எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலை சூரியன் அவளின் போர்வைக்குள்ளேயே ஊடுருவி கண்களை கூசச் செய்ததால், மெல்ல சலிப்பாக எழுந்தாள் அவள். சுற்றும் முற்றும் பார்த்தால், மொட்டை மாடியில் அவள் மட்டும்தான் இருந்தாள். கடைவாயில் ஒழுகிய எச்சிலை வலது கையில் முகத்தை திருப்பி துடைத்துக் கொண்டு அதை முகர்ந்து பார்த்தாள்.
பூப்போட்ட சீட்டி பாவாடை, அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத தொள தொளா சட்டை, வாங்கிய போது சிவப்பாய் இருந்த ரிப்பன் இப்போது அழுக்கேறி கருஞ்சிவப்பாக காட்சியளித்தது. அதிலும் ஒன்று மடித்துக் கட்டியவாக்கிலும் மற்றொன்று அவிழ்ந்து தொங்கி கொண்டும் இருந்தது. படுக்கையை மடித்து விட்டு, யாரும் அறியா வண்ணம் மாடியிலிருந்து கீழே பார்த்தாள்.
அவள் பெயர் தெய்வானை. பக்கத்திலிருக்கும் அரசு துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். பெற்றோர்கள் இல்லை. கூலி வேலைக்கு செல்லும் அம்மாச்சியின் வளர்ப்பில் உள்ளாள்.
அது ஒரு லைன் வீடு. ஆறு வீட்டுக்கும் சொந்தக்காரிதான் அருக்காணி ஆயா. சரியான சண்டைக்காரி. அறுபது அறுபத்தைந்து வயதிருக்கும். நெடு நெடு உயரமும் தாட்டியான உடல்வாகும் கசங்காத சேலை மடிப்பும் கொண்டவள். எல்லா முடியும் நரைத்திருந்தாலும் தேங்காய் எண்ணெய் பூசி பிசிறில்லாத வகிடு எடுத்து கோடாலிக் கொண்டை போட்டிருப்பாள். கழுத்தில் மாணிக்க கல் பதித்த ஒரு அட்டிகை எப்போதும் இருக்கும். காதில் வைரக்கல் தோடு.
கண்களில் எப்போதும் ஒரு குரூரம் நிறைந்திருக்கும். அவள் வாயைத் திறந்து பேசும் வார்த்தைகளை அச்சிலேற்ற முடியாது. கெட்ட வார்த்தைகளுக்கு காதும் கையும் இருந்தால் இந்நேரம் அவைகள் அவள் பேசும் வார்த்தைகளுக்கு காதுகளை மூடிக் கொள்ளும். இதனாலே அவளிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். கிழவியின் கழுகுப் பார்வையிலிருந்து யாரும் எதுவும் தப்ப முடியாது. தெய்வானைக்கு அவளை பார்த்தாலே புராண காலத்து படத்தில் வரும் அரக்கியை பார்த்தது போல் இருக்கும்.
அருக்காணி ஆயாக்கு ஒரு பழக்கம், காலையிலேயே தாயம் விளையாட ஆள் தேடுவாள். அதற்கு முன் ஆறு மணிக்கு டீ குடித்தாக வேண்டும். அவளின் மூத்த மருமகன் தான் தெரு முக்கில் டீக்கடை வைத்துள்ளான். லைன் வீட்டு சிறுவர்கள் எவரையேனும் ஏவி விட்டு டீ வாங்கி வர சொல்வாள். பெரும்பாலும் மாட்டுவது தெய்வானையாகத் தான் இருக்கும்.
கிழவி டீக்கு காசு கொடுக்க மாட்டாள். மருமகனுக்கு ஓசி டீ கொடுக்க மனமில்லை. எனவே கால் கடுக்க காக்க வைப்பான். அதற்கு அஞ்சியே தெய்வானை அங்கே போகாமலிருக்க, அருக்காணி கண்ணில் படாமல் இருப்பாள். இப்போது கூட அவள் கீழே இருக்கிறாளா என்று தான் தேடுகிறாள்.
பாவம் இன்றும் அவள் மாட்டிக் கொண்டாள் கிழவியிடம். அவளுக்கு டீ வாங்கி கொடுத்து விட்டு பள்ளிக்கு கிளம்பினாள். கிளம்பும் போது அருக்காணி அவளை கூப்பிட்டு கையில் காசு கொடுத்து, “தீனி ஏதாவது வாங்கி தின்னு ” என்றாள்.
“வேண்டாம். எங்க ஆயா திட்டும்” என்றபடி பையை தூக்கிக் கொண்டு தெய்வானை ஓடினாள்.
“ம்க்கும். இந்த புள்ள எப்பவும் இப்படித் தான் காசு கொடுத்தா கூட வேண்டாம்ங்குது, மத்த பசங்க எல்லாம் காசு பத்தலன்னு கேட்டு வாங்கிட்டு போறானுங்க” என்றபடி தாயம் விளையாட ஆளைத் தேடினாள்.
மாலை பள்ளி முடிந்து யூனிபார்ம் கூட மாற்றாமல் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் தெய்வானை. விடுவிடுவென்று வந்த அவளின் அம்மாச்சி அவளை தரதரவென்று இழுத்து வந்து அவளின் வீட்டு முன் அடித்துக் கொண்டிருந்தாள். எதற்கு அடி வாங்குகிறோம் என தெரியாமலேயே வலி தாங்காமல் கதறினாள் தெய்வானை.
அக்கம் பக்கத்து பெண்கள் தடுத்தும் முடியவில்லை. பிடியிலிருந்து தப்ப முயன்றவளை, அருகிலிருந்த விளக்குமாற்றால் நையப் புடைத்தாள். சத்தம் கேட்டு வந்த அருக்காணி, “இந்தாம்மா எதுக்கு அந்த புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிற?”
“இந்த தட்டுவாணி சிறுக்கிட்ட எத்தனை தரம் சொல்லிருப்பேன், யார் வீட்டுக்குள்ளயும் போக் கூடாதுனு, நேத்து என் மவனோட வீட்டுக்கு போயிருக்கா, இவ வந்தப்புறம் தான் தங்க மோதிரத்தை காணோம்னு என் மருமவ சொல்றா. இப்ப பரிசோதனை போடத் தான் அவ இங்க வந்துட்டுருக்கா.”
“அம்மாச்சி! நான் எதுவும் எடுக்கலை”
அதற்குள் அம்மாச்சியின் மருமகள் தோரணையுடன் வந்தாள். வீட்டிலிருந்த ஒரே துருப்பிடித்த டிரங் பெட்டிய திறந்து காட்டி, “இதுல நீயே பாத்துக்க ஆத்தா! திருடித் திங்கிற பழக்கம் என் வம்சத்துல யாருக்கும் இல்லை.”
எல்லாவற்றையும் பார்த்த அருக்காணி மருமகளிடம், “ஏம்மா இந்தப் புள்ள மோதிரத்த எடுத்தத நீ பார்த்தியா?”
“இவ வந்துட்டு போன பின்னாடி தான் மோதிரம் காணாம போச்சு”
“நேத்து நீ மசுர வெட்ட போறப்ப அந்த கடைக்கார பொம்பள சொன்னானு எல்லா நகையையும் கழட்டி உன் லம்பாடி பைல தான போட்ட? மூஞ்சி பூரா என்னத்தையோ அப்பிட்டு கெடந்தயே? நான் வாடகை வசூல் பண்ண வரப்ப பார்த்தேன் .உன்னோட அந்த பைல பாரு”
மருமகள் தன் கைப்பையின் அடியிலில் துழாவவும் மோதிரம் தட்டுப்பட்டது. அவளின் முகமும் வெளிறியது.
அருக்காணி அம்மாச்சியை பார்த்து, “செய்ற வேலைக்கு காசு கொடுத்தாலே வேணாம்னு சொல்ற புள்ள நகைய திருடுமா? நீ ரோசணை பண்ண வேணாம்?”
அருக்காணியின் வாய்க்கு பயந்து மருமகள் மெதுவாக அங்கிருந்து நழுவினாள். அழுது கொண்டிருந்த தெய்வானையை அம்மாச்சி கட்டி பிடித்து அழுதாள். தெய்வானையின் கண்களுக்கு அருக்காணி ஆயா இப்போது தேவதையாக தெரிந்தாள்.
எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings