எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தன் வேலைகளை முடித்து விட்டு சோபாவில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள் வத்ஸலா. அவள் வசிக்கும் ஜவஹர் நகர் காலனி, ஓரளவு வசதியானவர்கள் வசிக்கும் தனித்தனி பங்களாக்கள் கொண்டது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு கார்கள் இருக்கும். வீடுகளும் இரண்டு போர்ஷன்களாக இருக்கும், ஒன்றை ஒன்று சார்ந்தில்லாமல் தனித்தனியாக இருக்கும்.
அதில் கீழ் போர்ஷனில் வத்ஸலா இருக்கிறாள். முதல் மாடியில் அவள் மகன் சதீஷ், அவனது மனைவி மஞ்சுளா, மற்றும் ஒரே மகள் வர்ஷாவோடு இருக்கிறான். வாடகை விடும் பொருட்டு வத்ஸலாவின் கணவர் சேஷாத்ரி அப்படித் தனித்தனியாகக் கட்டினார்.
‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’ என்று சொல்வார்கள். வங்கிக் கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடித்து விட்டார். வத்ஸலாவும் அரசினர் மகளிர் பள்ளியில் ஆசிரியையாக இருந்ததால், இருவரும் ஜாயின்ட் கையெழுத்துப் போட்டுத்தான் பில்டிங் லோன் வாங்கினார்கள்.
சதீஷு தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணிப்பொறியாளராகப் பணியில் சேர்ந்தவுடன், சேஷாத்ரி கையிலிருந்த கொஞ்சம் சேவிங்க்ஸுடன், வத்ஸலாவும் நகைகளை விற்றுக் கொடுத்த பணத்துடன் வங்கிக் கடனை முழுவதும் அடைத்து விட்டார். அத்துடன் தனது கடமை முடிந்துவிட்டதென்று சேஷாத்ரியும் தெய்வமாகி விட்டார்.
ஆனால் அவர் அடிக்கடி, “எப்போதும் யாரையும் சார்ந்து வாழாதே, எவ்வளவு தூரம் விலகி நிற்கிறோமோ அவ்வளவு சுதந்திரமாக சந்தோஷமாக இருக்கலாம். சதீஷ் திருமணத்திற்குப் பின் மாடிப் போர்ஷனில் தனியாகத்தான் இருக்க வேண்டும். அல்லது நம்மை விட்டு கொஞ்சம் விலகி சுதந்திரமாக இருக்க வேண்டும்” என்பார்.
முதலில் வத்ஸலா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“நம் மகனை ஏன் பிரிக்க வேண்டும். நாம் தானே அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகளும் சின்னப் பெண்தானே?” என்றாள்.
“மருமகளை அவள் கணவனை நம்பித்தானே திருமணம் செய்துக் கொடுத்தார்கள். எங்கள் மகளை நாங்கள் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவள் பெற்றோர்கள் கூடவா வந்து இருக்கிறார்கள்? கல்யாணம் என்று ஆன பிறகு, அவன் மனைவி, அவன் குழந்தை என்று சுதந்திரமாக விட வேண்டும். அதுதான் அவனுக்கும் சந்தோஷம், நமக்கும் நிம்மதி. நாமும் அவனைச் சார்ந்திருக்கக் கூடாது, அவனும் நம்மைச் சார்ந்து இருக்கக் கூடாது. எந்த விஷயத்திலும் நாம் அவனையோ, அவன் நம்மையோ தொந்தரவு செய்யக் கூடாது” என்றார். அவர் சொன்னது போலவே கடைசி அவரை வாழ்ந்தார்.
மாடியில் இருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுளா, மருமகளே ஆனாலும் வத்ஸலாவிற்கு நல்ல தோழி. டி.வி. பார்த்துக் கொண்டிருந்த மாமியாரை மாடியில் இருந்து ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மஞ்சுளா.
இன்னும் கொஞ்ச நேரத்தில், எதிர்வீடு பக்கத்து வீடுகளில் இருந்து நான்கு மாமிகள் இங்கு கூடி விடுவார்கள். எல்லோரும் கையில் மாட்டிய அழகான ஹேண்ட்பேகுடன் தான் வருவார்கள். அதில் ஏதாவது ஸ்நாக்ஸ் பாக்கெட்டும், ஒரு குட்டி பிளாஸ்க்கும் இருக்கும்.. வத்ஸலாவும் அன்று பொரித்த வத்தல் வடாம் என்று ஏதாவது ஒன்றைக் கொண்டு வந்து வைப்பாள்.
டி.வி. ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, எல்லோரும் பேசிக் கொண்டும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டும், கையில் கொண்டு வந்த பிளாஸ்க்கிலிருக்கும் காபியையும் குடித்து விடுவார்கள்.
சில சமயம் வீட்டு வேலைகளை முடித்து விட்டு மஞ்சுளாவும் அந்த கான்பரன்ஸில் ஆர்வத்துடன் கலந்து கொள்வாள். அவர்கள் யார் வீட்டு வம்பையும் பேச மாட்டார்கள். பொதுவாக சினிமா பற்றியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றியோ தான் பேசுவார்கள்.
அன்றும் அப்படித்தான் பத்து வருடங்கள் முன்பு வெளியான திரைப்படங்களில் உள்ள ஆழமான கதைகள் பற்றியும், அந்தப் படங்களில் வெளியான பாடல்களின் இனிமையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்படியே பேச்சு, சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வயதானவர்கள் நலனுக்கான ஒரு நிகழ்ச்சியை நோக்கித் திரும்பியது. பேச்சு மிகவும் சுவராஸ்மாக இருக்க, மஞ்சுளா அடுப்பை அணைத்துவிட்டு அவர்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“முதுமை வரமா சாபமா என்ற தலைப்பில் பேசப்பட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது“ என்றாள் வத்ஸலா.
பக்கத்து வீட்டு பர்வதம் மாமி, “முடிவு சரியாக இல்லை. வரமாவதும் சாபமாவதும் நம்கையில்தான் என்று பேசினாளே, அது எப்படி பொருந்தும்? ஒரே ஒரு சின்னக் காரியம் கூட நம் விருப்பத்திற்கு செய்ய முடியாது. யார் வீட்டிலோ இருந்து கொண்டு அவர்கள் விருப்பத்திற்கு நடப்பது போல் தான் இருக்கிறது” என்றாள் நீண்ட பெருமூச்சுடன்.
எதிர்வீட்டில் இருக்கும் லட்சுமி ஆன்ட்டி, “நம்முடைய காலத்தில் மருமகள்களைச் சொல்லும் போது ‘கட்டின பசு போல் இருக்கிறாள்’ என்று சொல்வார்கள். நாமும் எல்லாவற்றுக்கும் ஆண்களை நம்பியே இருப்போம். ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லோரும் வேலைக்குப் போகிறார்கள், சுயமாக சம்பாதிக்கிறார்கள். நினைத்தால் கல்யாணம், நினைத்தால் டைவர்ஸ் என்கிறார்கள். சர்க்கஸ் குதிரையை கட்டி மேய்ப்பது போல் இருக்கிறது இந்த காலத்து மருமகள்களோடு வாழ்வது. அவரவர் புருஷன் பாடே திண்டாட்டம். நமக்கு முதுமை சாபம் தான்“ என்றாள்.
மஞ்சுளா அவளுடைய மாமியாரைப் பார்த்து, “நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் அத்தை” என்றாள்.
“எனக்கென்னவோ முதுமை சாபமாகத் தோன்றவில்லை. பிறந்தது முதல் திருமணம் வரை அம்மா, அப்பா, உடன் பிறப்புகளுக்காக வாழ்கிறோம். திருமணத்திற்குப் பின், கணவருடன் விருப்பம்தான் நம் விருப்பம். நமக்கு என்ன வேண்டும் என்பதைக் கூட அவர்தான் பார்த்து பார்த்து செய்வார். அதற்கு மேல் யோசிக்கவும் தெரியாது, அதில் நாம் திருப்தியாகி விடுவோம்.
குழந்தைகள் ஆன பிறகு நமது மொத்த ஆசைகளுமே, அவர்கள் சந்தோஷம்தான். எல்லோரும் திருமணம் ஆகித் தனித்தனியாக வசிக்கும் போதுதான், நமக்கு நம் விருப்பமான உணவு, உடை, புத்தகம், டி.வி. என சுதந்திரமாக செயல்பட முடிகிறது. நாமும் அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது. நம் வாழ்க்கையிலும், நம் அனுமதியின்றி மகனோ மகளோ தலையிடக் கூடாது. என் கணவர் என் வாழ்க்கையை அப்படித்தான் அமைத்து கொடுத்தார். அதனால் தான் நானும் மஞ்சுளாவும் இன்றளவும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை முதுமை வரம்தான். கடவுள் தந்த இந்த வரத்தை, நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து வாழ பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று உணர்வு பூர்வமாக முடித்தாள் வத்ஸலா.
எல்லோரும் அவளுடைய நீண்ட உரையை ஆமோதிப்பது போல் பலமாகக் கை தட்டினார்கள்.



GIPHY App Key not set. Please check settings