எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திடீரென்று, ‘உம்… உம்…’ என்று அனற்றியபடி எழுந்து உட்கார்ந்தாள் செல்வி. மணியும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். ஒன்றும் புரியவில்லை. ஓடிப்போய் ஸ்விட்சை போட்டான். தலைவிரி கோலமாய், கண்களில் மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தாள். தோளைப் பிடித்து ஆட்டியபடி, ‘ என்னாச்சு செல்வி…’ என்று உலுக்கினான்.
மறுபடியும் அனற்றினாள். அன்னார்ந்து விட்டத்தையும் பார்த்தாள். இதுவரை இவள் இப்படி செய்ததில்லையே. திடீரென்று இப்போது இவளுக்கு என்வாயிற்று… குழம்பினான்.
அவள் அழுவது போலத் தெரிந்தது. அவளை தன் தோளோடு சாய்த்துக்கொண்டான். ‘ என்னாச்சு செல்வி… கனவு ஏதும் கண்டியா… ஏன் அனத்துறே… ’ அவளது கன்னத்தைத் தட்டி கேட்டான். அவளோ அப்படியே மயக்கம் போட்டது போல தோளிலேயே சாய்ந்து விட்டாள். அவளை சுவற்றோடு உட்காரவைத்துவிட்டு ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து அவளது முகத்தில் தெளித்தான். துண்டால் துடைத்தும் விட்டான்.
எழுந்து போய் விபூதித் தட்டில் ஒரு சூடம் ஏற்றிக் கொண்டு வந்து அவளுக்கு காட்டிவிட்டு கொஞ்சம் விபூதியை எடுத்து அவளது தலையில் தெளித்துவிட்டு, நெற்றியிலும் ஒரு பட்டை அடித்துவிட்டான்.
‘ கவலைப் படாதே செல்வி… எந்த கெட்டக்காற்று உன்மேலே பட்டிருந்தாலும் ஒடி விடும் ‘ என்றபடி அவளை மெல்ல படுக்க வைத்தான்.
லைட் எரிந்துகொண்டிருந்தது. அப்படியே அவளைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். மெல்ல அவள் தூங்க ஆரம்பித்தாள். பிறகு அவனும் படுத்துக் கொண்டான்.
இப்படி அவள் அனற்றியது இதுதான் முதல் தடவை. கனவு ஏதும் கண்டாளா, இல்லை வெளியே எங்கேயும் தனியாக போகும்போது காற்று கருப்பு ஏதும் குறுக்கே வந்திருக்குமா என்று யோசித்துக் கொண்டே படுத்திருந்தவன் அப்படியே தூங்கியும் விட்டான்…
‘ ஏய்ய்ய்ய் ‘ என்று ஒரு சத்தம். திடுக்கிட்டு ஏழுந்தான். தூக்கத்திலேயே அனற்றியிருக்கிறாள் என்று புரிந்தது.
‘ நாளைக்கு மெத்தையை திருப்பிப் போடணும்… இந்தப் பக்கம் தலைவச்சு படுக்க வேண்டாம்…’ அப்போதே முடிவு செய்து கொண்டான்.
விடிந்து ‘ ராத்திரி ஏன் அப்படி செய்தாய் ‘ என்று கேட்டான். நடந்ததையும் விவரமாய் சொன்னான். திருதிருவென்று முழித்தபடி, ‘ நானா.,. அனத்துனேனா… சூடம் காட்டி விபூதியெல்லாம் வெச்சு விட்டீங்களா… எனக்கு எதுவுமே தெரியலையே… ‘ என்று கண்களை அகல விரித்தாள்.
மேலும் அவளைக் குழப்பவேண்டாமென்று அப்படியே விட்டுவிட்டான்.
xxxxxxxxx
மறுநாள் தூங்கப் போகும்போது, ‘ ஏங்க, கட்டிலை மாத்திப் போட்டிருக்கீங்க… ‘ என்றாள்.
‘ எல்லாம் ஒரு காரியமாத்தான்… நீ படு…’ என்றான்.
ஆனாலும் நடு ராத்திரியில் மறுபடியும், ‘ ம்ம்ம்ம்ம்ம்ம் ‘ என்று சத்தமிட்டபடி தோளைக் குலுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். விட்டத்தை பார்த்தாள். இப்போது கொஞ்சம் பயந்துதான் போனான் மணி.
‘ இவளுக்கு ஏதோ ஆகிதான் விட்டது ‘ என்று முனகிக் கொண்டே விபூதி தட்டை எடுத்து வந்து விபூதி வைத்துவிட்டு, ‘ தூங்கும்மா செல்வி…’ என்று அவளைத் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தான்.
சில நிமிடங்களில் பற்களை நரநரவென்று கடித்தாள். உர்ரர்ர்ர்ர்ரென்று உறுமினாள். செய்வதறியாது கட்டில் மெத்தையின் ஓரமாய் அப்படியே திக்பிரமை பிடித்தது போல அவளை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். அப்போதே முடிவு செய்து கொண்டான், அவனுக்குத் தெரிந்த கோடங்கி பூசாரியை கூட்டி வந்து கோடங்கி அடித்து என்ன ஆனது என்று பார்த்து பரிகாரம் ஏதும் செய்யவேண்டுமென்றாலும் செய்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டான்.
xxxxxxxxx
குடுமியை அள்ளி செருகிக் கொண்டு செல்விக்கு எதிரே கையில் கோடங்கியுடன் உட்கார்ந்தான் பூசாரி. நடுவில் பூசாரி சொன்ன பூஜை சாமான்கள் பெரிய தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருந்தன. நடுவே ஐநூத்தி ஒரு ரூபாய் பணமும். ஊதுபத்தியும் சாம்பிராணியும் சேர்ந்து அந்த அறையையே புகை மண்டலமாக்கி பக்தி பரவசத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.
பாட்டுப் பாடிக்கொண்டே உடுக்கை அடிக்க ஆரம்பித்தான் பூசாரி. மணிநேரம் அடித்து ஓய்ந்த அவன், நிமிர்ந்து உட்கார்ந்தான்.
‘ மாப்ளே… இது வேற ஒண்ணுமில்லை. மயானம் பக்கமா பாப்பா எப்போவோ போயிருக்கு. அங்கே வெச்சு அற்பாயுசுல செத்துப் போன ஒரு பொண்ணோட ஆவி எதிர்ல பட்டிருக்கு. ஒரு சின்ன கழிப்பு கழிச்சிட்டா எல்லாம் சரியாயிடும். அதுக்கப்புறம் வெளியே போகும்போது நான் கொடுக்கற கருப்பு கயித்தை கட்டிக்கிட்டுத்தான் வெளியே போகணும்… ‘ என்று விட்டு சூடத்தட்டை செல்வியின் முன் காட்டி, ‘ எங்க பொண்ணுமேல வந்திருக்கற ஏ பொன்னே, ஓடிப் போயிடு…’ என்று மறுபடி மறுபடி சொல்லிவிட்டு, செல்வியின் தலையிலிருந்து ஒரே ஒரு தலைமுடியை கத்தரித்து எடுத்து, ‘ இதை ஊருக்கு வெளியே கொண்டு போய் ஒரு புளிய மரத்தில் ஆணி அடித்து கட்டி விடுவேன். பாப்பாவை பிடித்த அந்த ஆவி அத்தோடு ஓடிவிடும் ‘ என்றுவிட்டு பூஜை சாமான்கள் எல்லாவற்றையும் அள்ளிப் பையில் போட்டுக் கொண்டு ஒரு கருப்பு கயிறை எடுத்து கொடுத்து விட்டு, கிளம்பிவிட்டார் பூசாரி.
ஒரு நாள் மட்டும் நன்றாக தூங்கினாள் செல்வி. மணியும், பூசாரி பேயைக் கட்டிவிட்டார் என்று நிம்மதியாய் தூங்கினான்.
மறுநாள் நடுராத்திரி மறுபடியும், சத்தம் போட்டுக் கொண்டு எழுந்தவள் தோளைக் குலுக்கினாள். விட்டத்தை பார்த்தாள். இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பயந்து போனான் மணி.
தெரிந்த சிலரிடம் விஷயத்தை சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறான். பக்கத்து ஊரில் வெற்றிலையில் மை வைத்து பார்ப்பவர் ஒருவர் இருக்கிறார். அவரைக் கூட்டி வந்தால் மை வைத்து பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று சொல்வார் என்றார்கள்.
அவரும் பூஜை சாமான்களை முன்னே வைக்கச் சொல்லிவிட்டு ஒரு பெரிய வெற்றிலையை எடுத்து தான் கொண்டு வந்திருந்த டப்பாவில் இருந்து ஒரு கருப்புமையை வழித்து வெற்றிலையின் நடுவில் வட்டமாய் அப்பி, அதற்கு ஒரு சூடம் ஏற்றி காட்டி ஏதோ மந்திரத்தை முனுமுத்துவிட்டு, மணியைக் கூப்பிட்டு அந்த கருப்பு மையை உற்று பார்க்கச் சொன்னார். ஒன்றும் தெரியவில்லை என்றான். பிறகு அவரே சொன்னார்.
‘ செல்வி நடந்து போகுதா, ஒரு வேப்ப மரம் தெரியுதா, ஒரு கருப்பு உருவம் மரத்துக்கு பின்னே இருந்து வெளியே வருதா… செல்வியை நெருங்குதா… இப்போ செல்வி மட்டும் நடந்து போகுதா…. ஆவி என்ன ஆச்சு… ஏம்பா அது செல்வி மேல பூந்துடுச்சுப்பா. செல்வி மேல பூந்துடுச்சு. நாம அந்த இடத்துக்கு போகணும்… அந்த இடத்தை நல்லா பாரு… அது ஊருக்கு வெளியே இருக்கிற எல்லைக்கோவில் மாதிரி தெரியலை…? நாம அங்கே போகணும்… அங்கே வெச்சு ஒரு பூஜை போடணும்…’ என்றார்.
வெற்றிலை மையைப் பார்த்துக் கொண்டிருந்த மணிக்கு எதுவும் ஒழுங்காகத் தெரியவில்லையானாலும் தலையை மட்டும் ஆட்டிவைத்தான்.
பூசாரி சொன்னபடி எல்லாம் செய்தாகி விட்டது. இரண்டாயிரம் செலவு.
xxxxxxxxx
மூன்று நாட்கள் விட்டு மறுபடியும் செல்வி அலறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். விட்டத்தை பார்த்தாள்.
அவனுக்கு திடீரென்று ஒரு எண்ணம் உண்டானது. அடிக்கடி விட்டத்தை வெறித்து வெறித்து பார்க்கிறாள். இதே வீட்டில் எப்போதாவது யாராவது தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ. அந்த ஆவிதான் விட்டத்தில் உட்கார்ந்துகொண்டு செல்வியை வா வா என்கிறதோ என்று யோசித்தான், பயந்தான்.
விடிய விடிய யோசித்துவிட்டு விடிந்து நேரே வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் போனான். வீட்டைக் காலி செய்கிறேன் என்றான்.
புதுவீட்டிக்கு வந்துசேர்ந்தாகிவிட்டது.
ராத்திரி வந்தது. ஜீரோ வாட் பல்பை ஏரியாவிட்டிருந்தான். செல்வி தூங்கிக் கொண்டிருக்க அவன் கண்ணை மூடி தூங்கமால் படுத்திருந்தான். செல்வியிடம் ஏதும் மாற்றம் தெரிகிறதாவென்று அவளுக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.
அவளோ கண்களை மூடி யோசித்துக் கொண்டே படுத்திருந்தாள்.
முன்னே இருந்த அந்த வீட்டில் பாத் ரூம் வெளியே தான் இருந்தது. அக்கம்பக்கத்தில் வீடுகள் இருக்கின்றன. ஒருதடவை குளிக்கும்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து யாரோ ஒரு ஆள் எட்டிப் பார்ப்பது போல தெரிந்தது. ஏதோ பிரமை என்று விட்டுவிட்டாள். ஆனால் அடிக்கடி யாரோ எட்டிப் பார்ப்பத் போலத் தெரியவே நடந்தை அவனிடம் சொல்லி, ‘ எனக்கு உடம்பே கூசுகிறது, உடனே வீட்டை மாற்றிவிடலாம் ‘ என்று கணவனிடம் சொல்லி கண் கலங்கியபோது அது வெறும் பிரமையாக இருக்கும், மற்றவர்கள் உன்னை ஏன் பார்க்கவேண்டும்… அத்தோடு மற்றவர்கள் பார்க்கிறார்களா என்று நீ ஏன் பார்க்கிறாய் என்று சொல்லி வீட்டை மாற்ற மறுத்துவிட்டான்.
எப்படியோ வீட்டை மாற்றியாகி விட்டது. இங்கே இரண்டு பாத்ரூம் ஒன்று பொது, இன்னொன்று படுக்கயறையோடு ஒட்டியது….’
திரும்பி அந்த பாத்ரூம் கதவைப் பார்த்துக்கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கியும் போனாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings