in ,

பளார்… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 ‘ அம்மா… ‘ என்று கத்தினான் பிரபு.

சமயலறையில் வேலையாய் இருந்த மஞ்சுளா பதறிக் கொண்டு, ‘ ஏன்டா கத்தறே என்னாச்சு… ‘ என்று இங்கிருந்தே குரல் கொடுத்தாள். அவனது அழுகுரல் அவளை நெருங்கியது, நெருக்கியது.  சட்டெனத் திரும்பினாள். கண்களை கசக்கிக் கொண்டு உள்ளே வந்துகொண்டிருந்தான் பிரபு.

தன்னை நெருங்கியவனைப் பார்த்து, ‘ ஏன்டா, ஏன் அப்படிக் கத்தினே.. என்ன ஆச்சு… ’ என்றாள். அவனோ, கண்களை கசக்கியபடியே, ‘ அக்கா அறைஞ்சுப்புட்டாம்மா… ‘ என்றான் தன் மழலைக்குரலில்.

மாலாவும் பிரபுவும் வெளியே விளையாண்டு கொண்டிருந்தார்கள் என்று தெரியும், அவளுக்கு. இவன் ஏதாவது வம்பு பண்ணியிருப்பான், அவள் அடித்திருப்பாள் என்று நினைத்துக்vகொண்டாள் மஞ்சுளா.

‘ அக்கா அறைஞ்சுபுட்டாளா… ஏன்… நீ ஏதும் வம்பு பண்ணுனியோ… ’ என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அங்கே வந்து சேர்ந்தாள் மாலா.

‘ பாரம்மா, நான் நாய்க்குட்டிக்கு பேட்டரி போட்டு ஓடவிட்டுக் கொண்டிருந்தேனா, இவன் வந்து தூக்கிப் போட்டுட்டான். அது சுவத்துல மோதி பேட்டரியெல்லாம் கழன்று விழுந்துச்சு… கோவத்துல கன்னத்துலே அறைஞ்சேன்…  ’ என்றாள் மாலா.

அவளைப் பார்த்து கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னாள், ‘ அவன் சின்னப்புள்ளைடி… நீ அக்கா இல்லே… நீதான் கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்… அதுக்காக அவனை அறைவியா… ’

‘ அம்மா…  தம்பியை அடிக்கக் கூடாதுன்னு எனக்கும் தெரியும்…. ஆனா நான் லேசாதான் அறைஞ்சேன்…. அவன்தான் ஓன்னு அழுதுக்கிட்டு வந்தான்… டிராமா பண்றாம்மா… ‘ என்று தனது செயலை நியாயப்படுத்தினாள், அவள்.

மகன் மேல் பரிதாபப்பட்டு, ‘ சரிடா செல்லம், நீ தனியா போய் விளையாடு… அவளோட சேராதே… வேற பொம்மை ஏதாவது எடுத்துக்கோ… போ…  ‘ என்றுவிட்டு தனது வேலையில் மூழ்கினாள், இவள்.

‘ ரெண்டும் சேர்ந்து விலையாடினாலே ஒரே அடிதடிதான்… ‘ தனக்குள் புலம்பிக்கொண்டே வேலை செய்தாள், இவள்.

அடுத்த சில நொடிகளில் பாலைக்காய்ச்சி இரண்டு தம்ளர்களில் ஊற்றிக்கொண்டு பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று வெளியே போனாள். இருவரையும் காணவில்லை.

பின்கட்டுப் பக்கம் போனாள். அங்கேயும் இல்லை.

‘ மாலா… எங்கேடி போனே… தம்பியும் காணோம்…. ‘ என்று குரல் கொடுத்தாள்.

மாடியில் இருந்து பதில் வந்தது. ‘ அம்மா… நாங்க ரெண்டு பேரும் மாடில பந்து விளையாடிக்கிட்டிருக்கோம்மா… ‘

‘ பளார் ‘ என்று தனது கன்னத்தில் அறைந்தது போல இருந்தது, இவளுக்கு.

‘ நீ தனியா போய் விளையாடு… அவளோட சேராதே… ‘ என்று சொன்னோமே… அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.  விளையாடுவார்கள், சண்டைப் போட்டுக் கொள்வார்கள், திரும்பவும் விளையாடுவார்கள். நாம் அவர்களை பிரிக்கப் பார்த்தோமோ…!

கீழே வந்தவர்களிடம் பாலைக் கொடுத்துவிட்டு நெஞ்சு கனத்துடன் கிச்சனுக்குத் திரும்பினாள், மஞ்சுளா.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    யார் கூப்பிட்டது…? (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    நாடு நம்ம குடும்பம் (ஒரு கிராமத்து குடும்பக் கதை) – தெனாலி ராமன்