தன்னை பற்றி மட்டும் நினைத்து யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்:
நாம் எல்லோரும் பொதுவாக ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விட்டால், நம் நிலைமையை மட்டும் கருத்தில் கொண்டு சில சமயம் முடிவு எடுப்பது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. நம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் நம்முடன் வேலை செய்வர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், நம் குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி கண்டிப்பாக யோசிக்க வேண்டும். சுயநலமாக சிந்திக்க கூடாது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கதையை கூறுகிறேன்….
ஒரு பெண்ணுக்கு 15 வயது ஆகிறது. அவளுடைய தந்தை இறந்து விட்டார். அந்தப் பெண் அதையே நினைத்துக் கொண்டு மேற்கொண்டு எதையும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே இந்த பெண்ணின் தாய் இவள் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே இறந்து விட்டாள். ஆகவே அவளுடைய தந்தை இவளுக்கு மூன்று வயது இருக்கும் போது மறுமணம் செய்து கொண்டார். இப்போது அவரும் இறந்து விட்டார்.
தந்தை இறந்து காரியங்களெல்லாம் ஆன பிறகு 20 நாட்கள் கழித்து அந்த இரண்டாவது தாய் இவளிடம் வந்து, எனக்கு வயது இப்போது 37 தான் ஆகிறது, உனக்கு மூன்று வயது ஆகும்போது எனக்கு திருமணம் ஆகி விட்டது, எனக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கின்றன.. நான் என் வாழ்க்கையை பார்க்க வேண்டும்…. ஆகவே நீ தயவுசெய்து இங்கிருந்து உன்னுடைய தாய்மாமன் வீட்டிற்கு போய் விடு. உன் பாட்டை நீ பார்த்துக்கொள்… இனி நான் என்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அந்த மகளை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு துரத்தி விட்டாள்.
அந்தப் பெண்ணும் வேறு வழி இல்லாமல் மாமா வீட்டிற்கு சென்று விட்டாள் அந்தப் பெண் சென்று இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இவள் அந்தப் பெண்ணின் ரூமை சுத்தம் செய்தாள். அவ்வாறு செய்யும்போது அந்தப் பெண்ணின் தலையணைக்கடியில் ஒரு பெட்டி இருந்தது. என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தாள். அதில் இவளுடைய சிறு வயது போட்டோக்கள் எல்லாம் இருந்தது அதை பார்த்த இவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இவளுடைய இந்த சிறு வயது போட்டோவை இத்தனை நாட்களாக இவளே பார்க்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பெண்ணிற்கு எப்படி இதெல்லாம் கிடைத்தது என்று மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவள் தன் தாயிடம் போய் நடந்ததை கூறினாள். அப்பொழுது இவளுடைய தாய், போனவாரம் உன் பெண் என்னிடம் வந்து உன்னுடைய சிறு வயது போட்டோ எல்லாம் கேட்டாள், நான் தான் அவளுக்கு கொடுத்தேன் அவள் உன்னை மிகவும் நேசிக்கிறாள் என்று கூறினாள்.
அது மட்டுமில்லாமல் அடுத்த வாரம் பள்ளிக்கூடத்தில் பெற்றோர்களுக்கான ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது, அதில் பெற்றோர்களுடைய சிறு வயது போட்டோவை எல்லாம் ஆல்பம் செய்து கொடுக்க வேண்டும் உன் மகள் அதற்காகத்தான் என்னிடமிருந்து வாங்கிச் சென்றாள், ஆனால் நீதான் அவளை புரிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டாய் என்றும் துக்கத்தோடு கூறினாள்.
அதற்குப் பிறகு அவள் தான் செய்த தவறை எண்ணி எண்ணி தவித்தாள். பிறகு உடனடியாக அந்த பெண்ணின் மாமா வீட்டுக்கு சென்று அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டாள். அவளை கையோடு தன் வீட்டிற்கு கூட்டி வந்தாள். இனி எனக்கு நீதான் முக்கியம்.. எல்லாமே எனக்கு நீ தான்… இனி நான் வாழும் வரை உனக்காகவே வாழ்வேன் என்று கூறி அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
இந்த கதையின் மூலமாக நமக்கு தெரிவது என்னவென்றால் அந்த தாய் தன்னுடைய நலத்தை மட்டுமே யோசித்தாளே தவிர தந்தையையும் தாயையும் இழந்து தவிக்கும் அந்த பெண்ணை பற்றி கொஞ்சம் கூட அவள் சிந்திக்கவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோ இவளைத்தான் தன்னுடைய சொந்த தாயாக நினைத்திருக்கிறாள்.
ஒரு முடிவை எடுக்கும் போது அடுத்தவர்களைப் பற்றியும் நினைக்க வேண்டும். அவர்களையும் மனதில் வைத்து அதற்குப் பிறகு ஒரு நல்ல திட்டத்தை தீட்ட வேண்டும். அடுத்தவர்கள் என்றால் நான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை கூறவில்லை நம்முடைய குடும்பத்தினரை மனதில் வைத்துக்கொண்டு எடுத்தாலே போதுமானது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings