எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மூன்று வீடுகளிலும் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் கனகா. திரும்பி வரும்போது வடை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றெண்ணியிருந்தாள். ஒரு கடையில் எப்போதும் சுடச்சுட வடை போட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த கடை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்தாள்.
அலுமியக் கூடைகளில் வடை, போண்டா என்று தனித்தனியாக கொட்டி வைத்திருந்தார்கள். கண்ணாடிப் பெட்டிக்குள்ளும் சமோசா, பக்கோடா என்று கண்கவரும்படி இருந்தன. ஒரு அம்மா வாணலியில் அறிகரண்டியால் கிளறிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் உற்றுப் பார்த்தாள் கனகா. வடைகள்தான் வெந்து கொண்டிருந்தன.
பத்து நாட்களாக, ‘காரவடை செஞ்சு கொடும்மா… தின்னு ரொம்ப நாளாச்சு…‘ என்று சொல்லிக் கொண்டிருந்தாள் செல்வி. அவளுக்கு காரவடை என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதையும் மோர் குழம்பில் போட்டுக்கொடுத்துவிட்டால், வயிறு முட்டச் சாப்பிடுவாள்.
வீட்டில் வடை சுடவேண்டுமென்றால், கடலைப்பருப்பு, எண்ணெய் எல்லாம் வேண்டும். மாசக் கடைசி வேறு. இந்த சமயத்தில் காசு செலவழிக்க எங்கே போவது என்று யோசித்துக் கொண்டு, அவள் கேட்கும்பொழுதெல்லாம் சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனாலும் அப்போதைக்கு மறந்துவிட்டு மறுபடியும் வந்து நச்சரிப்பாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவளது நச்சரிப்புத் தாங்கமுடியாமல் போகவே, ‘சரிடி கொஞ்சம் பேசாம இரு… நான் கடையில இருந்தாவது வாங்கிட்டு வந்து தர்றேன்… தின்பே…‘ என்று சொல்லிவிட்டாள் கனகா. செல்விக்கு குஷி தாங்கவில்லை.
நேற்றைக்கு ஸ்கூல் விட்டு வந்தவுடனேயே மூடி வைத்திருந்த தட்டு, கிண்ணம், டப்பா எல்லாவற்றையும் திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
‘என்னடி அங்கே சத்தம். என்னத்தைப் போட்டு உருட்டறே…‘ என்று இங்கிருந்தே சத்தம் போட்டாள் கனகா.
‘எங்கேம்மா வடையைக் காணோம்… எங்கே வச்சிருக்கே…‘ என்றாள் அவள் அங்கிருந்தபடியே .
‘அடியேய்… நான் வாங்கிட்டு வந்திருந்தா, நீ ஸ்கூல் விட்டு வரும்போதே சொல்லியிருக்க மாட்டேனா… ‘ என்றவள் கொஞ்சம் யோசித்து பார்த்துவிட்டு, ‘ இன்னிக்கு மறந்துட்டேன்… சரி விடு, நாளைக்கு நான் கண்டிப்பா வாங்கிட்டு வர்றேன்… இப்போ போயி விளையாடு, போ… ‘ என்று அவளை துரத்தினாள்.
காலையில் பள்ளிக்கூடம் போகும்போது அம்மாவிடம் அவள் நினைவுப்படுத்தி விட்டுத்தான் போயிருந்தாள்… கனகாவும் வேலைக்குப் போகும்போது அந்தக் கடையைப் பார்த்துக் கொண்டேதான் போயிருந்தாள். அப்போது கடை திறந்திருக்கவில்லை. அங்கேதான் எப்போதும் கூட்டம் ஜேஜே என்று இருந்து கொண்டே இருக்கும். வடை போண்டா சுடச்சுட கொண்டு வந்து கொட்டிக்கொண்டே இருப்பார்கள். மக்கள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
செல்வியும் அப்படித்தான். அவளுக்கு பிடித்தமான எதையாவது செய்துகொடுத்து விட்டால் போதும், இந்தப் பக்கம் வரும்போதும், அந்தப் பக்கம் போகும்போதும் எடுத்து எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பாள். விளைவு ராத்திரி சாப்பிட மாட்டாள். சில சமயம் வயிற்றைத் தடவிக்கொண்டு, ‘ அம்மா வவுத்தை வலிக்குதும்மா… ‘ என்று அழுவாள்.
கடையில் வந்து நின்றவள் ஜாக்கெட்டுக்குள் கைவிட்டு பர்ஸை எடுத்தாள். ஐம்பது ரூபாய் நோட்டு இருக்கிறேன் என்றது.
மெல்ல கடைக்குள் நுழைந்தாள். வடை வேகவைத்துக் கொண்டிருந்த அம்மாள் அறிகரண்டி நிறைய வடைகளை அள்ளிக்கொண்டுவந்து அப்போதுதான் அலுமினிய கூடையில் கொட்டினாள். ஆவி பறந்தது.
ரூபாய் நோட்டை கையில் எடுத்தவள், சற்றே யோசித்தாள். ‘ வடையை வாங்கலாமா, வேண்டாமா. இன்னும் மூன்று நான்கு நாட்களில் சம்பளம் வந்துவிடுமே. பருப்பும் எண்ணையும் வாங்கினால் வீட்டிலேயே சுட்டுத் தரலாமோ… நாள் முழுக்க தின்று கொண்டே இருப்பாளே… ‘ வாங்கித் தின்னியே வீங்கிச் செத்தியே… ‘ என்று இரண்டு வடை மட்டும் வாங்கிக்கொடுத்தால் ஏக்கம் தீர்ந்துவிடுமா என்ன… ‘
யோசனை மாறியது. நேற்றைக்கே சாமான்களை உருட்டினாள். இன்றைக்கும் வடை இல்லை என்றால் அவளுக்கு காய்ச்சலே வந்துவிடும். பேசாமல் வடையை வாங்கிக்கொண்டே போய்விடலாம் என்று முடிவு செய்துகொண்டாள்…
‘ அம்மா என்னம்மா வேணும்… அம்மா… உன்னைத்தான் கேட்கறேன்… என்ன யோசனை… ‘
கடைக்காரர் சத்தம் போடவும்தான் சுயநினைவுக்கு வந்தாள். ‘ நான் கேட்டுக்கிட்டே இருக்கேனே… பேசாம நிக்கிறியே… என்னம்மா வேணும்… ‘ என்றார் அவர் மறுபடியும்.
‘ ரெண்டு வடை… ‘ என்றுவிட்டு, ‘ இல்லை… இல்லை… நாலு வடை கட்டிக்கொடுங்க… ‘ என்றாள்.
இரண்டு வடைகள் வாங்குவதாகத்தான் இருந்தாள். பிறகு திடீரென்று மனது மாறிவிட்டது. இரண்டு மட்டும் சாப்பிட்டால் ஆசை தீருமா… ? செல்வியும் கேட்பாள், ’ஏன்மா… வாங்கினதே வாங்கினே… ஒரு ஆறேழு வடை வாங்கிட்டு வந்திருக்கக் கூடாதா… ‘ என்று.
கடைக்காரர் பேப்பரை எடுத்து நான்கு வடைகளை வைத்து மடித்து ஒரு பிளாஸ்டிக் கவரில் அதை போட்டு நீட்டினார். இவள் பணத்தை கொடுத்தாள். அவர் பத்து ரூபாயை கொடுத்தார். அதை வாங்கி முந்தானையில் வைத்து மடித்து இடுப்பில் செருகிக் கொண்டு மடமடவென கிளம்பிவிட்டாள். பள்ளிக்கூடம் விட்டு வந்து பொட்டலத்தைப் பார்த்தாளானால், முகமெல்லாம் மலர்ந்து போவாள்.
மடியில் வைத்திருந்த பொட்டலம் அவள் நடக்க நடக்க தாலாட்டம் போட்டது. வயிற்றில் லேசாக சூடு பரவவும் செய்தது. வடை வாசனையும் மெல்ல மெல்ல வந்து அவளைத் நாசியில் துளைத்து, அவளுக்கு எச்சிலை ஊறச் செய்தது. கட்டுப்படுத்திக்கொண்டு பேசாமல் நடந்தாள்.
பிள்ளையார் கோவிலில் திருப்பத்தில் திரும்பியதும் பள்ளிக்கூடம் தெரிந்தது. பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் காம்பவுண்டு சுவர். தூரத்தில் குழந்தைகள் வரிசைகட்டி நிற்பதியும் ஆளுக்கொரு தட்டு கையில் வைத்திருப்பதையும் பார்த்தாள். செல்வியும் அதில் இருக்க வேண்டும். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு அம்மாள் சில்வர் கொப்பரையில் இருந்து சாப்பாட்டை அள்ளியள்ளி தட்டுகளில் போட்டுக்கொண்டிருந்தாள்.
சாப்பாட்டு நேரமல்லவா… இப்படியே போய் செல்வியிடம் கொடுத்தால் சாப்பாட்டுடன் சேர்த்து வடையை சாப்பிடுவாளே… என்று தோன்றியது.
ஆனாலும் மற்ற பையன்கள் பார்த்துக்கொண்டிருக்க இவள் மட்டும் வடை சாப்பிட்டாளானால் நன்றாகவா இருக்கும். அப்புறம் இவளுக்கு வயிற்றுவலி வந்துவிடாதா… என்றும் தோன்றியது.
அந்த நேரம் பார்த்து இவளை ஏதோ இடித்தது போல இருந்தது. திகைத்துப் போய் குனிந்தாள். ஒரு சிறு பெண் ஓடிவந்து காம்பவுண்டு அருகே நின்றாள். எக்கி எக்கி பார்த்தாள். அவளை விட காம்பவுண்டு கொஞ்சம் உயரத்தில் இருக்கவே அவளால் எட்டிப்பார்க்க முடியவில்லை.
சட்டென குனிந்து அங்குமிங்கும் எதையோ தேடினாள். ஓடிப்போய் ஒரு கல்லை எடுத்து வந்து போட்டு அதன் மேல் ஏறி நின்றாள். இப்போது சட்டென அவளது முகத்தில் பிரகாசம். குழந்தைகளைப் பார்த்து பரவசப்படுகிறாளா அல்லது குழந்தைகள் தட்டில் சத்துணவு வாங்கிக்கொண்டு போவதைப் பார்த்து பரவசப்படுகிறாளா என்று யோசித்தாள் கனகா. இந்தக் குழந்தைக்கும் பசியெடுத்து விட்டதோ என்னவோ… என்று நினைத்தாள். (பிற்பாதி வடை விரைவில்…)
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings