எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த கல்யாண மண்டபத்தில், மனிதர்கள் பலதரப்பட்ட நவீன ஆடைகளுடனும், ஒப்பனை மிகுந்த தோற்றங்களுடனும் அங்கும் இங்கும் வலம் வந்து கொண்டிருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்வதாலோ என்னவோ, மங்கள வாத்தியங்களின் சத்தத்தையும் மீறி, ஆண்களும் பெண்களும் தங்களின் உறவுகளுடன் உரக்கப் பேசிக்கொண்டிருந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட அந்த மணமேடையில் இருந்து வந்த மலர்களின் வாசமும், குளிர் சாதனங்களில் தூவப்பட்டு, அதிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த செயற்கை நறுமணமும், அந்த மண்டபத்தில் முழுவதுமாய் நிறைந்திருந்தது.
உறவு அல்லாத நட்பின் அழைப்பில் அந்தக் கல்யாணத்திற்கு வந்திருந்ததால், பேச ஆளின்றி தனித்திருந்தான் கேசவன். சரி, சாப்பிடவாவது போகலாம் என்று எழுந்த போதுதான் கவனித்தான் அவன். தூரத்தில் இரண்டாவது வரிசையில் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த அந்த உருவம் கதிர்வேலுவைப் போலவே இருந்தது.
கதிர்வேலு, கேசவனின் தாய் மாமன் மகன். அதாவது இருவரும் மாமன் மகன் அத்தை மகன்கள். சமவயது என்பதால் இருவரும் ஒரே பள்ளியிலும், பின் ஒரே கல்லூரியிலும் படித்து, அதற்குப்பின் கதிர்வேல் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸிலும் கேசவன் அரசு பள்ளி ஆசிரியராகவும் பிரிந்து விட்டவர்கள். உறவு என்பதை விட நட்பால் இணைந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் இளவயதில் தொடங்கிய நெருக்கம் இன்று வரை தொடர்ந்து நீடித்து வந்திருந்தது.
கூட்டத்தில் நெருக்கியடித்து கதிர்வேலு இருக்கும் இடத்தை கேசவன் நெருங்கியபோது கதிர்வேலு இவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
‘ அட நீ எங்கே இந்தக் கல்யாணத்தில?’.
‘ அதைத்தான் நானும் கேட்கிறேன்? நீ எப்படிடா இங்கே? ‘ என்றான் கேசவனும்.
‘எங்களோட டெக்ஸ்க்கு தறி ஓட்டிக் கொடுப்பவர் தான் பொண்ணோட அப்பா.. அது சரி நீ?’ என்றான் கதிர்வேல்.
‘மாப்பிள்ளை வீடு எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு… சரி..சரி…இந்த சத்தத்தில பேச முடியாது.. வெளியே போகலாம் வா..’ என்று கதிர்வேலுவைக் கூட்டிக் கொண்டு மண்டபத்தின் வெளிப்பகுதிக்கு வந்தான் கேசவன்.
அதுவரை கமழ்ந்து கொண்டிருந்த மலர்களின் நறுமணம் மாறி, சாம்பார் வாசனை காற்றில் கலந்து வந்தபோதுதான் கவனித்தான் கேசவன். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அடுத்துள்ள டைனிங் ஹாலில் மக்கள் தங்களின் சொந்தக் கவலையை மறந்து சுறுசுறுப்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘ சரி.. ஊரில் மாமா, மல்லிகா எல்லோரும் சுகமா?’ என்று ஆரம்பித்தான் கேசவன்.
‘ மல்லிகா சுகம்… உன் மாமாதான்’ என்று ‘உன் மாமா’ வை அழுத்திச் சொல்லி இழுத்தான் கதிர்வேல்.
‘ மாமாவுக்கு என்னடா ஆச்சு? சுகர் அதிகமாகிவிட்டதா? ‘.
அதற்கு மேல் கதிர்வேலு தன் அப்பாவைப் பற்றிக் கூறியது எல்லாம் அவரைப் பற்றிய புகார்கள் தான்.
வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருப்பதிக்குக் குடும்பத்தோடு சென்று வருவான் கதிர்வேல். வருடத்திற்கு ஒருமுறை ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்குக் குடும்பத்தோடு சென்று பிசினஸ் டென்சனைக் குறைத்து வருவதுவும் தவறாமல் நடக்கும்.
