in ,

அடிபட்ட பொன்னி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்   

ரோடு வளைவில் காரை வலது எடுத்தான் கதிர். கொஞ்ச தூரத்தில் வலது ஓரம் நின்று கொண்டு ஒரு நாய் ரோடைக்கடக்கப் பார்த்தது. அதைப் பார்த்துவிட்டான், இவன். அது ரோடிற்கு வருவதற்குள் நாம் முந்திவிடலாம் என்று கொஞ்சம் வேகமெடுத்தான். அதற்குள் அந்த நாய் ஓடிவர ஆரம்பித்தது.

உடனே பிரேக் பிடிக்கப் போனான். ஆனாலும் திடீரென்று பிரேக் பிடித்தால் பின்னால் வரும் வண்டிகள் இவனது காரில் மோதிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் கொஞ்சம் உஷாராகவே பிரேக்கை அழுத்தினான். அவனது கணக்குப்படி நாய் குறுக்கே வருவதற்குள் கார் நகர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் ஒரு ஓலச்சத்தம்.

‘ஐயோ… ‘ என்று அலறிகொண்டே பிரேக்கையும் கிளட்சையும் ஒருசேர அழுத்தியபடியே உஷாராகவே  காரை இடதுபுறம் கொண்டுபோய் ஓரம்கட்டி நிறுத்தினான்,  நெஞ்சுக்குள் பதட்டம்.

அவசரமாய் கதவைத்திறந்துகொண்டு வெளிப்பட்டான். அப்படியே பின்பக்கம் பார்த்தான். ரோடு நடுவே அந்த நாய் அடிபட்டு துடித்துக்கொண்டு இருந்தது. அதற்குள் மூன்று நான்கு பேர் அந்த இடத்திற்கு ஓடிவந்துவிட்டனர்.

‘ஒரு கார்காரன் நாயை அடிச்சிட்டாண்டோய்… ‘ எங்கிருந்தோ யாரோ குரல் கொடுத்தார்கள். கணப் பொழுதில் கூட்டம் கணிசமாய் கூடிவிட்டது.  சிலர் நாய்க்கு என்ன ஆனது என்று முண்டிக் கொண்டு பார்க்க… சிலர் இடித்துக்கொண்டு உள்ளே போய் தங்களது மொபைலில் போட்டோ எடுக்க…

பதட்டத்துடன் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே போனான் கதிர். நாயின் தலை அடிபட்டு ரத்தம் வந்திருந்தது.  இரண்டு முன்னங்கால்களும் கூட நசுங்கிப் போயிருந்தன. கதிரை கோபத்துடன் பார்த்தனர் சிலர்…

‘ ஏங்க… பார்த்து வரக்கூடாது… ‘

‘ நாயோட தலை அடிபட்டிருச்சி, முன்னங்கால் ரெண்டும் நசுங்கிடுச்சு… ‘

‘ ஆமா இனிமே இது பொழைக்காது… ‘

‘இந்தாப்பா. இதென்ன வீண்பேச்சு… ‘ என்றபடி முன்னால் வந்த ஒருவன், ‘இந்தாப்பா… எங்க நாயை அடிச்சிட்டு ஓடப்பார்த்தீயா… ஒழுங்கா நஷ்ட ஈடு கொடு… ‘ என்றான் விழிகளை உருட்டியபடி.

முந்திக்கொண்டான் கதிர். ‘ஏங்க… நான் எங்கேங்க ஓடப்பார்த்தேன்… அதான் காரை ஓரம் கட்டிட்டு ஓடிவந்து நிக்கறேனே… அதில்லாம ரோடுல ஓடிவந்த நாயை அடிச்சேன்றீங்க… அது தானா வந்து விழுந்தா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா… ‘

‘இதெல்லாம் சரிப்பட்டு வராது…  ஒழுங்கா ஐயாயிரம் கொடுத்துட்டுப் போ… இல்லே இப்ப நடக்கறதே வேற… தோ எங்காளுங்கல கூப்புடறேன்… ‘ என்றபடி அவன் மொபைலில் ஏதேதோ நம்பர்களை அழுத்தினான்.   

‘அட இரப்பா… பேசிக்கலாம்… ‘ என்று குறுக்கிட்டார் ஒருவர்.

அவனோ, ‘எங்கே… இந்தாளு நாயை அடிச்சுப்போட்டுட்டு பேசாம நிக்கறார்… அஞ்சாயிரம் வாங்காம நகர விடமாட்டேன்… ஜிம்மி எங்க செல்ல நாய்ங்க… எப்படி பழகும் தெரியுமா… அதுவும் ஒரு உயிர்தானே… லட்சமே கொடுத்தாலும் போன உசிரு வருமா… அந்தாளு பணம் தலைன்னா ப்ளூகிராஸ்க்கு ஃபோன் பண்ணி கோர்ட்டு படியேற வச்சிடுவேன்…‘ என்றான்.

ஒருவன் கதிரிடம் கிசுகிசுத்தான். ‘அண்ணே… அவன் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கறதைப் பார்த்தா ஏதோ கட்சிக்காரன் மாதிரி தெரியுது… சட்டைப்பையில வேற போட்டோலாம் வச்சிருக்கான்… முதல்ல லட்சம் கிட்சம்னு பேசிட்டிருக்கான்… கட்சிக்காரனுங்களை  கூட்டினானா இன்னுமா அதிகமா புடிங்கினாலும் புடுங்குவானுங்க… இவனுங்களை நம்பவே முடியாது… ப்ளூகிராஸ்க்கு ஃபோன் பண்றேன்னு வேற சொல்றான்… ரொம்ப விவரம் தெரிஞ்ச ஆளாத்தான் இருப்பான் போல… பார்த்து சரிக்கட்டிட்டு முதல்ல இடத்தைவிட்டு நகர்ந்திருங்க.. அவன் ஆளுங்க வந்தா மேல கைவச்சாலும் வச்சிடுவானுங்க…’

கதிருக்கு லேசாய் உதறல் எடுக்க ஆரம்பித்தது. அதற்குள் ஒருவர் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருந்தவனை சாந்தப்படுத்தினார்.

‘ இரப்பா… பெரிசுபடுத்தாதே… ‘

‘ பணத்தை கொடுத்தா நான் ஏன் பெரிசுபடுத்தறேன்… ‘

கதிர் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான், ‘ ஏங்க… திரும்பவும் சொல்றேன்… காரோட முன்பக்கம் நாய் மேல ஏறலை… நல்லா தெரிஞ்சுக்கங்க… காருக்கு நடுவுல பூந்திடுச்சு… நான் என்ன பண்ண… அதுவுமில்லாமா உங்க செல்ல நாயை வீட்டுல வச்சு வளர்க்கணும்… ரோடுல கார் பஸ் லாரின்னு போகத்தான் செய்யும்… நாயோ பூனையோ ரோடுக்கு வந்தா அடிபடத்தான் செய்யும்… இது விபத்து…‘

‘ ஆமாமா… நான் கூடப் பார்த்தேன்… பின் சக்கரம்தான் நாய் மேல ஏறியிருக்கு… ‘

‘ஆமாம்பா…முன்பக்க டயர்ல ஏத்தினாத்தான் அது கொலை… பின்பக்க டயர்ல ஏத்தினா அது விபத்து… உன் இஷ்டத்துக்கு ஐயாயிரம் லட்சம்னு பேசிட்டிருக்கே… அவர் ஏன் இழப்பீடு தரணும்.. ஸார் நீங்க போங்க… ‘

உடனே அப்படி சொன்னவனது நெஞ்சைப் பிடித்துத் தள்ளினான் நஷ்டஈடு கேட்டவன்…

‘நீ என்ன அந்தாளுக்கு வக்காளத்தா… பெரிய புடுங்கியா நீ… செத்தது என் நாய், தெரியுமில்ல… செல்லமா வளர்த்த நாய்… அதுவும் ஒரு உயிர்தானே . லட்சமே கொடுத்தாலும் அந்த உயிரை திரும்பக் கொண்டு வர முடியுமா…  அப்போ பணத்தை நீ குடு…‘

கும்பலில் ஆளாளுக்கு பெசிக்கொண்டிருப்பதையும் நாய்காரன் பேசுவதையும் பார்த்து சற்றே கலவரப்பட்ட கதிர் பின்பக்க பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை எடுக்க கைவைத்தான். பிறகு அப்படியே நிறுத்திக்கொண்டு, ஐயாயிரம் எல்லாம் அதிகம். போனால் போகிறதென்று ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டு மறுபடியும் தன் வாதத்தை முன் நிறுத்தினான். ஆனாலும் இன்னும் பர்ஸை எடுக்கவில்லை.

‘வீட்டு நாயை வீட்டிலதான் வளர்க்கவேண்டும். ரோடில் ஓடவிட்டா வண்டிகளில் அடிபட்டு சாகத்தான் செய்யும்… நான் திரும்பவும் சொல்றேன்… அது தானா வந்து என் வண்டில விழுந்துடுச்சு… வேணா ஆயிரம் ரூபா தர்றேன்… கொண்டு போய் அடக்கம் பண்ணிக்கங்க… ‘ என்றான்.

‘ என் நாயோட மதிப்பு உனக்கென்னத் தெரியும்… முழுசா அஞ்சாயிரம் எடுத்து வையி… ‘

அதற்குள் கூட்டத்தை இடித்துக்கொண்டு ஒரு அம்மா உள்ளே நுழைந்தது.

‘எங்க பொன்னி கார்ல அடிபட்டுடுச்சுன்னு சொன்னாங்க… அதான் ஓடிவந்தேன்… ‘ என்றபடி நாயைத் தொட்டுப்பார்த்த அவள், ‘ஆமா எங்க பொன்னியேதான்… துடிப்பையே காணோம்….செத்துப் போச்சா… போ…‘

‘நீ யாருமா… ‘

‘இது எங்க வீட்டு நாய்ங்க… பொன்னினு கூப்புடுவோம்… செல்லமாத்தான் வளர்த்தோம். ஆனா அதுக்கு எப்படியோ வெறிபிடிச்சுடுச்சு.. நாலஞ்சு பேத்த கடிச்சும் வச்சிடுச்சு… தூக்குல தொங்க விடச் சொன்னாங்க… பாசமா வளர்த்த நாயி. தூக்கில இட மனசு வரலை… கார்பொரேஷன்காரங்களுக்கு போன்ல கூப்பிட்டுக்கூட சொன்னோம்… யாரும் கண்டுக்கலை… வரலை… இப்போ தானா அடிபட்டு செத்துடுச்சு… ‘

‘உன் நாயின்றே… இங்கே ஒருத்தர் தன்னோட நாயின்னு சொல்லி நஷ்டஈடு கேட்டிட்டிருக்கானே… ‘ என்றார் ஒருவர்.

‘எங்கேப்பா இங்கே நின்னிட்டிருந்தாரே… வெள்ளையும் சொல்லையும் ஒரு ஆளு… ‘ என்றார்.

‘அந்தாளு ஒரு ஃபிராடு போல… நிஜமான நாய்க்காரங்க வந்ததும் நைஸா கம்பி நீட்டிட்டான்… ஜிம்மின்னு பேரு கூட சொன்னான். ஜிம்மினா ஆம்பளை நாயாச்சே… இந்தம்மா இதுக்கு பேரு பொன்னின்னு சொன்னதும்தான் நான்கூட பார்த்தேன் இது பொட்டை நாயி… சரியான் ஃபிராடுகாரன்… செல்ல நாய், எப்படி பழகும் தெரியுமான்னான்… அதுவும் ஒரு உயிர்தானேன்னான்… லட்சமே கொடுத்தாலும் போன உசிரு வருமான்னான்… ஃபிராடு ஃபிராடு… தெரிஞ்சா தோலை உரிச்சிட்வாங்கன்னு ஓட்டம் எடுத்துட்டான் போல…‘

‘முடிஞ்சளவு கரக்குலாம்னு பார்த்திருக்கான் பாரேன்… நிஜமான நாய்க்காரங்க வந்ததும் நைசா நழுவிட்டான்… இல்லேனா என் கையாலேயே உதை வாங்கியிருப்பான். என் நெஞ்சைப் பிடிச்சு தள்ளினானே நாயி… ‘

அந்தம்மாள் கதிரைப் பார்த்தாள்.  இவன் அவளைப் பார்த்தபடி பர்ஸை வெளியே எடுத்தான்.

‘தம்பி… பணம்லாம் வேண்டாம்பா… இது செத்ததே நல்லதாப்போச்சு… நீங்க போங்க தம்பி… ‘

சுவாரஸ்யம் குறைந்து போனதால், கூட்டம் ஏமாற்றத்துடன் கலைய ஆரம்பித்தது.

நிம்மதி பெருமூச்சுடன் காரை நோக்கி நடந்தான் கதிர்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வந்தது தமிழ்ச்செல்வியா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    தொலைந்து போன மோதிரம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு