இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 95)
காலை நேர செங்கதிர்களின் ஒளிபரவி, நித்யவிடியலின் அன்றைய நாளில் அந்த கிராமத்திலுள்ள பெரிய வீடு பரபரப்பாகக் காணப்பட்டது
“ஏய் ராஜம்… இங்கப் பாரு தூசெல்லாம் சரியாத் தட்டப்படாம இருக்கு. என்ன தான் வேல செய்றீங்களோ? உங்கப் பின்னாடியே சுத்திட்டிருந்தா மத்த வேலயெல்லாம் யார் பாக்கறது?” எனக் கூறியபடி, ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தவன் மேல் ஒரு கண்ணை வைத்தபடி வாசலுக்கு வந்தாள் பங்கஜம்
அங்கே திண்ணையில் வசதியாக சாய்ந்தபடி தினசரியில் ஆழ்ந்திருந்த ராமமூர்த்தியிடம், “ஏங்க… என்ன இப்படி பேப்பர் படிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க. கல்யாண வேலைத் தலைக்கு மேல இருக்கு. நான் ஒருத்தியே இவங்கக் கூட மல்லுக்கட்டி வேலை வாங்கிட்டிருகேன். நீங்க அவங்களக் கொஞ்சம் கண்காணிச்சா, நான் மத்த வேலையெல்லாம் பார்ப்பேன்ல
மூணு வருஷம் கழிச்சுப் புள்ள வர்றான். அவனுக்குப் புடிச்சதெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்ய வேணாமா? அதோட கல்யாண வேல வேற இருக்கே. நம்ம வீட்டு கடைக்குட்டியோடக் கல்யாணம். நம்ம முகேஷ்க்கும் அருணாவுக்கும் கல்யாணம் பண்ணியும், அந்த வேலையெல்லாம் மறந்துப் போச்சுங்க. ஒவ்வொண்ணையும் ஞாபகப்படுத்தி செய்ய வேண்டியிருக்கு.
என்ன தான் நாம பிள்ளை வீடுன்னாலும், நம்ம வீட்ல கல்யாணங்கிறதால நாம தான் எல்லாத்திலயும் கவனம் வச்சு சிறப்பா ஒருத்தரும் ஒண்ணும் சொல்லாம நடத்தனும்னு நினைச்சாலே எனக்கு பதட்டமாகுது.
சரி சரி உள்ள வாங்க, பெயிண்ட் அடிக்க ஆளுங்க வந்திருவாங்க. பக்கத்தில் நின்னு சரியா வேல பண்றாங்களானு பாத்துக்கோங்க” மழையடித்து ஓய்ந்ததைப் போல பேசி முடித்து உள்ளே சென்றாள் பங்கஜம்.
அந்த கிராமத்துப் பெரிய வீடு ராமமூர்த்தியின் தாத்தா வீடு. ராமமூர்த்தி, அவரது இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும் இந்த வீட்டில் தான் பிறந்தனர்
பின்னர் அவரது தந்தையின் அலுவல், பிள்ளைகளின் கல்விக்கென குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. விடுமுறை நாட்களில் மட்டுமே இந்த கிராமத்துத் தாத்தா வீட்டிற்கு வருவார்கள்
சென்னையின் நெருக்கடியானத் தெருக்களில் விளையாட முடியாத சூழலில், விசாலமான கிராமத்துத் தெருக்களில் தமது நண்பர்களுடன் விளையாடுவது இவர்களுக்கு தனிசுகம்
பாட்டியின் கைவண்ணத்தில் மணக்கும் பட்சணங்களும் பலகாரங்களும் நாவிற்கு சுவை சேர்க்கும் என்றால், இரவில் தாத்தா கூறும் கதைகளில் நகைச்சுவையும் இழையோடும் படிப்பினையும் அளிக்கும்.
தோட்டத்து நறுமண மலர்களின் சுகந்த மணம் காற்றில் பரவி நாசியை வருட, முற்றத்து திறந்தவெளி வழியே இதமான வெயில் மேனியைச் செல்லமாய்த் தட்டியெழுப்ப, வயல்களூடே தாத்தாவுடனான ஆனந்த நடைப்பயிற்சி, பம்புசெட் குளியல், பாட்டியளிக்கும் ஆவிபறக்கும் சிற்றுண்டி அணிவகுப்புகள், ஆலமர ஊஞ்சலாட்டம், ஊர்ப்பசங்களுடன் மாலை நேர மலையேற்ற சாகஸப்பயணம் என, இன்பம் ஒன்றே வாழ்க்கையாய் இவர்கள் இளமைப் பொழுதுக் கழிய, முற்றும் விடுமுறை கண்ணீர்ப் பெருக்கி விடைபெறும், கிராமத்தினின்றும் உற்றாரிடமிருந்தும்
ஆனால் நகர வாழ்க்கையின் அன்புப் பரிசான சௌகரியங்களும் நாகரீகமும், கிராம வாழ்க்கையைக் கொஞ்சக் கொஞ்சமாகத் துறக்கச் செய்தது
நகரவாசிகள் என்றுப் பெருமையாக தங்களைப் பறைசாற்றிக் கொள்ளவே எவரும் விரும்புவர். ராமமூர்த்தியையும் அவரது தந்தையையும் விடுத்து, அம்மாவோடு தம்பி தங்கையருக்கும் கிராமத்து நினைப்பும் வாசமும் கௌரவக் குறைச்சலாகவே இருந்தது.
அவரவர் வளர்ந்துப் பெரியவராகித் திருமணம் என்று வாழ்க்கை அமைத்துக் கொண்டதும், அவர்களுக்குள்ளானத் தொடர்பு விசேஷ நாட்களில் மட்டுமே என்றானது.
தாத்தா பாட்டியின் மறைவிற்குப் பிறகு, வீடு அப்பாவின் உடன்பிறப்புகளும் இல்லாத சூழலில் அவர் கைக்கு வந்தது, வீட்டை எக்காரணம் கொண்டும் விற்கக்கூடாது என்ற கட்டளைக் கலந்த உடன்பாட்டோடு
அப்பா கிராம வீட்டிற்குக் குடியேற விரும்பிய போதும், ஏனையோரின் வற்புறுத்தலால் தூரத்து உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டது வீடு, ஆளில்லாவிட்டால் பராமரிப்பு இருக்காது என்ற காரணத்தோடு
அவர்கள் ஏமாற்றி யாரிடமாவது விற்க முயன்றாலும், வாங்குவதற்குத் தான் ஆட்கள் பஞ்சமாயிற்றே
அப்பா காலத்திற்குப் பிறகு, குக்கிராமத்தில் லட்சத்திற்கும் கீழாக விலைப் போன கிராமத்து வீட்டை, ஏகமனதோடு ராமமூர்த்தியின் உடன்பிறப்புகள் இவருக்கே உடைமையாக சம்மதித்தனர்.
அதற்கு காரணமில்லாமல் இல்லை, பெருநகரத்தில் அப்பா வாங்கிப் போட்டிருந்த நிலங்களையெல்லாம் அவர்கள் தமக்குள் பங்கிட்டுக் கொண்டனர். அந்த தாராள மனதில் தான், கிராமத்து வீட்டை ராமமூர்த்திக்கு சொந்தமாக்கினர்
உண்மையாகவே அவர் மிகவும் மகிழ்ந்தார். நகர வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து விடுபட்டு, பசுமையான கிராம வாழ்க்கைக்கெனக் காத்திருந்தார்
அவர் சென்னையில் மத்திய வருமானத் துறை அதிகாரியாகவும், அவரது மனைவி பங்கஜம் அரசுப்பள்ளி தமிழாசிரியராகவும் பணிபுரிந்து, இரண்டு வருடங்கள் முன்பு தான் இருவரும் ஓய்வு பெற்றனர்.
மூத்த மகன் முகேஷ் தனியார் வங்கியின் மேலாளராக, மனைவி மகளோடு தனியாக வசிக்கிறான். மகள் அருணா, கணவன் மற்றும் இரு மகன்களோடு கல்லூரிப் பேராசிரியையாக இருக்கிறாள்
இளைய மகன் அகிலேஷ், கணிப்பொறியியல் படிப்பில் தங்கம் வென்று, சென்னையில் பிரபலமான பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்தவன். தற்போது நியூஜெர்சியில் மூன்று வருடங்களாக நிறுவனத்தின் கணிணி செயலாளராகப் பணிபுரிந்து வருகிறான்.
வெளிநாட்டு வேலையமைப்பு, அந்நாட்டு நிரந்தரவாசம் என்பதையே இளவயது முதல் குறிக்கோளாகக் கொண்டு, அதைச் செயலாற்றியவன். பெற்றோருக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை எனினும், அவனதுவிருப்பத்தில் தலையிட விரும்பவில்லை.
ராமமூர்த்தி தனது மனைவியின் ஓய்வுக்கு இரு வருடங்கள் முன்பே ஓய்வுப் பெற்றார். மனைவியின் பணி ஓய்விற்கெனக் காத்திருந்தவர், தமது விருப்பத்தை மனைவியிடமும் பிள்ளைகளிடமும் வெளியிட்டார்
“பங்கஜம், முகேஷ், அருணா… உங்களுக்கேத் தெரியும். என்னிக்குமே எனக்குனு எந்த விருப்பு வெறுப்பும் இல்லாதவன் நான். உங்களுக்காகவே நான் இத்தனை நாளும் வாழ்ந்தேன். உங்க விருப்பமே பிரதானமா இருந்தேன். இனிமே இருக்கிறக் காலத்திற்கு எனக்குப் பிடித்த கிராமத்து வாழ்க்கைய ரசிச்சு வாழ விரும்பறேன்.
