எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மதுரை – அனுப்பனடி,
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான் , அசோக்குமார். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தான். அசோக்குமார் படிக்கும் பள்ளியில், இன்று நடைபெற்ற பேச்சு போட்டியில் நடந்த நிகழ்வுகளை , அம்மா , அப்பாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் வீட்டிற்கு வந்தான்.
மாலை நேரம் அசோக்குமார் தன் அப்பா , அம்மா இருவரும் வேலை முடிந்து வரும் வரை காத்திருந்தான். அப்பா ராஜன் , அம்மா வள்ளி இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
“அசோக் , என்னப்பா? இன்னைக்கு பள்ளிகூடத்தில் நடந்த பேச்சு போட்டி என்ன ஆச்சு? “ என்று அப்பா கேட்க ,
“அசோக் , முதல்ல சாப்டியா ? “ என்று அம்மா வள்ளியின் குரல்.
“அம்மா , சாப்டேன் , இந்தாங்க நான் பேச்சு போட்டியில் முதல் பரிசு வாங்கிருக்கேன்.” என்று தன் பையில் வைத்திருந்த சான்றிதழ் , மற்றும் சிறு கேடயம் இரண்டையும் அவர்களின் முன் நீட்டினான் அசோக்குமார். இரண்டையும் பெற்று கொண்டு அசோக்குமாருக்கு , அம்மா , அப்பா இருவரும் முத்தமழை பொழிந்தனர்.
“அப்பா ஓட்டு போடுவது நமது ஜனநாயக கடமை என்பதை பற்றி பேசி , பரிசு பெற்றேன் “ என்று அசோக் குமார் கூறினான். இருவரும் அசோக்குமாரை பாராட்டி மகிழ்ந்தனர்.
“அம்மா , அப்பா , நீங்க ரெண்டு பேரும் அடுத்த மாசம் நடக்க போற தேர்தல்ல யாருக்கு ஓட்டு போடா போறீங்க ? “ என்று கேட்டான் அசோக்குமார்.
“ஓட்டு போடறது யாருக்குன்னு வெளியில சொல்ல கூடாது தம்பி “ என்று அப்பா ராஜன் கூறினார்.
“அது வெளி ஆளுக கிட்டதான் கூற கூடாது. ஆனா வீட்ல இருக்கிற என்கிட்ட சொல்லலாம்.“ என்று அப்பாவை மடக்க பார்த்தான் அசோக்குமார்.
“அசோக் , யாரு காசு தருவாங்களோ! அவங்களுக்கு தான்.” என்று பதில் அளித்தார் அப்பா.
“என்னப்பா? இப்படி சொல்றீங்க? , யாரு நல்லது செய்வாங்கன்னு பார்த்து போட மாட்டீங்களா ? “ என்று அசோக்குமார் கேட்டான்.
“நல்லது , செய்வோம்ன்னு தான் எல்லாரும் முதல்ல சொல்வாங்க , அப்புறமா அவங்க வேலைய தான் பார்ப்பாங்க , ஓட்டு போட்ட நம்மள அவங்க கவனிக்க மாட்டங்க ? “ என்று அப்பாவின் பதில்.
“சரி நல்லது பண்ணலன்னு தெரிஞ்சா அடுத்து அவங்களுக்கு ஓட்டு போடதீங்க, ஏன் அவங்களுக்கு மீண்டும் ஓட்டு போடறீங்க” என்று மகன் அசோக்குமார் கேள்வி கேட்டான்.
“அதாவது அசோக், அப்பா அம்மா இருவரின் சம்பளம் தான் குடும்பத்தை நடத்த உதவுது. இதுல ஒரு ஆளுக்கு வேலை இல்லை என்றால் , குடும்பம் நடத்த சிரமமா போகுது. அப்டி இருக்க நமக்கு தேவைய பூர்த்தி செய்ய வழி தெரியல. ஆனா இந்த தேர்தல் நேரத்தில் தான் இந்த மாதிரி அரசியல் வாதிகள் அவங்களுக்கு தேவைக்கு அதிகமா இருக்கிற பணத்தை மக்களுக்கு கொடுத்து ஓட்டு வாங்க பார்கிறாங்க. அத நாம பயன்படுத்தி கொள்கிறோம். இந்த நேரத்தில் நமக்கு என்ன வேணும்னு ஒவ்வொரு கட்சி காரனும் கேட்டு கேட்டு செய்வாங்க. அத ஏன் விட வேண்டும்.” என்று அப்பா ராஜன் தன் பதிலை கூறினார்.
“அப்பா அந்த ஒரு சின்ன ஆசைக்கு ஆசை பட்டு ஓட்டை விக்காதிங்கப்பா. உங்க ஒரு ஓட்டுக்கு அவங்க தர்ற பரிசு ரொம்ப ரொம்ப கம்மி. பணமோ , பரிசை வாங்கிட்டு ஓட்டு போட்டா , உங்க கடமையை அவங்களுக்கு விக்கிறதா அர்த்தம்.” என்று அசோக் கூறினான்.
“அட போடா , அசோக். இன்றைய செலவுக்கு பணம் கெடைச்சா போதும்ன்னு வாழறவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படி பட்ட வாழ்க்கை தான் நமக்கு இருக்கு “ என்று அப்பா ராஜன் கூறினார்.
“அப்படின்னா , நான் உங்க வழிக்கு வாறன். நம்ம தொகுதிக்கு நாலு கட்சி காரங்க நிக்குறாங்க. நாலு கட்சி காரங்க கிட்டேயும் பேரம் பேசுங்க. யாரு அதிகமா பணம் பரிசு தாரான்களோ அவங்களுக்கு எங்க ஓட்டு விற்கப்படும்னு சொல்லுங்க. கொடுக்கிறத வாங்கி வச்சிகோங்க , நமக்கு நல்ல லாபம் தான. எந்த கட்சி எவளோ கொடுத்தாங்கன்னு மத்த கட்சிகரங்கட்ட சொல்லி பேரம் பேசியே கேட்போம். ஓட்டு வேணும்னா கொடுப்பாங்கள” என்று புது விதமான யோசனையை அசோக் கூறினான்.
அப்பா ராஜன் யோசிக்க துவங்கினார். அசோக் தன்னை நக்கல் அடித்து பேசுகிறானோ , இல்லை உண்மையாக ஓட்டை விற்க சொல்லி பேசுறானோ என்று யோசனை.
“நாளைக்கு காலையில வீட்டு வாசலில் ஒரு போர்டு வச்சிருவோம் “ எங்கள் ஓட்டு விற்பனைக்கு!” என்று வச்சிட்டா , அந்த நாலு கட்சி காரங்க கண்டிப்பா பார்ப்பாங்க , நமது தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் “ என்று கூறினான் அசோக்.
“அப்பா , நம்ம ஜனநாயக கடமை ஓட்டு போடுறது. அது நம்ம விருப்பத்தின் பெயரில் தான் இருக்கணுமே , தவிர அதை யாருக்கும் காசுக்கு விற்க கூடாது. நாம தான் திருந்தனுமே தவிர , அவங்க கொடுக்கிறத காரணம் காட்டி நாம வாங்க கூடாது. “ என்று அசோக் கூற,
அப்பா ராஜன் “ அசோக் , நீ சொல்றது சரிதான். முதல்ல நான் என் மனசை மாத்தி , என் ஓட்டை விற்கமாட்டேன் என்று நாம் வணங்கும் தாய் மதுரை மீனாட்சி , அய்யன் சொக்கநாதர் அவர்கள் மீது சத்தியமாக உறுதி கொடுக்கிறேன். என் ஓட்டை விற்க மாட்டேன். என் வாக்கு என் உரிமை.“ என்று கூறி , மகனின் பேச்சுக்கு நன்றி கூறினார் ராஜன்.
# வாக்களிப்பது ஜனநாயக கடமை , அதனை எந்த காரணம் கொண்டும் விற்க கூடாது.
# பணம் கொடுப்பதை நிறுத்த சொல்லுங்க , நாங்க வாங்கிறத நிறுத்துவோம் என்று நாம் கூறுவதை விட்டு , நம்மில் இருந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
# நம் மன மாற்றம் தான் முதலில் இருக்க வேண்டும். அடுத்தவர்களை குறை கூறி பலன் ஏதும் இல்லை.
# வாக்களிப்போம்.. நம் ஜனநாயக கடமையை தவறாமல் செய்வோம் , உண்மையாக , நேர்மையாக.
# நமது வாக்கு விற்பனைக்கு அல்ல.!!!
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings