இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராஜஹம்சனும் மதுவந்தியும் ஒருவரிடம் ஒருவர் கூறாமல் காதல் வயப்படுகின்றனர். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்த மதுவந்தி ராஜஹம்சனின் நினைப்பில் இருக்கிறாள். ஒருநாள் மாலை ராஜஹம்சன் மது பயிலும் கல்லூரிக்கு வருகிறான். அப்போது மதுவின் தந்தை பார்த்து வைத்துள்ள வரனான சரவணனும் அங்கே வருகிறான்.
தன்னை ஆட்கொண்ட அந்த விசித்திர உணர்விலிருந்து வெளிவர முயற்சித்தாள் மதுவந்தி. இரவு முழுவதும் அழுத கண்ணீர் அவள் கன்னங்களில் மிச்சம் இருந்தது. ஹம்சனின் மேல் கோபம் ஆத்திரம் வருத்தம் என எல்லாம் சுழன்று வந்து அவளை சிதறடித்தது. முதல் நாள் மாலை கல்லூரியில் நடந்த நிகழ்வுகள் மனதில் திரும்பவும் படமாகியது.
ராஜ ஹம்சனைப் பார்த்ததில் மனம் முழுவதும் நிறைந்து மகிழ்ச்சி வெள்ளம் அவள் முகத்தில் பெருகியது. ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் ப்யூனின் அழைப்பு அவளை திகைக்க செய்தது. அதற்குள் அந்த சரவணன் அவளை தேடி வந்து விட்டான்.
“நீங்க தான் மதுவந்தியா” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் மது.
சராசரி உயரம் உருண்டையான முகம் கண்கள் தீர்க்கமாக இருந்த முகத்தில் சற்று கூரான பெரிய நாசியுடன் எதிரில் நின்றவனிடம் “ஆமாம்” என்பது போல் தலையை ஆட்டினாள் மது.
“மாமா உங்க போட்டோ அனுப்பி இருந்தாரு. காலேஜ் விபரமும் அதுல போட்டு இருந்தாரு. அதான் நேர்ல உங்களை பார்த்து பேசலாம்னு வந்தேன்” என்றான் சரவணன்.
மதுவுக்கு அவன் யாரென்பதே தெரியாத குழப்பம். அதைவிட ஹம்சன் சற்று தூரத்தில் இருந்து இவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளை பதட்டமடையச் செய்தது.
நீலாம்பரிக்கு மதுவின் பதட்டம் ஆச்சரியமாக இருந்தது. மது சரவணனிடம் “எனக்கு உங்களை யாருன்னே தெரியாது. பார்த்ததும் இல்லை” என்று பேசியவளை இடை மறித்து சரவணன் “சாரி சாரி நான் குன்னூரில் உங்க மாமா வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கேன். நமக்கு திருமணம் பேசி முடிக்க போறாங்க நம்ம வீடுகளில்” என்றவன்
“நீங்க போட்டோவிலும் அழகா இருக்கீங்க. நேர்ல இன்னும் அழகா இருக்கீங்க” என்றான் சிரித்தபடி.
“ஐயோ” என கத்த வேண்டும் போல் இருந்தது மதுவுக்கு. சரியான விவஸ்த்தை கெட்டவனா இருக்கானே. இவனைபோய் என் மாமா எனக்கு செலக்ட் பண்ணி இருக்காரு. பூஜை வேளையில கரடி மாதிரி வந்து நிற்கிறான்.
ஓரக்கண்ணில் சற்று தூரத்தில் நின்ற ஹம்சனை பார்த்தாள் மது. அவன் முகம் இறுக்கமாக எதையும் வெளிக்காட்டாமல் இருந்தது. அதற்குள் கல்லூரி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாள் ப்ரியா.
இது இன்னொரு கரடி என நினைத்தாள் ப்ரியாவை பார்த்த மது. ப்ரியாவோ யாரையும் பாராதது போல் நேராக ராஜஹம்சனிடம் சென்று “மாமா என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தீங்களா” என்று கொஞ்சியபடி அவன் கையை தன் கையோடு இணைத்துக் கொண்டாள்.
“போய் கார்ல ஏறு ப்ரியா” சிடுசிடுவென்று கூறிய ஹம்சன் மதுவந்தியை நோக்கி வந்தான்.
“என்ன ப்ரோ உங்க ஃப்ரண்டை பார்க்க காலேஜுக்கே வந்துட்டீங்க போல” என்று சரவணனைப் பார்த்து கேட்டான்.
சுர் என்று ஏறிய கோபத்தில் மது ஹம்சனிடம் “ஆமா அவர் என் ஃப்ரண்டு தான் என்னை பார்க்கத்தான் வந்திருக்கிறார்” என்றாள் வெடுக்கென்று.
“ஒரு வாரம் கூட ஃப்ரண்டை பார்க்காமல் இருக்க முடியாதோ” என்று கேட்ட ஹம்சனை உதடுகள் துடிக்க கண்கள் கலங்க பார்த்தாள் மதுவந்தி. சரவணனும் “இவங்க என் ஃப்ரெண்ட் இல்ல. எனக்கு மதுவை நிச்சயம் பண்ண போறாங்க வீட்டுல” என்றான் பெருமையாக.
“ஓ… அப்படியா வாழ்த்துக்கள்” என்று கூறிய ஹம்சன் அடிபட்ட புலி போல் மதுவை ஒரு பார்வை பார்த்தான்.
மதுவந்தி கோபமும் வருத்தமும் மனதில் பொங்க “வாழ்த்து சொல்லிட்டீங்க இல்ல போங்க” என்று கூறி கைகளை குவித்து வணக்கம் சொன்னாள் ஹம்சனிடம்.
இறுக்கமான கோப முகத்துடன் அங்கிருந்து காருக்கு சென்றான் ஹம்சன். அவன் காரை வேகமாக ஓட்டிச் சென்றது மனதில் படமாகியதில் மீண்டும் மதுவந்தியின் கண்கள் நீரை உதிர்த்தன. இது என்ன பைத்தியக்காரத்தனம். சரவணனனை என் ஃப்ரெண்டுன்னு அவரா கற்பனை செய்துவிட்டு என் மேல கோபப்பட்டா நான் என்ன செய்ய முடியும்.
அது சரி அவருக்கு எதுக்கு நான் சரவணனனைப் பற்றி விளக்கம் கொடுக்கணும். எல்லா ஆண்களும் இப்படித்தான் அவர்களாகவே ஒரு அனுமானம் செய்து கொண்டு உண்மை எது என புரிந்து கொள்ளாமல் ஆத்திரப்படுவர் போல.
மதுவந்தியின் மனதுக்கத்தின் சுமை தாங்க முடியாமல் அவள் தளிர் உடல் நடுங்கியது. அப்போது பல் துலக்கி விட்டு பாத்ரூமில் இருந்து வெளிவந்த நீலாம்பரி “ஏய் மது உடம்புக்கு எதுவும் முடியலையா? காய்ச்சலா இருக்கா” என்று கேட்டு அருகில் வந்து அவள் நெற்றியில் கை வைத்தாள்.
நீலாம்பரியின் ஆதரவான வார்த்தைகளைக் கேட்டு மதுவின் கண்கள் நீரைப் பெருக்கின. அதை பார்த்து சற்று கோபத்துடன் “மது போதும் அழுதது நேத்து சாயங்காலத்திலிருந்து அழுதுட்டு இருக்க. ஏய் ராஜஹம்சன் கேட்டதுக்கு நீ தான் பதிலுக்கு பதில் கொடுத்துட்டியே அப்புறம் எதுக்குடி அழுகிற” என்று சலிப்புடன் கேட்டாள் நீலாம்பரி.
பதில் பேசாமல் கண்ணீருடன் இருந்த மதுவை பார்த்து “மது உனக்கு ராஜஹம்சனை பிடிச்சிருக்கா? நீ அவரை காதலிக்கிறாயா” என்று தயக்கத்துடன் கேட்டாள்
நீலாம்பரி. அதிர்ச்சியுடன் தன் தோழியை நிமிர்ந்து பார்த்த மது “எனக்கே என் மனசு புரியல்லடி” என்றாள் கலங்கிய குரலில். “ஆனா அவருக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அதான் அவ்வளவு கோபம் அவருக்கு வந்தது சரவணனை பார்த்ததும்” என்றாள் புரிந்தது போல்.
மனம் பளிங்கு போல் தெளிந்தது மதுவந்திக்கு. நீலாம்பரியின் வார்த்தைகள் ஒரு கூடை பூக்களை அவள் தலை மேல் கொட்டியது போல் இருந்தது. “அப்படி இருக்குமா” என்று கண்கள் மின்ன கேட்டாள் மது தன் தோழியிடம். “கன்ஃபார்ம், இல்லைன்னா இப்படி ஆத்திரம் வருமா அவருக்கு” என்றாள் நீலாம்பரி பதிலுக்கு.
குளிர் தென்றல் வீசியது மதுவின் மனதில். மெலிதாக புன்னகைத்தாள் மது “அப்பா சிரிப்பு வந்துடுச்சா. நீ தான் அந்த சரவணன்கிட்ட இனிமே காலேஜுக்கு வந்து என்னை பார்க்கிறது எல்லாம் வேண்டாம். வீட்டில பெரியவங்க முடிவு செய்ததற்கு அப்புறம் பேசிக்கலாம்னு கண்டிப்பா சொல்லிட்டியே இனி கவலையை விடு. உங்க அம்மாவுக்கு வேணா போன் செய்து சரவணன் இங்கு வந்து உன்னை பார்த்துட்டு போனதைப் பற்றி சொல்லிடு மது” என்று கூறிய நீலாம்பரியிடம் “நானும் அதைத்தான் நினைச்சேன் எங்க அம்மாவுக்கு இப்பவே போன் செய்து சொல்றேன்டி” என்றாள் மது.
நெருப்பாக தகித்த மனத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் தன் வீட்டு பால்கனியில் உலவிய ராஜ ஹம்சன் ஒரு கட்டத்தில் முதல் நாள் நடந்த நிகழ்வை திரும்பவும் மனதில் ஓட்டிப் பார்த்தான். மனம் கொள்ளா ஆசையுடன் மதுவை பார்க்க வந்தவனுக்கு சரவணன் மதுவை பார்க்க வந்துள்ளான் என்பதே ஆத்திரமூட்டியது.
அதிலும் மது அவனிடம் பேசியது அவனை கொதி நிலைக்கு கொண்டு சென்றது. சரவணனனை மதுவுக்கு வரனாக அவர்கள் வீட்டில் பார்த்துள்ளனர் என தெரிந்ததும் கோபம் அடங்காமல் வந்தது.
உன் கோபத்தில் நியாயமே இல்லை நீ உன் மனதை, அதில் உள்ள காதலை மதுவிடம் கூறினாயா? அவன் மனமே அவனை அதட்டியது. உன் பார்வையிலேயே அவள் புரிந்து கொள்ள வேண்டுமா. ஹம்சனுக்கு தன் தவறு புரிந்தது.
மதுவின் வாடிய ரோஜா போன்ற முகத்தையும் அவள் கண்களில் தெரிந்த வருத்தத்தையும் எண்ணிப் பார்த்தவன் “ஐ அம் சாரி மது இந்த ப்ரியா வேற அவ பங்குக்கு என்னை ஏத்தி விட்டுட்டா உனக்கும் அந்த பையன் சரவணனுக்கும் அடுத்த வாரம் நிச்சயம்னு சொல்லி”.
முதல் நாள் நேராக ராஜ ஹம்சனிடம் வந்த ப்ரியா அவன் கைகளை தன்னுடன் கோர்த்துக்கொண்ட பின் “மாமா அந்த பையனை நல்லா பார்த்துக்கோங்க. அவன் தான் மதுவுக்கு மாப்பிள்ளை. அடுத்த வாரம் நிச்சயமாம் ஆபீஸ்ல யாரையோ பார்க்க நிக்கிறானேன்னு கேட்டா எம் காம் ஃபர்ஸ்ட் இயர் மதுவை பார்க்க வந்தேன்னு சொன்னவன் எல்லாம் சொல்லிட்டான்” என்றாள் கள்ளக் குரலில்.
“அவள் சொன்னது உண்மையா பொய்யானு கூட தெரிஞ்சிக்காம வெறிபிடிச்ச மாதிரி உன் மேல கோபப்பட்டு விட்டேன். ஐ அம் சாரி, ஐ அம் சாரி மது” என்று முணுமுணுத்த வண்ணம் இருந்தான்.
அவனுக்கு காப்பியை எடுத்து வந்த அவன் அன்னை மீனாட்சி “என்னப்பா தம்பி யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறாய்” என்று கேட்டார்.
தன் அம்மாவிடம் காப்பியை வாங்கி ராஜஹம்சன் “அம்மா நான் ஒரு தப்பு செய்து விட்டேன் அதை சரி செய்யணுமா ” என்றான் தளர்ந்த குரலில்.
“ஏன் தம்பி நைட் சரியா தூங்கலையா கண்ணெல்லாம் சிவந்து இருக்கு” என்று கவலையுடன் கேட்டார் மீனாட்சி.
“அதான் அந்த தவறை சரி செய்யற வரைக்கும் கொஞ்சம் டென்ஷனா இருக்கும். நீங்க கவலைப்படாதீங்கம்மா” என்று கூறினான் ராஜஹம்சன் தன் அன்னையை ஆறுதல் படுத்தும் விதமாக.
ஆனால் மீனாட்சியின் மனதிலோ ஏதோ மதுன்னு பெயர் சொன்ன மாதிரி இருந்ததே அது அந்த பொண்ணு மதுவந்தியா இருக்குமோ என்று நினைத்தவர் யோசனையில் ஆழ்ந்தார். பின் தன் மகள் உமையாளுக்கு போன் செய்து இது குறித்து பேச வேண்டும் என்றும் தீர்மானித்தார்.
“அம்மா உன் போன் அடிக்குது மா” சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த கனகவல்லியிடம் உதயன் குரல் கொடுத்தான்.
“யாருன்னு பாரேன் டா” என்றார் கனகா தன் மகனிடம். “அம்மா மது தான் கூப்பிடுறாம்மா” என்று கூறிய உதயன் போனை எடுத்து பேசினான்.
“எப்படி இருக்க மது” என்று கேட்ட உதயனின் குரலில் ஆறுதலான மது “உதய் நீ எப்படி இருக்கடா” என்றாள் பாசமாக. “என்ன ரொம்ப ஹோம் சிக்கா அன்பு வழியுதே குரல்ல” என்று கூறிச் சிரித்தான் உதயன்.
அவனிடம் தான் நினைத்ததை சொல்ல முடியாததால் “ஆமாண்டா அதேதான்” என்று கூறிய மது “டேய் போனை அம்மா கிட்ட கொடுடா” என்றாள்.
போனை கனகாவிடம் கொண்டு வந்து கொடுத்தான் உதயன். “மது” என்று தன் அம்மாவின் குரலை போன் வழியாக கேட்டதும் அதுவரை அடங்கியிருந்த துக்கம் அவளுள் மீண்டும் பீறிட்டு எழுந்தது.
“அம்மா அம்மா” என்று மது விசித்து அழுதாள். மதுவின் அழு குரலைக் கேட்டு திகைத்துப் போனார் கனகவல்லி.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings