ஊர்நடுவே அகன்றதெரு எல்லோர் கண்கள்
உறுத்துகின்ற படியுயர்ந்த கட்ட டத்தில்
பார்போற்றும் எழுத்தாளர் உலகம் உய்யப்
படைத்தளித்த நூல்களுள்ள நூல கம்தான்
தேர்போலப் பெயர்பொறித்த பலகை யோடு
தெளிவாக இருந்தபோதும் இளைஞ ரெல்லாம்
நேர்கொண்ட பார்வையொடு கடக்கின் றார்கள்
நின்றதனைப் பார்ப்பதற்கும் நேர மின்றி !
கண்களிலே யாருக்கும் பட்டி டாமல்
கடந்தூரின் எல்லையிலே தெருவின் ஓரம்
மண்டியுள்ள முட்புதர்கள் மறைவுக் குள்ளே
மண்பூச்சுக் கட்டடத்தில் மதுக்க டைதாம்
வண்ணவொளிப் பெயர்பலகை ஏது மின்றி
வாடியுள்ள மலர்ச்செடிபோல் இருந்த போதும்
வண்டுகள்தாம் பூநாடிச் செல்லல் போன்று
வரிசையாகச் செல்கின்றார் இளைஞ ரெல்லாம் !
அறிவொளியைப் பாய்ச்சுதற்கே ஓங்கு யர்ந்தே
அழைத்தபோதும் கண்ணெடுத்துப் பார்த்தி டாமல்
அறிவிருந்தும் கூற்றுவன்தான் எதிரில் நின்று
அழையாமல் இருந்தாலும் செல்கின் றார்கள் !
குறக்கோளே இல்லாத அரசி னாலே
குற்றுயிராய் இளைஞர்தம் வாழ்வோ இன்று
குறிப்பாகப் பாழ்ப்பட்டுப் போதல் பார்த்தும்
குனிந்திங்கே மக்களெல்லாம் இருத்தல் நன்றோ !
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings