சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 28)
அழகுராஜா மிகவும் தைரியசாலி. அச்சம் தவிர்! நிமிர்ந்து நில்! என்று எல்லோருக்கும் தைரியம் ஊட்டக்கூடியவர். எம்.ஏ., பி.எட்., படித்தவர்.
1987-ஆம் ஆண்டில் அவர் பி.எட்., படித்து முடித்தவுடன், வேலை வேண்டி அனுப்பிய முதல் விண்ணப்பத்திற்கே இன்டர்வியூ வந்தது.
ஆச்சார்யா வினோபாபாவே அவர்களின் பூமிதான இயக்கத்தின் கீழ், சர்வ சேவா பண்ணைகளின் குழுமத்தால் நடத்தப்படும் சர்வ சேவாப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய அழகுராஜா உட்பட இருபத்தைந்து பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு முதலில் ஒருமாத காலம் பயிற்சி அளிக்கப்படும், அதன் பின்னரே பள்ளிகளில் பணிபுரிய நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவு ஆணையில் சொல்லப்பட்டிருந்தது
திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் அமைதியான கிராமம் அய்யனார்புரம். அங்கு தான் அந்த ஒரு மாத கால பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது
நத்தத்திலிருந்து அய்யனார்புரம், செந்துறை வழியாக துவரங்குறிச்சிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை அரசுப் பேருந்து போக்குவரத்து உண்டு.
இது தவிர, மதுரையிலிருந்து செந்துறைக்கு நல்லமணி டிரான்ஸ்போர்ட் பேருந்து இரண்டு முறை வந்து செல்லும்
அய்யனார்புரம் அருகில் சிறிய மலை ஒன்று அமைந்துள்ளது. அம்மலையின் உச்சியில் மேலவலசை, கீழவலசை ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.
அம்மலையில் தெளிந்த குளிர்நீருடன் மலையாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. ஓங்கி உயர்ந்த பசுமையான மரங்கள் அடர்ந்திருந்தன. அவை அய்யனார்புரத்திற்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தன.
வலசையில் யார் வீட்டிற்காவது விருந்தாளியாகச் சென்றால், கேழ்வரகு ரொட்டியும் சுத்தமான மலைத் தேனும் விருந்துணவாகக் கிடைக்கும்
அய்யனார்புரத்தில் பயிற்சியின் போது காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்க வேண்டும். காலையில் யோகாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு சிரமதானம், அதாவது, பயிற்சி நிலையத்தைச் சுற்றிலும் சிறுசிறு பராமரிப்பு வேலைகள் செய்தல் வேண்டும்.
பின்னர், குளித்துவிட்டு சாப்பிட வேண்டும். அதற்கடுத்து வகுப்புகள் நடைபெறும். முதலில் இறைவணக்கம். அடுத்து ஃபொனடிக்ஸ், ரைம்ஸ், அப்புறம் செய்முறை விளக்கம்.
மாலையில் விளையாட்டுப் பயிற்சி, வரைதல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள். இவ்வாறாக ஒரு மாத பயிற்சி முடிந்தது
ஒவ்வொருவருக்கும் அவரவர் பணியாற்ற வேண்டிய பள்ளி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
அதைப் பெற்றுக் கொண்டவர்கள் தத்தமது பள்ளி அமைந்துள்ள இடத்தைப் பற்றிக் கலந்து பேசிக் கொண்டனர். சிலர் ‘சம்பளம் மிகவும் சொற்பம்’ என அங்கலாய்த்துக் கொண்டனர்.
அழகுராஜாவிற்கு செந்துறை அருகே அமைந்துள்ள மல்லநாயக்கன்பட்டி பள்ளியில் ஆசிரியராக நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அவரது சொந்த ஊர் மதுரைக்கு அருகே அமைந்திருந்ததால், அவர் நேரடியாக மதுரையிலிருந்தே செந்துறைக்குப் பயணம் செய்ய வசதியிருந்தது.
ஆனால், நியமன நிபந்தனைகளின்படி ஆசிரியர், பள்ளி அமைந்துள்ள கிராமத்திலேயே தங்க வேண்டும். உரிய முன்னனுமதி பெறாமல் சொந்த ஊருக்குச் செல்லக் கூடாது.
அழகுராஜாவுடன் மேலும் இரு ஆசிரியர்கள் மல்லநாயக்கன்பட்டியில் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மல்லநாயக்கன்பட்டியை ஒட்டியபடி கோவில்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது.
அங்குள்ள பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். ஆக, ஐவரும் தமது பள்ளியை நோக்கிப் பயணமாயினர்.
மல்லநாயக்கன்பட்டியானது செந்துறையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதற்கு பேருந்துப் போக்குவரத்தோ, வாடகை வாகனங்கள் போக்குவரத்தோ கிடையாது.
இவ்விரு ஊர்களுக்கும் இடையில் ஒரு குக்கிராமம் அமைந்திருந்தது. அங்கு ஒரேயொரு பெட்டிக் கடை மட்டும் உண்டு. டீக்கடை ஏதும் கிடையாது. டீ குடிக்க வேண்டுமெனில் செந்துறைக்குத் தான் வர வேண்டும்.
அதனால், அக்கிராம மக்கள் பால் இல்லாமல் டீ குடித்து பழகியிருந்தார்கள். அக்கிராமத்திற்கு ஒரு பர்லாங் தூரத்திற்கு முன்பு ஒரு குளம் அமைந்திருந்தது. அக்குளக்கரை மேட்டில் தார்ச் சாலை போடப்பட்டிருந்தது.
அக்குளத்தின் நடுவில் ஈச்சமரம் ஒன்று வளர்ந்திருந்தது. அக்குளத்திற்கும் செந்துறைக்கும் இடையில், அந்த கிராமங்களுக்கான இடுகாடும் சுடுகாடும் அமைந்திருந்தன.
செந்துறையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். அன்றைய தினம், சுற்று வட்டாரக் கிராம மக்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல வண்டி பூட்டிக் கொண்டு வருவர்.
அதனால், வாரமொருமுறை செந்துறை விழாக் கோலத்தில் காட்சியளிக்கும். சந்தையில் எல்லாப் பொருட்களும் கிடைக்கும். குறிப்பாக அழகுப் பொருட்கள் வாங்குவதற்கு வண்ண வண்ண ஆடைகளில் வண்ணத்துப்பூச்சிகள் போல ஏராளமாக இளம் பெண்கள் கூடுவர்.
அவர்களைப் பின்தொடர்ந்து கும்மாளம் போட்டபடி இளைஞர் கூட்டமும் வரும். சந்தை வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைப்பதால் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
செந்துறையில் ஒரு சினிமா தியேட்டர் உண்டு. அதில் ஒரு நாளைக்கு ஓர் இரவுக் காட்சி மட்டுமே திரையிடப்படும். அக்காட்சி இரவு 7.00 மணிக்கு ஆரம்பித்து 10.30 மணிக்கு முடிக்கப்படும்.
மதுரையிலிருந்து புறப்படும் நல்லமணி பேருந்து அந்த நேரம் தான் செந்துறைக்கு வந்து சேரும். அடுத்த கால் மணி நேரத்தில், ஊர் முழுவதுமாக அடங்கி விடும்.
அழகுராஜாவும் மற்ற ஆசிரியர்களும் மல்லநாயக்கன்பட்டியில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓட்டு வீடுகளில் தங்கலாயினர்.
அக்கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் வட்ட வடிவில் மண் சுவர்களால் கட்டப்பட்டு, சோளத் தட்டைகளைக் கொண்டு கூம்பு வடிவில் வேயப்பட்டிருந்தன.
உள் நுழைவதற்கு சிறிய வழி மட்டும் இருக்கும். அவ்வழியை மூடுவதற்குப், பெரும்பாலும் மூங்கில் தப்பையாலான கதவுகள் பயன்படுத்தப்பட்டன.
மதுரை வட்டார பழக்கவழக்கங்களையே பார்த்து வளர்ந்த அழகுராஜாவிற்கு, அந்தக் கிராம மக்களுடைய பழக்க வழக்கங்கள் மாறுபட்டுத் தெரிந்தன
காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும், மலம் கழித்த பின் ஆசனவாயைத் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும் என்கிற அடிப்படைப் பழக்கங்களைக் கூட அவர் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டியிருந்தது
மலங்கழித்த பின் ஊனாங்கொடி இலையில் துடைத்து விட்டுச் செல்லும் பழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்து வந்தனர். பல் துலக்குவது அவசியமான ஒன்றல்ல என்ற கருத்தும் அவர்களுக்குள் ஊறிப் போய் இருந்தது.
கோவில்பட்டி கிராமத்தை ஒட்டி சிறிய குன்று ஒன்று இருந்தது. பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள், அக்குன்றின் மீதேறி பாறை இடுக்குகளில் ஒளிந்து கொள்வர்.
ஆர்வமுள்ள மாணவர்கள் சிலரின் உதவியோடு ஆசிரியர்கள் குன்றேறி ஒளிந்திருக்கும் மாணவர்களைப் பிடித்து, அவர்களின் மனதை மாற்றி பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். சில வேளைகளில் பாதி நாள் இப்படியே கழிந்து விடுவதுண்டு.
அழகுராஜா அவ்வூரில் தங்கியிருக்கையில், ஒருநாள் காலை விடியலில் தாரை தப்பட்டைகளின் ஓசை காதைப் பிளந்தது. யாரோ சிவலோகப் பதவி அடைந்து விட்டார் போலும் என நினைத்து அக்கம்பக்கம் விசாரித்த போது, கிராமத்தில் ஒரு பையன் அடுத்த ஊரிலிருந்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து விட்டான் எனவும், அவன் குடும்பத்தினர் பஞ்சாயத்துக்குக் கட்ட வேண்டிய தொகையைக் கட்டி விட்டதால், பஞ்சாயத்தார் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்
இன்னொரு நாள், காலையிலேயே காற்றில் மிதந்து வந்தது ஒலிபெருக்கியில் பாடும் பாடல்களின் ஓசை. விசாரிக்கையில், ஊரில் வயதான பெரியவர் ஒருவர் இறைவனடி சேர்ந்ததால், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாகக் கூறினார்கள்.
அக்கிராமத்தில் அழகுராஜா தங்க ஆரம்பித்து மூன்று மாத காலம் கடந்து விட்டது. இம்மூன்று மாதத்தில், அவரை வெகுவாகப் பாதித்தது காரை வீட்டு சுப்பையாவின் மனைவி சின்னப்பொண்ணுவின் மரணம்
“சாருங்க” என மரியாதையாகவும், “தம்பி” என பாசமாகவும் அவர் ஆசிரியர்களிடம் பழகியவர்
ஒரு நாள் இரவு தோட்டத்துக்கு காவலாகப் படுத்திருந்த அவர் மீது பாம்பு ஊர்ந்திருக்கிறது. அவர் தன் கணவர் தான் சீண்டுகிறார் என நினைத்துத் தள்ளி விட்டிருக்கிறார், பாம்பு கடித்திருக்கிறது
கணவர் கிள்ளுவதாக நினைத்து மீண்டுத் தள்ளி விட்டிருக்கிறார், பாம்பு மீண்டும் கடித்திருக்கிறது. பின்னர் கண் திறந்து பார்க்கையில், பாம்பு கடித்ததை அறிந்து பதறிப் போய் தூரத்தில் படுத்திருந்த அவரது கணவரிடம் சொல்லியிருக்கிறார்.
உடனே அக்கம் பக்கமிருந்தவர்கள் கூடி பாம்பை அடித்துக் கொன்று விட்டனர். அஃது ஒரு விரியன் பாம்பு.
‘விதி முடிந்தவரைத் தான் விரியன் பாம்பு கடிக்கும்’ என்ற வழக்கு அவ்வட்டாரத்தில் பரவலாக இருந்தது. அப்பெண்மணியை டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு முன்பே அவர் உயிர் பிரிந்து விட்டது
மறுவாரம், தன் பெற்றோரைப் பார்ப்பதற்கு மதுரைக்குச் சென்று வர அழகுராஜா மேற்பார்வையாளரிடம் அனுமதி பெற்றார். வெள்ளிக் கிழமை பள்ளி முடிந்த பின் வீட்டுக்குப் புறப்பட்ட அவர், இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு செந்துறைக்குப் புறப்பட்டார்
நல்லமணி டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் வருவதாக நண்பர்களிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அவர்களும் செந்துறையில் அழகுராஜாவின் வருகைக்காகக் காத்திருப்பதாகக் கூறியிருந்தனர்.
அன்று மாலை வரை வானிலை சாதாரணமாகவே இருந்தது. திடீரென காற்றுடன் கடுமழை பெய்ய ஆரம்பித்தது. மதுரையிலிருந்து புறப்பட்ட பேருந்து தாமதமாக நத்தம் வந்து சேர்ந்தது
பேருந்தின் சக்கரங்களில் ஒன்று பஞ்சராகி விட்டதால் அதை சரி செய்தனர். பின்னர் பேருந்தைக் கிளப்பி செந்துறை வந்து சேர்ந்த போது, ஒரு மணி நேரம் தாமதமாகியிருந்தது.
கிட்டத்தட்ட நள்ளிரவு நெருங்கி விட்டதால், ஊர் முழுவதுமாக அடங்கியிருந்தது. அழகுராஜா நண்பர்களும் வீடு திரும்பி விட்டனர். மழை விட்டு விட்டு தூறிக் கொண்டு இருந்தது
அழகுராஜா சுற்றும் முற்றும் பார்த்தார். அவரைத் தவிர சாலையில் யாரும் தென்படவில்லை. தெருநாய்கள் கூட மழைக்கு மறைவிடங்களில் பதுங்கிக் கொண்டன.
அன்றைய தினம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை என்பதால், வானத்தில் நிலவொளியும் காணப்படவில்லை. ஒரு கணம் யோசித்தார்.
ஒரு கையில் குடை, மறு கையில் மூன்று செல் டார்ச் லைட், தோளில் தொங்கு பை. தனியாளாக நின்றிருந்த அழகுராஜா, தைரியமாய் மல்லநாயக்கன்பட்டி நோக்கி நடக்கலானார்.
அவ்வப்போது மின்னல் வெட்டி மறைந்து கொண்டிருந்தது. கடமுடவென இடி உருட்டிக் கொண்டிருந்தது. இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்திருந்த அந்த சாலையின் குறுக்கே ஆங்காங்கே சிறு பாம்புகள் ஊர்ந்து செல்வது கண்ணுக்குத் தெரிந்தது. அவை செல்லும் வழியிலிருந்து சற்று ஒதுங்கி கவனமாக நடந்து கொண்டிருந்தார் அழகுராஜா.
செந்துறையிலிருந்து முக்கால் கி.மீ. தூரம் வந்திருப்பார். அப்போது ஊஊவென நீண்ட ஊளையிடும் சத்தம் சற்று தூரத்தில் கேட்டது. நாய் ஊளையிடும் சத்தத்திலிருந்து இது வித்தியாசமாக இருந்தது.
சிறிது நேரத்தில், ஆடு, கோழிகளின் சத்தமும் கேட்டது. நரி ஊளையிட்ட சத்தமாக இருக்குமோ என நினைத்தபோது அழகுராஜாவின் மனதில் கிலி பிறந்தது.
நரிகள் தந்திரம் நிறைந்தவை, தனி வழியில் மாட்டிக் கொண்டால் ஆளையே காலி செய்து இழுத்துக் கொண்டு சென்று இரையாக்கிக் கொள்ளும் தன்மையுடையவை என்பது அவருக்குத் தெரியும்
எனவே, வேகமாக எட்டு வைத்து அந்த இடத்தைக் கடக்கலானார். சிறிது நேரத்தில் அழகுராஜா சுடுகாட்டுப் பகுதியைக் கடந்து கொண்டிருந்தார்.
அப்போது மழைத் தவளைகளின் இடைவிடாத சத்தமும் சில்லுவண்டுகளின் ரீங்காரமும் அவர் மனதில் ஒருவித பயத்தைத் திணித்துக் கொண்டிருந்தன.
அத்துடன், திடீரென்று வீசிய பேய்க் காற்றின் ஓலமும் சேர்ந்து கொண்டு பீதியைக் கிளப்பியது. காற்றின் வேகத்தில் குடை முகத்தைத் திருப்பிக் கொண்டது. மழைத்தூறல் ஆளை நனைத்துக் கொண்டிருந்தது.
அந்நேரம் ஆந்தைகள் அடுத்தடுத்து அலறின. அந்த அலறல் சத்தம் எரிச்சலூட்டியதுடன் பீதியையும் அதிகப்படுத்தியது.
அச்சமயம், சட்டென அவர் முன்னே தாவிக் குதித்து ஒன்றன்பின் ஒன்றாக ஓடின நான்கு கீரிப்பிள்ளைகள். ஒருகணம் திடுக்கிட்டுப் போன அழகுராஜா, பயத்தை மறைக்க திரைப்படப் பாடலை முணுமுணுக்கலானார்.
அப்போது பளிச்சென்று மின்னல் ஒன்று வெட்டியது. அக்கம்பக்கம் எதுவுமே அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. மின்னலைத் தொடர்ந்து வந்த இடி, அவர் கடந்து வந்த நூறடி தூரத்திற்குள்ளேயே விழுந்திருக்க வேண்டும். தரையில் விழுந்த இடி, வெடித்துச் சிதறிய வெளிச்சமும் சத்தமும் குலைநடுங்க வைத்தன.
உடல் முழுவதும் ஒருவித நடுக்கம் ஆட்கொண்டிருந்தது. குடையை ஒருவழியாக திருப்பி மடக்கி வைத்துக் கொண்டார். நூறடி தூரம் நடந்திருப்பார். சாலையின் நடுவே இரண்டடி தூரத்தில் ஏதோ தெளிவின்றி தென்பட எடுத்த அடியை பின்னோக்கி வைத்து, அதன் மீது டார்ச்சை அடித்துப் பார்த்தார்.
பெரிய கருந்தேள் ஒன்று கொடுக்கைத் தூக்கியபடி அழகுராஜாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதேசமயம், சாலையின் ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகள் அமைந்த, ஒரு முழம் நீளமும் நான்கு அங்குல அகலமும் கொண்ட ராட்சத பூராண் ஒன்றும் அவரை நோக்கியே வந்தது.
அவ்வளவு பெரிய பூராண் உலகத்தில் உண்டு என அவர் கேள்விப்பட்டது கூட கிடையாது. அவற்றைக் கண்டு அவரது உடல் புல்லரித்துப் போனது. எகிறிக் குதித்து, ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தைக் கடந்தார்.
அழகுராஜாவிற்குக் கொஞ்சம் மூச்சு வாங்கியது. அதைப் பொருட்படுத்தாமல், அவர் அவசரஅவசரமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் சாலையின் நடுவே காட்டெலி ஒன்று ஓடியது.
அதைப் பிடிக்க தலையைத் தூக்கி படமெடுத்த வண்ணம் துரத்தியது ஒரு நீளமான கருநாகம். இவ்வளவு நீளமான, தடிமனான ஒரு நல்லபாம்பை இதற்கு முன் அவர் பார்த்திருக்கவில்லை.
உடல் வெலவெலத்துப் போய் அதைக் பார்த்துக் கொண்டிருக்கையில், சிறிது தூரம் ஓடிய எலி அரை வட்டமடித்து சாலையில் திரும்பி வர, பாம்பும் அதைத் துரத்தியபடி பின்னே வர, அப்படியே சிலையாக உறைந்து போனார் அழகுராஜா.
மழைக் குளிரையும் தாண்டி அவரது முகத்தில் வியர்த்துக் கொட்டியது. இதயம் அதிவேகமாய்த் துடித்தது. சட்டென எலி பாதை மாறி ஓட, அதைப் பின்தொடர்ந்து பாம்பும் சென்றது. இழுத்துப் பெருமூச்சு விட்டார் அழகுராஜா.
தரையைப் பார்த்தபடியே சிறிது தூரம் ஓடி அந்த இடத்தைக் கடந்த அழகுராஜா நிமிர்ந்த போது, மின்னல் ஒளியில் கண்முன்னே தலைவிரி கோலமாகக் காட்சியளித்த உருவத்தைப் பார்த்து, அச்சத்தின் உச்சத்தில் வாய்விட்டு அலறியபடி கண்களை இறுக மூடிக்கொண்டார்.
உச்சி முதல் பாதம் வரை உடல் ஒருகணம் உறைந்து போனது. பேய் அறைந்தது போல பேச்சு மூச்சின்றி நின்றார். சில வினாடிகள் கழித்து, கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தார் அழகுராஜா.
அப்போது, எதிரே குளக்கரையில் தலைவிரி கோலமாக அந்த ஒற்றை ஈச்சமரம் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
உடல் முழுவதும் பயம் வியாபித்துக் கொண்டதால், உடலின் எடை இருமடங்கு அதிகரித்தது போல் பாரமாகத் தெரிந்தது. எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் புயல் காற்றை எதிர்த்து வைப்பது போல் தோன்றியது.
இன்னும் இரண்டு கி.மீ. தூரம் போக வேண்டியிருந்தது. உடல் நடுங்க, தளர்ந்த நடையுடன் அடி வைத்த அழகுராஜாவின் காதுகளில், நாய் குரைக்கும் ஓசை கேட்டது. இடையில் அமைந்திருந்த குக்கிராமத்தை அடைந்தது அவருக்கு சற்று ஆறுதலாக இருந்தது
சற்று நேரத்தில், உடலின் ஈரத்தை உலுப்பிக் கொண்டு, வாலை ஆட்டியபடி வந்த செவலை, முன்னங்கால்களை நீட்டி வணக்கம் செலுத்திவிட்டு, அதன் கொஞ்சு மொழியில் அழகுராஜாவை நலம் விசாரித்தது
கடந்த மூன்று மாதங்களில், ஞாயிற்றுக் கிழமை தோறும் சந்தைக்கு வந்து சென்ற போது அழகுராஜாவிற்கு செவலையிடம் பழக்கம் ஏற்பட்டிருந்தது.
சந்தைக்கு வந்து விட்டுத் திரும்புகையில் அவர் செவலைக்கு வரிக்கி ரொட்டி வாங்கிப் போடுவது வழக்கம். செவலையும் வீடுவரை அவர்கூடவே வந்து அவரை விட்டு விட்டுத் திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது.
செவலை அழகுராஜாவைச் சுற்றி வந்து மோப்பம் பிடித்து விட்டு, அவருக்கு முன்பாக சாலையில் ஓட ஆரம்பித்தது. துணைக்கு ஆள் கிடைத்ததும் அழகுராஜா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். செவலையிடம் பேசிக் கொண்டே அவர் வேகமாக எட்டு வைக்கலானார்.
இருப்பிடம் போய்ச் சேர்ந்த அழகுராஜாவை, இரவு நேரத்திலேயே நண்பர்கள் வசைபாட ஆரம்பித்தனர். ஈரத் துணிகளை மாற்றிக் கொண்ட அழகுராஜா, திண்ணையில் செவலைக்கு ஒரு கோணிப்பையை விரித்துப் போட்டார்.
செவலை உடலை உலுக்கியபடி கோணிப்பையில் முகத்தைத் துடைத்துக் கொண்டதோடு, சுருண்டு படுத்துக் கொண்டது. அழகுராஜா படுத்த சிறிது நேரத்திலேயே அடித்துப் போட்டவர் போல் உறங்கலானார்.
பொழுது புலர்ந்தது. புள்ளினங்கள் ராகம் பாடின. அழகுராஜா எழுந்திருக்கும் முன்பே செவலை தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டது. அழகுராஜாவும் அவரது நண்பர்களும் காலைக்கடன் முடித்து, வழக்கம் போல் கிணற்றில் குளித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஊர்மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். நேற்றிரவு பலத்த காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அதைப் பார்க்காமல், அதிகாலை அவ்வழியே சென்ற பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர் மழைநீரில் கால் வைக்க, மின்சாரம் தாக்கி பலியாகிவிட்டார்.
ஏரிக்கரை ஓரமாய் பன்னிரண்டு அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை கீரிப்பிள்ளை கொன்று துண்டாக்கிப் போட்டுள்ளது. கீரிப்பிள்ளை ஒன்றும் விஷமேறி இறந்து கிடந்துள்ளது. பக்கத்து ஊரில் நரிகளின் தாக்குதலில் நான்கு கோழிகளும் ஓர் ஆடும் அவற்றிற்கு இரையாகியுள்ளன
இதைக் கேட்ட நண்பர்கள், அழகுராஜாவைப் பார்த்து, “உனக்கு இருப்பது தைரியமில்லை. உடல் முழுதும் திமிரும் கொழுப்பும் தான் நிறைந்திருக்கிறது. நேற்று நள்ளிரவில் நீ தனிமையில் வரும் போது அசம்பாவிதமாக ஏதாவது நடந்திருந்தால் என்ன செய்வாய்?” எனக் கேள்வி கேட்கலாயினர்.
அழகுராஜா, நேற்று தான் அனுபவித்த எதையும் நண்பர்களிடம் சொல்லிவிடக் கூடாது என முடிவு செய்தார். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்.
இதற்குத் தான், ‘அஞ்சாமல் தனி வழியே செல்ல வேண்டாம் என்று சொல்லியிருப்பார்களோ?’ என்ற எண்ணம், அழகுராஜாவின் மனதில் தனியே ஓடிக் கொண்டிருந்தது.
(முற்றும்)
#ads – Best Deals in Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நல்ல திகில் கதை!