இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘கம்ப்யூட்டர் படித்தால் அதிக சம்பளம் வேண்டுமென்று வெளிநாடு போய்விடுவார்களாம். அவளுக்கு அவள் படிக்கும் படிப்பு இந்த நாட்டிற்குத்தான் உபயோகப்பட வேண்டும்‘ என்று ஏதேதோ த்த்துவம் பேசி மெக்கானிக் இஞ்ஜினீயரிங் எடுத்தாள்.
ஸாதனவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், அவளுக்கு ஷேக்ஸ்பியரும் கீட்ஸும் வோர்ட்ஸ்வொர்த்தும் தான் மிகவும் பிடிக்கும் என்றும், அவளுக்குப் பிடித்தைத்தான் படிப்பேன் என்று ஆங்கில இலக்கியம் எடுத்துக் கொண்டாள்.
மூன்றாவது பெண் அகிலா எப்போதும் பார்டரில்தான் பாஸ் செய்வாள். ஆனால் எப்படியோ பாஸ் செய்து விடுவாள். அவள் வாங்கும் மதிப்பெண்களும் மோதிரம் போட்டாற்போல் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். புத்திசாலித்தான், ஆனால் புத்தி தான் எங்கெங்கோ மேயும். சினிமா நடிகைகளைப் பற்றிய விவரங்கள் எல்லாம் விரல் நுனியில் தயாராக இருக்கும்.
“அம்மா, நாங்கள் இருவரும் வெளியே வேலை தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் பெற்று வைத்திருக்கும் உங்கள் மூன்றாவது பெண் உங்கள் சாப்பாட்டுக் கடையின் வாரிசாகி விடுவாள. அதனால் நீங்கள் அவள் வாங்கும் மதிப்பெண்களைப் பற்றியோ அல்லது அவள் எதிர்காலம் பற்றியோ கவலைப் படவேண்டாம்” என்று கவிதாவும் சாதனாவும் கலாட்டா செய்தாலும் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அவள் பாட்டி செய்த தயிர் வடையையும் அதன் மேல் தூவியுள்ள காராபூந்தியும் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனால் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் அகிலா.
பாலாஜியும் அம்பிகாவும் மட்டும் எப்போதாவது சிவராஜ் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இருவரும் கலந்து பேச மாட்டார்கள். அவனுடைய அண்ணா அவனை நிர்கதியாய் கரும்புச் சக்கையாய் வெளியே அனுப்பியதை நினைத்துக் கொள்வான். அப்போது கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொள்ளும்.
அம்பிகாவோ, சிவராஜின் மனைவியின் அரக்கத்தனமான குணத்தைப் பற்றி நினைத்தாலும், அவள் குழந்தைகள் வனிதாவும் சுநிதாவும் இவள் செய்யும் பலகாரங்களை எவ்வளவு விரும்பி சாப்பிடுவார்கள் என்று நினைத்துக் கொள்வாள்.
இப்போது இருவரும் எப்படி இருப்பார்களோ? இருவருமே கவிதாவை விட நான்கைந்து வருடங்கள் பெரியவர்களாக இருப்பார்கள். அநேகமாக இப்போது இருவருக்கும் திருமணம் கூட முடிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
எல்லோரும் தங்களை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். பாலாஜி பீனிக்ஸ் பறவை என்று தன்னைத் தானே வெறுப்புடன் சொல்லிக் கொள்வதை பலமுறைக் கேட்டிருக்கிறாள். பணம் இல்லாவிட்டாலும், பந்தங்கள் இல்லாவிட்டாலும் தனிமை என்னும் நெருப்பில் தள்ளப்பட்டால் பீனிக்ஸ் பறவை தானே!
வனிதா சுனீதா இருவரும் கவிதாவைவிட நான்கைந்து வருடங்கள் பெரியவர்கள். இந்நேரம் திருமணமாகி கணவன் வீட்டிற்கே சென்றிருப்பார்கள். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களைத் தேட அவர்களுக்கும் நேரமில்லையோ இல்லை மனம்தான் இல்லையோ?
இந்த கும்பகோணத்தில் கோயிலுக்கு அருகில் இருக்கும் மெஸ் இப்போது ஏறக்குறைய எல்லோருக்கும் நல்ல பரிச்சியமானது. அருகில் இருக்கும் சுவாமிமலையில் கூட நல்ல முறையில் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது ஊர், உலகெல்லாம் வியாபார நிமித்தம் சுற்றும் பாலாஜியின் அண்ணாவிற்கு தெரியாமல் இருக்குமா?
உறவினர் வேண்டுமென்றால் கட்டாயம் வந்திருப்பார்கள். அந்தஸ்தைப் பார்க்கும் போது ஏழை தம்பியும் அவன் குடும்பமும் கண்ணுக்குத் தெரியாது போலும். எல்லாவற்றையும் யோசித்தவாறு அடுப்படியில் உட்கார்ந்து இனிப்புப் பணியாரமும், காரப்பணியாரமும் செய்து கொண்டிருந்த அம்பிகா, தன் அருகில் வேகமாக வந்து நின்ற கவிதாவை ஏற இறங்கப் பார்த்தாள்.
இன்னும் சின்னப் பெண்ணாகவே நினைத்துக் கொண்டிருந்த இந்த கவிதா எப்படி, திடீரென்று இவ்வளவு உயரமாக ஒரு அழகு தேவதையாக வளர்ந்தாள்? அதனால் தான் பெண் பிள்ளை பிள்ளை வளரத்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோயென்று சொல்வார்கள் போல் இருக்கிறது’ என்று மனதிற்குள் வியந்து கொண்டாள் அம்பிகா.
“என்னடி திடீரென்று வந்து நிற்கிறாய்? ஒரு நிமிடம் அப்படியே தூக்கி வாரிப் போட்டது” என்றாள் அம்பிகா.
“திடீரென்று வந்து நிற்க நான் என்ன தேவதையா இல்லை பிசாசா? உன்னை ஒரு பத்து முறை கூப்பிட்டேன், ஆனால் நீ எங்கோ கனவுலகில் இருந்தாய் போலும். அம்மா எனக்கு ஒரு இரு நூறு ரூபாய் வேண்டும்”
“காலேஜிற்கு காலேஜ் பஸ்ஸில் போகிறாய், கையில் லஞ்சும் ஸ்நாக்ஸும் எடுத்துச் செல்கிறாய். பிறகு எதற்கு பணம் கேட்கிறாய்?”
“இந்த மாத பாக்கெட் மணி தரவில்லையே அம்மா ! எனக்கும் சில கம்பெனிகள் மூலம் ‘இன்டெர்ன்ஷிப்‘ கிடைக்க என் புரபஸர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒருசிறிய கார் கம்மெனியில் எனக்கும் என் ப்ரெண்ட் ஆஷாவிற்கும் ‘இன்டர்ன்ஷிப்’ கிடைத்திருக்கிறது. எல்லாமே ‘ஆன்லைன் ஒர்க்’தான். ஆனாலும் வேலை முடிந்து வீட்டிற்கு வர நேரமாகும். சில நேரங்களில் காபி, டிபன் சாப்பிடவேண்டியிருக்கும். இரவில் அங்கேயே கூட டின்னர் சாப்பிட வேண்டியிருக்கும்” என்றாள்.
பேசுவது எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சாதனா, “அக்கா, இன்டெர்ன்ஷிப் என்றால் என்ன?” என்றாள்.
“பட்டப்படிப்பு மூன்றாவது ஆண்டு படிக்கும் போது மாணவ மாணவிகள் அவர்கள் படிப்புடன் தொடர்புடைய கம்பெனிகளில், உதாரணமாக மெக்கானிகல் இஞ்ஜினியரிங் ஸ்டூடன்ட் என்றால் ஒரு கார் கம்பெனியிலோ அல்லது வேறு ஏதாவது மெஷின் சம்பந்தமான கம்பெனிகளிலோ பகுதி நேர வேலையோ அல்லது முழுநேர வேலையோ விடுமுறை நாட்களில் செய்து தருவதாகும். அப்ரென்டிஸ் மாதிரி என்று வைத்துக் கொள். பெரிய கம்பெனிகளில் அதற்கு ’ஸ்டைபண்ட்’ தருவார்கள். ‘இன்டர்ன்’ ஆக நாம் செய்யும் வேலையும், நம் பிஹேவியரும் அவர்களுக்குப் பிடித்திருந்தால் நமக்கு அந்த கம்பெனியிலேயே வேலையும் கிடைத்து விடும். எல்லாவற்றிற்கும் நம் கடின உழைப்பும், காலம் தாழ்த்தாமல் நேரத்தோடு நாம் நம் வேலைகளை முடித்துத் தருவதும் தான் காரணம். அவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை வர வேண்டும்” என்று தங்கைக்கு விரிவாகக் கூறினாள்.
சாதனாவும் அகிலாவும் அவள் கூறிய விவரங்களை மிகுந்த உன்னிப்புடன் கவனித்தனர். அம்பிகாவும் தன் மகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘எவ்வளவு அறிவாகப் பேசுகிறாள்‘ என்று ஆச்சர்யப்பட்டாள்.
உடனே அவள் மனம் கடந்த காலத்திற்குப் பயணம் ஆனது. பெரியப்பா பெண்கள் இருவரும் காரில் பள்ளிக்குப் போகும் போது, கவிதாவிற்கு மூன்று வயதிருக்கும். வனிதா சுனிதா இருவரையும் ஆச்சர்யத்துடனும் ஆவலுடனும் சமையல் அறையில் நின்று பார்த்துக் கொண்டிருப்பாள். அவர்கள் போகும் கார் வீட்டைக் கடந்து போகும் வரை சமையல் அறை வாசலிலேயே காத்திருப்பாள்.
கார், மெயின் கேட்டைத் தாண்டியவுடன், வேகமாக ஓடிச் சென்று கேட்டைப் பிடித்துக் கொண்டு கார் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தொய்ந்த நடையுடன் கேட்டை சாத்திவிட்டு மெதுவாக வீட்டிற்குள் நுழைவாள்.
தினமும் அவளுடைய நடவடிக்கைகளைப் பார்க்கும் அவள் பெரியப்பா லேசாக சிரித்துக் கொண்டு, “என்ன கவிதா, உன் அக்காக்கள் போயிட்டார்களா?” என்பார்.
‘உம்‘மென்ற தலையசைப்புடன், தன் சாயம் போன கவுனைத் தூக்கி ஒரு விரலால் முறுக்கி வாயில் வைத்துக் கொண்டு, தன் மழலையில், “பெப்பா (பெரியப்பா), நான் பள்ளிக்கூடம் போகும் போது என்னையும் காரில் அழைத்துச் செல்வீர்களா?” என்பாள்.
அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளமுடியாத அவள் பெரியம்மா, “ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க” என்பாள் அவள் தாடையை தோளில் இடித்துக் கொண்டு.
“அக்கா, அப்படியானால் உனக்கு படிக்கும் போதே கையில் பணம் கிடைக்குமா?” என்றாள் அகிலா.
“கிடைக்கும், ஆனால் அது மிகவும் குறைந்த அளவே ஆகும். என்னுடைய காலேஜ் செலவுகளை அதில் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் நாம் உண்மையாகப் பாடுபட்டால் இதன் மூலம் நல்ல வேலை கிடைக்கும்” என்றாள் கவிதா.
“அம்மா, நீ வந்து அப்பாவின் பக்கம் நில்” என்றவள், கல்லாப் பெட்டியின் அருகில் உட்கார்ந்திருந்த பாலாஜியிடம் கையைப் பிடித்து இழுத்துச் சென்று நிற்க வைத்து, இருவர் காலிலும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றாள்.
கவிதா, கல்லூரியில் லைப்ரரியல் ஏதோ பாட சம்பந்தமான புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் தோழி ஆஷா வர, ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள் கவிதா.
“நாம் இன்டர்னாகப்போய் வேலை செய்யும் கம்பெனி, மிகவும் சிறியது என்றுதானே நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அது வடக்கில் பெரிய கார் கம்பெனியான ஆதித்யா குரூப் ஆப் கம்பெனியின் சென்னையின் சிறிய கிளை என்றார் நம் ப்ரபொசர்” என ஆஷா கூற
“அது பெரிய கம்பெனியோ சிறிய கம்பெனியோ, நமக்கென்ன அதனால் லாபம்?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள் கவிதா.
“என்ன லாபமா? நாம் இன்டர்ன்ஷிப் நல்லபடியாக முடிந்தால் டிகிரி முடித்தவுடன் அந்த பெரிய கார் கம்பெனிக்குக் கூட விண்ணப்பிக்கலாம் இல்லையா?”
“நீ விண்ணப்பிக்கலாம், வேலையும் கிடைக்கலாம். ஆனால் உன் பெற்றோர் உன்னை அவ்வளவு தூரம் அனுப்புவார்களா? தினமும் இட்லியும் தோசையுமாக விழுங்கிக் கொண்டிருக்கிறாயே? அங்கே போய் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டு உன்னால் சர்வைவ் பண்ண முடியுமா? முதலில் உனக்கு இந்தி தெரியுமா?” என்றாள் கவிதா நமுட்டுச் சிரிப்போடு.
“ஏதாவது ஒன்று சொன்னால் நெகடிவ்வாக சொல்லாதே” என்றாள் ஆஷா.
“ஏய் லூசு, நான் நெகடிவாகச் சொல்லவில்லை. இப்போதே உன் பெற்றோர் உனக்கு மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீ கோர்ஸ் முடிந்து வடக்கில் போய் வேலை செய்ய அனுமதிப்பார்களா என்று யோசித்துப் பார். நீ உன் இஷ்டத்திற்கு கற்பனை செய்துக் கொண்டு பிறகு நடக்கவில்லையென்றால் வருத்தப் படக்கூடாது இல்லையா? அதற்குத்தான் சொன்னேன்” என்றவள், அவளைப் பாரத்து புன்னகை செய்தாள்.
“நாம் இன்டர்னாக சேரப் போகும் கம்பெனியின் ஓனர்ஸ் கூட பாரின் ரீட்டர்ன்டாம். அவர்களும் அண்ணன் தம்பி என்று இரண்டு பேர் தான். அதில் பெரியவர் பெயர் பாரதிராஜா, சின்னவர் பெயர் இளையராஜா. அதனால் தான் நாம் வேலை செய்யும் கம்பெனிக்கு ராஜா மெக்கானிகல் ஒர்க்ஸ் என்று பெயராம்” என்றாள் ஆஷா.
“அவங்க பேரன்ட்ஸ் இசைப் பிரியர்களோ? சிலர் இசையின் மேல் உள்ள ஆர்வத்தால் தங்கள் குழந்தைகளுக்கு இப்படிப் பேர் வைப்பார்கள்”
“அவர்கள் இசைப் பிரியர்களோ இல்லை லூஸ் குடும்பமோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த விவரங்களை உனக்கு சொல்லி விட்டேன்”
“இவ்வளவு விவரம் அந்த கம்பெனியைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாயே, அது எங்கே இருக்கிறது என்று தெரியுமா?”
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும் – வியாழன் தோறும்)




GIPHY App Key not set. Please check settings