இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 138)
காசிம் பாய் வழக்கம் போல் தன்னுடைய பிரியாணி கடையை திறந்தார்.அவர் கடை அருகே களைத்த கண்களோடு பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள்
அவளை காசிம் பாய் ஏற இறங்க பார்த்துவிட்டு, உள்ளே நுழைந்தார்.
“டேய் குமாரு…ரமேஷ்…ரபீக் ….” என்று சற்று உரக்க கத்தினார்
அந்தக் கடை வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தாலும், பின்புறமாய் அந்த கடையில் பணிபுரியும் குமார், ரமேஷ், ரபிக் மூவரும் தங்கியிருந்தார்கள்.
“அண்ணே ” என்று குமார் அவசரமாய் ஓடி வந்தான்.
“டிபன் ரெடியா? கடைய துடைக்கலாமா?” அதிகாரம் தொணிக்க காசிம் அவனிடம் கேட்டார்
“அஞ்சு நிமிஷ…ண்ண…” என்றபடி குமார் அவசரமாய் உள்ளே ஓடினான்.
“காலைல இருந்து என்ன டா பண்ணிங்க? பாரு கூட்டி பெருக்காமல் கிடக்கு” என்று கோபத்தொடு கத்தியபடியே, உணவகத்தின் சமையலறை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தார்.
அதற்குள் தரையில் துடப்பம் உராயும் சத்தம் கேட்டு திரும்பினார்.அவர் கடை வாசலில் அமர்ந்திருந்த அந்தப் பெண் அவசரமாய் பெருக்க தொடங்கியிருந்தாள்.
காசிம் பாய் அவளை வைத்த கண் எடுக்காமல் சற்று நேரம் பார்த்தார்.அதன் பிறகு அமைதியாய் கல்லாப் பெட்டியை நோக்கி நடந்தார்.
அவருடைய கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள், ஒருவர் பின் ஒருவராய் வர தொடங்க, குமார் அவசரமாக ஓடி வந்து அவர்களை கவனிக்கத் தொடங்கினான்.
காலைப்பொழுது கற்பூரமாய் காற்றில் கரைந்து கடிகார முள் பதினொன்றை எட்டியது.
அவள் தரையை பெருக்கி துடைத்து சுத்தம் செய்துவிட்டு, வெளியே சென்று கடை வாசலில் சாப்பிட போவோரையும் சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வருவோரையும் உள்ளே பரிமாறப்படும் விதவிதமான உணவு வகைகளையும் ஏக்கத்தோடு பார்த்தபடி நின்றிருந்தாள்.
“இந்தம்மா… இங்க வா” என்று காசிம் பாய் அந்தப் பெண்ணை அதட்டினார். அவள் தயங்கித் தயங்கி கடைக்குள் வந்தாள்
“எந்த ஊரு?” என்று மீண்டும் அவளை அதட்டினார் காசிம் பாய்
அவள் பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்து முந்தானையால் முகத்தை மறைத்துக் கொண்டாள். அவளுடைய தோள்கள் இரண்டும் லேசாய் குலுங்கியது.
காசிம் பாய் அவளை எதுவும் கேட்காமல் வியாபாரத்தை சற்று நேரம் கவனித்தார்.
“எக் பிரியாணி இருக்கா?”
“எக் பிரைட் ரைஸ்… பார்சல்”
“கறிதோசை இருக்கா?” என்று வித விதமான குரல்கள் அவள் பசியை மேலும் தூண்டி விட்டது.
எண்ணெய் வைத்து சீவி பல நாட்கள் ஆகிவிட்ட அவளுடைய கேசமும், குழி விழுந்த கன்னங்களும், சதைபிடிபற்று எலும்பு கூடாய் இருக்கும் அவளுடைய தேகமும் முந்தானையால் முகத்தை மறைத்துக் கொண்டு அவள் அழுது கொண்டிருப்பதும் காசிங் பாய்க்கு அவள் மீது எல்லையற்ற கருணையை சுரக்க வைத்தது
“ரமேஷ்” என்று உரக்க கத்தினார். ரமேஷ் பரபரப்பாய் ஓடி வந்து கல்லாப்பெட்டி முன்பாக நின்றான்.
அவர் அவனுக்கு ஏதோ கண் ஜாடை காட்ட, அவன் மீண்டும் அதே பரபரப்போடு சமையலறை நோக்கி ஓடினான்
பெரிய பிளாஸ்டிக் தட்டு நிறைய சிக்கன் பிரியாணியும் இரண்டு அவித்த முட்டையும் கொண்டு வந்தான்
“இ…ந்தா சாப்புடு…” என்று அந்தப் பெண்ணை காசிம் பாய் மீண்டும் அதட்டினார்
அவள் அவசரமாய் முந்தானையை சொருகிக் கொண்டு, ரமேஷ் கையில் இருந்த தட்டை பிடுங்காத குறையாக வாங்கி, பிரியாணியை அள்ளி வாயில் திணித்துக் கொண்டாள்.
அவள் அவசர அவசரமாய் பிரியாணியையும் முட்டையும் வாயில் அடைத்துக் கொண்ட விதமே, அவள் பல நாட்களாய் சாப்பிடாமல் இருந்ததை காசிம் பாய்க்கு உணர்த்தியது
அவள் அந்த தட்டை காலி செய்தும் கூட அவளுக்குப் பசி அடங்கவில்லை என்பது, அவள் ஏக்கத்தோடு காசிம் பாயின் முகத்தை பார்த்ததுமே அவர் புரிந்து கொண்டார்.
மீண்டும் அவர் ரமேஷுக்கு கண் ஜாடை காட்ட, அவன் ஓடிச் சென்று இன்னும் ஒரு தட்டு நிறைய பிரியாணியை அள்ளிக் கொண்டு வந்து அவள் தட்டி கொட்டினான்
அவள் அவசரமாய் மீண்டும் வாய்க்குள் உணவைத் திணித்துக் கொண்டாள். இரண்டு பிளாஸ்டிக் பாட்டில் நிறைய தண்ணீர் குடித்தாள்
“பேர் என்ன? எந்த ஊரு? ஏ… இங்க வந்து சுத்திக்கிட்டு இருக்க?” என்று காசிம் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டுக் கொண்டே செல்ல, கல்லாப் பெட்டிக்கு அருகிலேயே குத்து கால் வைத்து அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கையெடுத்து வணங்கியப்படியே அவரை நன்றியோடு பார்த்தாள்
“என் பேரு அன்னலட்சுமி. பேரு தான் அன்னலட்சுமி, ஆனா ஒரு பிடி சோற்றுக்கு வழி இல்ல” என்று கூறி விரக்தியாய் சிரித்தாள்
ரமேஷும் காசிம் பாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாய் அவள் கூறப் போகும் கதையை கேட்க தயாராகினர்.
அன்னலட்சுமியின் தாய் வைரகா, குடிகார கணவனிடம் போராட முடியாமல் அண்ணன் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள்
வைரகாவின் அண்ணன் அய்யாசாமிக்கு பால் வியாபாரம். இரண்டு கறவை மாட்டையும் ஒரு எருமை மாட்டையும் வைத்து தான் அவர்கள் பிழைப்பே ஓடிக் கொண்டிருந்தது
அய்யாசாமி – முத்துகண் தம்பதிகளுக்கு ஐந்து பிள்ளைகள். அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களுக்கே போகாமலிருக்க, மாச கடைசியில் வாடிக்கையாளர்களின் வீடுகளில் முன்பண வாங்கியும் கொஞ்சம் பணத்தை கடன் வாங்கியும் காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் முத்துக்கண்ணிற்க்கு நாத்தி மற்றும் அவளுடைய மகளின் வருகையை ஏற்றுக் கொள்ள இயலவில்லை .
“வைரகா” என்று முத்துக்கண்ணு நாத்தியை அன்பொழுக அழைத்தாள். அன்பொழுக முத்துக்கண்ணு அழைப்பதை வியப்போடு பார்த்தாள் வைரகா
“உனக்கே தெரியும் நம்ம குடும்பம் என்ன நிலைமையில ஓடிக்கிட்டு இருக்குனு, இதுல உனக்கு உன் புள்ளைக்கும் உட்காரவச்சீ சோறு போடுறது எனக்கு எம்புட்டு சிரமம். அதனால தான் நான் உனக்கும் உன் புள்ளைக்கு ஒரு ஏற்பாட்ட பண்ணியிருக்க, நீ தப்பா நினைச்சுக்காத” என பீடிகையுடன் முத்துக்கண்ணு நாத்தியின் அருகில் அமர்ந்தாள்
வைரகா தன் அண்ணியின் பீடிகையில் சற்று அதிர்ந்து தான் போனாள். அவள் தனக்கு குழி பறித்து வைத்திருக்கிறாளா? அல்லது வளமான வாழ்விற்கு ஏதேனும் ஒரு ஏற்பாட்டை செய்து இருக்கிறாள் என்று புரியாமல் தவித்தாள்
குடிகார கணவனோடு கைப் பிள்ளையை வைத்துக் கொண்டு அவளால் வாழ முடியவில்லை. முழுநேரமும் குடிபோதை… தகாத சொற்கள், குடிக்க காசு கேட்டு அடி உதை.
அவள் கை பிள்ளையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தையும் குடிப்பதற்கு அடித்து பறித்துக் கொண்டு போனான். தர மறுத்தால், நடு இரவில் பிள்ளையோடு அவளை வெளியே தள்ளி, வாசல் கதவை அடைத்தான்
அக்கம்பக்கம் யாராவது வைரகாவிற்கு பரிந்து பேசினால் அவர்களோடு தொடர்பு படுத்தி அவளை திட்டினான்
வைரகா நிறைய முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எண்ணி இருக்கிறாள். ஆனால், கையில் இருக்கும் குழந்தை அது வாழ வேண்டும் என்ற துடிப்போடு தானே அவள் வயிற்றில் வந்து ஜனித்து இருக்கிறது.
அந்தக் குழந்தையைக் கொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. சகித்துக் கொண்டு கணவனோடு வாழலாம் என்றால், அவன் அவளுடைய பெண்மைக்கு விலைபேசி விட்டான்
அவள் அதை கேள்வியுற்று அவசரமாய் அங்கிருந்து தப்பி அண்ணன் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள். ஆனால் அண்ணியும் இப்பொழுது அவளை விரட்டி அடிக்க ஏதோ ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி இருக்கிறாள் போலும் என்று வேதனையோடு பார்த்தாள் வைரகா
“எங்க தூரத்து உறவுக்காரங்க ஒருத்தங்க வீட்டில, வீட்டோடு தங்கி வயசான பெரியவங்கள பாத்துக்க ஆள் வேணுமாம். நல்ல சம்பளம், சாப்பாடு, துணிமணி எல்லாமே தருவாங்க” என்று கூறிவிட்டு முத்துக்கண்ணு நாத்தியின் முகத்தையே உற்று பார்த்தாள்
வைரகாவிற்கு வேறு வழி இல்லை. அவளாக அந்த வேலையை ஏற்று கொண்டு வீட்டை விட்டு கிளம்பினால் மரியாதையோடு அண்ணி அவளை நடத்துவாள்.
இல்லையென்றால் தேவையற்ற களகங்கங்கள் புரிந்து அவள் வீட்டை விட்டு துரத்த படுவாள். பிறகு அண்ணன் என்ற உறவை அடியோடு மறந்து விட வேண்டியது தான்
நிற்கதியாய் தெருவில் துரத்தபடுவதை விட, அந்த வேலையை ஏற்றுக் கொண்டு சற்று கொரமாய் வாழலாமே என்ற நப்பாசையில் அவள் தலையசைத்தாள்.
இரண்டு நாட்களுக்கெல்லாம் அண்ணி தன்னுடைய தூரத்து உறவினர்களிடம் பேசி அவளை அங்கிருந்து தன்னுடைய உறவுக்காரர்களின் வீட்டுக்கு வண்டி வைத்து கொண்டு போய் விட்டாள்
அந்த வீடு பழைய காலத்து ஓட்டு வீடு தான். வீட்டின் எஜமானனுக்கு மொத்தம் 8 பிள்ளைகள். அந்த வீட்டின் எஜமானான துரைசாமியின் தாயும் தந்தையும் படுத்த படுக்கையாய் இருக்க, அவர்களை கவனிக்க தான் வைரக்கா அழைத்து வரப்பட்டு இருந்தாள்
துரைசாமியும் கமலமும் வைரகாவையும் அவளுடைய இரண்டு வயது குழந்தையான அன்னலட்சுமியையும் வீட்டில் பின்புறம் தங்க வைத்து, வயிறு நிறைய சோறு போட்டார்கள். பரிவோடு பேசினார்கள்
யார் அழுதாலும் சிரித்தாலும் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உலக இயக்கங்கள் ஒன்றும் நின்று விடப் போவதில்லை, அது தன்பாட்டில் இயங்கிக் கொண்டுதான் இருக்கப் போகிறது. அது போன்று தான் வைரகாவின் வாழ்வும் அவள் அந்த வீட்டில் பத்து வருடங்கள் கடத்தி விட்டாள்.
அவள் கவனித்துக் கொள்ள வந்த அந்த பெரியவர்கள் இரண்டு பேரும் ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள்.
மீண்டும் தான் நிர்க்கதியாய் இங்க இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ? என்று வைரகா கலங்கி நின்ற பொழுது, முதலாளியான துரைசாமி- கமலாவின் மூத்த மகளான மாலதிக்கு திருமணம் நிச்சயிக்கக பட்டிருந்தது
திருமண வேலைகளை கவனிக்க வீட்டில் உதவிக்கு ஒரு ஆள் தேவை என்பதால், வைரகாவும் அவளுடைய மகளான அன்னலட்சுமி அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.
அதன் பிறகு மாலதியின் பிரசவம் மற்றும் அடுத்தடுத்து அவர்கள் வீட்டில் நடைபெற்ற நல்லது கெட்டதுகளில் காரணமாய் வைரகா அங்கேயே தங்கி இருந்தாள். அன்னலட்சுமியும் அருகே இருந்த ஒரு அரசுப் பள்ளியில் பத்தாவது வரை படித்தாள்
அன்னலட்சுமி பற்றி அங்கு யாரும் கவலைப்படவில்லை. வயது பெண்ணான அவளுக்கு உடை மற்றும் உணவு வழங்கினால் போதும் என்று அவரகள் விலகி நின்றனர்.
வைரகா தான் அவ்வப்பொழுது தன் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று புலம்பிக் கொண்டிருப்பாள்.
“ஆமா கல்யாணம் பண்ணி, நீ அப்படியே வாழ்ந்து கிழிச்சீட்ட…” என்று தாயிடம் மல்லு கட்டுவாள் அன்னலட்சுமி
வைரகாவின் உடல் தளர்ந்து வயதாகி கொண்டிருக்கவே, அன்னலட்சுமி வைரகாவின் அனைத்து வேலைகளையும் எடுத்து செய்ய தொடங்கினாள்.
துரைசாமி தவறி விட, கணவன் தவறிய அதிர்ச்சியில் கமலா பக்கவாதத்தில் படுத்த படுக்கையாய் கிடக்க, தாயை கவனித்துக் கொள்ள நம்பிக்கையான ஆட்கள் தேவை என்பதால் துரைசாமியின் மகானான கனகராஜ் வைரக்காவிற்க்கும் அவளுடைய மகளான அன்னலட்சுமிக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வந்தான்.
அன்னலட்சுமி கமலத்தை மிகுந்த பரிவோடும் பாசத்தோடும் அக்கறையாய் கவனித்து வந்தாள். கனகராஜ் ,தாய், தந்தை வாழ்ந்த அந்த பழைய காலத்து ஓட்டு வீட்டிலேயே வசித்து வந்தான்
அந்த வீட்டின் பின்புறம் மிகப் பெரிய மாட்டுத் தொழுவம் ஒன்று இருந்தது. அதற்கு சற்று முன்பாக வீட்டை ஒட்டினார் போல் ஒரு சின்ன அறை இருந்தது. அந்த சின்ன அறையில் தான் இத்தனை ஆண்டுகளாய் தாயும் மகளும் தங்கியிருந்தனர்
அது மழை காலம். அன்னலட்சுமி கமலத்தை குளிப்பாட்டி சோறு ஊட்டும் வேலையில் மும்முரமாய் இருக்க, உடல்நிலை சரி இல்லாமல் அறையில் முடங்கி கிடந்தாள் வைரகா
“என்னம்மா சோரம் எப்படி இருக்கு? ” என்று கேட்டபடியே அறைக்குள் நுழைந்தாள் அன்னலட்சுமி
அன்னலட்சுமியின் கேள்விக்கு தாயிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை …? என்று அன்னலட்சுமி மண்டியிட்டு அமர்ந்து தாயின் நெற்றியை லேசாய் தொட்டுப் பார்த்தாள், உடலில் எந்த அசைவும் இல்லை
“அம்மா…” என்று அன்னலட்சுமி அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து கதறி அழ தொடங்கினாள். அவள் கதறல் கேட்டு கனகராஜன் அவனுடைய மனைவி குமுதாவும் ஓடி வந்தனர்.
வைரகா இறந்து விட்டதை அறிந்து சற்று நேரம் இருவரும் அறையின் மூலையில் மௌனமாய் நின்றனர். பிறகு அன்னலட்சுமியை அழைத்து, ” யாருக்காவது சொல்ல வேண்டி இருக்கா?” என்று கேட்டாள் குமுதா
அன்னலட்சுமி தன், தாய் மாமனையும் மாமியையும் எண்ணியபடியே ‘இல்லை’ என்று மறுப்பாய் தலையசைக்க, குமுதா கணவனிடம் கலந்துபேசி ஆக வேண்டிய காரியங்களை நிறைவேற்றினாள்
அதன் பிறகு அன்னலட்சுமி, கமலத்தை கவனித்துக் கொண்டு பன்னிரெண்டு ஆண்டுகள் அந்த வீட்டிலேயே தங்கி இருந்தாள்
எத்தனை ஆண்டுகள் தான் கமலா தன்னுடைய கருணையான ஒற்றை இழை சுவாசத்தால் அன்னலட்சுமிக்கு அடைக்கலம் அளித்துக் கொண்டிருக்க முடியும். ஒருநாள் அதிகாலையில் கமலம் தன் கருணையான சுவாசத்தை நிறுத்தி விட, அன்ரோடு அன்னலட்சுமிக்கு அந்த வீட்டின் தொடர்பும் அறுந்து போய் விட்டது.
கமலத்தின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த அன்று இரவே, கனகராஜ் அவளிடம் வந்து, “அம்மா இருந்தாங்க. அவங்கள கவனிச்சுக்கிட்டு நீயும் வீட்டுல ஒரு மூலையில் இருந்துகிட்டு இருந்த. இந்த வீட்டயே அம்மாக்க தான் வச்சுக்கிட்டு இருந்தோம். அம்மா போயிட்டாங்க, இனிமே இந்த வீடு எங்களுக்கு வேண்டாம். இந்த வீட்டை வித்துட்டு பெங்களூருக்குப் போய் செட்டில் ஆயிடலாம் இருக்கோம், நீ உன் வழிய பாத்துட்டு கிளம்பு.” என்று கடுமையான குரலில் கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்
அன்னலட்சுமி வழக்கமாக உடுத்திக் கொள்ளும் இரண்டு புடவைகளோடு தனக்கு வேண்டாம் என்று குமுதா எண்ணிய இரண்டு புடவைகளையும் ஒரு கட்டை பையில் திணித்து அருவருப்பான முகத்தோடு குமுதா அன்னலட்சுமியின் முன்பாக வீசி எறிந்தாள்.
கனகராஜ் குமுதாவின் செயலால் மனம் வெதும்பி போனாள் அன்னலட்சுமி. வைரகா அந்த வீட்டிற்கு வேலைக்கு அழைத்து வரப்படும் பொழுது நல்ல சம்பளம் அளிப்பதாக அவர்கள் கூறினார்கள். ஆனால், ஒரு நாள் கூட வைரகாவிற்கு சம்பளம் என்று ஒரு ரூபாய் கூட அவர்கள் தந்ததில்லை.
இரண்டு வேளை உணவு, தாய்க்கும் மகளுக்கும் அந்த வீட்டுப் பெண் பிள்ளைகள் வேண்டாம் என்று தீர்மானிக்கும் பழைய உடைகளை தருவார்கள். இடையில் அன்னலட்சுமியோ அல்லது வைரக்காவோ ஏதாவது அம்பது நூறு கேட்டால் ஆயிரத்தெட்டு கேள்விகளுக்குப் பிறகு கொடுப்பார்கள்
அதுதான் இன்றுவரை அந்த வீட்டில் வழக்கமாயிருந்தது. கிட்டத்தட்ட 40 வயதிற்கு மேல் கடந்து விட்ட நிலையில், அன்னலட்சுமி அடித்து விரட்டாத குறையாய் அங்கிருந்து வெளியேற்றப்பட்டாள்.
அன்னலட்சுமிக்கு அந்த வீட்டையும் அந்த வீட்டு மனிதர்களையும் தவிர எதுவுமே தெரியாது . அவள் வழக்கம் போல் வீட்டு வேலையை செய்து கொண்டு வீட்டின் ஒரு மூலையில் அவர்கள் போடும் சோற்றைத் தின்று கொண்டு அப்படியே காலம் தள்ளி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்
ஆனால் கனகராஜ் அவள் தலையை இப்படி லாரி லாரியாக மணல் கொட்டி விட்டானே. அவர்களின் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக அன்னலட்சுமி அழுதும் கனகராஜ், குமுதாவின் மனம் இறங்கவில்லை.
“இந்த…. எங்கயாவது போய் தொல…” என்று குமுதா மிகுந்த அலட்சியத்தோடு இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அவள் முகத்துக்கு நேராய் வீசி எறிந்தாள்
வேறுவழியின்றி அவள் அந்தப் பணத்தையும் கட்டை பையில் திணித்து வீசி எறியப்பட்ட அந்த பழைய புடவைகளையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து இறங்கினாள்.
அவள் தன்னுடைய நிலையை எண்ணி அழுது கொண்டிருக்க, கையில் இருந்த இரண்டாயிரம் ரூபாயையும் யாரோ திருடி விட்டனர். கையில் இருந்த ஒரே பற்றையும் தொலைத்துவிட்ட நிலையில் எங்கே செல்வது ? யாரிடம் உதவி கேட்பது?என்று எதுவும் புரியாத நிலையில் தட்டுத்தடுமாறி காசிம் பாய் பிரியாணி கடை என்று பெயர் பலகையை தாங்கிக் கொண்டிருந்த அந்த கடை வாசலில் முன்பாக வந்து அமர்ந்தாள்.
அவளுடைய பசியை அறிந்து காசிம் அவளுக்கு வயிறு நிறைய அன்னமிட, அவள் தன் கதையை அவரிடம் நடுங்கும் குரலோடு கூறி முடித்தாள்
“சரி விட்டுத் தள்ளு, அவங்க போய் தொலைங்கட்டம்…” என்று அழுத்தமான குரலில் கூறினார் காசிம்
அன்னலட்சுமி அவ்வளவு நாட்கள் உழைத்து கொட்டியும் அவர்கள் அதை சற்றும் எண்ணிப் பாராமல் தன்னை நிர்க்கதியாய் வீட்டை விட்டு விரட்டிய அவமானத்தால் விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள்
“இங்க பாரு அழுவாத, உனக்கு பெருசா சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது. உன் வயிறு காயாம மூணு வேளை நல்ல சோறு போடுற, காலையில கூட்டி பெருகின பத்தியா?அது மாதிரி காலையில சாயங்காலம் கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணு.காய்கறி நறுக்கி, பாத்திரங்களில கழுவி போடு. அப்பப்ப செலவுக்கு ஏதாவது தர, பின்னாடி ஒரு சின்ன அறை இருக்கு, பாத்ரூம் இருக்கு, தங்கிக்க. உதவிக்கு அண்ணன் நான் இருக்க, மூனு தம்பிங்க இருக்காங்க,எல்லாத்துக்கும் மேல அல்லா இருக்காரு, ஏன் கவலைப் படுற?” காசிம் பாய் நீளமாய் பேசி முடித்தார்
அன்னலட்சுமி கண்ணீர் பெருக அவர் காலில் விழ சென்றாள்.
“ஏய் …என்ன இது? “என்று அவர் அவளை அதட்ட
“முன்ன பின்ன தெரியாத எனக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கீங்க. நீங்க என் குலசாமி” என்று அவள் நன்றி பெருக்கோடு கூறினாள்.
தான் இதே போன்று தானே அடைக்கலமாய் வந்து சேர்ந்தோம் என்று எண்ணிக் கொண்டார் காசிம் பாய்
தாய் தந்தையை இழந்து நிர்கதியாய் நின்ற பத்து வயது சிறுவனான காசிமை தான் நடத்திக் கொண்டிருந்த பிரியாணி கடையில் உதவிக்கு வைத்துக் கொண்டார் ஒருவர். சொந்த மகன் போல் அன்பு காட்டி வளர்த்தார்
வாரிசற்ற அவர், காசிம் பெயரிலேயே தன்னுடைய பிரியாணி கடையையும் எழுதி வைத்தார்
“அடேய் மகனே… கண்ணீரோடு நிற்கதியா யாரு வந்து நின்னாலும் அதரவு கொடு. அகிலத்தையே ஆட்டிப் படைக்கிற அந்த பராசக்தி உன்ன நல்லா கவனிச்சிக்குவ” என்று அவர் அடிக்கடி கூறும் வார்த்தைகள் அவர் காதுகளில் எதிரொலிக்க, அடைக்கலம் கிடைத்த மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்தோடு வேலை செய்துகொண்டிருந்த அன்னலட்சுமியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் காசிம்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
நல்ல கதை.
இது மிக அருமையான கருணை கதை..அதை அழகாக எழுதிய எழுத்தாளருக்கு முதலில் பாராட்டுக்கள்.காசிம் பாய்கள் இன்றும் சிலர் உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..அண்ணலட்சுமி போன்ற ஏழைகள் ஏமாளிகள் இன்றும் உண்டு.கதை சித்தரித்து முடித்த விதம் கடைசியில் ஒரு பஞ்ச் அருமை அருமை..
மனிதம் இல்லாத மனிதர்களையும், மனிதநேய மிக்க ஈரமான மனிதர்கள் பற்றியும் சொல்லும் நல்ல கதை
அன்னலட்சுமி
கதையின் 138
மிகவும் உணர்வுபூர்வமான கதை. உலகிலேயே மிகக் கொடுமையானது வறுமையும்,பசியும் ஒன்றுதான் என்பதை இந்த கதை உணர்த்துகிறது உதவி செய்ய கடவுள் யாரையாவது நிச்சயம் அனுப்பி வைப்பார் என்ற நம்பிக்கையை இந்த கதை தருகிறது மிகவும் அருமையான கதை