முதல் நாள்:-
“கெளதம்…”
“என்ன நந்தினி?”
“நம்ம பாப்பா எவ்ளோ குட்டியா இருக்கில்ல”
“ம்… நீயும் நானும் கூட இதே போல குட்டியா தான் இருந்துருப்போம்” என அவனும் ரசனையாய் கூறினான்
“கெளதம்… பாப்பா உங்கள மாதிரியா என்னை மாதிரியா?”
“ம்… உன்னை மாதிரி அடாவடி தான்… சந்தேகமே இல்ல” என சிரித்தான்
“கிண்டலா…சொன்னாலும் சொல்லாட்டியும் என் செல்லகுட்டி என்னை போலதான்…ஆனா மூக்கு மட்டும் உங்கள மாதிரி… என் சப்ப மூக்கு இல்ல” என அவளும் சிரித்தாள்
“ஹா ஹா… ” என மனைவியின் சந்தோசத்தை ரசித்தான் கெளதம்
மூன்றாவது நாள்:-
“கெளதம்… ஜனனிங்கற பேரு எப்படி இருக்கு நம்ம குட்டிக்கு”
“ம்.”
“என்ன வெறும் ‘ம்’ தானா? ச்சே…. reactionஏ இல்ல…ஏன் இந்த பேரு நல்லா இல்லையா?” என முகம் வாடினாள்
“என் நந்தினி அளவுக்கு அழகா இல்ல” என செல்லமாய் மனைவியின் கன்னத்தை வருடினான்
“போதும் போதும் ஐஸ் வெச்சது… என் குட்டி செல்லம் பேரும் அழகு தான்”
“ம்… நீ செலக்ட் பண்ணினதாச்சே… உன் பேருக்கும் ரைமிங்ஆ இருக்கு… சூப்பர்” என்றான்
ஐந்தாவது நாள்:-
“கெளதம்… பாப்பாவ எந்த ஸ்கூல்ல சேத்தலாம்?”
“நந்தும்மா… திஸ் இஸ் டூ மச்… இப்பவே ஸ்கூல் பத்தி யோசனையா?” என அவன் சிரிக்க
“ஏன் பேசக்கூடாதா? கண்ணு மூடி திறக்கறதுக்குள்ள நாள் ஓடி போய்டும் தெரியுமா? நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கிண்டல் தான்” என நந்தினி முகம் வாட, அது பொறுக்காத கெளதம்
“ஒகே ஒகே…சும்மா உன்கிட்ட வம்பு பண்ணினேன் நந்து… என் பிரெண்ட் பாலாஜியோட பையன் போறானே…. அந்த ஸ்கூல் ரெம்ப நல்லா இருக்குனு சொன்னான்”
“ஆமாம் கெளதம்… நானும் கேள்விபட்டேன்… அது நல்ல சாய்ஸ் நம்ம பாப்பாவுக்கு” என நிறைவாய் புன்னகைத்தாள்
ஏழாவது நாள்:-
“இந்தா நந்தினி…உனக்கு பிடிக்கும்னு பலாப்பழம் வாங்கினேன்”
“வேண்டாம் கெளதம்…பாப்பாவுக்கு சூடு சேரலைனா கஷ்டம்”
“ஏய்…உனக்கு ரெம்ப பிடிக்குமேடா”
“ம்…ஆனா என் செல்ல குட்டிய அதை விட பிடிக்குமே” என உரிமையாய் கணவனின் தோளில் சாய்ந்து கொள்ள, மனைவியை அன்பாய் அணைத்து கொண்டான் கெளதம்
பத்தாவது நாள்:-
“செல்லகுட்டி… அப்பா ஆபீஸ் போயாச்சு… நீயும் நானும் தான் வீட்டுல… என் செல்லகுட்டி சமத்தா அம்மாகிட்ட இருப்பியாம்… அம்மா வேலை எல்லாம் முடிச்சுட்டு பார்க் போலாமாம்….சரியா” என பிள்ளையிடம் பேசிக்கொண்டே வீட்டு வேலைகளை செய்தாள் நந்தினி
14வது நாள்:-
வழக்கம் போல் நந்தினி பிள்ளையிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் “ஜனனி செல்லம்… பாப்பாவுக்கு என்ன வேணும்? பால் குடிக்கலாமா? அம்மாவுக்கு கொஞ்சம்… பாப்பாவுக்கு கொஞ்சம்… சரியா? இன்னிக்கி அம்மாவும் பாப்பாவும் டாக்டர் Aunty பாக்க போகணுமாம்… டாக்டர் Aunty பாப்பாவ செக் பண்ணனுமாம்… செல்லகுட்டி சமத்தா இருக்கானு பாக்கணுமாம்… போலாமா?”
15ம் நாள் மதியம்:-
தொலைபேசி அழைக்க அதற்கே காத்திருந்த நந்தினி உடனே எடுத்து “ஹலோ” என்றாள்
“ஹலோ நந்தினி இருக்காங்களா?”
“நான் நந்தினி தான் பேசறேன்”
“நான் இங்க டாக்டர் வந்தனாவோட கிளினிக்ல இருந்து நர்ஸ் ஸ்ரீஜா பேசறேங்க”
ஒருகணம் இதய துடிப்பு அதிகரிக்க நந்தினியின் கைகள் தனிச்சையாய் வயிற்றில் பதிந்தது, எதையோ காக்க முயற்சிப்பது போல்
“ஹலோ…நந்தினி”
“சொ…சொல்லுங்க சிஸ்டர்…” என்றவளின் குரலில் இருந்த நடுக்கம் நர்ஸ் ஸ்ரீஜாவுக்கு அவள் மேல் கரிசனையை ஏற்படுத்தியது. ஆனாலும் சொல்லவேண்டியதை சொல்லித்தானே ஆகணும் என நினைத்தவளாய்
“நேத்து ப்ளட் டெஸ்ட்க்கு குடுத்துட்டு போனீங்க இல்லையா… ” என சற்று தயங்கியவள் “I am sorry நந்தினி… இந்த வாட்டியும் Pregnancy test ரிசல்ட் நெகடிவ் தான் வந்துருக்கு” என்றவுடன் நந்தினியின் கைகள் வயிற்றில் இருந்து அவளறியாமல் நகர்ந்தது
15ம் நாள் இரவு:-
மாலை அலுவலகம் விட்டு வந்ததுமே நந்தினியின் முகம் கண்டு விசயத்தை புரிந்து கொண்ட கெளதம், அவளை அழச்செய்து பார்க்க மனமில்லாதவனாய் எதுவும் கேட்காமல் மௌனம் காத்தான்
இரவு படுக்கையில் சென்று சரிந்ததும் அதற்கு மேலும் பொறுமை இல்லாதவளாய் “என்னாச்சுனு கூட கேக்க மாட்டீங்களா? அவ்ளோ நிச்சியமா இருக்காதுன்னு முடிவே பண்ணிட்டீங்க இல்லையா கெளதம்?” என நந்தினி விசும்ப
“ஏய் நந்து….ஏன்டா இப்படி பேசற? உன் முகத்த பாத்தே புரிஞ்சுக்கிட்டேன்… மறுபடி கேட்டு உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான்…” என்றவன் கூற, கட்டுப்படுத்திய அழுகை மொத்தமும் வெடித்து கிளம்பியது நந்தினிக்கு
தன் மார்பில் முகம் புதைத்து இருந்தவளை ஆதரவாய் அணைத்தவன் “நந்து ப்ளீஸ்…இங்க பாரு…நந்தும்மா… நீ அழறதால என்ன மாறப்போகுது சொல்லு… ஏய்…” என சமாதானப்படுத்த முயன்றான் கெளதம்
“ஏன் கெளதம் எனக்கு மட்டும் இப்படி? டெஸ்ட் டயுப் பேபி முறைல கருவை எனக்குள்ள செலுத்தின முதல் நாளுல இருந்து ultrasound picture ஐ பாத்து… எனக்குள்ள என் பிள்ளை வளர்றதா கற்பனைல, பெண் பிள்ளைன்னு நானே நெனச்சு, பேரு வெச்சு, ஸ்கூல் யோசிச்சு, பிள்ளைக்குன்னு பாத்து பாத்து சாப்பிட்டு, அதோட பேசி சிரிச்சு…. என்னால இந்த ஏமாற்றத்த தாங்கமுடியல கெளதம்” என அவள் மீண்டும் அழ, அதை காண சகியாமல் தவித்தான் கெளதம்
“நந்தும்மா… ப்ளீஸ் அழாத”
“நான் என்ன பாவம் பண்ணினேன் கெளதம்… ஒரு ஒரு மாசமும்…” என அதற்கு மேல் பேச இயலாமல் விசும்பினாள்
“உன்கிட்ட வர அந்த கொழந்த புண்ணியம் செய்யல நந்தும்மா… அதான் நிஜம்” என அவளின் கண்ணீர் துடைத்தான் கெளதம்
என்றேனும் அந்த கண்ணீர் நிற்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது… விடியலுக்கு காத்திருந்தனர் அவர்கள் இருவரும்
*********************
‘ஈரைந்து மாதங்கள் தாங்கி’ பெற்றெடுப்பவளின் பெயர் அம்மா என்றால், இப்படி மாதத்தின் 14 நாட்கள் மட்டும் கற்பனையில் அம்மாவாய் நம்மிடையே வாழும் ‘நந்தினி’களின் பெயர் என்ன?
உலகம் சொல்கிறது ‘மலடி’ என
“காலம் மாறி போச்சு… இன்னுமா இந்த பேச்சு”னு கேட்கிறது சமூகம். வயறு திறக்காதவள் தன் பிள்ளை மேல் கண் போட்டு விட்டதாய் ‘கண்ணேறு(திருஷ்டி) கழிப்பதும்’ அதே சமூகம் தான்
என்னை பொறுத்தமட்டில் ‘நித்யகல்யாணி’, ‘நித்யசுமங்கலி’ போல், நந்தினிகள் ‘நித்யஅம்மாக்கள்’
இந்த அன்னையர் தின சிறப்பு பதிவில், நம்மிடயே வாழும் ‘நித்ய அம்மாக்களுக்கு’ எனது ‘சிறப்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்’
இந்த சிறுகதை சஹானா கோவிந்த் எழுதிய “காதலே என் காதலே” என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
(முற்றும்)
Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads
(முற்றும்)
ம்ம்ம்ம் நல்ல கதை, இப்படித் தான் நடக்கிறது. என்ன செய்ய முடியும்! 🙁
உண்மை தான் மாமி
மனசு ரொம்ப கலங்கிடுச்சு. சொல்லத் தெரியாத கலவரம் என்னுடைய அடிமனதிற்குள். அதே மாதிரி சொல்லத் தெரியாத அழுகை.
நன்றி உங்கள் மறுமொழிக்கு