2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வாசலில் ஆண்டாள் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தேன். காய்கறிக்காரியிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் திரும்ப நினைத்தவன் எதேச்சையாக அந்தக் காய்கறிக்காரியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அசூசைப்பட்டேன். ‘ச்சை!… போயும் போயும் இவளிடமா காய் வாங்குகிறாள்?”
‘ஆண்டாள்” அழைத்தேன்.
‘என்னங்க?…. காபிதான் மேசை மேல் வச்சிட்டு வந்திருக்கேனில்ல?…அப்புறமென்ன?”
‘அதில்லை… கொஞ்சம் இங்க வா”
‘இருங்க!…. காய்கறி வாங்கிட்டு வந்திடறேன்”
‘ப்ச்… இப்ப வரப் போறியா இல்லையா?”
‘அய்யோ!” என்று சலித்துக் கொண்டவள் காய்கறிக்காரியிடம் ‘கொஞ்சம் இரும்மா… கூப்பிடறார்… கேட்டுட்டு வந்திடறேன்”
என்னை நெருங்கி வந்தவளிடம் ‘உனக்கு வேற ஆளே கெடைக்கலியா…?.. இருந்திருந்து இவகிட்டவா வியாபாரம் பண்றே?” தணிவான குரலில் கேட்டேன்.
‘ஏன்?…இவளுக்கென்ன?” கேட்டபடியே திரும்பி அந்தக் காய்கறிக்காரியை ஒரு பார்வை பார்த்தாள்.
நாங்களிருவரும் அவளைப் பற்றித்தான் பேசுகிறோம் என்பதைப் புரிந்து கொண்ட அந்தக் காய்கறிக்காரி பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள். ஆனாலும் அவள் செவியும் கவனமும் எங்கள் மேல்தான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ‘ஆண்டாள்… இவ ஒரு மாதிரி!… இவகிட்ட வியாபாரம் வேண்டாம்” என்றேன் அழுத்தம் திருத்தமாய்.
‘அட என்னங்க…. நாம அவளையா வெலைக்கு வாங்கறோம்?… காய்கறி நல்லா இருக்கா?…வெலை நியாயமா இருக்கா?… அதைப் பாருங்க….. அவ எப்படியிருந்தா நமக்கென்ன?”
‘இந்தாம்மா…. நான் நாலு தெரு போறவ…. என்னைய இங்க நிக்க வெச்சுட்டு அங்க நீங்க பாட்டுக்குப் பேசிட்டிருந்தா என்ன அர்த்தம்?… சீக்கிரத்துல வேவாரத்த முடிச்சுட்டு அனுப்பி விடுவீங்களா… அத விட்டுட்டு…” காய்கறிக்காரி இரைந்தாள்.
‘இதோ வந்துட்டேம்மா!”
ஆண்டாள் என்னை விட்டு விட்டு மீண்டும் காய்கறிக்காரியிடம் போய் வாங்க வேண்டியவைகளை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தனுப்ப, அந்தக் காய்கறிக்காரி கூடையைத் தூக்கிக் கொண்டு கிளம்பும் போது என்னை ஓரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போனாள்.
எனக்கு அந்தக் காய்கறிக்காரியை நன்றாகவே தெரியும். அவ்வப்போது பல இடங்களில் பார்த்திருக்கிறேன். மார்க்கெட்டுக்கு வெளியில்…பாதையோரம் கூடையை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பாள். பல முறை பஸ்ஸில்….மின்சார ரெயிலில்…என்று அடிக்கடி என் கண்ணில்படும் அவள் மீது எனக்கு துளியும் நல்ல அபிப்பிராயம் கிடையாது.
காரணம்….?..அவளது வாய்த் துடுக்கு. வாயென்றால் சாதாரண வாயல்ல….யப்பா…ஊரைத் தூக்கி உலைல போட்டு…காரைத் தூக்கி கடைவாய்ல மெல்லுற வாய்!
மார்க்கெட்டில் காய்கறி வாங்க வருபவன் எவனாவது பேரம் பேசும் வகையில் ஏதாவது எக்குத்தப்;பா ஒரு வார்த்தை சொல்லி விட்டால் போதும் அவ்வளவுதான். ‘பிலு…பிலு…” வென்று பிடித்துக் கொள்வாள்.
‘காய் வாங்குற மூஞ்சியை மொகரக் கட்டையைப் பாரு!… கஸ்மாலம்… பேமானி…. இவனெல்லாம் காய் வாங்கவா வர்றானுக?… காய்கறிக்காரி வளப்பமா… வாகா இருக்காளா?ன்னு நோட்டம் போட வந்திருக்கானுக!…”
தொடர்ந்து வரும் ஆபாச வார்த்தைகள் கேட்பவர் அனைவரையும் முகஞ்சுளிக்க வைப்பதோடு அவளைக் கண்டாலே காத தூரம் ஓடி விடத் தூண்டும் வகையில் இருக்கும். இதில் அவ்வப்போது ஆபாச அபிநயங்கள் வேறே.
இவள் மார்க்கெட்டினுள் நடக்கும் போது தெரிந்தோ… தெரியாமலோ… எவனாவது இவள் மேல் பட்டு விட்டால் போதும்… அவனுக்கு வார்த்தை விளையாட்டுத்தான். மின்சார ரயில்கூட்டத்தில் இவள் கூடையைத் தெரியாத்தனமாய்த் தட்டி விட்டு கேவலமா அர்ச்சனைகளைப் பெற்றுக் கொண்டோர் ஏராளம்.
அவளை நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாகவும்… அதே சமயம் ஆத்திரமாகவும் இருக்கும்!… ஒரு பெண் இப்படியெல்லாம் பேசுவாளா?…. பெண்ணின் வாயிலிருந்து இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வார்த்தைகள் வரலாமா?… பொதுஇடத்தில் எந்தப் பொம்பளையாவது இவளை மாதிரி சாமியாட்டம் ஆடுவாளா?.. கர்மம்!… கர்மம்
எப்படியோ எந்த வித அர்ச்சனைகளுமின்றி இன்று ஆண்டாள் அவளுடன் வியாபாரத்தை முடித்து விட்டு வந்ததில் எனக்கு பெரும் நிம்மதி.
‘வேண்டாம் ஆண்டாள்!…. இனிமே இவகிட்டேயெல்லாம் பேச்சே வெச்சுக்காதே!… தராதரம் இல்லாம தகராறு பண்ணி தகாத வார்த்தைகளைத் தாராளமா வீசக்கூடிய தாடகை அவள்!”
பதிலேதும் சொல்லாமல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு என்னை ஒருவிதமாய்ப் பார்த்தவாறே நகர்ந்தாள் ஆண்டாள்.
எனக்கு குழப்பமாயிருந்தது. ‘நான் ஏதும் தப்பா சொல்லிடலையே…. அப்புறம் ஏன் அந்தக் காய்கறிக்காரிய மாதிரி இவளும் என்னைய ஒரு மாதிரிப் பார்த்துட்டுப் போறா!?”
மறுநாளைக்கு மறுநாள். அடுத்த தெருவிலிருந்த லேடீஸ் டெய்லரிடம் ஆண்டாள் போயிருந்த சமயம் வாசலில் சத்தம் கேட்டது.
‘யம்மா…. யம்மோவ்!… காய் வாங்கலையா?”
‘போச்சுடா… இன்னிக்கும் வந்துட்டா!’
வாசலுக்குச் சென்று ‘அம்மா வீட்டுல இல்லை..” வெடுக்கென சொல்லி விட்டுத் திரும்பிய என்னை நிறுத்தினாள்.
‘அய்யா… கொஞ்சம் நில்லுங்க!”
வேகமாய்த் திரும்பி ‘என்ன?… அதான் அம்மா வீட்டுல இல்லேன்னு சொல்லிட்டேனில்ல?…” எரிந்து விழுந்தேன்.
‘நான் உங்ககிட்டத்தான் பேசணும்!’
நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தேன்.
‘முந்தா நாளு… அம்மாவும் நீங்களும்.. அங்க நின்னுட்டு பேசிட்டிருந்தது என்னைப் பத்தித்தான்னு எனக்கு நல்லாவே தெரியும்…. நான் கத்தற கத்தலையும்…. அசிங்க அசிங்கமாப் பேசறதைப் பத்தியும்தான் நீங்க அம்மாகிட்ட சொல்லிட்டிருக்கீங்கன்னும் தெரியும்!”
‘சரி… தெரியட்டும்… அதுக்கென்ன இப்ப?” அவள் நிலைக்கு நான் இறங்கி ‘உனக்கு மட்டும்தான் கத்தத் தெரியுமா?… நானும் கத்துவேனாக்கும்!” என்பது போல் கத்திக் காட்டினேன்.
‘அய்யா… நானும் மத்த பொம்பளைங்க மாதிரி அடக்க ஒடுக்கமா.. அமைதியா… குனிஞ்ச தலை நிமிராத குணவதியாத்தான் இருந்தேன்!… அது உங்களுக்குத் தெரியாது!… அது மட்டுமல்ல… ஒரு பொண்ணு இருபத்தஞ்சு வயசுல புருஷனைப் பறி கொடுத்துட்டு வாழ வழி தெரியாம… காய்கறிக் கூடையைத் தூக்கிட்டு வியாபாரத்துக்குப் போனாள்….ன்னா அவ என்னென்ன கஷ்டங்களை…எத்தனை விதமான கொடுமைகளை…. எந்த மாதிரியான பிரச்சினைகளைச் சந்திப்பாங்கறதைப் பத்தியும்… உங்களுக்குத் தொpயாது!”
எப்போதும் அடித் தொண்டையில் கத்துகின்றவளாகவே அவளைப் பார்த்துப் பழகிய நான் தணிவான குரலில்… பணிவாய்ப் பேசும் பெண்ணாய்ப் பார்த்து வியப்பிலாழ்ந்தேன்.
‘புருஷனில்லாதவ தானே தொட்டுப் பார்க்கலாம்…இடிச்சுப் பார்க்கலாம்… உரசிப் பார்க்கலாம்னு எத்தனை ஆம்பளைக என்னை எந்தெந்த விதத்துல சீரழிச்சிருக்காங்க தெரியுமா?… சிறுசு… பெருசு… வித்தியாசமில்லாம்..எல்லா ஆம்பளைகளும்… என்னைய ஒரே நோக்கோடு பார்க்க ஆரம்பிச்சப்பத்தான்… நான் புரிஞ்சுக்கிட்டேன்… என்னை நானே மாத்திக்கிட்டேன்… பிள்ளைப் பூச்சியா இருந்தா பிறாண்டிடுவாங்கன்னு… பாம்பா மாறினேன்… விஷமா வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பிச்சேன்… ஆபாசமா… அசிங்கமா… பேசற சுபாவத்துக்கு மாறினேன்!… அப்புறம்தான் இந்தக் கழுகுக என்னைய நெருங்கவே பயப்பட்டுதுக…. என்னோட பேச்சும்… நடவடிக்கையும்… உங்க மட்டும் ஆபாசம்தான்… ஆனா என்னைப் பொறுத்த வரை… அவை கவசங்கள்!… என் கேடயங்கள்!… அய்யோ… இவகிட்டப் பல்லிளிச்சா பேசியே நாறடிச்சுடுவானு அவனவன். என்னையப் பாத்தாலே பின்னங்கால் பிடரில அடிக்க ஓடறானுக!”
‘அடடா… இந்த யதார்த்த உண்மை எனக்குப் புரியாமப் போச்சே!… இவளைப் போய்த் தப்பா நெனச்சுட்டேனே!” என்னை நானே நொந்து கொண்டேன்.
‘நான் வாரேன் சார்… இனிமேலாவது அம்மாவ என்கிட்டேயே காய் வாங்கச் சொல்லுங்க!.. நான் நல்லவதான்!… கெட்டவ மாதிரி வேஷம்தான் போட்டிருக்கேன்!”
சொல்லியபடியே அவள் செல்ல ‘உண்மைதான்.. இந்த உலகமே… ஒரு நாடக மேடைதான்!… இங்க ஒவ்வொருத்தரும் நடிச்சுத்தான் ஆகணும்!’ என் மனம் புரிந்து கொண்டு அமைதியானது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings