண் குடும்பத்தலைவன்..அவனைச் சந்தோஷப்படுத்துவதே பெண்ணின் கடமை எனச் சொல்லி திருமணத்திற்காக வளர்க்கப்படும் பெண்கள் பிராய்லர் கோழிகள்தான். எளிதில் கடந்து விடாமல் மனம் கனக்கச் செய்யும் கதை..
    ஆசிரியரின் ஒப்பீடு பெண்களுக்கும், பிராய்லர் கோழிகளுக்கும் பொருத்தமாய் இருப்பது சிறப்பு.. ஆசிரியருக்கு வாழ்த்துகள்..💐💐

கொல்லியம்பாவை (சிறுகதை) – ✍ ஷேஹா ஸகி, ஸ்ரீலங்கா

நான், சங்கீதா மற்றும் இளையராஜா (சிறுகதை) – ✍ இன்பா, சென்னை