மாமாவுக்கு சுகரும் ஏறி, வயதும் கூடியவுடன் அவரை வீட்டில் ஒரு சமையல்கார அம்மாவின் பாதுகாப்பில் விட்டு விட்டுச் செல்ல முயன்ற போதுதான் மாமா தன் புரட்சியைத் தொடங்கினாராம்.
‘நீயே சொல்லுடா நியாயத்தை …அப்படியும் அவரின் பிடிவாதத்தைத் தணிக்க ஒருமுறை திருப்பதிக்கும், பிறகு ஊட்டிக்கும் கூடவே அழைத்துச் சென்றோம். அவரை கைத்தாங்கலாகப் பிடித்துச் செல்ல ஒரு ஆளையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அங்கே அவர் எங்களைப் படுத்திய பாடு… திருப்பதி செல்வதற்குள் ஒரு பத்து முறையாவது இயற்கை உபாதைக்கு காரிலிருந்து இறங்கி விடுவார். அவருக்காகவே காரில் ஒரு இருபது லிட்டர் தண்ணீர் கேன் ரெடியாக எப்போதும் வைத்திருப்போம். ஊட்டியிலும் அப்படித்தான்… வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் ஹோட்டலில் கன்னா பின்னாவென்று சாப்பிட்டு விட்டு பாத்ரூமிலேயே குடியிருப்பார். ஆனால், நாங்கள் ஊட்டியைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பும்போது மட்டும் அடம் பிடித்து, தானும் எங்களுடன் கிளம்பி விடுவார். இவர் மேலேயே கவனம் வைத்து இருப்பதால் எங்களால் கோவிலில் நிம்மதியாக சாமி கும்பிடவும் முடியாது… ஊட்டியின் இயற்கையை அனுபவிக்கவும் முடியாது…’ என்று கோபத்துடனும், ஆதங்கத்துடனும் புலம்பினான் கதிர்வேல்.
‘வயதானால் எல்லோரும் அப்படித்தான்… குழந்தையைப் போல மாறி விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..’ என்று ஆறுதலாகச் சொன்னான் கேசவன்.
தன் மாமாவின் குணாதிசயங்களை கேசவனும் சிறு வயது முதல் நன்கு அறிந்திருப்பதால், அவரின் சேட்டைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன்.
புலம்பலைத் தொடர்ந்தான் கதிர்வேல்
‘இப்போது, புதிதாக மல்லிகா வேறு ஒரு புகாரை வைத்துக் கொண்டு தினமும் என்னை இம்சை செய்கிறாள். அப்பா சாப்பிடும்போது, தனது வெள்ளைச் சட்டையின் மார்புப் பகுதியில் சாம்பார், ரசம் போன்றவற்றைச் சிதறடித்துக் கொள்கிறாராம். அவரின் சட்டையைத் துவைக்கும் போது, அதன் கறையைப் போக்க மிகவும் சிரமமாக இருக்கிறதாம். துணி துவைக்க வரும் வேலைக்கார அம்மாவும் சட்டைக் கறையைப் பற்றி தினமும் புலம்புகிறதாம். உனக்கு என் அப்பாவைப் பற்றி நன்றாகவே தெரியும். தினமும் குளிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அதே போல் குளித்தவுடன் ‘மொட மொட’ வென தேய்த்து வைத்த வெள்ளை சட்டையைத்தான் அவர் போடுவார். எத்தனையோ முறை சொல்லியும் அவரின் இந்தப் பழக்கம் மட்டும் நிற்பதாக இல்லை. மனுசனுக்கு வாழ்க்கையில் ஏதேதோ பிரச்சினைகள் வரும். அதையெல்லாம் சமாளித்துத்தான், நான் இந்த டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் செய்து வருகிறேன். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியலைடா..’.
‘சரி…சரி… இந்த சின்ன விசயத்திற்கு ஏன் இப்படிடென்சனாகிறாய். நான் வர்ற ஞாயிற்றுக்கிழமை மாமாவைப் பார்க்க வருகிறேன்..அவரிடம் பேசுகிறேன்..’ என்று கேசவன் சொன்னவுடன். கொஞ்சம் சமாதானம் ஆகிக் கிளம்பினான் கதிர்வேல்.
இந்த இடத்தில் கேசவனின் மாமாவைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். இரண்டு பெண்களுக்குப் பின் கடைக்குட்டியாகப் பிறந்த ஆண் பிள்ளை என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவர். அப்பா, அம்மா தேடி வைத்திருந்த வசதியில், உடம்பு நோகாமல் சுகங்களை அனுபவிக்கப் பழகியவர்.
மின்சார வசதி இல்லாத அவரின் கிராமத்தில், பேட்டரி வைத்த பிலிப்ஸ் ரேடியோவில் சிலோன் ஸ்டேசனின் சினிமாப் பாடல்களைக் கேட்டு ரசித்தவர். எல்லோரும் சைக்கிளில் செல்ல ஏங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், யமாஹா பைக் வாங்கி ஊரில் வலம் வந்து புரட்சி செய்தவர்.
கலைஞரைப் போல நடு வகிடு எடுத்துச் சீவி, கலைஞர் மீசையைப் போல மீசையை வைத்து, கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு எடுத்த தன் கருப்பு வெள்ளை போட்டோவை எல்லோரும் காணும்படி ஹாலில் மாட்டி வைத்திருப்பார். இளம் வயதில் மனைவியைப் பறிகொடுத்தும், கதிர்வேலின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மறுமணம் செய்து கொள்ளாமல் தன் இளமை வாழ்க்கையை ஓட்டியவர்.
‘ யாரது ? ‘ என்று கண்களை இடுக்கிக் கொண்டு கேசவனை உற்றுப் பார்த்தார் மாமா.
உடலில் அளவுக்கதிகமாக ஏறியிருந்த சுகர், அவரின் பார்வையை மங்க வைத்திருந்தது. கொஞ்சம் நெருங்கிச் சென்றவுடன் அடையாளம் கண்டுகொண்டவர், ‘ அட.. கேசவா நீயா… எங்க ரொம்ப நாளாக் காணோம்?’ என்றார்.
‘ஸ்கூல்ல லீவு கிடைக்கறதில்லீங்க மாமா… இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை… சரி உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.. இன்னும் சுகர் குறையவில்லையா?’ என்றான் அருகில் இருந்த சிரிஞ்ச்சைப் பார்த்துக் கொண்டு.
மாமாவின் அறையில் அவருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருந்தான் கதிர்வேல். ஏ.சி.யும், அறையோடு ஒட்டி இருந்த டாய்லெட்டும், விலையுயர்ந்த டி.வி.யும் அவருக்குப் போதுமானதாகவே இருந்தது.
‘டேய் கேசவா… அதோ அந்த தென்னை மரத்தில் இருக்கிற தேங்காய்கள் உனக்குத் தெரியுதா?’ என்றார் மாமா பத்தடி தூரத்தில் இருந்த தென்னை மரத்தைக் காட்டி.
‘ம்..தெரியுது…ஆறு தேங்காய்கள் இருக்கின்றன …. ஏன் திடீரென இந்தக் கேள்வி? ‘ என்றான் கேசவன் குழப்பத்துடன்.
‘உனக்கு நல்லா தெரியுது… ஆனா எனக்கு மங்கலாதான் தெரியுது.. ‘ என்றார் கொஞ்சம் பொறாமையுடன்.
‘உங்க வயசென்ன, என் வயசென்ன? உங்களுக்கு வயசாச்சுங்கறதை அடிக்கடி மறந்து விடுறீங்க..’ என்று உரிமையுடன் கடிந்து கொண்டான் கேசவன்.
வழக்கமான சேம லாபங்களுக்குப் பிறகு வந்த காரியத்தைப் பற்றிப் பேசினான் கேசவன்.
‘நா என்னடா பண்ணட்டும்? உனக்குத் தெரியும்… நான் எப்போதும் வெள்ளைச் சட்டைதான் போடுவேன். மற்றவங்க மாதிரி சட்டையில்லாமல் ரூமை விட்டு வெளியே வர மாட்டேன். நான் என்ன வேணும்னா செய்யறேன்?’ என்றார் அப்பாவியாக.
அவரைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது கேசவனுக்கு. ஒரு காலத்தில் இளவரசனைப் போல் வலம் வந்தவரை, மகனும், மருமகளும், துணி துவைக்கும் பெண்மணியும் சேர்ந்து திட்டினால் ரோசம் வரத்தானே செய்யும்?.
மல்லிகாவும், கதிர்வேலும் கேசவனின் முகத்தை, தேர்தல் முடிவை எதிர்பார்க்கும் கட்சிக்காரர்களைப் போல ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘மாமாவிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன். இனிமேல் உங்களோடு சுற்றுப்பயணம் வருவதில்லை என்று முடிவாகச் சொல்லிவிட்டார். ஆனால், தான் வேண்டுமென்றே சட்டையில் சாம்பாரைக் கொட்டிக் கொள்வதில்லை என்றும், வயதின் காரணமாக தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்’ என்றான் கேசவன் இருவரிடமும்.
‘அப்பாடி… எப்படியோ ஒரு பிரச்சினை தீர்ந்ததே..’ என்று பெருமூச்சு விட்டான் கதிர்வேல்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத்தான் மாமா இருந்தார். கடைசி காலத்தில் சர்க்கரை நோயால் கொஞ்சம் சிரமப்பட்டே இறந்தார். மாமாவின் வீட்டு வழியாகப் போய் வரும் போதெல்லாம் கேசவனுக்கு அவரின் ஞாபகம் வராமல் இருக்காது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்த வழியாக வந்த போது, நேரம் இருந்ததால் மாமாவின் வீட்டிற்குள் சென்றான் கேசவன். துணி துவைத்துக் கொண்டிருந்த மல்லிகா பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்.
‘வாங்கண்ணா.. உங்க மாமா போன பிறகு எங்க வீட்டுக்கு நீங்க வருவதே இல்லை?’ என்றாள் குறையுடன்.
‘நேரம் இல்லைம்மா.. சரி கதிர்வேல் இல்லையா? இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. டெக்ஸ் லீவுதானே?’ என்றான் கேசவன்.
‘நாளைக்கு அர்ஜண்ட் ஏற்றுமதி ஷிப்பிங் இருக்குதுண்ணு போயிருக்கிறாங்க….. நீங்க உள்ளே வாங்க..’ என்று அழைத்துச் சென்றாள்.
அதற்குள் மல்லிகா கதிர்வேலுக்கு போன் செய்ய அவன் கேசவனிடம் போனில் பேசினான்.
‘டேய் நான் ராத்திரிக்க்குத்தான் வருவேன்.. நீ சாப்பிடாமல் போய்விடாதே..’ என்றவன் மல்லிகாவிடமும் சாப்பிடாமல் என்னை அனுப்ப வேண்டாம் என்று கண்டித்துச் சொல்லி விட்டான்.
‘ஏம்மா மல்லிகா, வேலைக்காரி இல்லையா? நீ துவைத்துக் கொண்டிருந்தாய்?’ என்றவுடன்,
‘ஞாயிற்றுக்கிழமை எங்கண்ணா வேலைக்காரங்க வராங்க.. .. அப்புறம் எனக்கும் பொழுது போக வேண்டாமா?’ என்றவள் ஏதோ நினைத்துக் கொண்டு,
‘இங்கே வாங்களேன்..’ என்று பாத்ரூம் பக்கம் கேசவனை அழைத்துச்சென்றாள்.
குழப்பத்துடன் பின் சென்றான் கேசவன். துவைப்பதற்காக வைத்திருந்த நான்கைந்து சட்டைகளை எடுத்து விரித்துக் காண்பித்து, ‘பாருங்க.. உங்க அருமை மாமன் மகன் செய்திருப்பதை..’ என்றாள்.
அவள் காண்பித்த அத்தனை சட்டைகளின் மார்புப் பகுதியிலும் சாம்பாரின் மஞ்சள் கறைகள் சிதறியிருந்தன.
‘மாமாவை அத்தனை திட்டு திட்டினானே… இப்ப இவனும் ஆரம்பித்து விட்டானா? கேட்டா என்ன சொல்லுகிறான்?’ என்றான் கேசவன்.
‘ம்.. கேட்டா ‘இப்பத்தான் தெரியுது.. வயசானா இதெல்லாம் எல்லோருக்கும் நடக்கும் போல..’ என்று தத்துவம் பேசுகிறார் அண்ணா..’ என்றாள் மல்லிகா.
மல்லிகாவின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு வெளியே வந்த போது, மல்லிகா ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
‘அண்ணா, உங்க சட்டையின் நெஞ்சுப்பகுதியை துடைத்துக்கொண்டு போங்கண்ணா..’ என்றாள்.
கேசவன் குனிந்து பார்த்தபோது, அவன் சட்டையின் மார்புப் பகுதியில் சாம்பார் கறை சிதறியிருந்தது தெரிந்தது.
எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings