நாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்ப, பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது.
ஒரு மாதிரியா, எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன்.
இப்போ தான், சமீபத்தில் இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. அது எப்படி செய்யறதுனு பாப்போம்
தேவையான பொருட்கள்
- பச்சை மஞ்சள் – கால்கிலோ (தோல் சீவி துருவிக் கொள்ளவும்)
- நல்லெண்ணெய் – கால் கிலோ
- மிளகாய்ப் பொடி – ஒரு மேஜைக் கரண்டி
- உப்பு – தேவைக்கு
- பெருங்காயப் பொடி – ஒரு தேக்கரண்டி
- கடுகுதாளிக்க – இரண்டு தேக்கரண்டி
வறுத்துப் பொடிக்க
- மிளகாய் வத்தல் – சுமார்25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10-15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன்.
- காரப்பொடி எனில் காரமாக இருந்தால்5 தேக்கரண்டி, காரம் இல்லை எனில் ஒரு மேஜைக் கரண்டி
- மிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லைஎனில், ஒரு மேஜைக் கரண்டி கடுகு, ஒரு மேஜைக் கரண்டி வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்
- வறுத்துப் பொடித்தவெந்தயம், கடுகுப் பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். மஞ்சள் பொடி தேவை இல்லை.
- கடைசியில் எலுமிச்சைச் சாறுசுமாராக நாலு பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத் தான் பிழிந்து சேர்த்தேன்
செய்முறை
- மஞ்சளைத் துருவிக் கொண்டு, அடுப்பில் வாணலியை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்
- எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும்,பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும்.
- துருவிய மஞ்சளைச்சேர்த்து, நன்கு வதக்கவும்.
- சிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
- மிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப்பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம்
- நான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால்,மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும், உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன்.
- அது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச்சேர்த்துக் கிளறி விட்டு, பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன்
- பின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கி, பின் ஆற வைத்து ஒரு கண்ணாடிபாட்டிலில் எடுத்து வைக்கலாம்.
- சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறை சேர்க்கும் போது போடலாம்.
- வெல்லம் நன்கு கரையும் வரை வதக்கியபின்னர், ஆற வைத்து எடுத்து வைக்கவும்.
- இதற்கு வினிகர்போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை
- மஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்
- ஊறுகாய் தயாரானதும் பார்த்தால் கொஞ்சம்காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது.
- ஆகவே ருசி பார்த்த பின்னர், கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன். மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருந்தது.
இதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
இந்த சமையல் குறிப்பை பகிர்ந்த கீதா சாம்பசிவம் அவர்கள், இரண்டு சமையல் புத்தங்கள் வெளியிட்டு இருக்கிறார். அதன் Links இங்கு பகிர்ந்துள்ளோம், விருப்பமுள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம் 👇
வெளியிட்டதுக்கு நன்றி ஏடிஎம்.
பகிர்ந்தமைக்கு நன்றி மாமி