இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
இளங்காலைப் பொழுது புலர்ந்து அந்தப் பெரிய மாளிகையின் கீழ்தளத்திலிருந்த கோபாலன் செயற்கைக் காலை எடுத்துப் பொருத்திக்கொண்டு தானே காபி போட்டு கொண்டு வந்து அமர்ந்தார், காபி கசந்தது அவரது வாழ்க்கையைப் போல என்று முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.
அதன்பின் மேலே மாடியில் முதல் தளத்தில் மனைவி கோகிலா தனியாக இருக்கிறாள் என்பதை இரண்டாவது அத்தியாயத்திலும், அன்று அவளின் பணிநிறைவு விழாவிற்கு கோகிலா யாரையும் வரவேண்டாம் என்றதை மூன்றாவது அத்தியாயத்திலும் பார்த்தோம். ஏன் இப்படி ஒரே வீட்டிலிருந்தும் பிரிந்திருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைதான் இத்தனை அத்தியாயங்களில் பார்த்துக்கொண்டு வந்தோம்.
அவளுக்குப் பணிநிறைவு என்பதனால் அன்று பஞ்சவடிக்குச் செல்கிறார் கோபாலன். இனி தொடர்ந்து வாசிப்போம்.
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் இறங்கி உள்ளே சென்றதும் துளசி மாலையும், அர்ச்சனைத் தட்டும் வாங்கினார் கோபாலன்.கூட்டம் சுமாராக இருந்தது. கோகிலத்தின் பெயருக்கு அர்ச்சனை செய்தார்.வானளாவி நின்ற அனுமனை வணங்கி என் பாவங்களை மன்னித்தருள வேண்டும்.கோகிலா ஆரோக்கியமும் ஆயுளும் நிறைந்து வாழ வேண்டும். மகனும், மகளும் நிறைவாய் வாழவேண்டும் என மனதார வேண்டிக் கொண்டார். துளசியும், தீர்த்தமும் தந்து தலையில் சடாரி வைத்தார் குருக்கள்.ஆரத்தி தட்டில் இருநூறு ரூபாய் வைத்தார். அன்னதானத்திற்கு ஆயிரம் ரூபாய் கோகிலா பெயரில் தந்தார்,
“ஐயா தர்மம் பண்ணுங்க” என்று குரல் தந்தவர்களுக்கு சட்டைப்பையிலிருந்து ஐந்நூறு ரூபாய்த்தாளை எடுத்து நீட்டி எல்லோரையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
“நீங்களும், உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் சாமி.” என்றாள் ஒரு மூதாட்டி.
அங்கிருந்து புறப்படும்போது , “திருநாவு உங்க வீட்டுக்குப் பிடித்த ஸ்வீட் வாங்கிக்கோ.” என்று ஐந்நூறு ரூபாயைத் தந்தார்.
கேவலமான அந்த ஒரு செயலை மட்டும் செய்யவில்லை என்றால் வாழ்க்கை நாலு பேர் போற்றும்படி இருந்திருக்கும். மனைவியின் அன்பை இழந்தவன் எத்தனை பணக்காரனாக இருந்தாலும் பிச்சைக்காரன்தான்.
இந்த ஏழு வருடங்களில் ஒரேஒருமுறை கூட அவள் பேசவில்லை, முகம் காட்டவில்லை, ஆயிரம் வார்த்தைகளை விட இந்த மௌனம் கொடுமையானது.வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ?
இது அவள் எனக்கு மட்டும் தரும் தண்டனையா? இல்லையே அவளுக்கும் இது தண்டனைதான். ஆயிரம் வசதிகள் இருந்தும், கணவனும் மனைவியும் இருதுருவங்களாக இருப்பதில் என்ன சுகம் இருக்கிறது?
காவல்துறையில் பேர் வாங்கி, பேர் போன அறிவிலி என்னைப் போல் எவரும் உண்டா?
இப்படிப் பலவாறாக நினைத்துக் கொண்டிருந்த போது வீடு வந்துவிட்டது. அர்ச்சனை செய்த தேங்காய், பழம், துளசி மாலையை அன்னம்மாவிடம் தந்தார்.. இருவருக்கும் உணவு பறிமாறினாள் அன்னம்மா. உணவருந்திவிட்டுத் திருநாவு விடை பெற்றார்.,
கோகிலாவின் பாராட்டு விழா ஏற்பாடுகள். நடப்பதைக் கல்லூரி முதல்வர் மேற்பார்வை செய்தார். கோகிலா கல்லூரி முதல்வராகப் பணிநிறைவு பெற வேண்டியவள். ஆம் கோபாலன் வீட்டை விட்டு வெளியேறிய போது சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரிக்கு முதல்வராகப் பணிஉயர்வு கிடைத்தது. அப்போது வாழ்க்கையே தடம்புரண்டு இருந்த நிலையில் வேண்டாமென மறுத்துவிட்டாள்.
இழக்கக் கூடாத்தையே இழந்து நிற்கும்போது வேறு எதுவும் பெரிதில்லை. சென்ற ஆண்டு சகுந்தலா நெல்லைக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றாள். விமலா சென்ற மாதம் தூத்துக்குடி கல்லூரி ஒன்றின் முதல்வர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாள்.
இருவரின் பாராட்டு விழாக்களுக்கும் அழைத்திருந்தும் போகவில்லை இவள். கோபாலன் வீட்டிற்கு வந்தபிறகு இவள் எந்த நிகழ்வுகளுக்கும் செல்வதில்லை.
கல்லூரிக்கு அழைத்து வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்வது திருநாவு. கோபாலன் எங்கும் செல்வதென்றால் திருநாவு கோகிலத்திடம் சொல்லி விடுவார்.
இவள் ஆட்டோவை வரச் சொல்லிவிடுவாள். இன்று இவளே, “திருநாவு இன்னக்கி நான் ஆட்டோவில் போகிறேன்.” என்று சொல்லி விட்டாள்.
அவருக்கும் பணிநிறைவு விழா பற்றிய எண்ணங்கள் அலைக்கழிக்கும். ஒருவேளை எங்காவது செல்ல நினைக்கலாம் அதனால் கார் இருக்கட்டும் என்று எண்ணினாள். இயற்பியல் ஆய்வகத்தின் அறையில் இப்படிச் சிந்தனையில் மூழ்கியிருந்தவளின் கண்களைப் பொத்தின கரங்கள் இரண்டு.
“ஏய் விமலாதான் எனக்குத் தெரியும் எப்படி இங்கே?” என்று கரங்களைப் பற்றிக் கொண்டாள் கோகிலா.
“நீ சொல்லலைனா நாங்க வரமாட்டோமா?” இது சகுந்தலா.
“எங்களை விட்டுட்டு விழா நடக்குமா!” என்று கேட்டுக் கொண்டே வந்தது சிவா.
“மணியக்காரரு எம் பொண்ணைக் கவனிச்சியா’னு கனவுல வந்து திட்டுவாரே” என்று வந்தது சகுந்தலாவின் கணவன் கிருஷ்ணன்.
சகுந்தலாவும்,விமலாவும் கோகிலாவின் உயிர்த்தோழிகள். சகுந்தலா அன்று உயிரை மாய்த்துக் கொள்ளச் சென்ற சகுந்தலாவைத் தடுத்து ஊருக்கு வந்து மணியக்காரரிடம் பேசி நல்ல வாழ்க்கை தந்தவள் இவள். இன்று படித்துக் கல்லூரிப் பேராசிரியையாகப் பணியேற்று, முதல்வராகப் பணி நிறைவு பெற்றது அத்தனைக்கும் காரணமாக இருந்தவள் கோகிலா. உடனிருந்து உதவியவள் விமலா. .
திருமணமான பின்னர் கோகிலாவின் அண்ணன் சித்தார்த்தனின் மணவிழாவில் குழந்தையோடு சென்று கலந்துகொண்டது நினைவில் எழுந்தது. அதனால் அழைக்கா விட்டாலும் வந்துவிட்டார்கள்.
அப்புறம் என்ன? பாராட்டு விழா நன்றாகவே நடந்தது, ஆனாலும் முள்ளாக நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்தது கோபாலன் இல்லாதது.
சிவாவிற்கும் விமலாவிற்கும் குழந்தைப் பேறு இல்லை. ஒரு அநாதை இல்லத்திலிருந்து பிறந்தவுடன் கைவிடப்பட்ட பதின்மூன்று நாள் பெண்குழந்தையை எடுத்து வளர்த்தார்கள். விமலாவின் சாயலில் அச்சு அசலாக அப்படியே இருப்பாள் அவள். அவளைத் தன் அண்ணன் மகனுக்கே மணம் முடித்திருக்கிறாள்.
அன்று மாலை மனம் நெகிழ உடன் பணியாற்றுபவர்களும் மாணவியரும், விடைதர சகுந்தலாவும், விமலாவும் கோகிலாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். சிவாவும், கிருஷ்ணனும் கோபாலைப் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்
வழக்கம் போல் பின்புறப் படிக்கட்டின் வழியாகச் செல்ல நினைத்த கோகிலாவின் கரம் பற்றி விமலாவும், சகுந்தலாவும் முன்புறப் படிக்கட்டில் அழைத்து வந்தனர். அங்கே அன்னம்மாள் ஆலம் கரைத்து வைத்துக் காத்திருந்தாள்.
“நல்லாயிரு பாப்பா.” என்று திருஷ்டி சுற்றினாள் அன்னம்மா .
இரவு உணவு செய்யவே வேண்டாம் என்று சிவாவும் கிருஷ்ணனும் தடுத்துவிட்டனர். அவர்களே சென்று ஹோட்டலில் சகுந்தலா விமலாவிடம் கேட்டு உணவு வகைகளை வாங்கி வந்தனர். கோபாலனோடு கீழ்தளத்தில் சிவாவும், கிருஷ்ணனும் அவருக்குப் பறிமாறி உண்டு மகிழ்ந்தனர். கோகிலாவோடு தோழியர் உண்டது அன்னம்மாவிற்கு நிறைவாக இருந்தது. அன்று இரவே எல்லோரும் புறப்பட்டுச் சென்று விட்டனர்.
ஊர் உறங்கியது, மாமரத்துப் பறவைகள் உறங்கின, வீதிகளின் சந்தடிகள் உறங்கின, இருவர் மட்டும் உறங்கவில்லை, தூரத்தில் கடலலைகள் ஆர்ப்பரித்து எழுந்து ஓசையிட்டுக் கொண்டிருந்தது போல் மனங்களும் வழக்குத் தொடுத்தவராகவும், தொடுக்கப்பட்டவராகவும் வாதிட்டுக் கொண்டிருந்தன.
‘எப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கும் தண்டனை இது என்று தீர்ப்பு தரப்படுகிறது.சில தண்டனைகள் உடனே நிறைவேற்றப்படுகின்றன. அந்த விபத்தில் இவர் உயிர் போகாமல் பிழைத்ததற்கு ஏதும் காரணம் இருக்குமோ?திருந்தட்டும் என்று இறைவனே மன்னித்து விட்டபிறகு இந்த மௌன யுத்தம் சரிதானா?. இன்னும் எத்தனை நாள் இது தொடரும்?.
அவர் செய்தது மன்னிக்கக் கூடாத குற்றம்தான், ஆனால் மன்னிக்க முடியும். என்மனம் பாறையாக இறுகி் விட்டதா?. அவர், மனம்திருந்தி நாளும் வருந்துவது நான் அறியாததா?. இத்தனை கற்றிருந்தும் மன்னிப்பைத் தள்ளி வைக்கும் நான் எப்போது மாறுவேன். மறக்க முடியுமா அதை?.
‘இதுவரை கல்லூரிப்பணி இருந்தது, இனி நாளெல்லாம் என்ன செய்வது?. பிள்ளைகள் அழைக்கிறார்கள், சென்று விடலாமா?. எங்கே போனாலும் இதயத்தைக் கழற்றி வைக்க முடியுமா?. நான் எந்த உதவியும் செய்யாவிட்டாலும் இந்த வீட்டில் இருக்கிறேன் என்ற நிம்மதி அவருக்கு இருக்கும். நானும் சென்று விட்டால் நிலைகுலைந்து விடுவாரே. கடவுளே நல்லவழி காட்டு.’
இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு கோகிலா எப்போது உறங்கினாளோ தெரியாது.
இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings