in

அந்த அவள் வித்யா ❤ (சிறுகதை) -✍ இந்துமதி கணேஷ்

அந்த அவள் வித்யா ❤

ன்னை விட மூன்று வயது பெரியவள் வித்யா எனினும், அவளை நான் பெயர் சொல்லி தான் அழைப்பேன்

என் அம்மாவுக்கு தங்கை முறை, ஆனால் எனக்கு அவள் அக்கா போல தான். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம்

முட்டிக்கு கீழ் வரை இறங்கிய, ஆழ்ந்த பச்சை வண்ண பின்னபோரும் பச்சைக்கிரீம் வண்ண சட்டையும் அவளது நிறத்தை அழகாய் எடுத்து காட்டும். 

விருமாண்டி அபிராமி போல நல்ல வட்ட முகம். சதுர பிரேமிட்ட கண்ணாடி அவள் முகத்திற்கு செய்தது போல அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கும்

நானும் கண்ணாடி அணிந்திருப்பேன் என்றாலும் என்னை எல்லாரும் சோடாபுட்டி என்றே அழைப்பார்கள். 

எங்களுடைய ரெட்டை ஜடை நாட்களில், நானும் வித்யாவும் பள்ளி பேருந்தில் அமர்ந்தபடி பாட்டு புத்தகத்தை வைத்து கொண்டு பாடி பார்த்த சினிமா பாடல்கள் பல

அவளுக்கு நடிகை கௌதமி என்றால் மிகவும் பிடிக்கும், ஆதலால் பணக்காரன், ராஜா சின்ன ரோஜா ஆகிய பாட்டு புத்தகங்கள் எல்லாம் வாங்கி வைத்திருப்பாள்

தொட்டால் கிழிந்து விட கூடிய அபாயத்தில் இருக்கும் அந்த பாட்டுப் புத்தகம் எதாவது புதுப்படம் வந்து சில நாட்களிலேயே எங்கள் கையில் கிடைத்து விட்டால், எங்களுக்கெல்லாம் அவ்வளவு குஷியாக இருக்கும்

அவளுடன் சேர்ந்து பள்ளிக்கு போவது அவ்வளவு பெருமையாய் இருக்கும் எனக்கு. நான் 6வது எனில் அவள் ஒன்பதில் இருப்பாள். பல நாட்கள் பெற்றோரின் கையெழுத்து வாங்க மறந்து விட்டால், எனக்காக கையெழுத்து போட்டு கொடுப்பாள் வித்யா

ஆனால் ஆசிரியரை பொருத்து கையெழுத்து மாறும். மிகவும் கண்டிப்பான ஆசிரியர் எனில் என் அம்மாவின் பெயரையே எழுதி தருவாள், கொஞ்சம் நீக்கு போக்கானவர் எனில் அவள் பெயரையே அடையாளம் தெரியாத மாதிரி ஒரு கையேழுத்து போட்டுக் கொடுப்பாள். அதெல்லாம் சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு எங்களுக்கு

வித்யாவிற்கு சினிமாவில் நிறைய ஆர்வம் உண்டு. எந்த நடிகர் எந்த நடிகையை காதலித்தான் எவளை ஏமாற்றினான் போன்ற கிசுகிசுக்கள் எல்லாம் அவளிடம் தான் தெரிந்து கொள்வேன்

ஆனந்த விகடன் எல்லாம் மின்னல் விரைவில் வாசிப்பாள். எனக்கு மிகுந்த ஆச்சர்யமாய் இருக்கும்,  “எப்படி இவ்வளவு விரைவாய் வாசிக்கிறாய்?” என்று அங்கலாய்ப்பேன்

நாங்கள் எல்லாம் அந்த நாட்களில் தீவிர அரவிந்த் சாமி ரசிகைகள், அபூர்வமாய் எங்கள் ஊரில் அரவிந்த் சாமியை போலவே ஒரு ஆள் புல்லெட்டில் போவார், அவரைப் பார்த்தாலே எங்களுக்கு ஒரே பரவசம் தான்

“ஹே! நான் தான் முதலில் பார்த்தேன், நீ பார்க்கவே இல்லை” என்று அமர்க்களம் செய்வோம்

எங்கள் தெருவில் பாதி பையன்கள் வித்யா பின்னால் அலைவார்கள், ஆனால் எதிரில் வருபவன் யாரோ எவரோ என்பது போல் கண்டு கொள்ளாமல் இருப்பாள்

அவளின் பின்னால் திரிந்ததில் சங்கரனும் பூமியும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். பல வருடமாகவே பின் தொடர்ந்தார்கள் எனினும், ஒன்றாகவே இருப்பார்கள்

ஒருவேளை சுந்தரபாண்டியன் திரைப்படம் போல எதுவும் உடன்படிக்கை இருந்ததா என்று தெரியவில்லை

நானும் வித்யாவும் ஒரு நாள் எங்கள் ஊர் பெரிய சிவன் கோவிலுக்கு போன போது, பின்னால் சைக்கிளில் வந்த பூமி ஒரு பேப்பரை சுருட்டி எங்கள் முன்னால் விட்டெறிந்தான்

அதை குனிந்து எடுத்து பார்க்கும் ஆவல் எனக்கு மலை அளவுக்கு இருந்தது. ஆனால் வித்யா என்னை குனியவிடாமல், “பேசாம வாரியா என்னங்கு” என்று கேட்டு கையோடு கூட்டி போய் விட்டாள்

எனக்கு மிகுந்த வருத்தம் அதில், என்ன தான் எழுதி இருப்பான்  என்று பார்க்க ஆசையாய் இருந்தது.

ஓவ்வொரு முழு ஆண்டு பரீட்சை லீவுக்கும், வித்யா அவள் அப்பாவின் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு போய் விடுவாள். அநேகமாய் நாளை பள்ளி திறக்கும் என்றால் இன்று தான் திரும்பி வருவாள். அது எனக்கு பெரிய மனக்குறையாய் இருக்கும் 

நானும் எங்கள் வீட்டில் ஒரே பெண் அவளும் அப்படியே, ஆதலால் தனிமையை விரட்ட எங்களுக்கு பேச ஏதாவது இருக்கும்.  ஒருமுறை என் அப்பாவிடம் கெஞ்சி கேட்டு நானும் அவளுடன் போனேன் 

கிளம்பும் போதே வித்யா சொன்னாள், இங்கு மாதிரி அங்கில்லை உனக்கு அவ்வளவு சௌகரியப்படாது என்று. அவள் சொல்லியும் கேட்காமல் நான் அவளுடன் சென்றேன்

அங்கு போன பின் தான் தெரிந்தது, குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாய் இருந்தது வீடு. வித்யா வெகு இயல்பாய்
வளைய வந்தாள், எனக்கு தான் மூச்சு முட்டியது 

காலில் போட்டிருக்கும் கொலுசு கூட அதிராமல் நடந்தாள் அவள். என்னை பார்த்து ஐயோ பாவம் என்று எனக்காக சில பரிதாப பார்வைகளை வீசியவள்,  எனக்கெல்லாம் இது ரொம்ப சகஜம் என்பதை போல அவள் நடந்து கொண்டது எனக்கு பெரும் வியப்பாய் இருந்தது

வித்யாவா இது? வாய் ஓயாமல் பேசி தீர்ப்பவள் எப்படி இப்படி அமைதி காக்கிறாள் என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன்

விடாமல் அவளிடம் கேட்டதில் “இங்கெல்லாம் இப்படி தான் பிள்ள இருக்க முடியும், நம்ம ஊர் மாதிரி ஜாலியா எல்லாம் இருக்க முடியாது” என்று கறார் தொனியில் சொல்லிவிட்டாள்

அந்த நாட்களில் டெக் வாடகை எடுத்து படம் போடுவது ஒரு பண்டிகையை போல சந்தோஷமான விஷயம். வித்யாவின் தாத்தா வீட்டில் அப்படி டெக்கை கொண்டு வந்த போது நான் ஆனந்த கூச்சல் இட, அதற்காய் பாவம் வித்யா வாங்கி கட்டிக் கொண்டாள்

அவளின் அந்த அமைதி முகத்தை காண சகிக்காமல், அடுத்த வாரமே நான் ஊர் வந்து சேர்ந்தது தனிக் கதை

நான் ஒன்பதாவது படித்த போது, வித்யாவின் அப்பா எங்கள் பள்ளிக்கு அருகே நிலம் வாங்கி வீடு கட்டி, அங்கே குடி போய் விட்டார்கள்

தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் முன், அவள் வீட்டுக்கு போய் விட்டு வருவது எனக்கு பழக்கமாகி விட்டது

அப்படியான மாலைகளில் தான், எங்கள் பள்ளியின் பல காதல் ஜோடிகளை பற்றிய கதைகளை எல்லாம் என்னிடம் சொல்வாள், கூடவே
எந்த சார் எந்த மேடத்தை ரூட்டு விடுகிறார் முதலான நாட்டுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் அறிந்து கொள்வேன்

இதில் எனக்கு வருத்தமான விஷயம் என்னவென்றால், என்னுடைய வகுப்பில் கூட யார் யாரை விரும்கிறார்கள் என்பதையும் அவள் தான் எனக்குச் சொல்வாள் 

“ச்சை இது கூட தெரியாமல் என்ன தான் கிளாஸ்ல உக்காந்திருக்கோமோ” என்று எனக்கு மனம் குமையும்

அப்படியான ஒரு பொழுதில் என்னைப் பார்த்து வித்யா ஒரு கேள்வி கேட்டாள். “உனக்கு ஒருத்தனுமே ப்ரபோஸ் பண்ணலைனு உனக்கு வருத்தமா இருக்கா பிள்ள?”

எனக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது. அப்படியான ஒரு எண்ணமே இல்லாமல் திரிந்து கொண்டிருந்த எனக்கு, அவளின் கேள்வியில் என் மீது அவளுக்கு இருந்த வாஞ்சை தான் புலப்பட்டது

வித்யாவை லவ் பண்ணிய பூமி, திடீரென ஒருநாள் தூக்கு மாட்டி இறந்து போன செய்தி எனக்கு கிட்டியது. எனக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியாய்
இருந்தது

‘எதுக்காக அவன் செத்திருப்பான்? சாகுற அளவுக்கு என்ன லவ்வு?’ என்று அவன் மேல் கோவம் தான் வந்தது

வித்யாவிடம் கேட்ட போது, நான் வழக்கம் போல தான் அவனை உதாசீனப்படுத்தினேன், ஆனால் என் அப்பா அவன் அப்பாவிடம் கூப்பிட்டு கண்டித்தாராம் இதுக்கெல்லாமா பிள்ள தூக்கு போடுவான் என்று கண்ணீர் குரலில் பேசினாள்

அழகாய் இருப்பதும் ஒரு சாபம் தான் போல என்று அப்போது எனக்கு தோன்றியது. எனக்கு நிச்சயமாய் தெரியும், அவனை அவள் திரும்பி கூட பார்த்ததில்லை என்று

ஆனால் இப்படி நிகழ்ந்த உடன் அவளின் கலகலப்பு குறைந்து தான் போனது. தன் வாழ்வில் ஒரு பெரிய சாபமாய் இது உடன் வரப்போவதாய் வருந்தினாள்

புதுக்கோட்டையிலேயே அவளை கல்லூரியில் சேர்த்து விட்டார் அவள் அப்பா. விடுமுறைக்கு வரும் போது மட்டுமே அவளை பார்க்க முடிந்ததால், முன்பு போல் அதிகம் நேரம் கிடைக்கவில்லை

எனக்கும் பத்தாவது அடுத்து 12வது என வேகமாய் போனது நாட்கள். நான் கல்லூரியில் சேர்ந்த போது, அவள் எங்கள் ஊரின் பக்கத்து ஊரில் இருந்த ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தாள்

படங்களில் வருவது போல அவளின் வடிவத்தை அழகாக காட்டும் புடவையுடனும், இடைவரை நீண்ட பின்னலுடனும் மிளிர்ந்த அழகான டீச்சர், ஜெனிபிர் டீச்சர் என்று நான் கலாய்ப்பேன்

நான் கல்லூரி முடித்த நேரம், வளுக்கு மணம் பேசி இருந்தார்கள்

மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கா என்று கேட்ட போது மிக அழகாய் வெட்கப்பட்டாள்

அப்போது அவளின் வெண்மையான முகம் செந்நிறம் கொண்டிருந்தது. மருதாணியின் சிவப்பும், மையிட்ட கண்களும் கல்யாண களையோடு பன்மடங்கு அழகாய் மாறி இருந்த வித்யாவை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை எனக்கு

அவளுக்கு கல்யாணம் ஆகி சில நாட்களிலேயே, வித்யாவின் மாமியார் வீடு பல கெடுபுடிகள் நிறைத்த இடம் என  தெரிய வந்தது 

அப்போது நான் பெரிதாய் வருந்தவில்லை, அவளுக்கு அவள் தாத்தாவின் வீட்டில் இருந்து பழக்கம் உண்டு, ஆகவே இங்கும் அப்படி இருந்து கொள்வாள் என்றே நினைத்தேன்

என் காதலருடன் (இப்போது கணவர்), கல்யாணத்திற்கு முன் ஒருமுறை  திரைப்படத்திற்கு சென்றிருந்தேன் 

வித்யாவும் அவள் கணவனும் அன்று அன்று வந்திருந்தார்கள். ஏற்கனவே கெடுபிடிகள் நிறைந்த குடும்பம், எங்களின் காதலும் வீட்டில் சொல்லப்படவில்லை என்று, அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து சீட்டில் அமர்த்த நொடி, எனக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாள் 

“நான் உன்னை பார்த்துட்டேன், ஜோடி நல்லா இருக்கு பிள்ள, பதறாம படம் பாரு” என்று. எனக்கு சிரிப்பும் பயமுமாய் இருந்தது

அவளின் அம்மா கூட சில வருடங்கள் கழித்து மணமாகி நான் என் கணவருடன் அவர்கள் வீட்டிற்கு சென்ற தருணத்தில், “உனக்கெல்லாம் நல்ல குடும்பம் அமைஞ்சுருச்சு, எங்க வித்யாவை பார் சிரிக்க கூட யோசிக்கணும்” என ஆதங்கப்பட்டார்

அவள் மண வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்று எங்களுக்கு எதுவுமே தெரியாது. அவளுக்கு அழகான ஒரு பெண் குழந்தை உண்டு. எல்லா விழாவுக்கும் குடும்பத்தோடு வந்து விட்டு, விழா முடியும் முன் கிளம்பி போய் விடுவாள் வித்யா

கைபேசியில் கூட அதிகம் பேசுவது இல்லை. வாழ்க்கை முழுவதுமே இவள் நடித்து கொண்டே இருக்கிறாளோ என்ற சந்தேகம் எனக்கு சில வேளை வரும்

‘அப்படி இருக்காது, அப்படி இருந்தால் ஒரு வார்த்தை கூட சொல்லாமலா இருப்பாள்’ என தேற்றிக் கொள்வேன்

ஆனால் ஒரு மழை நாளில் சின்ன ஆச்சி இறப்பிற்காய் ஊருக்கு போன போது, அதிசயமாய் அவளும் வந்தாள்

“என்ன ஆச்சர்யம்? உங்க வீட்ல உன்ன விட்டுட்டாங்க” என்ற என் கேலிக்கு, சோகையாய் புன்னகைத்தாள்

அவளின் அப்பா இறந்த பிறகு, தனியாய் இருக்கும் அவள் தாயை தன்னுடன் அழைத்து போக முடியாத வருத்தம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது

“நீ பேசாம, அவங்களுக்கு வேற யாருமே இல்ல, நான் தான் பாத்துக்கணும்னு அடிச்சு பேசி பாரேன்” என நான் சொன்ன கணத்தில், உடைந்து அழுதாள்

ஒற்றை பெண்ணாய் பிறந்ததற்கு, கட்டுப்பாட்டிலேயே வாழ்க்கையை கழித்ததற்கும், கூடவே பூமி செத்து போனதற்கு, என எல்லாவற்றுக்குமான அந்த அழுகை, அவள் முகமூடியை கழற்றி எறிந்தது 

அற்புதமான ரசனைகள் கொண்ட வித்யா, அழகாக பாட்டு பாடும் வித்யா, வாசலடைத்து கோலம் போடும் வித்யா, துறுதுறு வென்று சேட்டை செய்யும் வித்யா, கண்கள் மின்ன சினிமா கதை பேசும் வித்யா என எல்லா வித்யாக்களையும், விழுங்கி ஏப்பம் விட்டிருந்தது அந்த முகமூடி

அன்று என்னிடம் பல விஷயங்களை பேசியபடி வந்தாள் வித்யா. இறுக்க மூடி இருந்த இதய கதவை சற்றே ஒருக்களித்து திறந்து வைத்தாள் என்றே சொல்லலாம்

பேருந்தை விட்டு கீழிறங்கும் போது, உடையை சரி செய்வதை போல, மறுபடியும் தன் முகமூடியை அணிந்து கொண்டாள் என்பதை, செயற்கையாய் அவள் இதழ்களில் வந்தமர்ந்த புன்னகை  கூறியது

(முற்றும்)

#ad

     

        

#ad 

             

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. இதை படிக்கும் பல பெண்களின் முகமூடிகள் அவர்களை பார்த்து சிரிக்கும்.. எளிமையான அருமையான எழுத்து நடை!

தீ…வண்டி…! (சிறுவர் பாடல்) – ✍வளர்கவி

நம்மிடம் கையேந்தும் தெய்வம் ❤ (கவிதை) – ✍ சௌமியா