இதுநாள் வரைக்கும் உங்கள கிராமத்துக்கு வரச் சொல்லி நான் வற்புறுத்தியது இல்ல. உங்க சின்ன வயசில… உங்களக் கூட்டிட்டு போயி…. ஏஸி இல்ல… பாத்ரூம் வசதி இல்லனு நீங்க கஷ்டப்பட்டதப் பார்த்ததில் இருந்து, உங்கள நான் கூப்பிட்டதேயில்ல
ஆனா, இப்ப என் கடமையெல்லாம் முடிச்சுட்டேன். இதோ உங்கம்மாவும் ரிட்டையர்டாகப் போறாங்க, அதனால நான் கிராமத்துக்குப் போகலாம்னு இருக்கேன். நானும் உங்க அம்மா மட்டும் தான் இங்க இருக்கிறோம். இவ்வளவு பெரிய வீட்டை எங்களால இனிமே பராமரிக்க முடியாது. அதனால வீட்டை வித்துட்டு உஙகளுக்கான பங்கைக் கொடுத்தடறேன். உங்கம்மாவும் என் கூட வர சம்மதிச்சாச்சு . நீங்க என்ன சொல்றீங்க?” எனக் கேட்டதும், கணிசமானப் பணம் கைக்கு வரும் மகிழ்வில் இருவருமே இசைந்தனர்
“அப்பா… உங்க விருப்பப்படியே செய்ங்க, நாங்க அடிக்கடி அங்க வந்து உங்களப் பாத்துக்கறோம்” என்றனர் ஒரே குரலில்
சென்னையில் அருகருகே இருக்கும் போதே எப்போதாவது எட்டிப் பார்க்கும் இவர்களா அங்கு வரப் போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றினாலும், சொன்னபடியே கோடிகளில் விலைப் போன அந்த வீட்டை விற்று, பிள்ளைகளுக்கு மூன்று பங்கு தங்களுக்கு ஒரு பங்கு என நான்கு பங்காக பிரித்தார் ராமமூர்த்தி
தாயும் சேயும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறாயிற்றே. வங்கியில் தங்களதுப் பங்குப் பணத்தை டெபாசிட் செய்தனர் ராமமூர்த்தி தம்பதியினர்.
பங்கஜத்தின் ஓய்வுக்குப் பிறகு, கிராமத்துக்கு வந்து விட்டனர். அது டவுன் எல்லைக்கு அப்பால் மிகவும் உட்புறமாக இருந்ததால், அடிப்படை வசதிகள் குறைவாகவே இருந்தது
சரியான போக்குவரத்து வசதியும் மருத்துவ வசதியும் இல்லை. இருந்தும் அக்கம்பக்கத்து கிராமவாசிகள் துணையோடு தங்கள் அன்றாட வாழ்க்கையை திருப்தியோடும் மனநிறைவோடும் நகர்த்தத் தொடங்கினர் இத்தம்பதியர்.
அந்த வீட்டில் குடியிருந்த தூரத்து உறவினரான ராஜம் வேலு தம்பதியர், கொல்லையிலிருந்தத் தோட்டத்து ஓட்டு வீட்டில் தங்கியிருந்து இவர்களுக்கு ஒத்தாசையாக இருந்தனர்.
அவர்களது பிள்ளைகளும் நகரவாழ்க்கைத் தேடி நகர, ராஜம் இவர்களுக்கு உதவியாயிருப்பதில் ஆத்ம திருப்தி கொண்டாள், தகுந்த சன்மானமும் பெற்று
இங்கு வந்து வருடம் ஒன்றுக் கடந்த நிலையில், ராமமூர்த்தி தம்பதியின் கடைசி பிள்ளை அகிலேஷ், உடன் பணிபுரியும் ஸ்வாதியை விரும்புவதாகவும், திருச்சியில் இருக்கும் அவளது பெற்றோரிடம் சம்மதம் பெற்ற நிலையில், இவர்களின் நல்லாசியோடு தாயகம் திரும்பி திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்ததும், இருவரும் அகமகிழ்ந்து தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
ராமமூர்த்தி பங்கஜம் இருவருக்குமே சாதி மத இன பேதங்கள் கிடையாது. மனிதம் மட்டுமே போற்றுகின்ற உன்னத இதயங்கள்.
முகேஷும் வேற்று மொழிப் பேசும் திவ்யாவை தான் திருமணம் செய்து கொண்டான். அருணாவிற்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை உதயா அமைந்தான்
இங்கு கிராமத்திற்கு வந்ததும் இவர்கள் இருவரும் ஆற்றியவை சமுதாய சீர்திருத்தப் பணிகளே.
காலை நேர அலுவல்களுக்குப் பின்னர், மாலை நேரம் முழுதும் இருவரும் கிராம மக்களின் மேம்பாட்டுக்கான கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை போதித்தனர்
பங்கஜம் பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் கற்றுக் கொடுத்தாள். சுற்று வட்டாரப் பெண்களுக்குக் கையெழுத்துப் போடும் அளவிற்கு எழுத்துக்களை அறிமுகம் செய்தாள்
ஓய்வு நேரங்களில் அவர்களை வைத்துக் கொண்டு பட்சணங்கள், ஊறுகாய் வகைகள், பொடி வகைகள், வற்றல் வகைகளைக் கற்பித்து, அவர்களால் தயாரிக்கப்பட்ட பண்டங்களை அரசு கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்து பணம் ஈட்ட வழிவகை செய்தாள்
ராமமூர்த்தி, வரலாற்று நாயகர்களின் உண்மைக் கதைகளின் வாயிலாக, கிராமவாசிகளுக்கு சமுதாய முற்போக்குச் சிந்தனைகளைப் புகுத்தினார்.
அரசின் வேளாண்மை வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், வங்கிக் கடன் வசதிகளையும் கூறி, விவசாயிகளுக்குப் புதுப்பாதை காட்டினார்
தங்கள் இருவருக்காக நேரம் ஒதுக்குவது நடைப்பயிற்சியின் போது மட்டுமே. இளமைக்கால இனிய நினைவுகளை அசை போடுவதோடு பிள்ளைகள் குறித்தும் மனம் விட்டு இருவரும் பேசி மகிழ்ந்தனர்
பங்கஜம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், தோட்டப் பராமரிப்பு அவளுக்குக் கைவந்த கலை. இங்கு வந்ததும் அவளது பல வருட கனவுப் பலித்தது.
சென்னை நகரத்தின் நெருக்கமான தெருவில் அமைந்திருந்த இவர்களது வீட்டில் தோட்டத்திற்கென இடம் ஒதுக்க முடியவில்லை. வீடு முழுமையும் ஆக்ரமித்த சிமெண்ட் தரைத்தளம், தோட்டத்திற்கு வழிவிடவில்லை.
வெறும் தழைகளை மட்டுமே கொண்ட குரோட்டன்ஸ்கள் அவளுக்கு சலித்து விட்டன. மேல்மாடித் தளத்தில் பூச்செடிகள் வைக்க அனுமதி இவரிடமிருந்து கிடைத்தாலும், பிள்ளைகள் மேற்கூரை வலுவிழக்கும் எனக் கூறி, அவளது ஆசைக்கு அணையிட்டனர்
“சாமி வரம் கொடுத்தென்ன, பூசாரி வரத்தை மறுத்து விட்டானே” என மனம் அரற்றினாள் பங்கஜம்
இப்போது அகண்ட இந்த பழங்கால செம்மண் தோட்டத்தில் ஆசை ஆசையாக வலம் வந்தாள். கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுக்கும் கற்பகத் தருவாக, அம்மண்ணும் விளங்கியது
அக்கம் பக்கத்து பெண்களும் காமதேனுவாய் அவள் கேட்ட அத்தனை மலர், காய், பழச் செடி, விதைகளை வழங்கினர். இதோ… ஒரே வருடத்தில், எப்படி பூத்து காய்த்து கனிந்து கண்ணுக்கும் மனத்திற்கும் பரவசம் அளித்து உற்சாகம் அளிக்கின்றன, இத்தோட்டத்து தாவர உறுப்பினர்கள்
அவளது மற்றொரு கனவு பசுமாடு வளர்ப்பது. மாட்டுத் தொழுவம் அமைத்து.. கோமாதாவை வீட்டில் குடிவைத்து சுபிக்க்ஷத்தை நிலை பெறச் செய்ய, இந்த வீட்டிற்கு வந்த சில வாரங்களிலேயே கன்றோடு பசு மாட்டை வாங்கினாள் பங்கஜம்
ராஜம் வேலுவின் மேற்பார்வையில், மிக சுத்தமாகவும் அழகாகவும் தெய்வீகம் குடிக்கொண்ட திருக்கோயிலாகக் கொட்டகைத் திகழ்ந்தது.
பசுமாடு லஷ்மியும் கன்று கமலமும் இவளிடம் மிகுந்த வாஞ்சையோடுப் பழகின. இன்னும் சில தினங்களில் பசு கன்று ஈனப் போகிறது. அதனால் கூடுதல் கவனத்தோடு பங்கஜமும் ராஜமும் கவனித்துக் கொண்டனர்.
தை மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அகிலேஷ் ஸ்வாதி திருமண முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது.
கல்யாணப் பெண்ணிடம் வீடியோ கால் மூலமே பேசியாகி விட்டது. அகிலேஷுக்குப் பொருத்தமானவளாகவும் மரியாதைத் தெரிந்தப் பெண்ணாகவும் இருந்தாள். எப்படியிருந்தாலும் திருமணத்திற்க்குப் பின் மீண்டும் அமெரிக்க வாசம் தான் இருவருக்கும்.
சென்ற வாரம் தான் பெண்ணின் பெற்றோர் வந்து விட்டுப் போனார்கள். அவர்களுக்கு இந்த கிராமமும் வீடும் மிகவும் பிடித்து விட்டது.
அதனால் இங்கேயே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றும், உறவினர்கள் இருபது பேரோடு திருமண விழாவிற்கு வருவதாகவும் தெரிவித்தனர்
அறுவடை நேரம் என்பதாலேயே, கிராமத்து ஜனங்களிடம் திருமணம் குறித்து இப்போதுக் கூறவில்லை. கல்யாண நெருக்கத்தில் அனைவரையும் அழைக்கலாம் என தீர்மானித்தனர்
விஷயம் தெரிந்தால் அனைவரும் வரிந்துக் கட்டிக் கொண்டு கல்யாண வேலைகள் அனைத்தையும் கவனித்திருப்பர். அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாததால் தான் ராஜம் மற்றும் வேலு துணையுடன் திருமண வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் பங்கஜம்
இவர்கள் சார்பாக, உறவினர்கள் அனைவரையுமே நேரிலும் தபாலிலும் ஃபோனிலும் தொடர்பு கொண்டு திருமணத்திற்கு வரவேற்றனர். வருகிறவர்கள் சௌகரியத்தைப் பொறுத்து, அவர் தம் வருகை எனவும் எண்ணினர்.
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக வந்து சேர்ந்தான் அகிலேஷ். மகன் வரவிற்காக கண்கள் பூத்துக் காத்திருந்த பங்கஜம், அவன் வந்ததும் ஆனந்தக் கண்ணீர் துளிக்க மங்கல ஆரத்தி எடுத்து ஆனந்தமாக வரவேற்றாள்
அந்த வீட்டை மிகுந்த வியப்புடன் பார்த்தான் அகிலேஷ். சிறுபருவத்தில் வந்திருந்ததால், புதிதாக இப்போது வீட்டைப் பார்த்தான். பழமைச் சற்றும் மாறாத வீடு என்றாலும், அதன் மிக நேர்த்தியானக் கட்டமைப்பை எண்ணி வியந்தான்.
டைல்ஸ் அல்லாத தரை காலுக்குக் குளிர்ச்சித் தந்தது. சம்மணமிட்டு தரையில் அமர்ந்து, அம்மா தந்த சிற்றுண்டி உண்பது புதுமையான அனுபவம் தந்தது.
நிறையக் கட்டுகள் கொண்ட அந்த வீட்டின், பின்தளத்தில் உள்ள அறையை அவனுக்கு ஒதுக்கியிருந்தனர். அவ்வறை, குளிர்சாதனமின்றியே அச்சாதனத்தின் வேலையைத் திறம்படச் செய்யும் வகையில், சன்னலிலிருந்த வந்த குளிர்காற்றும், ஏதோ நிலையறியா நறுமணமும் அவனை போதைக் கொள்ளச் செய்து மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளித்தன.
இருபது வயது வரை வாழ்ந்த நகரவாசமும் மூன்றாண்டு கால வெளிநாட்டு மோகமும், இன்றைய ஒருநாள் பொழுதின் முன் தோற்று விடும் போலத் தோன்றியது.
பெற்றோரின் தேர்வு மிகச் சரியானதே என நினைத்தான். ஆனால் இவையெல்லாம் ஓரிரண்டு நாட்களுக்குத் தான்.
இது போன்ற பரபரப்புவாசிகளுக்கு இதெல்லாம் சலித்து விடும் என, தனது நிரந்தர வெளிநாட்டுக் குடியுரிமைக்குச் சமாதானம் செய்தான், மனதின் எண்ணங்களை மனதால் வென்றபடி
“அகிலேஷ்… நாங்கெல்லாம் துணி நகை வாங்க டவுன் வரைக்கும் போயிட்டு வர்றோம். நீ எங்களுக்காகக் காத்திருக்காம சாப்பிட்டு ரெஸ்ட் எடு, எப்படியும் ராத்திரியாயிடும். வரட்டுமா?” என்ற பங்கஜத்துடன், அவர்கள் மூவருமே சென்று விட்டனர்
செல்வதற்கு முன், கோனாரையும் அவர் மனைவியையும் அழைத்து, பசுமாடு எப்போது கன்றீனும் என்பதைக் கேட்டறிந்தாள் பங்கஜம்.
இன்னும் மூன்று நாட்களாகும் எனக் கூறக் கேட்ட தைரியத்தில் தான் பங்கஜம் கிளம்பினாள். ஆனாலும் அவளுக்கு லஷ்மியை விட்டுச் செல்ல மனமில்லை.
தான் சென்றால் தான் வேலை முழுமையடையும். எதுவும் விடுபடாது என்பதாலேயே மனமின்றிச் சென்றாள். வழிநெடுக பசுவிற்காகப் பிரார்த்தித்துக் கொண்டே வந்தாள்
தன்னவளுடனான இனிய உரையாடலில் தன்னையும் உலகத்தையுமே மறந்தான் அகிலேஷ்
“நீயும் என்கூடவே இங்க வந்திருக்கலாமே ஸ்வாதி. சென்னை வரைக்கும் கூட வந்தவ, அப்படியே திருச்சிக்கு ட்ரெயின் ஏறிப் போயிட்ட. இங்க ஒருத்தன் உன் நினைப்பாவே இருப்பான் என்கிற எண்ணமே இல்ல” எனச் செல்லமாகக் கோபித்த அகிலேஷிடம்
“ஆமா… கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க வீட்டுக்கு வந்தா, உங்கம்மா சும்மா விடுவாங்களா? அன்னிக்கு ஒரு ஃபார்மாலிட்டிக்காக கால் பண்ணிப் பேசினா, அட்வைஸ்ங்கிறப் பேர்ல அரை மணி நேரம் போரடிச்சுட்டாங்க
சமையல் தெரியுமா? கோலம் போடுவியா? புடவை கட்டத் தெரியுமா? பூத்தொடுப்பியா? அப்பப்பா… எத்தனை நான்சென்ஸ் க்வெஸ்டின்ஸ், எந்தக் காலத்துல இருக்காங்க உங்கம்மா?
இந்தக் காலத்து பெண்கள் நாங்க எல்லாத்துலயும் கொடிக்கட்டிப் பறந்திட்டிருக்கோம். இவங்க இப்பவும் எங்களப் பூட்டி வைக்கப் பாக்குறாங்க, எங்கம்மா எவ்வளவோ மேல்.
நல்லவேளை கல்யாணம் முடிஞ்சதும் நாம திரும்பவும் நியுஜெர்ஸிக்கேப் போயிடுவோம். இவங்களுக்கும் இவங்க பழையப் பஞ்சாங்கத்துக்கும் ஒரு பெரிய கும்பிடு” என்றாள் ஸ்வாதி.
பேச்சுத் திசை மாறி செல்வதை அறிந்த அகிலேஷ், வேறு விஷயங்களுக்குத் தாவினான். அரைமணி நேர உரையாடலுக்குப் பின், செல்பேசியில் பதிவிறக்கம் செய்திருந்த தனக்குப் பிடித்த நடிகரின் படத்தில் லயிக்கத் தொடங்கினான்
ஏதோ ஒரு இனம் புரியாத குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான், மீண்டும் படத்தில் ஆழ்ந்தான். தொடர்ந்து ஒலித்த குரலைப் புறக்கணித்து பாடல் கேட்கத் தொடங்கினான்
“ம்மாஆஆஆஆஆஆ” குரலொலி இப்போது கதறலாக மாறி இருந்தது. அந்தக் குரல் அவன் மனதைப் பிசைந்தது. குரல் ஒலித்த திசையில் நடந்து வீட்டுக் கொல்லைக் கதவைத் திறந்தான்.
அங்கு அவன் கண்ட காட்சி, அவன் மனிதத்தைத் தட்டி எழுப்பியது. தொழுவத்தில் பசுமாடு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தது. எந்நேரத்தலும் அது கன்று ஈனும் அவசரகதியில் அங்குமிங்குமாக அலை பாய்ந்தது.
கயிற்றால் மூங்கில் கொட்டிலில் கட்டப்பட்டிருந்ததால், அதனால் வெளியேற முடியவில்லை போலும். இல்லையென்றால் நிச்சயம் அது உதவிப்பெற எங்கேனும் ஓடியிருக்குமோ என்னவோ
இதுவரையிலும் பசுமாட்டின் அருகென்ன, எந்த செல்லப் பிராணிகளையும் வளர்த்ததில்லை. நாய் பூனை என்று எதன் அருகிலும் சென்றதில்லை. அதுவும் இந்த நிலையிலிருக்கும் பசுமாட்டின் அருகில் செல்லவே பயமாயிருந்தது.
ஆனாலும் அதன் கண்களில் தெரிந்த அபய அழைப்பும் கனிவு நிறைந்த பார்வையும், தாய்மையை உணர்த்திய தைரியத்திலும் மனதில் சுரந்த அன்பிலும பரிவிலும், அதனருகில் சென்றான் அகிலேஷ்
பக்கத்தில் கன்றுக்குட்டி அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. தன்னைக் காப்பாற்றவே வருகிறான் என்ற உள்ளுணர்வின் அறிவிப்போடு, என்றுமே தன்னை வாஞ்சையாய் அணைக்கும் பங்கஜத்தின் சாயலை இவனில் கண்ட நெகிழ்வில், தலையை ஆட்டியது லக்ஷ்மி
முதலில் அதன் நெற்றியை இதமாக வருடிக் கொடுத்தவன், தைரியம் ஊட்டும் வண்ணமாக தோளில் தட்டிக் கொடுத்தான்.
அதற்குப் பக்கத்தில் தண்ணீர் வாளியை வைத்து விட்டு உடனே வாசலுக்கு விரைந்தான்.
இங்கு வந்ததிலிருந்து கிராம மக்கள் எவரையும் பார்க்கவுமில்லை, அவர்களிடம் பேசவுமில்லை. அவனது படிப்பும் பணமும் அதனை கௌரவக் குறைச்சலாக எண்ண வைத்தன.
இப்போது அவனுள் சுரந்த மனிதம், அனைத்தையும் மறக்க வைத்தது. வாசலில் அவன் பார்த்த நபரிடம் அவன் கேட்ட கேள்வி கோனாரைக் குறித்தே
அந்நபரின் சைக்கிளில் ஏறி வேகமாக கோனார் இருப்பிடம் சென்று, அவரையும் அவர் மனைவியையும் அழைத்து வந்தான். அவர்கள் மாட்டின் நிலையுணர்ந்து உடனே அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
அவர்கள் பொறுப்பில் பசுவை விட்டுவிட்டு, பக்கத்தில் விசாரித்து கிராமத்தில் இயங்கி வந்த சிறு கால்நடை மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரைக் கையோடு அழைத்து வந்தான் அகிலேஷ்
இவர்கள் வருவதற்குள் அழகான கன்றுக்குட்டியை ஈன்று விட்டிருந்தது லக்ஷ்மி. அகிலேஷைக் கண்டதும், மகிழ்ச்சியிலும் நன்றியிலும் தன் கொம்புகளையும் வாலையும் ஆட்டி காதுகளை மெல்ல அசைத்தது.
கண்களில் நீர்துளிக்க அகிலேஷ்அதன் முதுகை வருடிய போது, உடல் சிலிர்த்து “ம்மாஆஆஆஊஎ” என்றது
இந்தக் குரல் மகிழ்ச்சியின் முத்தாய்ப்பாக இருந்தது. பக்கத்தில் பச்சிளம் கன்று இருந்தது, அதனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார் கோனார்
இவர்களைப் பார்த்ததும், மாட்டிற்கு வைக்கோல் போட்டுவிட்டு, “எதுக்குங்க டாக்ட்டரூ… நாங்க தான் பார்த்திட்டமே. பசுவும் கன்னும் நல்லா இருக்குதுங்க. ஆனா நல்ல சமயத்துல எங்களக் கூப்பிட்டு வந்தீங்க” என கோனார் சொன்னதும்
அவர் மனைவி, “எல்லாம் அம்மா வளர்ப்பாச்சே. தாயப் போலப் புள்ள, நூலப் போல சேலன்னு சும்மாவா சொன்னாங்க. அந்த குணவதிப் பெத்த தங்கமில்ல இது. தம்பி உங்களுக்குக் கல்யாணமுங்களா? இந்நேரத்துல பசுக் கன்னுப் போட்டது நல்ல சகுனம் தம்பி. நீங்க வாழையடி வாழையா தலைமுறை தலைமுறையா ரொம்ப வருஷத்துக்கு வாழ்வீங்க” என்று அவள் அறிந்த வாழ்த்துக் கூற, மெய் சிலிர்த்தான் அகிலேஷ்
“பசுமாடும் கன்னுக்குட்டியும் நல்ல ஆரோக்கியத்தோட இருக்குங்க ஸார், நல்லா அதோட ஆரோக்கியத்தக் கவனிச்சிருக்காங்க உங்கம்மா. என்னை மாதமாதம் வரவைச்சு தடுப்பூசியெல்லாம் போடச் சொல்லுவாங்க. அதோட இந்தக் கொட்டகையை எவ்வளவு சுத்தமாவும் சுகாதாரமாவும் வச்சிருக்காங்க.
ஒரு முன்மாதிரியா இவங்களப் பின்பற்றும்படி, நான் மாட்ட வளர்க்கிறவங்ககிட்ட எப்பவும் சொல்லுவேன். சரி சார், நான் கிளம்பட்டுமா? அம்மா வந்ததும் சொல்லுங்க. மறக்காம திரட்டுப் பால் கொடுக்கச் சொல்லுங்க” என விடைபெற்றார் மருத்துவர்
தன் சட்டைப்பையில் இருந்த ஐந்நூறு ரூபாய் அகிலேஷ் அளித்த போது, முதலில் மறுத்தவர், பின் அகிலேஷின் வற்புறுத்தலுக்காக பெற்றுக் கொண்டார்
அதேப் போன்று, காலத்தில் செயலாற்றிய கோனாருக்கும் ஆயிரம் ரூபாயை அளித்தான் அகிலேஷ்
“தம்பி இன்னா இது, எங்கள என்ன நெனச்சீங்க? நாங்க இதப் பணத்துக்காக செய்றதில்ல. எங்க வேலை இது, எங்க கடமையும் கூட. தொழில் தெரிஞ்ச நாங்க, அத வச்சு பணம் பறிக்கக் கூடாது. ஐயாவும் அம்மாவும் எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க, அதுக்கான நன்றிக் கடனாத் தான் இத செஞ்சோம். காசு கொடுத்து எங்க அன்ப பாகுப்படுத்தாதீங்க தம்பீ” என்றதும்…
“அடடா! அப்படியெல்லாம் இல்லீங்க பெரியவரே, நிஜமா நீங்க வரலைன்னா பாவம் இந்த மாட்டோட கதி என்னாகி இருக்குமோ? அதோட அம்மா பாசத்தோடு வளத்ததாச்சே, விபரீதமா நடந்திருந்தா அம்மாவுக்கு நான் எப்படி சமாதானம் சொல்லி இருப்பேன். அதனால இத வாங்கிக்கோங்க ப்ளீஸ்” என்றான்.
“அட தம்பீ, பெரிய வார்த்தை எதுக்கு? கொடுங்க சந்தோசமா வாங்கிக்கறேன்” என விடைபெற்றுச் சென்றார்.
இதோ, பெரிய வீட்டின் முன்பு, ஊர்சனம் முழுக்கக் கூடியிருந்தது. அவரவர் தங்கள் வீட்டுத் திருமணமாக எண்ணி, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தனர்
“நம்ம அய்யா வீட்டுக் கல்யாணம்… நம்ம அம்மா வீட்டுக் கல்யாணம்” என, உரிமையோடும் பெருமையோடும், அலங்கரிப்பிலிருந்து சமையல் வரை எல்லா வேலைகளையும் கிராம மக்களே செய்தனர்
பங்கஜம் தம்பதியர் ஒரு துரும்பையும் கூட அசைக்காதவாறு, அவர்களே கல்யாண சம்பிரதாயங்களைப் பார்த்துக் கொண்டனர்.
வீட்டு வாசலை அடைக்குமாறுப் பிரம்மாண்ட கோலங்கள் வர்ண ஜாலங்களுடன் வரவேற்றன
மூன்று நாட்களாக கிராமத்தாருக்கும் விருந்தினருக்கும் சுவைமிகுந்த விருந்து நடந்துக் கொண்டே இருந்தது. ஒருவரும் குறைகூறாதபடி எல்லாஅம்சங்களும் கவனிக்கப்பட்டு நடந்தேறின.
வந்திருந்தோர் அனைவரும் பொறாமைக் கொள்ளும்படியும் பாராட்டும்படியும் கல்யாண நிகழ்வுகள் அரங்கேறின. ஆனந்தம் விளையாடும் அவ்வீட்டில் அழகிய பூவேலைப்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில், வளர்பிறை முழுநிலவு நன்னாள் சுபமுகூர்த்தத்தில், ஸ்வாதியின் மணி கழுத்தில் மங்கல நாணேற்றினான் அகிலேஷ்.
மணமக்களின் மேல் பொழிந்த பூமாரியோடு, “ம்மாஆஆஆஆ” என்ற வாழ்த்தொலியும் எதிரொலித்தது.
அகிலேஷின் விருப்பப்படி, திருமண நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, லக்ஷ்மி தனது இரு கன்றுகளோடு திருமண வைபவத்தைக் கண்டுக் களித்ததோடு, அனைவரும் அட்சதைத் தூவி வாழ்த்தியபோது தானும் தனது மகிழ்வையும் வாழ்த்தையும் குரலெழுப்பி தெரிவித்தது
அகிலேஷ் நிமிர்ந்து அதனை நோக்கி புன்னகைத்ததும், கொம்புகளை ஆட்டி தனதுக் களிப்பை உணர்த்தியது.
இரு தினங்கள் கழித்து, இளம் தம்பதிகள் அனைவரிடமும் விடைப்பெற்றனர். மகனை மனமில்லாமல் வழியனுப்பி வைத்தாள் பங்கஜம். காரில் ஏறுவதற்கு முன், கொட்டகைக்குச் சென்றான் அகிலேஷ்
அவன் விடைபெறுவதை அறிந்து லக்ஷ்மியின் கொம்பில் கட்டியிருந்த சலங்கைகள் அவன் செல்வதற்கு மறுப்புத் தெரிவிப்பதாய் ஒலித்தன. அதன் முதுகை மெல்ல வருடியதும், உடல் சிலிர்த்த லக்ஷ்மி அவன் முகத்தில் தன் முகத்தை உரசி தன் அன்பைச் சொரிந்தது
“லக்ஷ்மி நான் வரட்டுமா?” என அவன் குரலைக் கேட்டதும், கண்ணில் தாய்ப்பாசம் கொட்டி அவனைப் பார்த்தது.
அதனைக் கட்டித் தழுவியவன், மெல்ல விடைபெற்றான். கன்றுகள் துள்ளி அவனுடன் விளையாட, அவன் கண்களில் நீர்ப்பனித்தது.
சாம்பிராணி மணத்துடன் அப்பிராணிகளின் வாசமும் மனதில் நிறைய, ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றே சொல்லத் தோன்றியது. கள்ளங்கபடமில்லா இக்கிராமத்து வாழ்க்கையில், சொர்க்கம் இங்கே தான் வேறெங்கும் இல்லை என நினைத்தான்
ஆனாலும், ஏதோ ஒன்று இன்னமும் அவனை இவ்வாழ்வோடு கலக்க விடவில்லை, வேறென்ன பட்டமும் பதவியும் தான்
ஆனால் அவற்றைத் துறக்கும் போது, இந்த மண்மகள் நிச்சயம் தனக்கு அடைக்கலம் தருவாள். தானோ தன் மனைவியோ நிரந்தர வெளிநாட்டுக் குடிமக்களானாலும், தன் வாரிசுகள் நிச்சயம் இம்மண்ணின் சுவாசத்தையே நுகர வேண்டும்.
பெற்றோர் வசமே அவர்கள் வளர்ந்து இயற்கை நட்பாளர்களாக வாழட்டும் என நினைத்தான் அகிலேஷ்
உளமகிழ்வோடு அனைவரிடமும் கையசைத்து அகிலேஷ் விடைபெற, கிராமத்து வாசம் அவனோடே பயணித்தது, மீண்டும் அவனை சந்திக்க
வாழ்த்துவோம்!
வணங்குவோம் இயற்கையை!
இறையருளால் அத்தனைக் கோடி இன்பமும் பெற்று மகிழ்வோம்!
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
கனவு பலிக்கட்டும்.