இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தன் அத்தை மகன் ராஜஹம்சன் மதுவந்தியை காதலிப்பதால் பொறாமை கொண்ட ப்ரியா மதுவந்திக்கு அவள் வீட்டில் பார்த்திருந்த வரனான சரவணனிடம் மது அவனை காதலிப்பதாகவும் ராஜஹம்சன் மதுவை தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்துவதாகவும் பொய் கூறுகிறாள். அதனால் ஹம்சனுக்கு பாடம் கற்பிக்க தன் நண்பனுடன் சேர்ந்து சரவணன் ஒரு திட்டம் தீட்டுகிறான்.
தென்மேற்கு பருவக் காற்றின் குளிர்ச்சியும் ஊசி தூறலும் கோவை மாநகரத்தை பிரிட்ஜில் கிடக்கும் ஆப்பிள் போலாக்கியது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் கோவை மக்கள் வெகு இயல்பாக தத்தம் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உமையாளுக்கும் ஊட்டியின் கனத்த போர்வை குளிர் சற்று ஒவ்வாமை தான். எப்போதும் ஸ்வட்டரும் மஃப்ளருமாக சுற்ற வேண்டியிருக்கும். அதனால் கோவையின் மிதமான குளிரும் சிலுசிலு காற்றும் அவளுக்கு பிடித்தமான ஒன்று.
தங்கள் தொழிற்சாலையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஒரு வாரம் முன்னதாகவே பிறந்த வீட்டுக்கு வந்திருந்த உமையாளுக்கு நேரம் சுறுசுறுப்பாக போனது. அம்மா மீனாட்சியுடன் சேர்ந்து சமையல் வேலைகளை செய்வதும், அவ்வப்போது குடும்பமாக அவர்கள் நால்வரும் சிரித்து உரையாடுவதும், தம்பி ஹம்சனை சீண்டுவதுமாக அவளுக்கு பொழுது போவதே தெரியவில்லை.
உமையாள் கோவை வந்தது தெரிந்து மாமன் மகள் ப்ரியாவின் குடும்பத்தினரும் அங்கு வந்து அவளுடன் ஒருநாள் தங்கிச் சென்றனர். ப்ரியாவின் தந்தைக்கு தன் தங்கை பிள்ளைகளின் மேல் அபரிமிதமான அன்பு. அதனால் அவருக்கு தோன்றும் பொழுதெல்லாம் ஹம்சனுக்கும் உமையாளுக்கும் பரிசுகள் வாங்கி அனுப்புவார்.
அவர் மனைவியோ “ஆமா உமையாளே கல்யாணம் கட்டி புருஷன் வீட்டுக்கு போயாச்சு. ஹம்சனோ அவங்க பேக்டரியவே பார்த்துக்கிறான். இவர் என்னமோ அவங்களுக்கு பரிசு வாங்கி அனுப்பிகிட்டு இருக்காரு. அவங்க என்னமோ சின்ன புள்ளைங்கன்னு நினைப்பு இவருக்கு” என்று பொரிந்து கொட்டுவாள் .
அவர் கணவரோ “உனக்கு என்ன பிரச்சனை இதுல என் தங்கச்சி மக்களுக்கு நான் வாங்கி தாரேன்” என அவளை கடிந்து கொள்வார்.
“ம்க்கும்…. நல்லா வாங்கி தந்தீங்க என்னைக்கு நீங்க எல்லாம் பொண்டாட்டி பேச்சை கேட்டு இருக்கீங்க இன்னைக்கு கேட்க “என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டு போவார்.
தற்போது ப்ரியாவை எப்படியாவது ஹம்சனுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசையால் கணவர் எது சொன்னாலும் அவர் மறுப்பு தெரிவிப்பதில்லை. அவ்வப்போது கணவரிடம் “ப்ரியா ஹம்சனை கட்டி கிட்டா நம்ம சொத்தும் வெளிய போகாது அவங்க சொத்தும் வெளியே போகாது” என்று கூறுவார்.
ஆனால் ப்ரியாவின் தந்தையோ “எதுக்கு சும்மா சொத்து சொத்துன்னுட்டு கிடக்க கல்யாணம் எல்லாம் நாம முடிவு செய்ய முடியுமா? வளர்ந்த பிள்ளைங்க அவங்க விரும்பினால் தான் நடக்கும். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” என்ற அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்.
அதனால் அவர் மனைவி இவரிடம் தன் வார்த்தை செல்லுபடி ஆகாது என்று தெரிந்து தன் மகளை தூண்டி விட்டுக் கொண்டிருந்தார். ப்ரியாவுக்கு ஹம்சன் மேல் காதல் என்று பெரிதாக எதுவும் இல்லை.
ஆனால் சிறுவயதிலிருந்து அவனைப் பார்ப்பதால் அவனுடைய தோற்றம் படிப்பு குணம் என எல்லாவற்றிலும் அவன் சிறந்து விளங்குவது அவளுக்கு கண்கூடாக தெரிந்தது. இவனை விட ஒரு சிறந்த மனிதன் தனக்கு கிடைப்பது அரிது என்பதால் அவனை சுற்றி சுற்றி வந்தாள்.
இப்போது மதுவந்தியின் வரவு அவளுக்கு தாங்க முடியாத பொறாமையை கொடுத்தது.அதுவும் தற்போது அந்த கலை நிகழ்ச்சியில் அவளும் நாட்டுப்புறப் பாடல் நடனத்தில் பங்கெடுத்து உள்ளதால் தினமும் ஹம்சனும் மதுவந்தியும் நடந்து கொள்ளும் விதம் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
அதனால்தான் அவள் சரவணனை பகடைக் காயாக்கி கொண்டாள். சரவணனிடம் வாய்க்கு வந்ததை கூறி அவனுக்கு கொம்பு சீவி விட்டாள். சரவணன் தன் நண்பனுடன் சேர்ந்து ராஜஹம்சனை எப்படி தண்டிப்பது என்று மிகத் தீவிரமாக ஆலோசித்தான்.
அவன் நண்பனோ” டேய் ராஜஹம்சன் பெரிய இடத்துப் பையன்.அவனை எல்லாம் ஆள வச்சு அடிக்கிறதெல்லாம் வேலைக்காகாது. நாம வேற ஏதாவது யோசிக்கணும் டா” என்றவன் “அவன் தினமும் மாலையில் அந்த கல்லூரிக்கு வரான் தானே அங்க தான் நாம் ஏதாவது செய்யணும் டா” என்றான் தீர்மானமாக.
“அவன் இனி எந்த பெண்ணையும் இப்படி டார்ச்சர் பண்ண கூடாது டா” என்ற சரவணன், “ஆனா எனக்கு ஒரு சந்தேகம்” என்றான் தடுமாற்றமாக. “என்னடா சந்தேகம்” என்று கேட்டான் நண்பன்.
” இல்ல இந்த ப்ரியா பொண்ணுதான் மதுவந்திக்கு என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னா. ஆனா மது என்னிடம் எதுவும் சொல்லல அதான் எனக்கு கொஞ்சம் கவலையா இருக்குடா. நீ ஏதாவது ஏடாகூடம் பண்ணி ராஜஹம்சன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா என் வேலையே போயிடும். எங்க வீட்ல என்ன கொன்னே போட்டு விடுவாங்க டா” என்றான் பயத்துடன்.
“டேய் ஒண்ணு என் வழிக்கு தைரியமா வா இல்லன்னா நீ ஏதோ செஞ்சுக்கோ என்னை ஆள விடு “என்றான் சரவணனின் நண்பன். “டேய் என்னடா இப்படி கை கழுவுற அந்த பொண்ணு மது என்னை உண்மையிலேயே காதலிக்கிறாளான்னு இப்போ நான் தெரிஞ்சுக்கணும் இல்ல” என்றான் சரவணன் திரும்பவும்.
“டேய் இது ஆவறது இல்ல ஒண்ணு நீ தைரியமா ஒரு முடிவு எடுக்கணும் இல்லன்னா விட்டுடு பேசாம அப்புறம் பார்க்கலாம் நான் கிளம்புறேன் உன்னால என் வேலையும் கெட்டுப்போகுது” என்று கூறி சரவணனின் நண்பன் வீட்டுக்கு கிளம்பினான்.
சரவணனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியவில்லை ஆனால் தன் மிரட்டலுக்கு எல்லாம் ராஜஹம்சன் பயப்பட மாட்டான். அதனால் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து சற்று நேரத்தில் தன் நண்பனை போனில் அழைத்தான் சரவணன்.
விசாகா மோட்டார்ஸின் பொன்விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் முதல் நாளே களைகட்டத் தொடங்கியது. வாசலில் குலையோடு கூடிய வாழை மரங்கள் இரண்டு பக்கமும் கட்டப்பட்டது தென்னங்குருத்தோலை தோரணங்கள் சீரியல் பல்புகளுடன் தொழிற்சாலையின் எல்லா இடங்களிலும் கட்டப்பட்டு பளிச்சிட்டன. கலை நிகழ்ச்சிகள் நடப்பதற்காக மேடை, அலங்காரப் பந்தல் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தான் ஹம்சன்.
விழா பத்திரிகையை ஊட்டியில் மதுவின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு போனில் உதயனைக் கூப்பிட்ட ராஜஹம்சன் அனைவரும் விழாவுக்கு வரவேண்டும் என அழைத்தான்.
உமையாளோ ஒரு படி மேலே போய் “உதயா போனை அம்மாகிட்ட கொடுப்பா” என்று கூறி கனகவல்லியிடம் “அத்தை விழாவுக்கு நீங்களும் மாமாவும் உதயனைக் கூப்பிட்டுட்டு கண்டிப்பா வரணும். இங்க உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கு” என்று கூறினாள்.
அந்த விழாவின் முடிவில் மது ஹம்சனின் காதலை வெளி உலகத்திற்கு தெரிவித்து நிச்சயம் செய்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தனர் மீனாட்சி விசாகன் தம்பதியர். ஒருவேளை மதுவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் அதை சமாளிக்கவும் யோசித்து வைத்திருந்தனர்.
தொழிலாளர்கள் அனைவருக்கும் பொன்விழா பரிசாக 1500 ரூபாய் இன்கிரிமெண்ட் கொடுக்க ஏற்பாடு செய்தான் ஹம்சன். விசாகனும் ஹம்சனின் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அது தொழிலாளர்களுக்கு அபரிமிதமான சந்தோஷத்தை கொடுத்தது. பொன்விழா நாள் அன்று கோவிலிலும் தொழிற்சாலை வளாகத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். அனைவருமே இப்படி ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கிறோம் என பெருமிதம் அடைந்தனர்.
ஆனால் அதில் ஒரு விஷயம் அனைவருமே கவனித்தனர். அன்று காலையிலிருந்து ஒரு நிகழ்ச்சியிலும் ஹம்சன் கலந்து கொள்ளவில்லை எல்லோருக்கும் அது ஆச்சரியத்தையும் ஒரு பயத்தையும் கொடுத்தது. ஏன் சின்னவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கல. இந்த ஏரியாவிலேயே அவரைக் காணோமே. அவருக்கு என்ன ஆச்சு? ஏதாவதுன்னா சொல்லி இருப்பாங்களே என்று சந்தேகப்பட்டனர். அது அனைவரும் மத்தியில் பேசும் பொருளானது.
கல்லூரியில் மதுவந்தியோ மிகுந்த சந்தோஷத்துடனும் பரபரப்புடனும் இருந்தாள். முதல் நாள் மாலை கலை நிகழ்ச்சியின் பயிற்சியை வழக்கம் போல் பார்க்க வந்திருந்த ஹம்சன் அவளை கண்களால் தனியே வரும்படி அழைத்து யாருக்கும் கேட்காத வண்ணம் அவளிடம் பேசினான்.
கண்மணி, வந்திமா நம்ம விஷயத்தை என் வீட்ல சொல்லிட்டேன். அவங்க எல்லாருக்கும் பரிபூரண சம்மதம். இந்த விழாவில் நீதான் என் வருங்கால மனைவி என்று அறிவிச்சிடலாம்னு இருக்காங்க அப்பாவும் அம்மாவும் என்றான் ஹம்சன் மகிழ்வுடன்.
அதைக் கேட்டு முகம் மலர்ந்த மது, “ஆனால் ராஜ் எங்க அப்பா அம்மாவுக்கு நான் இதை பத்தி இன்னும் சொல்லல அவங்களுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே” என்றாள் சற்று கவலையுடன்.
“அதெல்லாம் நீ கவலைப் படாத நான் பாத்துக்குறேன் சரியா” என்று கூறி காதலுடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் ஹம்சன்.
ப்ரியா இவர்கள் தனியே இருப்பதை எங்கிருந்துதான் பார்த்தாளோ தெரியவில்லை உடனடியாக அங்கு வந்து “என்ன அத்தான் மதுவோட என்ன பேசிட்டு இருக்கீங்க” என்று கேட்டாள்.
“அதுவா பரதநாட்டிய டிரஸ் வாடகைக்கு எடுத்துட்டாங்களான்னு பேசிட்டு இருந்தேன்” என்று ப்ரியாவிடம் கூறிவிட்டு “நாளை பார்க்கலாம்” என்று பாசத்துடன் மதுவிடம் கூறி கை அசைத்து விட்டு ஹம்சன் வீட்டுக்கு கிளம்பினான்.
விழா நாளன்று மதியம் தொழிற்சாலையில் இருந்து கல்லூரிக்கு வந்த கம்பெனி பஸ்ஸில் கலை நிகழ்ச்சி குழுவினர் அனைவரும் ஏறினர். ஹம்சனை எதிர்பார்த்த மது அவன் வராதது கண்டு சற்று ஏமாற்றம் அடைந்தாள்.
நீலாம்பரியோ கம்பெனி மேனேஜரிடம் அது பற்றி கேட்கவே செய்தாள். அவரோ “இல்லைங்க சின்னவர் மற்ற ஏற்பாடுகளை பார்த்துட்டு கம்பெனியில் இருக்காருங்க” என்று முடித்துக் கொண்டார். சரி ஃபேக்டரிக்கு போனால் அங்கு பார்த்துக் கொள்ளலாம் என மதுவும் அமைதியானாள். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை ஹம்சனை அங்கு எங்குமே பார்க்க முடியவில்லை.
மதுவுக்கு எதுவும் புரியவில்லை. அவளுடையது முதல் நிகழ்ச்சி என்பதால் அவளுக்கு இதைப் பற்றி யோசிக்க நேரமும் இல்லை. வரவேற்பு நடனம் என அறிவித்தவுடன் நீலாம்பரியும் மதுவும் மேடை ஏறினர். மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடினாலும் நடனத்தில் குறையில்லாமல் ஆடி முடித்தாள் மதுவந்தி.
நடனம் முடிந்து திரை போடும் தருவாயில் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்த ராஜஹம்சனை உமையாளின் கணவன் மனோகரன் அங்கு கூட்டி வந்தான். அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மது திகைத்து நின்றாள்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings