எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பெங்களூர் சிவாஜி நகரில் உள்ளது எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசதியான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வண்டி நிறுத்தம் முதற்கொண்டு, விளையாட்டு இடம், உடற்பயிற்சிக் கூடம் காற்றோட்டமான இயற்கை எழில் மிகுந்த தாவரங்கள் அமைந்த பூங்காக்கள், சிறிய அளவிலான திரைப்பட அரங்கம் போன்ற அனைத்து விதமான வசதிகளும் நிறைந்த அடுக்கு மாடி குடியிருப்பு பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கட்டமைப்புக் கொண்டதாக இருக்கும்.
அதனால், இங்கு வாடகையும் அதிகம், பராமரிப்பு கட்டணமும் வாடகையில் பாதி அளவிற்கு வரும். இன்றையத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த வாடகை, பராமரிப்புக் கட்டணச் செலவு என்பது சர்வ சாதாரணம். என் மகனும், மருமகளும் அவர்களின் இரு பிள்ளைகளையும் எங்களின் கவனிப்பில் விட்டு விட்டு ஆஸ்திரேலியாவில் பணிபுரிகின்றனர்.
“தாத்தா வாக்கிங் போகலாமா?” என்று பேரன் கேட்டான்.
பேரனும், பேத்தியும் மாலை நேரங்களில் என்னுடன் அங்குள்ள பூங்காவில் நடை பயிற்சிக்கு வருவார்கள். சென்னயை விட இங்கு பூங்காக்கள் மிக அழகாக இருக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லா வசதிகளும் இருந்தாலும், ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. காரணம் இங்கு வசிப்பவர்களின் கவனக் குறைவு, அலட்சியம், சோம்பேறித்தனம், பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை தருவதில் ஒரு தலைக்கனம். இப்படிப் பல வகையான காரணங்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம்.
என் மனைவி, ஒய்வு பெற்ற தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. பணியிலிருந்து ஓய்வுப் பெற்றாலும், இப்போதும் தனக்கு அனைவரிடமிருந்தும் (என்னையும் சேர்த்து தான்) அதிக அளவில் மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவள். ஒரு நாள் என் மனைவி பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டதைப் போன்று சத்தம் போட்டு என்னை அழைத்தாள்.
ஏங்க, “இங்கே வந்து பாருங்களேன், நம்ம பால்கனியில் என்னவோ இருக்கு. நாற்றம் தாங்க முடியவில்லை. இதை யார் செய்திருப்பார்கள்?” என்றாள்.
‘ஓடிச் சென்று பார்த்தேன். மட்டன் பிரியாணி பார்சல் செய்து வந்த அலுமினியப் பாயில்கள் இரண்டும், அதனுடன் ஒரு கவரில் அரை குறையாகச் சாப்பிட்டு விட்டுப் போட்ட மீதமுள்ள கோழியின் கால்கள் நான்கும் இருந்தது அந்தக் பிளாஸ்டிக் கவரில். துர்நாற்றம் வேறு. நாங்கள் சுத்தச் சைவம். ஆனால் எங்கள் வீட்டின் மேல் தளத்தில், கீழ் தளத்தில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் எப்படி என்று எங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. சென்னையிலிருந்து எங்கள் மகனின் வற்புறுத்தலால் பெங்களூர் வந்தோம். இங்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. இதுவரையிலும் பக்கத்தில் உள்ள யாரிடமும் பேசிப் பழகவேயில்லை.
“சரி சத்தம் போடாதே, நம் வீட்டில் வேலைச் செய்யும் பணிப்பெண் ராதா வந்தவுடன் சுத்தம் செய்யச் சொல்லலாம்”
“ஏங்க, ராதா இன்னிக்கு வேலைக்கு வர மாட்டா, நாளைக்குத்தான் வருவாள். அது வரையில் இதை இப்படியே விட்டு வைக்க முடியாது, என்னால் இந்த நாற்றம் தாங்க முடியல. நேற்று இரவு சாப்பிட்டு விட்டுப் போட்டிருக்கிறாங்க. ஏங்க, நீங்க மேல் போர்ஷன்ல இருக்கிறவங்ககிட்டப் போய் கேட்டுப் பாருங்களேன்”
“நான் யோசித்தவாறே, மேல் போர்ஷன் சென்று, அவர்கள் வீட்டுக் காலிங்பெல்லை அழுத்தினேன், கதவு திறக்கவில்லை பத்து நிமிஷம் ஆனது. ஒருவர் வந்து “என்ன வேண்டும்?” என்ற சைகையுடன், கன்னடத்தில் கேட்டார்.
எனக்குப் புரியவில்லை, ஏனெனில் எனக்குக் கன்னடம் தெரியாது’. கொஞ்சம் பொறுங்கள் என்று நானும் கை சைகையில் அவரிடம் கூறி விட்டு, கீழே வந்து, ஐந்தாவது படிக்கும் என் பேரன் அன்புவை மேலே அழைத்து வந்தேன். அவன், அவரிடம் கன்னடத்தில் கேட்டான்.
அதற்குள் உள்ளே இருந்த படியே இதைக் கேட்டுக் கொண்டிருந்த, ஒரு பெண்மணி வேகமாக வந்து, அவர் கணவரை “இந்தியில் கேட்டாள்”.
அவரும் இந்தியில், “பேஸ்மெண்ட் இறங்கிப் போய்ப் போடச் சோம்பேறித்தனம், அதனால் நம் வீட்டின் பால்கனியில் இருந்தபடியே கீழே போட்டேன், அது தவறி இவர்கள் வீட்டு பால்கனியில் விழுந்து விட்டது, நானும் கவனித்தேன்..!, கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்” என்று சாந்தமாக கூறினார்.
அவள் தன் கணவனை முறைத்தபடியே, “லிஃப்ட்டில் பேஸ்மெண்ட் போய் குப்பைத் தொட்டியில் கூட முடியலையா..? பேகூப்”, என்று இந்தியில் திட்டி விட்டு, பின்னர் “கன்னடத்தில் நாங்கள் யாரும் போடவில்லை” என்று கூறினாள்.
‘பேரன் அன்புக்கு இந்தி தெரியும் என்பது அந்த இருவருக்கும் தெரியாது’. ஏன்? எனக்கும் தான் தெரியாது..!, ஆனால் எனக்கு இந்தி தெரியும்.
“தாத்தா உங்களுக்கு இந்தி தெரியுமா?”, என்று அன்பு கேட்டான்.
“சற்று யோசித்தேன் பின் விளைவுகளை, தமிழைத் தவிர வேறு எதுவும் தெரியாது அன்பு” என்று கூறினேன்.
‘நல்லவேளை தாத்தாவுக்கு இந்தி தெரியல, தாத்தாவிடம் இவர்கள் இந்தியில் பேசிக் கொண்டதை நாம் கூறினால், பாட்டியிடம் கூறி விடுவார். அதனால் இவர்களுக்குள் சண்டை வரும் என்று அன்பு மெல்லிய குரலில் பேசிச் சிரித்துக் கொண்டே’, “வாங்கத் தாத்தா, இவர்கள் போடவில்லையாம்” என்று கூறினான்.,
அன்பு மெல்லிய குரலில் பேசியது எனக்குக் கேட்டதை மறைத்து, அன்புவின் நல்ல குணத்தைப் பாராட்டிக் கொண்டே, “சரி வா அன்பு போகலாம்”, என்று இருவரும் கீழே இறங்கி வந்தோம்.
“என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நேரம்? என்று என் மனைவி என்னைப் பார்த்துக் கோபமாகக் கேட்டாள். நான் என் பேரனைப் பார்த்தேன். அவன் தன் பாட்டியிடம் விவரம் கூறினான்.
“ஏன், அதற்கு மேல் உள்ள போர்ஷனில் உள்ளவர்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டியது தானே?” என்று சற்று அதட்டலாகப் பழைய தலைமை ஆசிரியை என்ற நினைப்பில், என்னைப் பார்த்துக் கேட்டாள்.
உடனே, பேரன் “பாட்டி..! அதுக்கு மேலே மொட்டை மாடி தான் இருக்கு” என்றான்.
அதுவே எனக்கு அப்போது தான் தெரிந்தது. ஆனால், தெரியாததை வெளியே காட்டிக் கொள்ளாமல், “சரி, சத்தம் போடதே, நானே சுத்தம் செய்து விடுகிறேன்” கூறினேன்.
“பாட்டி இதுக்குப் போய் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றீங்க? இதெல்லாம் இங்க சகஜம், நாம தான் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும்” என்று கூறிய அன்பு, அவனே அதனைத் தன் கைகளால் எடுத்து ஒரு கவரில் போட்டு, லிப்டில் எடுத்துச் சென்று கீழ்தளத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்தான்.
அவன் வந்தவுடன், அவனைப் பார்த்து, “அன்பு, டெட்டால் போட்டு இரண்டு கையும் நல்லா அலம்பு” என்று அவன் பாட்டி கூறினாள்.
“என்ன பாட்டி நீங்க? இதுக்குப் போய் டெட்டால் போட்டுக் கையை அலம்பச் சொல்றீங்க, இத நாங்க எத்தனை முறை ஓட்டலில் சாப்பிட்டு வந்திருக்கிறோம், எங்க டாடியும், மம்மியும் ஒரு தடவைக் கூட இப்படிச் சொன்னதில்லையே..?” என்று பேரன் அன்பு கூறினான்.
என் மனைவி கோபமாக என்னைப் பார்த்தாள்.
“டேய் அன்பு என்னடா சொல்றே? அப்ப உங்களுக்கு அசைவம் சாப்பிடற பழக்கம் இருக்கா?” என்று நான் கேட்டேன்.
அப்போது அங்கு வந்த எட்டாவது படிக்கும் பேத்தி ஷாலினி “காலைல சத்தமா என்ன வாக்குவாதம், எதைப் பத்தி? என்ன பண்றீங்க?” என்று கேட்டாள் தன் கண்களைத் தேய்த்துக் கொண்டே தூக்கம் கலையாமல்.
அன்பு அன்று, அங்கு நடந்ததை விவரமாகக் கூறினான். திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போன்று ஷாலினிக்குத் தூக்கம் கலைய, அதிர்ச்சியுடன் அவள் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தாள். “ஷாலினி நில்லு.. அன்பு சொல்றது உண்மையா?” என்று அவள் பாட்டி மிரட்டலாக கேட்டாள்.
ஷாலினி அன்புவை முறைத்துக் கொண்டே, “பாட்டி… உண்மை தான்.., ஆனா எங்க டாடியும், மம்மியும்தான்.. உங்க இரண்டு பேர்கிட்டேயும் அசைவம் சாப்பிடிறதப் பத்தி எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. மாசத்துக்கு ஒரு தடவை தான் சாப்பிடுவோம், அதுவும் ஓட்டல்ல தான், வீட்டில மம்மி செய்ய மாட்டாங்க, அவங்களுக்குச் செய்யவும் தெரியாதாம்..!” என்று ஷாலினி கூறினாள்.
ஏங்க, “உங்க பையனுக்குப் போன் போடுங்க” என்று என் மனைவி கோபமாகக் கூறினாள்.
“பாட்டி வேணாம் பாட்டி, தாத்தா, டாடிக்கு போன் பண்ணாதீங்க.. இனிமேல் நாங்க இரண்டு பேரும் அசைவம் சாப்பிட மாட்டோம்” என்று பேரனும் பேத்தியும் கெஞ்சுவதைப் பார்த்த என் மனசு மிகவும் இளகிப் போனது.
வாழ்க்கையில் முதல் முறையாக, என் மனைவியைப் பார்த்துச் சற்றுக் கோபமாக, “இந்தச் சின்ன விஷயத்தைப் பெரிசுபடுத்தாதே. நம்ம மேல மரியாதை வச்சி, எப்ப நமக்குத் தெரியக் கூடாதுன்னு அவங்க இரண்டு பேரும் நினைச்சாங்களோ., அப்பவே அவங்க செய்தது தப்புன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. இதப் பத்தி அவங்ககிட்டக் கேட்டு, நம்ம மரியாதையை நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம்..! இந்தப் பசங்கள பாரு பாவம்” என்று கூறினேன். முதல் முறையாக என் பேச்சைக் கேட்டுச் சமாதானம் ஆனார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையான என் மனைவி.
மறுநாள் ஒரு பெண்மணி, என் மனைவியின் இரண்டு புடவைகள் தங்கள் வீட்டு பால்கனியில் இருந்ததாகக் கன்னடத்தில் கூறி, உங்களுடையதா? என்று கேட்டாள்..
என் மனைவிக்கு பதில் சொல்ல தெரியவில்லை. பாட்டி பேரனை அழைக்க, உடனே என் பேரன் வந்து அவர்கள் கூறியதை தமிழில் மொழி பெயர்த்தான் பாட்டிக்கு.
“ஆமாம் என்னுடையது தான்” என்று கூறி வாங்கி கொண்டு நன்றி கூறினாள். அந்த பெண் சிரித்துக் கொண்டே சென்றாள்.
“பாட்டி பார்த்தீங்களா அவங்களை, எப்படி சிரித்துக் கொண்டே பேசினாங்க. எவ்வளவு அழகா, புடவையை மடிச்சி கொண்டு வந்து கொடுத்தாங்க. இங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. இப்படி தான் இங்கே ஒருவருக்கு ஒருவர் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்” என்று கூறினான். என் மனைவி தன் பேரனை வியப்புடன் பார்த்தாள்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings