இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 92)
“அடியே கண்ணகி உன்னோட ஆளு உனக்காக வெளிய ரொம்ப நேரம் காத்துட்டு இருக்கான்டி, இங்க நின்னு அப்டி என்னதான் யோசிச்சுட்டு இருக்க” என்றாள் தோழி ஒருத்தி ஏளனமான சிரிப்புடன்.
மாநிறம்,பார்க்க கலையான முகம்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத முகத்தோற்றம்,மனதில் சோகம் நிழலாடினாலும் வெளியே எந்த வித சோகத்தையும்,சோர்வையும் காட்டாமல் எப்போதும் வெகுளித்தனமான சிரிப்புடன் இருப்பாள் கண்ணகி.
கண்ணகி என்பது அவளுடைய உண்மையான பெயர் அல்ல. அங்கே இருப்பவர்கள் அவளை விளையாட்டாக அழைத்ததன் விளைவு தான், கண்ணகி.
ஆனால் இந்த சமுதாயம் அவளை வேசி, தேவிடியா என்று எந்த தயக்கமுமின்றி அழைத்தது. ஆனால் அதற்காக அவள் எந்தவித வருத்தமும் பட நேரமில்லை.
தான் உண்டு தன் வேலையுண்டு என்று, தன்னை நம்பி வந்தவர்களுக்கு உடல் சுகத்தை அளித்தாள். இந்த தொழிலை அவள் ஒன்றும் வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை.
காதல் சுகமானது, காதல் அழகானது, காதல் மட்டுமே வாழ்க்கை அதைவிட்டால் இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை காதலுக்காக,காதலனுக்காக எது வேணாலும் துணிந்து செய்யலாம் என்ற காதல் தந்த மமதையில்,போதையில் அந்த காதலனுக்காக வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாள் கண்ணகியின் தாய்.
முன்பு அவன் காதல் ரசம் சொட்ட சொட்ட அவளை வர்ணித்து பலவித காதல் கவிதைகளை அவள் மீது கொட்டித் தீர்த்தான். ஆனால் அவனுடைய சுயரூபம் அப்போது தான் அவள் கண்களில் புலப்பட்டது.
கடைசியாக பல்வேறு வலி வேதனைகளையே அவன் காதல் பரிசாக அவளுக்கு தந்தான். அவள் தாயை கட்டாயப்படுத்தி தன்னுடைய சுயதேவைக்காகவும், ஆடம்பர வாழ்கைக்காகவும் அவளுடைய கணவன் காதல் என்ற ஆயுதத்தை கொண்டு திருமணம் செய்து, மறுமாதத்திலே அவளை இந்த இடத்தில் விட்டு விட்டு போய் விட்டான்.
ஏனென்றால் கண்ணகி உடைய தாய் யாரும் கேட்க ஆளில்லாத ஆதரவற்ற பெண் என்ற ஒரே காரணம் தான். கண்ணகியும் இங்கே தான் பிறந்து வளர்ந்தாள். ஆனால் அவளுடைய தாய் இவள் கருவில் இருக்கும்போது இவள் பெண்ணாக இருக்கக் கூடாது என்று கடவுளிடம் வேண்டினாள், மன்றாடினாள்.
ஆனால் பெண் குழந்தை தான் பிறந்தது. ஆனாலும் அவளுடைய தாய் இவள் இந்த தொழிலுக்குள் வர கூடாது தான் அனுபவித்த வலி வேதனைகளை அவள் அனுபவிக்க கூடாது என்று கடவுளிடம் மன்றாடினாள்.
ஆனால் துரதிஷ்டவசமாக தாய் இறந்தவுடன் கண்ணகி இந்த தொழிலை ஏற்றாள் வேறுவழியின்றி.
அவள் அங்கு படாத வேதனைகளே கிடையாது. அங்கு வரும் ஒரு ஒருவன் ஒவ்வொரு மனநிலை கொண்ட மனித மிருகங்களாக இருப்பார்கள்.
காமம் என்ற ஒற்றை சொல்லை மட்டும் வைத்து கொண்டு அங்கு வருபவர்கள் அந்த பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை கொண்டவர்கள்.
அவளுக்கு அங்கு இருந்த ஒரே ஆறுதல் இப்போ வெளியே இவளுக்காக காத்திருக்கின்ற 23 வயது வாலிபன், பாரதி
பாரதி மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். வாழ்க்கையை அழகாக அணு அணுவாக ரசித்து ஒரு நிமிடம் கூட இந்த வாழ்நாளை தேவை இல்லாமல் கழித்து விடக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன்.
இந்த உலகில் நன்மை,தீமை என அனைத்தையும் ஒரே மாதிரியான மனநிலை உடன் எடுத்துக் கொண்டு வாழ்பவன். பார்க்க அழகாகவும், பணக்காரன் என்ற மிடுக்குடனும் இருப்பான்.
அனைவரிடமும் ஒரே மாதிரியாக அன்பாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளையே பிரயோகிப்பான். இவனை வெறுப்பவர்களே இவன் பேசும் இனிமையான வார்த்தையில் விழுந்து இவனுக்கு நண்பர்களாவார்கள்.
ஆனால், பாரதிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் நன்மை, தீமை நல்ல பழக்கம்,கெட்ட பழக்கம் என்ற அனைத்தையும் ஒரு முறையாவது அனுபவித்திட வேண்டும், அதில் அப்படி என்ன இருக்கிறது ஏன் ஒரு சிலர் அதில் மூழ்கி கிடக்கிறார்கள் என்று சோதித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவனிடத்தில் இயற்கையாகவே உண்டு.
எடுத்துக்காட்டாக மது அருந்துவது, போதை பொருள் உட்கொள்வது, யாரும் எட்டாத மலைகளில் ஏறுவது என்று ஏராளமான நல்ல கெட்ட பழக்கங்களை அதில் அடிமையாகாமல் ஒரு முறையாவது செய்துவிட வேண்டும் என்ற எண்ணம்.
அந்த வரிசையில் ஒருமுறை விபசார விடுதிக்கு சென்று அங்கு அப்படி என்ன இருக்கிறது என்பதை அறிய அவன் ஆர்வமாக இருந்தான். அப்போது அவனுடைய நண்பன் ஒருவன் மூலமாக அறிமுகமானது தான் இந்த விபசார விடுதி.
ஒரு வித தயக்கத்துடன் தான் அவன் அந்த விடுதிக்குள் அடியெடுத்து வைத்தான்.
உள்ளே சென்றவுடன் அந்த விடுதியின் உரிமையாளன் “வாங்க தம்பி, ராமு தம்பி சொல்லுச்சு எல்லாமே. அந்த தம்பி நமக்கு அடிக்கடி வர வாடிக்கையாளர் தான். ஒன்னும் கூச்சம்படாதீங்க. எல்லாரும் முதல்முதலா வரும்போது இப்படித்தான், ஆனா போக போக பழகிடும். அப்றம் பாருங்க நீங்க அடிக்கடி இங்க வந்துட்டு போவிங்க”னு சொன்னான் அவன்
இதையெல்லாம் காதில் வாங்கி கொண்டு அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் பாரதி.
அடுத்து அவன், “தம்பி நீங்க இங்க கொஞ்சம் உட்காந்துருங்க, நான் உள்ள போய்ட்டு இப்போ வந்துடுறே”னு சொல்லிட்டு உள்ள போய்ட்டான் அந்த ஆளு.
அந்த இடத்தில் ஒரு பகுதியில் “நன்றி மீண்டும் வருக”னு இருந்தது. அதை பார்த்து பாரதி மனதில் சிரித்து கொண்டிருந்தான்.
உள்ளே சென்ற அந்த மனிதன், சற்று நேரத்தில் ஒரு எட்டு இளம் பெண்களுடன் வெளியே வந்தான்.
“தம்பி நல்ல பாருங்க, இதுல எத வேணாலும் ஓகே பண்ணுங்க”னு அவன் அந்த பெண்களை நோக்கி கைகளை காட்டினான். பாரதி அந்த ஒவ்வொரு பெண்களையும் பொறுமையாக கவனித்து கொண்டிருந்தான்.
அதில் அவன் கண்ணகியை தேர்வு செய்தான். ஏன் அவன் அவளை தேர்ந்து எடுத்தான் என்ற கேள்விக்கு பதில் அவனுக்கே புலப்படவில்லை.
அது தான் விதியின் விளையாட்டு என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை. அப்போது தான் அந்த பாரதிக்கு இந்த கண்ணகி வந்தாள்.
பாரதியை பார்த்த கண்ணகி, அவன் செயலிலும்,தயக்கத்திலும் அவன் இதற்கு புதிது என்று உணர்ந்தாள். அவனும் சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு அவளிடம் வெளிப்படையாக பேச தொடங்கினான்.
தான் யார் தான் எதற்கு இங்கே வந்ததாகவும் தான் என்ன செய்து கொண்டிருப்பதாகவும் தன்னுடைய முழு சுயவிவரத்தையும் அவளிடம் தெரிவித்தான், பாரதி.
இதுவரை இங்கு வந்த ஆண்களிலே இவன் சற்று வேறுபட்டு தெரிந்தான் கண்ணகியின் கண்களிலே. அனைத்து ஆண்களும் இவளுடைய உடலை மட்டும் பார்த்து அவளை செய்யும் தொழிலை வைத்து அருவெறுப்பான வார்த்தைகளிலேயே அர்ச்சனை செய்வார்கள்.
ஆனால் இவன் கண்ணகியுடன் இயல்பாகவே உரையாடினான். கண்ணகியுடைய விவரங்களையும் கேட்டான். இதுவரை இங்கு வந்த எந்த ஒரு ஆணும் கேட்காத கேள்விக்கு கண்ணகி தன் சொந்த சோக கதையை விவரித்தாள்.
அவள் தான் செய்யும் தொழிலையே மறந்து அவனிடம் ஒரு நண்பனிடம் பழகுவது போன்று தன் மனம் விட்டு பேசி தன்னுடைய மனபாரத்தை பாரதியிடம் இறக்கிவைத்தாள் மிகவும் இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள்.
உண்மையை சொல்லப் போனால் அவளுக்கு நண்பர்கள் என்று யாரும் இதுவரை இருந்ததில்லை. பாரதியும் அவளை ஒரு தோழி போல் பாவித்து நன்றாக பேசினான். இவர்களுடைய சந்திப்பு அன்றுடன் முடியவில்லை
அவளுடன் பேசி, பழகுவதற்காகவே பாரதி வாரம் ஒரு முறை பணத்தை கட்டி அவளுடன் பொழுதை கழித்தான்.
அப்படி அவன் ஒருமுறை அங்கு வருகையில், “இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் அதான் உன்ன பார்க்க வந்தேன்”னு சொல்லி அவன் கோவிலுக்கு சென்று அங்கு அர்ச்சனையை முடித்து எடுத்து வந்திருந்த குங்குமத்தை அவளது நெற்றியில் வைத்தான்.
ஒரு நிமிடம் அவளுக்கு இவுலகம் நின்றது ஒரு ஆண் அவளையும் ஒரு பெண்ணாக மதித்த தருணம் அது. அவள் வாழ்க்கையில் அவள் அப்படி ஒன்றை இதுநாள் வரையிலும் உணர்ந்ததில்லை. அவளை அவள் ஒரு பெண்ணாக உணர்ந்த பொன்னான தருணம்.
அப்போ அவன் கேட்டான் “உன்னோட பிறந்த நாள் எது”ன்னு அவகிட்ட.
அவள் ஒரு நிமிடம் சத்தமாக சிரித்தாள். அவனுக்கு ஏன் இவள் இப்படி சிரிக்கிறாள் என்பதே புரியவில்லை.
“நானெல்லாம் எதுக்கு பொறந்தான்னு நெனச்சி ஒவ்வொரு ந ளும் அழுதுட்டு இருக்கேன், நீ வந்து என் பொறந்த நாள் என்னன்னு கேக்குறியே, அதான் ரொம்ப கொடுமையாயிருக்கு”னு திரும்பவும் சிரிக்க ஆரம்பிச்சிட்டா
சிரித்து முடித்து அமைதியாய் இருந்தவள் சிறிது நேரம் கழித்து, “எனக்கு ஒரே ஒரு ஆசை தான் பாரதி, நா என்ன மாறியே ஒரு அனாதை குழந்தைய தத்து எடுத்து வளர்க்கணும். அதுக்கு நல்ல கல்வி,அன்பு,சந்தோஷம் இப்டி எனக்கு எது எது கெடைக்கலையோ அதையெல்லாம் அந்த குழந்தைக்கு குடுக்கணும். இதெல்லாம் நடக்குமா பாரதி என்னோட வாழ்க்கையில” அப்டினு பாரதியை பார்த்து மழலை கொஞ்சலுடன் கேட்டாள் கண்ணகி.
“யாரு சொன்னா நடக்காதுனு, கண்டிப்பா நடக்கும் கண்ணகி”னு அவளுக்கு ஆறுதல் சொன்னான்
வாரம் ஒருமுறை என்பது வாரம் இருமுறை என்றானது. அவர்களுடைய நட்பு அவர்களுக்கே தெரியாமல் காதலானது. ஆனால், இருவரும் தங்களுடைய காதலை சொல்லிக் கொள்ளாமல் மனதோடு வைத்திருந்தனர்.
அவளுக்கு ஒரு வித தயக்கம் இருந்தது தன்னுடைய காதலைஅவனிடம் தெரிவிப்பது தொடர்பாக தான் ஒரு விபசாரி தான் எப்படி ஒருவனை காதலிப்பது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக மற்றவர்கள் போல் வாழ்வது என்று தன் மனதிக்குள் அவளே கேள்வி கேட்டு புழுங்கிக் கொண்டிருந்தாள்.
தற்போது வெளியே காத்துக் கொண்டிருந்த பாரதியை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள் கண்ணகி.
“பாரதி நம்ம இனிமே பார்த்துக்க வேண்ட-டா. இனிமே நீ இங்க-லா வராத, உன்னோட வேலைய பாரு ஒழுங்கா போய் என்றாள் கண்ணகி”.
பாரதி இதையெல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்கி கொள்ளாமல் ஒரே வார்த்தை மட்டும் சொன்னான் கண்ணகியிடம்.
“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?”
இதை சற்றும் எதிர் பாக்காத கண்ணகி கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அன்று அவள் முதல் முறையாக காமம் அற்ற காதலுடன் ஒருவனை கட்டியணைத்தாள், அவன் தான் பாரதி
கட்டியணைத்துக் கொண்டே, “இந்த கல்யாணத்துக்கு உங்க குடும்பமும் இந்த சமுதாயமும் கண்டிப்பா தடையா இருக்கும். யாரும் நம்பள ஏத்துக்க மாட்டாங்க. நீ ரொம்ப நல்லவன், உனக்கு நிறைய நல்ல பொண்ணுங்க, அழகான பொண்ணுக படிச்ச பொண்ணுங்க கிடைப்பாங்க. நா வேசி என்னால உன்னோட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது” என்றாள்.
அவள் என்ன சொன்னாலும் அன்று அவன் காதில் விழுவதாயில்லை. இறுதியாய் அவன் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னான்.
“எனக்கே நல்லா தெரியும், உன்ன கல்யாணம் பண்ணா எங்க வீட்டுல உன்ன ஏத்துக்க மாட்டாங்க. எனக்கு சொத்து,பணம் எதுவுமே வேணா நீ மட்டும் போதுனு முடிவு பண்ணிட்டேன். உன்ன சந்தோஷமா வச்சிக்கனுன்னு ஆசபடுறேன்.
நீ பிறந்தததுல இருந்தே நீ நரகத்துல இருக்க, உன்ன என்னோட வாழ்நாள் கடைசி நொடி வர நான் சந்தோஷமா வச்சிப்பேன். அதுமட்டும் இல்லாம நீ ஆசபட்ட மாதிரி, ஒரு ஆதரவற்ற குழந்தைய தத்து எடுத்துக்கலாம். அந்த குழந்தைக்கு நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து அன்பு சந்தோஷம் மட்டும் இல்லாம நல்ல கல்வியையும் குடுக்கலாம்னு” கண்ணகியிடம் கூறினான் பாரதி
“நம்பி வா நான் உன்ன நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்க உன்கிட்ட இருந்தா மட்டும் வா. நீ என்ன முழுசா நம்புனா மட்டும், நாளைக்கு காலைல 7 மணிக்கு மெயின் பஸ் டெப்போ-க்கு வா. அங்க நா உனக்காக காத்துட்டு இருப்பேன். நம்ம எங்கையாவது போய் பொழச்சிக்கலாம். நீ வருவேன்னு நா நம்புறேன்”னு சொல்லி
அவன் கைல போட்டுருந்த மோதிரத்தை அவளோட கைல போட்டுவிட்டு, “இத நம்ம நிச்சயதார்த்த மோதிரம்மா வச்சிக்கோன்”னு சொல்லிட்டு போய்ட்டான்
அவளுடைய கண்ணீர் அந்த மோதிரத்தை குளிப்பாட்டியது.
மறுநாள் அதிகாலைலே யாருக்கும் தெரியாமா தன்னோட துணி மற்றும் சிறிய அளவிலான சேமித்த பணத்தை ஒரு பெட்டியில் வைத்து கொண்டு அந்த விபசார விடுதியை விட்டு கிளம்பி வெளியே ஓடி வந்தாள்.
அன்னைக்கு தா அவ கிளி கூண்டுல இருந்து அழகான பச்ச கிளி அந்த கூண்டை ஒடச்சிட்டு வெளிய சுதந்திரமா பறந்து வந்தமாரி அருமையான,நிம்மதியான ஒரு சுதந்திர காற்றை சுவாசிச்சா. அவன் சொன்ன நேரத்தை விட 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்த பஸ் டெப்போ-ல அவனுக்காக சந்தோஷமா ரொம்ப சந்தோஷமா வாழ போற அழகான மகிழ்ச்சியான வாழ்க்கைய நெனச்சி அவனுக்காக காத்துட்டு இருந்தா
நேரம் நெருங்கியது ஆனா அவன மட்டும் காணோம். அவளுக்கு ரொம்ப பயம் நேரம் செல்ல செல்ல நம்ம அம்மாவ காதல் என்ற பெயராலே ஒருத்தன் ஏமாத்தினது போல இவனும் ஏமாத்திடுவானோ என்ற அச்சம் அவளிடத்தில்.
இருந்தாலும் பாரதி அப்படியெல்லம் ஒன்றும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை ஒருபுறத்தில். பஸ் டெப்போவில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது அன்று. அங்கு கட்டண கழிப்பிடம் அருகில் உள்ள சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவர் ஒரு போஸ்டரில் பசையை தடவி ஒட்டிக் கொண்டிருந்தார்.
கண்ணகி அந்த போஸ்டர்-ஐ சற்று உற்று கவனித்தாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது, இந்த உலகமே அவளுக்கு இருண்டது
அவள் நம்பிக்கையும் கனவும் அந்த ஒரு கணம் சுக்குநூறாக உடைந்து போனது. அந்த போஸ்டர்-இல் கள்ளம் கபடம் இல்லாமல் இவளை பார்த்து ஏளனமாய் சிரித்து கொண்டிருந்தான் அவளுடைய பாரதி.
அவளுடைய கண்களில் கண்ணீர் குளமாக்கியது. அந்த போஸ்ட்டரை ஒட்டிக் கொண்டிருந்தவரிடம், “அந்த போஸ்டரில் இருக்குறவருக்கு என்ன ஆச்சி?” என்று விசாரித்தாள்.
“அவர் நல்ல பணக்கார பையன்மா Accident-ன்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் அவர் சொந்தகாரங்களே சொத்துக்காக அவர கொலை பண்ணிட்டதா பேசிக்கிறாங்கமா. ரொம்ப நல்ல புள்ள-மா, நெறைய உதவிலாம் எல்லாருக்கும் பண்ணிருக்கு. நல்லவங்கள இந்த ஆண்டவன் சீக்கிரமா கூப்புடுக்குறாரு”னு சொல்லிட்டு அவர் மிச்சம் இருக்குற போஸ்டர்-ஆ எடுத்துட்டு ஒட்ட கெளம்பினாரு
அந்த போஸ்டரில் இருக்கும் இடம் குறித்த விவரத்தை வைத்து பாரதியின் இல்லத்திற்கு செல்கிறாள்.
கூட்டத்துல ஒருத்தியாய் அவனுடைய முகத்தை அவள் இறுதியாக காண்கிறாள்.இறந்த அவனுக்கு மட்டுமே தெரியும் இவளை இவன் காதலித்தது. அவனும் அவளும் வேறு யாருக்கும் இந்த விசயத்த கூறவில்லை.
கண்களில் இருந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அவனிடத்தில் அவள் உரையாடினாள் அவனுக்கு மட்டும் கேட்கும் வார்த்தைகளில், “நீ என்கூட இருந்த இந்த கொஞ்ச காலம் என்னோட வாழ்க்கை ரொம்ப அழகா இருந்துச்சு எனக்கு எவ்வளவு தா கஷ்டம் இருந்தாலும் நீ பேசுன அந்த வார்த்தைகள் என்ன நிம்மதியா வைச்சிருந்துசி.
இதுவரை நீ என்னை காமம் என்ற பார்வையில் ஒருபோதும் பார்த்ததே இல்லை உண்மையான காதல் என்றும் அழியாது யாராலும் அழிக்கமுடியாது பாரதி. நான் எப்படில்லாம் இருக்கனுன்னு நீ நெனச்சியோ உனக்காக நா இனிமே அப்படி வாழ்வேன்.
கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் உன்ன எப்போ முதல் முதலா பார்த்தேனோ அப்பவே உன்ன நா காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் நீ மட்டும் தான் என்னோட கணவன் எப்பவும்” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு கிளம்பி பஸ் டெப்போ வந்து அவங்க இருவரும் சேர்ந்து செல்ல வேண்டிய பேருந்தில், அவனுடைய நினைவுகளையும், அவனுடைய நம்பிக்கையான வார்த்தைகளையும் சுமந்து பயணம் செய்ய புறப்பட்டாள் கண்ணகி
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
சோகமான கதை.
Thank you