in ,

எனக்கொரு மகன் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ள்ளிக்கு வலி வந்துவிட்டதென்று மாமியார் ஃபோன் பண்ணிவிட்டார்கள். முதலில் வள்ளியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். மொபைலைத் திறந்து கால் டாக்ஸி ஆப்பில் ஒரு டாக்ஸி புக் செய்துவிட்டு மாமியாருக்கு ஃபோன் போட்டான்.

‘ அத்தை… கால் டாக்ஸி புக் பண்ணியிருக்கேன். உங்க நம்பர்தான் குடுத்துருக்கேன். அஞ்சு நிமிஷத்துல டாக்ஸி வந்துடும். வந்ததும் தாமதிக்காம ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போயிடுங்க… எங்க மேனேஜர் ஒரு மீட்டிங்க்ல இருக்கார்… அவர் வந்ததும், நான் சொல்லிட்டுக் கிளம்பிடறேன்….  ‘

அவனது சொந்த ஊர் தஞ்சாவூர். பெண் எடுத்தது திருச்சி. தனது தாய்வீட்டுக்குப் பக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு அவனை திருச்சிக்கு மாற்றல் வாங்க வைத்து விட்டாள் வள்ளி.

அவனது அம்மா சொல்லியிருந்தார்கள், ‘ பார்டா… மாமியார் ஊர் பக்கம் மாற்றிக்கிட்டு போறது சரி… ஆனா வாடகை வீடு எடுத்து தங்கிக்கோ… வாடகை மிச்சம்னு மாமியார் வீட்டுல தங்கிடாதேடா… புரிஞ்சுதா … ?‘

வாடகை வீடுதான் எடுத்துக் கொண்டான்.  ஆனாலும், ஞாயிறு வந்தால் மனைவியுடன் மாமியார் வீட்டுக்குப் போய்விடுவான்.

அடுத்த வருடமே வள்ளி உண்டாகிவிட்டாள்.  அவளுக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பையன்தான் வேண்டுமென்று ஆசை.

அடிக்கடி பாடிக்கொள்வான், ‘ எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்… ‘ என்று.

‘ பொண்ணுதான் பொறக்கப் போவுது… ‘ என்றாள் செல்லமாய்.

அவனோ மறுத்து, ‘ இல்லை இல்லை… பையன்தான்… அதுவும் என்னைப் போலவே… ‘ என்றான்.

அவனது கன்னத்தைத் தட்டி, ‘ ஆசையைப்பாரு…  ‘ என்றவள், உடனே சொன்னாள், ‘ வேணுமானா முதல்ல எனக்காக ஒரு பொண்ணு, அடுத்தது உங்களுக்காக ஒரு பையன்… சரியா… ஆனா அதுக்கப்புறம் என்னை நீங்க தொல்லைப் பண்ணக்கூடாது… ‘ என்றாள் செல்லமாய்.

ஏழாவது மாதம் வளைகாப்பு விழா நடத்தி அம்மா வீட்டுக்கேக் கூட்டிப் போய்விட்டார்கள்.

‘ தம்பி… இனிமே வள்ளி உங்க வீட்டுல இருக்கக் கூடாது.  நீங்க கூட  தனியா அங்கே இருந்து கஷ்டப் படவேணாம்… வீட்டைக் காலி பண்ணிட்டு இங்கேயே வந்திடுங்களேன்…  ‘ என்றார்கள் மாமியார்.

இவன் முழுமனதாய் மறுத்தான். ‘ இல்லே அத்தை… ஆபீஸ்க்கு பக்கமா இருக்கறதால நான் அங்கேயே தங்கிக்கறேன்… எப்போவும் வர்ற மாதிரி சண்டே சண்டே வந்து பார்த்துட்டுப் போறேன்… ‘ என்றான்.

மேனேஜர் கேபினுக்குள் வந்ததும் ஓடிப்போய், ‘ ஸார்… ஏன் மிஸஸுக்கு டெலிவரி… முன்னேயே ஃபோன் வந்துச்சு… நீங்க வர்றதுக்காக  காத்துக்கிட்டிருந்தேன்… அரை நாள் பர்மிஷன் வேணும் ஸார்… ப்ளீஸ்… ‘  என்றான் பதட்டத்துடன்.

சிரித்துக்கொண்டே, ‘ வாழ்த்துக்கள்… ‘ சொன்னவர், ‘ ஆனா அதுக்காக எனக்காக காத்துக்கிட்டு இருந்திருக்கீங்க பாருங்க… நாட் குட்… கிளம்புங்க உடனே… ‘ என்றுவிட்டு, ‘ பணம் ஏதும்… ‘ என்றும் இழுத்தார்.

‘ தேங்க்ஸ் ஸார்… இருக்கு… ‘ என்றுவிட்டு உடனே படிகளில் இறங்கி ஓடிப்போய் புல்லட்டை எடுத்து முடுக்கினான்.

‘ எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்… ‘ மனதுக்குள் அந்தப் பாட்டு தானாக ஓடியது.

மொபைல் சிணுங்கியது. மாமியார்தான்.

‘ தம்பி… குமரன் ஆஸ்பிட்டல்க்கு வந்துட்டோம். வந்ததுமே வள்ளியை லேபர் ரூமுக்குள்ளே கூட்டிட்டுப் போய்ட்டாங்க… அஞ்சு நிமிஷம் ஆச்சு, உள்ளே கூட்டிட்டுப்போயி. நான் கீழே வந்துட்டேன், காஃபி வாங்கறதுக்காக. வள்ளிக்கு கொடுக்கனுமாம்… கேண்டீன்ல நின்னுதான் பேசிக்கிட்டிருகேன்… சீக்கிரம் வந்துடுங்க… ‘

‘ சரியத்தை… வந்திட்ட்டே இருக்கேன்… ‘

இவனது ஆபீஸ் இருப்பது கைலாசபுரம். வள்ளி வீடோ சங்கிலியாண்டபுரம். அவர்களது வீட்டிலிருந்து பக்கம்தான் அந்த ஆஸ்பத்திரி.

செம டிராஃபிக் என்பதால் சந்து பொந்துகளில் புகுந்து பறந்தான். சென்னை பைபாஸைத் தொடும்போது மாமியார் மறுபடியும் கூப்பிட்டார்கள்.

’ வந்துட்டிருக்கீங்களா தம்பி…’

‘ ஆமா அத்தை… செம டிராபிக்… இன்னும் பத்து நிமிஷமாவது ஆகும், அங்கே வந்து சேர… பார்த்துக்கங்க… ‘

‘ சரி தம்பி… பார்த்து வாங்க… நான் பார்த்துக்கறேன்… இப்போதான் ரூம் கொடுத்தாங்க… முதல் மாடில… ரூம் நம்பர் நாலு… பையெல்லாம் கொண்டு வந்து வச்சிட்டேன். டெலிவரியானதும் இங்கேதான் கூட்டிட்டு வருவாங்களாம்… சரியா…  ‘

‘ சரியத்தை…  ‘

ஒருவழியாக ஆஸ்பத்திரியை நெருங்கி வண்டியை நிறுத்திவிட்டு ஓடினான்.

‘ சிஸ்டர்… முதல் மாடி…?  ‘

‘ கொஞ்சம் முன்னே போயி ரைட்ல பாருங்க… பேபி ஷாப் ஓன்னு இருக்கும் பக்கத்துலையே லிஃப்ட்டும் படிக்கட்டும் பக்கம் பக்கமா  இருக்கும்… முடிஞ்சா படிக்கட்டை யூஸ் பண்ணிக்கங்க… ‘

படிகளில் ஏறி ஓடினான்.  நேரே நான்காம் நம்பர் ரூம் தெரிந்தது. மாமியார் கையில் குழந்தையுடன் வெளியே வந்தார்கள்.  ஆனால் இவனைக் கவனிக்கவில்லை. குழந்தையைக் கொஞ்சிக்கொண்டே நடந்தார்கள்…  ‘ தம்பிப்பையா… பாட்டியைப் பாருங்க… தம்பிப்பையா… சிரிங்க… அழாதீங்க… ‘

சட்டென ஒரு யோசனை வந்தது.  முதலில் பையனுக்கு டிரெஸ் சோப்பு பவுடர் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து அப்புறம் பையனைத் தூக்கலாம்… அப்படியே திரும்பினான்.

லிஃப்ட்டுக்குள் நுழைந்ததும் எண்ணம் ஓடியது, பையனை மஞ்சள் துண்டு போட்டு போர்த்தியிருந்தார்களோ… வள்ளிக்கு பிங்க் கலர் துண்டுதான் பிடிக்கும். பையனுக்கும் அதே கலரில் துண்டு வாங்கலாம்…  

மாடிப்படிகள் அருகே ஒரு பேபி ஷாப் இருந்ததை மேலே வரும்போதே  பார்த்திருந்தான்.  அங்கே ஓடிப்போய் வேண்டியதைச் சொன்னான்.

‘ தம்பியைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு அப்புறம் வந்திருக்கலாமோ…  ‘ என்று இப்போது ஓடியது.

‘ நம்மைப் போலவே இருப்பானா… முகத்தை ஒருதடவை பார்த்திருக்கலாமோ… ஒருவேளை வள்ளியைப் போல இருப்பனா… ‘ தனக்குள் கேட்டுக்கொண்டான்.

‘ ஸார்… இங்கே பாருங்க… ஏதோ யோசனையில இருக்கீங்க போல…. ரெண்டு தடவை கூபிட்டுட்டேன்… இந்தாங்க பில்… கடைசி கவுண்ட்டர்ல போயி பணத்தைக் கட்டுங்க… ‘ என்றாள் சேல்ஸ் பெண்.

பில்லை கடைசி கவுண்ட்டரில் கொடுத்து அங்கே இருந்த க்யூ ஆர் கோடில் ஸ்கேன் செய்து பார்சலை வாங்கிக்கொண்டான். திடீரென்று சார்ஜ் தீர்ந்து போய் மொபைல் ஆப் ஆனது. அதைப் பொருட்படுத்தாமல் லிஃப்ட்டுக்காகவும் காத்திருக்காமல் படிகளில் ஏறி ஓடினான்.

நேரே நாலாம் நம்பர் ரூமை அடைந்தான். கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்தது வேறொரு பெண்மணி.

‘ ஸாரி… தப்பா வந்துட்டேனோ… ‘ அவன் தடுமாறினான்.

‘ ரூம் நம்பர் தம்பி… ‘

‘ நாலு… ‘

சொல்லிக்கொண்டே கதவு நிலையில் இருந்த ரூம் நம்பரையும் பார்த்துவிட்டான்.   நான்கே தான்.

‘ இந்த ரூம் தான் தம்பி… ஆங்… இங்கே ஒரு பெரியம்மா இருந்தாங்களே… அவங்களோட சொந்தக்காரங்களா, நீங்க… ‘

‘ ஆமா அவங்க என் மாமியார்… என் மிசஸ்ஸை பிரசவத்துக்காக சேர்த்திருக்கோம்… இந்த ரூம்க்குதானே கூட்டிட்டு வந்திருப்பாங்க… ‘

‘ ஓ… ஆமா… இப்போத்தான் ஒரு நர்ஸ் வந்து உங்க மாமியாரை கூட்டிட்டுப் போனாங்க… ‘

அதேநேரம், ‘ ஸார்… நகர்ந்துக்கங்க… ‘ என்று குரல் கேட்டு அவசரமாய்த் திரும்பினான். ஸ்ட்ரெட்சருடன் இரண்டு நர்ஸ்கள். ஸ்ட்ரெட்சரில் வள்ளி படுத்திருக்க பக்கத்தில் குழந்தை…

அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள் வள்ளி.

‘ பாப்பா… ‘ என்றாள் உதட்டோரம் புன்னகையுடன். 

திடுக்கிட்டுப் போனான் இவன். குழந்தையைப் பார்த்தான். மாமியாரையும் பார்த்தான்.  மாமியார் இவனைப் பார்த்தார்கள்.

‘ தம்பி… பாப்பா பொறந்திருக்குனு சொல்ல உங்களைக் கூப்பிட்டேன். லைன் போகலை… ச்விச்டு ஆப் னு சொல்லுச்சு… ‘ என்றார்கள் மாமியார்.

அதுதான் பேபி ஷாப்பிலேயே ஆஃப் ஆகிவிட்டதே.

உள்ளே போனதும் அவனது பார்வை தானாக பக்கத்து பெட்டில் இருந்த குழதையின் மேல் பட்டது.  அதன் மேல் அதே மஞ்சள் கலர் துண்டு.

‘ அவங்க முசிறியாம்… மூணாவதும் பையனாம்… கொஞ்ச நேரம்தான் தூக்கி வச்சிருந்தேன்… அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டான்…. வெளியே கொண்டுபோய் தட்டியும் குடுத்தேன்… அழுகை நிக்கலை.. அப்படியே கொண்டு வந்து போட்டுட்டேன்… அதுக்குள்ளே நர்ஸ் குழந்தை பிறந்திடுச்சு வாங்கன்னு கூப்பிடவும் ஓடிட்டேன்…  ‘

தனது மகளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு மாமியார் சொன்னது எதுவும் காதில் விழவில்லை.

‘ எனக்கொரு மகள் பிறந்திருக்கிறாள்… அவள் அம்மாவைப் போலவே இருக்கிறாள்… ‘

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு மாலை (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    தூக்கம் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு