in ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 4) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

தாமிரபரணித் தண்ணீர் நிலத்தடியில் ஊறும் நெல்லை மாவட்டத்தின்  சிற்றூர் சீதக்குறிச்சி அது. பெரும்பாலான வீடுகள் நான்குபுறமும் தாழ்வாரமும், நடுவில் பெரிய வாசலும் கொண்டவை.  தாழ்வாரத்தின் நடுவில் உள்ள வாசலில்  ஆழமான கிணறு  ஒன்று இருக்கும் அதில் சிறிய இரும்பு வாளி கட்டிவைத்த  தாம்புக்கயிறு ஒன்று சுற்றிய மர இராட்டினம் இருக்கும். அது சுழலும்போது கடகடவென எழும் ஓசை தண்டவாளத்தில் இரயில் செல்லும் ஓசையை நினைவூட்டும்.

மழைக்காலம், வெயில்காலம்  மாறி வந்தாலும் எப்போதும் குறையாமல்  நீர் நிறைந்தே இருக்கும். குளிப்பதற்கு துவைப்பதற்கு பகலில் ஆற்றுக்குப் போவார்கள். குடிப்பதற்கு ஒரு குடம் தண்ணீர் எடுத்து வருவார்கள், மற்றபடி இரவிலும் மாலையிலும் சமையலுக்கும் மற்ற புழக்கத்திற்கும் வீட்டுக் கிணற்றில் நீர் சேந்திக் கொள்வார்கள் அந்த ஊர் மக்கள்.

வாசலில் ஒரு பித்தளை அண்டாவில் நீரை நிறைத்து வைப்பார்கள். வயலுக்குச் சென்று வரும் ஆண்கள் இராட்டினத்தில் கட்டியுள்ள சிறிய வாளியில் நீரை கிணற்றிலிருந்து எடுத்து அப்படியே தலையில் ஊற்றிக் கொள்வார்கள். வேனற்காலத்தில் தண்ணீர் சில்லென்றும், மழைக்காலத்தில் தண்ணீர் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.

அன்றொரு நாள், மைத்துனர்  (தங்கையின் கணவர்)  புதிதாக வாங்கியிருந்த  உழவு மாடுகளைப் பார்ப்பதற்கு வரச்சொல்லியிருந்ததால் அன்னையையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பக்கத்துக் கிராமத்திற்கு புறப்பட்டிருந்தார் அன்னம்மாவின் கணவர்.

சாயந்திரம் தோட்டத்திலிருந்த மல்லிகை அரும்புகளையும், சம்பங்கியையும் பறித்துக் கொண்டு வந்த அன்னம்மா தாழ்வாரத்தில் உட்கார்ந்து அவற்றைக் கட்டி முடிக்க ஒருமணி நேரமாகி விட்டது. சாமி படங்களுக்கு வைத்துவிட்டு, தானும் தலைக்கு வைத்துக் கொண்டாள். பக்கத்து வீட்டு சொர்ணக்காவிற்கு பிடிக்கும் என்று  சம்பங்கிப்பூ  சரத்தை எடுத்துச் சென்று தந்துவிட்டு வந்தாள். மாடுகளுக்குத் தீவனம் வைத்துவிட்டுப் பண்ணையாளும் சென்று விட்டான்.

வெளியில் மாடத்தில் விளக்கேற்றி விட்டு பூஜை அறையிலும் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி கும்பிட்டாள். தனக்கு மட்டும்தான் இரவு  தோசை வார்த்தால் போதும் என்ற நினைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தாள். பித்தளை அண்டாவில் நீர் இல்லை, நிரப்பி வைக்கலாம் என்று கிணற்றில்  வாளியை இறக்கி விட்டு எடுக்கும்போது தாம்புக் கயிறு முறுக்கிக் கொண்டது. மேலே இழுக்க முடியவில்லை. அதை இப்படியும், அப்படியும் ஆட்டினால் பிரிந்துவிடும். அப்படி அதை அசைத்துக் கொண்டிருந்தாள்..

அப்போது திடீரெனப் பக்கத்து வீட்டில் கூச்சலும் குழப்பமும் கேட்டது. அதை அப்படியே விட்டு விட்டாள். வாளி சென்று கிணற்றில் தொப்பென்று விழுந்தது, ஆனால் அது அறுந்து மூழ்கி விடவில்லை, ஏனெனில் கிணற்றடி நீரின் ஆழம் போக மீதிக் கயிறு இராட்டினத்தில் சுற்றி கட்டி வைக்கப்பட்டிருந்தது என்னவாயிற்று? இப்போதுதானே பூ தந்துவிட்டு வந்தோம். சொர்ணா அக்காவும் கிழவியும் மட்டும் தான் வீட்டில் இருக்கிறார்கள். பதறிக் கொண்டு ஓடினாள் அன்னம்மா.

அங்கு, மனைவியைத் தன் அம்மாவிற்குத் துணையாக வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு ,மகன் சித்தார்த்தையும் மகள் கோகிலாவையும் மாரியம்மன் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தார் கோகிலாவின் அப்பா ராமசாமி. மாமியார் தொம்பையிலிருந்து நெல்லை எடுக்கச் சொல்லியிருக்கிறாள். அவள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது எப்படியோ உத்திரத்திற்கு வந்திருந்த பாம்பு மேலே விழுந்து கொத்தி விட்டது.

அவளை அவசரஅவசரமாக வைத்தியர் வீட்டிற்குத் தூக்கிச் செல்கிறார்கள். அன்னம்மா வைத்தியர் வீட்டுக்கு ஓடுகிறாள். அங்கு கோகிலத்தின் அம்மா ஒரு மரப்பெஞ்சில் கிடத்தப் பட்டிருந்தாள். ஏதேதோ மூலிகைகளை அரைத்துப் பூசியதோடு, முகரவும் செய்து கொண்டிருந்தார் வைத்தியர்.

இங்கு சொர்ணத்தைக் கொத்திய பாம்பு என்னவானதென்று நாம் போர்ப்போம். பண்ணையாட்கள் பாம்பைப் பார்த்து விட்டார்கள், அடிப்பதற்குக்  கம்பை ஓங்கியபோது, அது அடுக்கி வைத்த பானைகளின் இடுக்கில் புகுந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிவப்பு சதுரக்கல் பதித்த தரையில் வளைந்து நெளிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்த அறைக்குச் சென்று விட்டது.

‘ டேய் இது கட்டு விரியனாச்சே”

‘ஆமாம் ஆமாம், ஜாக்கிரதையாப் போடணும்’

‘பொல்லாதது, பட்டுனு நம்பளைப் போட்டுடும்’

‘நாலா பக்கமும் சுத்தி வளைப்போம்’

‘உருட்டு கட்டையைச் சரியாப் போடு’ என்று அச்சத்தோடு தேடிக் கொண்டிருந்தார்கள்

அங்கு ஒருபுறம் பழமையின் நேர்த்தி சொல்லும் தேக்குமரக்கட்டில் இருந்தது. இன்னொரு புறத்தில் எதிரும் புதிருமாக இரண்டு பெரிய தேக்குமர அலமாரிகள் இருந்தன, அவற்றின் கதவுகளில் மேல்பாதியில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. இத்தனை அமளிக்கு நடுவிலும் அகப்படாமல் ஆட்டம் காட்டியது பாம்பு.

கட்டிலின் அடியில் புகுந்ததைத் துரத்த அலமாரியின் அடியில் நுழைந்தது அங்கிருந்ததைப் பிடிக்க முற்பட்டார்கள். அலமாரியின் பின்புறம் சுவர் இருந்தது பாம்புக்குப் பாதுகாப்பாகி விட்டது, அது பின்புறமாகவே அலமாரியின் மேல் ஏறியது, கோவில்களில் உள்ள நாகராஜன் சிலை போல் தனது நீண்ட உடலை வட்டமாக சுற்றி வைத்துக் கொண்டு ஒரு அடி உயரத்திற்கு நெஞ்சை நிமிர்த்தி, தலையை இப்படியும் அப்படியும் அசைத்து மண்புழு போலிருந்த நாக்கை நீட்டியது.

இதுமட்டுமா

“ஓரே ஒரு முறை கொத்தியதற்கா இப்படித் துரத்துகிறீர்கள்.?”

‘மாட்டினீங்கன்னா விட மாட்டேன், களை கொத்தி மண்ணைக் கொத்தறாப்பல கொத்திடுவேன், ஜாக்கிரதை’ என்று சொல்வது போல் புஸ்,புஸ் என்று சீறியது.

ஒரு சிலருக்குச் சற்று பயம் அதிகமானது. ஆனாலும் ,காட்டிலும் மேட்டிலும் உழைப்பவர்கள், உனக்காச்சு ,எங்களுக்காச்சு, ‘இண்ணக்கி ஒன்னப் புடிக்காம வுடறதில்ல’ என்று சீறினார்கள்.

இந்த சமயத்தில் இரண்டு பேர் சத்தமில்லாமல் கூரையின் மீது ஏறி அந்த அறையில் சரியாக அலமாரியின் நேர் மேலே இருந்த ஓடுகளை அகற்றினர்.

வானிலிருந்த முழுநிலா, ‘விட்டுடாதீங்க கிரகணம்னு சொல்லி என்னை விழுங்கற பாவி இது’ என்று வெளிச்சம் தந்தது.

ஒரு கயிற்றில் சுருக்கு முடிச்சுப் போட்டு மெதுவாக இறக்கி அதன் தலையில் போட்டு கழுத்தை இறுக்கி விட்டனர், பாம்பு தன் நீண்ட உடலை நெளித்து வளைத்துப் போராடியது. வெகு எச்சரிக்கையாக அதைப் பிடித்து ஒதுக்குப்புறமாக கொண்டு சென்றனர். அகப்பட்ட திருடனைப் போகின்றவரும் வருபவரும் தர்ம அடி அடிப்பதுபோல் கம்புகளால் தாக்கினர்.

கிழிந்த துணிபோல் ஆனது பாம்பு. அந்த வீட்டு முதியவள், ‘ஏம்பா அடிச்ச பாம்பை மண்ண தோண்டிப் போட்டு மூடிட்டுப் பாலைத் தெளிச்சுடுங்க’

‘பெருசு, இது நல்லது இல்ல, விரியன்தான்’

‘அதுவும் ஒரு உசுருதானேடா, செய்யுங்க’

அதேபோல் மண்ணில் பாம்பைப் புதைத்துவிட்டு பாலைத் தெளித்து கற்பூரமும் காட்டிவிட்டு, ‘பெரீமா நாங்க வரோம்’ என்று கிளம்பிச் சென்றனர்.

வைத்தியர் வீட்டில், ”கட்டு விரியன் நல்லா போட்டுருக்கு, நல்ல வேளை, வெஷம் தலைக்கு ஏறல” என்று சொல்லிக் கொண்டே முயன்று காப்பாற்றி விட்டார். அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அதுவரையிலும் கூடவே இருந்த அன்னம்மா, சொர்ணத்தின் மாமியாரிடம், ”பெரீமா, உம் மருமவளை  நல்லாப் பார்த்துக்கோ” என்றவள், ”அக்கா  மாமா வர வரைக்கும் தூங்கிடாதே, காலைல வாரேன்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தாள்.  

ஏனோ பசிக்கவில்லை, அடுக்களையில் செப்புக் குடத்திலிருந்து ஒரு குவளை தண்ணீரை முகந்து குடித்து விட்டு வந்து பாயை விரித்துப் படுத்தவள் உடனே தூங்கிப் போனாள்.

அதற்குப் பிறகு ஒருவாரம் சகோதரிபோல் சொர்ணத்தின் உடனிருந்து உதவி செய்து பார்த்துக் கொண்டாள் அன்னம்மா.

இந்த ஒரு உதவிக்காகவே  அன்னம்மாவின் குடும்பம்  விவசாயம் நொடித்து பிழைப்புக்கு வழியில்லாமல் தவித்தபோது, தன் அம்மா சொன்னதற்காக, இங்கு அழைத்துவந்து வீடு பார்த்துத் தங்க வைத்து  நான்கைந்து மாதத்திற்கு வாடகையும் கொடுத்து வீட்டில் உதவிக்கு வைத்துக் கொண்டாள் கோகிலா.

கோபாலன் அன்னம்மாவின் கணவருக்கு மைதானத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கித் தந்தார். பிள்ளைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டார்.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 3) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 5) – மீனாட்சி சுந்தரமூர்த்தி