in ,

மேகம் விலகிய நிலவு!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கதவைத் திறந்ததும் எதிரில் நின்றவனைப் பார்த்து திகைத்தாள் சுபத்ரா. கண்ணியமான தோற்றத்தில் வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றவனை அதற்கு முன்பு பார்த்த மாதிரி அவளுக்கு தோன்றவில்லை. 

தயக்கத்துடன் ‘நீங்கள் ‘,என்றவளை  “உள்ளே போய் பேசலாமா?” என்று கேட்டான் அவன்.

“நான் கௌதம்” என்றவன்,” உங்கள் கல்லூரித் தோழி  வசுந்தராவின் மகன்”, என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

‘ஓ’ என்றவள், “ஒரு நிமிஷம் காஃபி எடுத்துட்டு வரச் சொல்றேன் , சாரு , இரண்டு காஃபி எடுத்துட்டு வாம்மா! ” என்று உள்ளே நோக்கி குரல் கொடுத்தாள்.

எதற்காக வந்திருக்கிறான் என்று உள்ளுக்குள் சிந்தனை ஓட அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

ஒரு வாரம் முன்னால் தான்  வசுந்தராவையும் மற்ற கல்லூரித்தோழிகளையும் சந்தித்திருந்தாள். வெகு நாட்களாக ப்ளான் செய்து போன வாரம்தான் பார்க்க முடிந்தது.

லதா யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தாள். வங்கிப் பணியில் சிலர் , ஆசிரியப் பணியில் சிலர், அரசாங்க, மருத்துவப் பணியில் சிலர் என்று எல்லோருமே களை கட்டினார்கள். வசுந்தரா மட்டும் தான் வீட்டுப் பறவையாகவே இருந்துவிட்டாள்.

எல்லோருமே தங்களைப் பற்றி ஒரு சுய அறிமுகம் செய்து கொண்டதால்  மகிழ்ச்சியாக இனிமையாக பொழுது போயிற்று.

‘மேடம்! ‘என்று அழைத்து அவள் சிந்தனையைக் கலைத்தான் கௌதம்.

‘என்னப்பா மேடம் என்று கூப்பிடறே! எனக்கும் உன்னைப் போல ஒரு பையன் இருக்கான். அம்மான்னு கூப்பிடு’.அவன் சிரித்தான். 

“தெரியும்மா! ராம் என்னோட ஃப்ரெண்ட் தான். அவன்தான் உங்களை பார்க்க  சொல்லி இங்கே அனுப்பினான். “

“ஏதாவது பர்சனல் மாட்டரா? “

அவள் லேசான சிரிப்புடன் கேட்க  “ஆமாம்மா! ஆனால் என்னோட விஷயம் இல்லை. வசும்மா பற்றி கொஞ்சம்  பேசணும். நீங்க கவுன்சிலிங் பண்ணுவீங்க அப்படின்னு ராம் சொன்னான்”.

அவள் வியப்புடன் பார்த்தாள். வசுவுக்கு என்ன பிரச்சினை இருக்கக் கூடும்! 

“உங்ககிட்ட பேசினா ஏதாவது செய்ய முடியுமானு பார்க்கணும்”.

“என்னப்பா ஆச்சு வசுவுக்கு ! நல்லாத் தானே இருந்தாள்.”

அவன் ஒரு நிமிடம் மௌனம் சாதித்தான்.

“எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியலை. ஆனா சொல்லணும்னு தோணுது.”

“என்ன என்றாலும் முதலில் சொல்லு!” என்றாள் சுபத்ரா.

“முதல்லே உங்களுக்கு எங்க குடும்பத்தோட அமைப்பு தெரியணும். என்னோட அப்பாவுக்கு மூன்று தம்பி மூன்று தங்கைகள். அம்மா கல்யாணம் ஆகி வந்ததிலிருந்து நிறைய பொறுப்புகளை சுமந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் அப்பாவும் அம்மாவும் சேர்ந்துதான் செய்தார்கள். இன்னிக்கு எல்லோருமே நல்ல வசதியாக இருக்கிறார்கள்.  சித்தப்பா, அத்தை எல்லோருமே வசும்மா என்றுதான் கூப்பிடுவார்கள். அம்மா அவர்களுக்கு எல்லாம் அவங்க அம்மாவை விடவும் ஒரு படி மேல்தான்.” 

அவன் சொல்ல சொல்ல சுபத்ரா வியந்து போனாள். 

“நிஜமாவே வசு கிரேட் தான்!”

“இதுவரைக்கும் அம்மா எதுக்கும் கவலைப்பட்டதோ யோசித்ததோ இல்லை. ஆனா உங்களை எல்லாம் பார்த்துட்டு வந்தப்புறம் ஒரு மாதிரி மனசு வெறுமையாக ஃபீல் பண்ணுறாங்க.  தான் என்னவோ தன் வாழ்க்கையில் தோத்துப் போயிட்ட மாதிரி நினைக்கிறாங்க.  நீங்கள் எல்லோருமே வேலை பார்த்து சௌகரியமாக இருந்திருக்கிறீர்கள். அம்மா மட்டும் அப்படி இருக்கவில்லை என்று வருத்தப் படுகிறார்கள். நான் எப்போதும் ஒரு பூஜ்யமாக இருந்திருக்கிறேன் என்கிறார்கள்”.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து  விட்டு மறுபடியும் தொடர்ந்தான் கௌதம்.

“எங்கம்மா ஒரு தேவதை. எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பாங்க.‌ எத்தனையோ கஷ்டங்களை சவால்களை  எளிதாக கடந்து வந்திருக்கிறார்கள். தனக்கென்று எதையுமே எடுத்துக் கொண்டதில்லை .எங்களையுமே அப்படித்தான் வளர்த்தார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட இருக்காது. ஒருவருக்கு மட்டும் புது டிரஸ் எடுக்க முடியாது  என்று சொல்லி விடுவார்கள். அதற்காக நாங்கள் யாருமே வருத்தப் பட்டதில்லை. அத்தனை அழகான கூட்டுக்குடும்பம்”.

அவன் சொல்ல சொல்ல சுபத்ரா யோசிக்க ஆரம்பித்தாள். 

“ஒருவேளை இப்படி இருக்குமோ! எங்களைப் போல வேலை பார்க்கவில்லை என்று நினைக்கிறாளோ என்னவோ! சொல்லப் போனால் அவளுடைய திறமைக்கு அவள் எவ்வளவோ உயரத்தை எட்டியிருப்பாள்”.

“அதேதான் !  இதுவரைக்கும் இந்த மாதிரி அவங்க ஃபீல் பண்ணினதே  இல்லை. இப்போ என்ன செஞ்சு இல்லை சொல்லி அவங்களை  பழையபடி கொண்டு வரதுன்னு தெரியலை. ஏதோ இவ்வளவு நாள் தான் ஏதோ ஒரு இருட்டில் இருந்த மாதிரி  மனசு கஷ்டப்படுகிறாங்க”.

சுபத்ராவால்  சட்டென்று வசுந்தராவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.

வாழ்க்கை என்கிற நீரோட்டத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. ஆற்றின் போக்கிலேயே எளிதாக சிலரது எண்ணங்கள் நிறைவேறிவிடுகிறது.பலர் போராடித்தான் தங்களுக்கான இடத்தை பெறுகிறார்கள். 

வசுந்தரா தனக்கான வாழ்க்கையில் மூழ்கிப் போயிருந்தவள், ஒருகட்டத்தில் தன்னுடைய பழைய தோழிகளைப் பார்த்ததும் சுயபச்சாத்தாபத்தில் சுருண்டு போயிருக்கிறாள். தன்னுடைய தோழிகள் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்ற வருத்தமும் கழிவிரக்கமும்  ஆட்கொண்டு விட்டன.

“இதை எளிதாக சரி செய்து விடலாம் கௌதம். நாளை நான் வந்து வசுவிடம் பேசுகிறேன்”.

“சரியாகி விடுவார்களா?” கவலையுடன் கேட்ட கௌதமை தட்டிக் கொடுத்து அனுப்பினாள்.

“சின்ன பின்னடைவு ! அவ்வளவுதான் ! நாளை பார்க்கிறேன்.”

 சுபத்ரா தன் வீட்டுக்கு வருவதாக சொன்னதும் வசுந்தரா ஆச்சரியப்பட்டாள்.

“என்ன திடீரென்று !”

“அந்தப் பக்கம் எனக்கு ஒரு வேலை இருக்கு! உன்னையும் பார்க்கலாம் என்று நினைத்தேன்”.

“ஓ! வா! வா!  “என்று அனுமதி கொடுத்தாள்.

அவள் வீட்டை பார்த்ததும் சுபத்ரா வியந்து போனாள்.. மரங்களும் பூச் செடிகளும்  சுற்றி அமைந்திருக்க தனியாக  இரண்டு மாடிகளுடன் அழகாக காட்சி அளித்தது.

“ஃப்ளாட்களை  பார்த்து பார்த்து இந்த மாதிரி வீடு பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது”.

“மாமரம் கொய்யா மரம், பலா மரம் கூட இருக்கிறது”. தோட்டத்தை சுற்றி வந்தபோது  வசுந்தரா  சுட்டிக் காட்டினாள். 

“மாங்காய் நிறைய காய்க்கும்போது எல்லோருமே வருவார்கள். வீடே கலகலப்பாக இருக்கும். ஊறுகாய், தொக்கு என்று நாங்களே பண்ணுவோம். அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் சேர்ந்து கொள்ளுவோம்”.

“சந்தோஷமாக இருக்கு.‌ இன்னிக்கு இந்த மாதிரி கூட்டுக்குடும்பம் பார்க்கிறது ரொம்ப கஷ்டம்”.

பேசிக்கொண்டே உள்ளே வந்தார்கள்.  வீடும் கன கச்சிதமாக அழகாக இருந்தது. சுபத்ரா வாய் விட்டு பாராட்டினாள்.

“எல்லோரோடும் பேச வேண்டி இருந்ததால் அன்றைக்கு நிறைய  தனியாக உன்னிடம் பேச முடியவில்லை. இன்னிக்கு உன்னோட கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று வந்தேன்”.

“எனக்கும்  எல்லோரையும் பார்த்தது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனா அந்த ராகவிதான் தான் வேலை பார்க்கிறதை பெருமையா சொன்னதோடு இந்த காலத்திலும் வீட்டோட இருக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க அப்படின்னு சொன்னது மனசுக்கு கஷ்டமாயிடுச்சு”.

“அவ எப்பவுமே தன்னைப் பத்தி பெருமையா நினைக்கிறவ‌. மத்தவங்களை மட்டம் தட்டி பேசுவது அவளோட குணம். அதுக்காக நீ எதற்கு வருத்தப்படணும்?”.

“அப்படி இல்லை.  ஆனா அவள் சொன்னதும் உண்மைதானே! எனக்கே என்னை பிடிக்காமல் போய்விட்டது”.

எழுந்து வந்து அவள் தோளில் தட்டினாள் சுபத்ரா. 

“இதோ பார் ! இயந்திரமயமா வாழ்ந்திருக்கோம். ஒரு குடும்ப நிகழ்ச்சி கூட ஒழுங்கா கலந்துக்க முடியலை. பிள்ளைங்களோட  ஸ்கூல் மீட்டிங் கூட போகமுடியாது. எப்பவும் ஏதாவது ஒரு சுமை தலை மேல் இருந்து கொண்டுதான் இருக்கும். உனக்கு வேலை பார்க்கும் அவசியம் இருக்கவில்லை.‌அதனால் நீ என்ன குறைந்து போய்விட்டாய்? “

“கல்யாணம் ஒரு தளை ! வேலை இன்னோரு தளை . இரண்டு விலங்குகளை  கையில் மாட்டிக் கொண்டு எவ்வளவோ போராடி இருக்கிறோம். நீ சந்தோஷமாக குடும்பம் நடத்தியிருக்கிறாய். குறிப்பாக இந்த குடும்பம் உடையாமல் கட்டிக் காத்திருக்கிறாய்! அது பெரிதில்லையா?”

“இருந்தாலும்!” என்று  ஏதோ சொல்ல வந்தவளை இடை மறித்து சுபத்ரா பேசினாள்.

“உன்னையே ஒரு தேவதைன்னு  உன் பையன் சொன்னான். ஸப்போஸ், ஒரு தேவதை வந்து உன்னுடைய வாழ்க்கையில் ஒரு முப்பது வருஷத்தை மறுபடி தரேன் அப்படின்னு சொன்னா நீ என்ன பண்ணுவே!”

கூர்மையாக தன்னைப் பார்த்தவளை  தயக்கத்துடன் ஏறிட்டாள் அவள்.

திருமணம் புரிந்து கொண்டு வந்த நாளிலிருந்து கொண்டாடும் கணவன் வீட்டார் மனதில் வந்து போனார்கள்.  வேலை என்று வெளியே போக வில்லையே  தவிர  வீட்டில் எல்லோருக்கும் அவள் இன்றியமையாதவளாக பிரியமானவளாகத்தான்  இருந்தாள். 

மாமியாருடன் சேர்ந்து அத்தனை பேருக்கும் சமைத்ததும், மாமனார் கொடுத்த ஸ்டேட்மெண்ட்களை வீட்டிலேயே டைப் அடித்துக் கொடுத்ததும் திருமணங்களில் உற்சாகமாக பங்கெடுத்ததும் மனக்கண்ணில் தோன்றின. 

“நானே சொல்லட்டுமா? உன்னால்  சுயநலமாக முடிவெடுக்கவே முடியாது. சில பேரோட இயல்புகளை மாற்றவே முடியாது. தேரோட்டி மகன் என்று வாழ்நாள் முழுவதும் அவமானங்களை சுமந்து எத்தனையோ நியாயமான உரிமைகள் கூட கிடைக்காமல் தவித்து கஷ்டப்பட்ட கர்ணன் குந்தி தேவி வந்து நான் தான் உன் தாய் என்று சொன்னபோது , “இந்தா ! துரியோதனா ! உன் ராஜ்யம்.‌ நான் என் அம்மா கூட போகிறேன்”, என்று ஏன் சொல்லவில்லை! அநியாயங்களையே நியாயப்படுத்துவதைப் போல நியாயமான காரணம் இருக்கும் போது ஏன் மறுத்தான்!. நட்புக்காக  மட்டும் இல்லை  . தன்னுடைய மனது சொன்னபடி தான் நடந்தான் இல்லையா?”

“ஏகலைவனை எடுத்துக் கொள்ளேன்! துரோணர் கேட்ட உடனே கட்டை விரலை காணிக்கையாக கொடுக்க வேண்டுமா என்ன? அவனுடைய வில்லாற்றலால் துரோணரையே கட்டிப் போட்டிருக்க முடிந்திருக்காதா என்ன! குருபக்தி என்று சொல்ல நேரிடையாக கற்றுக் கொள்ளவும் இல்லை.  எளிதாக மறுத்திருக்கலாம்”.

“இவங்க இரண்டு பேரும் சொந்த வாழ்க்கையிலே தோத்துப் போனவங்க. ஆனா  இன்னிக்கும்  காலத்தை  கடந்து ஜொலிக்கிறாங்க பாத்தியா! சில‌பேரால் தான் தன் சுகம் என்று எப்போதுமே நினைக்க முடியாது. நீயும் அப்படித்தான். வேலை பார்த்ததால் நாங்கள் உசந்தவர்களும் இல்லை.‌பார்க்காததால் நீ ஒன்றும் குறைந்தவளும் இல்லை.

சொல்லப் போனால் எங்களைப் போன்றவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.‌ உன்னை மாதிரி குடும்பத்துக்காக வாழ்பவர்கள்  ஆயிரத்தில் ஒருத்தி கூட இருக்க மாட்டார்கள். பூஜ்யம்னு சொல்லிக்கிட்டாலும் அதுக்குள்ளேயும் ஒரு ராஜ்யத்தை நிறுவி ஆண்டிருக்கிறாய். உன்னை என் தோழி என்று சொல்ல நான் தான் பெருமைப்பட வேண்டும்”.

உணர்ச்சி ததும்பும் குரலில் பேசிக் கொண்டே எழுந்து நின்றாள் சுபத்ரா.

“பெருமைக்கும் ஏனை  சிறுமைக்கும்தத்தம் கருமமே கட்டளைக் கல்!”என்று திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார் தெரியுமா?

அவள் பேச பேச வசுந்தராவின் முகத்தில் ஒளி பரவியது.  சிரித்துக்கொண்டே தோழியின் கரங்களை பற்றி அணைத்துக் கொண்டாள். 

“நன்றி! சுபா! கொஞ்சம் மனசு துவண்டு போயிடுச்சு!.”

“இப்போ சரியாயிடுச்சா!” என்றவள் கலகலவென்று சிரித்தாள். அந்த சிரிப்பு வசுந்தராவையும் தொற்றிக் கொண்டது.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சரியான நேரத்தில் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    கீழோராயினும் தாழ உரை (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை