புது வீட்டில் கொண்டாடிய தீபாவளி
தீபாவளி என்றாலே எங்களைப் போன்ற குழந்தைகள் மனதில் வரும் முதல் சொல் பட்டாசு தான், அது போல எனக்கும் பட்டாசு வெடிப்பது மிகவும் பிடிக்கும். நான் என் பழைய வீட்டை விட்டு புது அபார்ட்மெண்டுக்கு வந்து கொண்டாடிய முதல் முதல் தீபாவளி தான் எனக்கு மறக்க முடியாத தீபாவளி ஆகும்
பழைய வீட்டில் தீபாவளியை நான் என் தோழியுடன் கொண்டாடுவேன். இங்கே எனக்கு நண்பர்கள் கிடைப்பார்களா, இங்கு அனைவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவோமா? என்ற சந்தேகங்கள் இருந்தது
இனிப்புடன் தொடங்கிய தீபாவளி நாள்
தீபாவளி அன்று அதிகாலையில் நான் எழுந்து குளித்து சாப்பிட்டு விட்டு புத்தாடையை அணிந்தேன். என் பழைய தோழியைக் கூப்பிட்டு தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறினேன்
காற்று மாசுபடுவதால் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் எங்களைப் போன்ற குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்கும் போது இருக்கும் சந்தோஷம் ஒரு தனி சந்தோஷம்
என் புது வீட்டில் இருந்த பட்டாசு பெட்டியை பார்த்து நான் மகிழ்ந்தேன், ஆனால் யாருடன் வெடிக்கப் போகிறேன் என்று சிந்தித்தேன்.
வீட்டில் நானும் என் பெற்றோர்களும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்பொழுது வீட்டில் அழைப்பு மணி அடித்தது. நான் சென்று கதவைத் திறந்தேன், அங்கே ஒருவர் “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று கூறியபடி இனிப்பு பெட்டியைக் கொடுத்துச் சென்றார்
அதற்குப் பிறகு நிறைய குழந்தைகள் வந்து அனைவரும் தீபாவளி நல்வாழ்த்துக்களைக் கூறி இனிப்புப் பெட்டிகளை கொடுத்துச் சென்றனர். தீபாவளி என்றாலே நான் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருப்பது இனிப்புகளை சாப்பிடுவதற்கு தான். அனைவரும் கொடுத்து சென்ற இனிப்புகளை நான் சாப்பிட்டு மகிழ்ந்தேன்
ஆனால் என் பாட்டியின் சுவையை அந்த இனிப்புகளால் தோற்கடிக்க முடியவில்லை. என் புது அபார்ட்மெண்டில் இருந்த அனைவருக்கும் நானும் இனிப்புகள் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, என் பாட்டி செய்திருந்த இனிப்புகளை அனைவருக்கும் கொடுத்து, தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறி, அனைவரையும் அறிந்து கொண்டேன்
புது அபார்ட்மெண்டில் இருந்த அனைவரையும் நானும் என் பெற்றோரும் சந்தித்தோம். மதிய உணவிற்கு பிறகு, என் பாட்டி வீட்டிற்கு சென்று தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறி வந்தேன். தீபாவளி ஸ்பெஷல் திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தோம்.
தீபாவளி அன்று மாலை
மாலை பட்டாசு வெடிக்க நான் என் பெற்றோருடன் கிளம்பினேன். நான் அப்பார்ட்மெண்டில் புதிதாக குடியேறியதால் எனக்கு யாரையும் தெரியாது. நானும் என் பெற்றோரும் பட்டாசு வெடிக்க ஆவலாக கிளம்பிக் கொண்டிருந்தோம்
அப்பொழுது, “அப்பார்ட்மெண்டில் உள்ள அனைவரும் வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து பட்டாசுகளை வெடிக்கலாம்” என்று அழைத்தார்கள். எனக்கு கூச்சமாக இருந்தது, என் பழைய தோழியின் ஞாபகம் வந்தது.
நான் எப்பொழுதும் அவளுடன் சேர்ந்து தான் பட்டாசை வெடிப்பேன். ஆனால் இன்று அவள் வீட்டில் தனியாக பட்டாசு விட்டுக் கொண்டிருப்பாள், நானும் இங்கு தனியாக தான் விடுவோம் என்று வருத்தப்பட்டேன்
ஆனால் இங்கும் நிறைய குழந்தைகள் இருந்தனர். நாங்கள் பட்டாசு பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே சென்றோம். அங்கு குழந்தைகள் அனைவரும் குழுவாக நின்று பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்
நான் சற்று கூச்சப்பட்டு, “யாரையும் தெரியாதே இவர்களுடன் சென்ற எப்படி பட்டாசு விடுவேன்” என்று நினைத்தேன். வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்பினேன், ஆனால் அவர்கள் என்னைப் பார்த்து அன்புடன் அழைத்தனர்.
அனைவரும் சற்று நேரம் பேசினோம். அனைவரும் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். அதனால் என்னுள் இருந்த கூச்சம் வெளியேறியது. நானும் அவர்களுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தேன்.
கூடிக் களித்த தீபாவளி
அப்போது பெற்றோர்கள் பட்டாசை வெடிக்கலாம் என்று கூறினார்கள். அனைவரும் அவர்களுடைய பட்டாசை ஒரு அறையில் வைத்திருந்தார்கள்
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், என்னுடைய பட்டாசு உன்னுடைய பட்டாசு என்று இல்லாமல், பகிர்ந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பட்டாசு வெடிக்க ஆரம்பித்தார்கள்.
என்ன தான் என் பழைய வீட்டில் நானும் என் தோழியும் சேர்ந்து பட்டாசு விட்டோம் என்றாலும், இது ஒரு தனி அனுபவமாக இருந்தது. உற்சாகத்துடன் பட்டாசை எடுத்து நானும் என் புது நண்பர்களுடன் வெடிக்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது ஒரு அணுகுண்டை வெடிக்க என்னைக் கூப்பிட்டார்கள். நான் பயந்தேன், அனைவரும் உற்சாகப்படுத்தினார்கள். என் புதிய நண்பர்கள் அனைவரும் வெடிகுண்டுகளை எல்லாம் வெடித்துக் கொண்டு இருந்தார்கள். நானும் வெடிக்க வேண்டும் என்று நினைத்தேன்
நான் வெடித்த பட்டாசு
தீ கம்பியை எடுத்துக் கொண்டு என் தந்தையுடன் வெடி வைக்கச் சென்றேன். என் கை மிகவும் நடுங்கியது, வெடியின் திரியில் என்னால் தீயைப் பற்ற வைக்க முடியவில்லை
என் தந்தை கேளிக்கையாக தீப்பற்றும் முன்பே வெடி வெடிக்கும் சத்தத்தை செய்தார், நான் பயந்து ஓட ஆரம்பித்தேன், அனைவரும் சிரித்தார்கள்
ஐந்து நிமிடத்திற்கு பிறகு கடைசியில் அந்த வெடியை பற்ற வைத்து விட்டு, நான் என் கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தேன்
தூரத்தில் பாம் வெடிக்கும் சத்தம் கேட்டது, ஆனாலும் நான் நிற்கவில்லை. ஒவ்வொரு வெடியை பற்ற வைத்து விட்டு நானும் என் நண்பர்களும் மிக தூரம் ஓடிச் சென்றோம்.
“பரவாயில்லை, இது ஒரு நல்ல ஓட்ட பயிற்சி” என்றார் என் தாய். நான் பட்டாசு வெடிக்கும் முறையை பார்த்து அனைவரும் வயிறு குலுங்க சிரித்தார்கள்.
அவர்களில் ஒருத்தியாய் என்னை ஏற்ற நட்புகள்
என் புது நண்பர்கள் என்னை அவர்கள் நட்பு குழாமில் இணைத்துக் கொண்டார்கள். கடைசியில் 200 வெடிகள் உடைய ராக்கெட்டை பற்ற வைத்தார்கள். பெற்றோர்கள் குழந்தைகள் என்று இல்லாமல், அனைவரும் குழந்தைகளாக அது வெடிக்கும் போது உற்சாகமாக கைத்தட்டி ரசித்தோம்
ஒவ்வொரு வெடியும் வெடிக்கும் போது என் மனதிற்குள் ஒவ்வொரு உணர்வு வந்தது. நான் சற்று வருத்தப்பட்டேன் என்னுடைய பழைய தோழியை இன்று நான் சந்திக்கவில்லையே என்று. நான் சந்தோஷமும் பட்டேன் இவ்வளவு நல்ல நண்பர்கள் இங்கு கிடைப்பார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.
மறக்க முடியாத தீபாவளி
தீபாவளி முடிந்து விட்டதே என்று வருத்தப்பட்டேன். ஆனால் எங்கேயும் கிடைக்க முடியாத மிகச் சிறந்த நண்பர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடைந்தேன்.
தனியாக வெடி பட்டாசை வெடித்து விட்டேன் என்றும் மகிழ்ந்தேன். ஒவ்வொரு வருடமும் நான் தீபாவளி கொண்டாடும் போது, நான் முதல் முதலில் அபார்ட்மெண்ட் வந்து கொண்டாடிய தீபாவளி தான் என் நினைவில் வரும்.
நான் எப்பொழுது எங்கிருந்தாலும், யாரோடு தீபாவளியை கொண்டாடினாலும், எனது நண்பர்களுடன் கொண்டாடிய இந்த தீபாவளி தான் மறக்க முடியாத தீபாவளி ஆகும்
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
சின்னஞ்சிறு சிறுமிக்கே உண்டான உற்சாகத்துடன் அருமையான பகிர்வு. பாராட்டுகள்.
ஆமாம்ப்பா, எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. மென்மேலும் உயரங்கள் தொட நானும் வாழ்த்துகிறேன்
Good keep going
சின்னக் குழந்தையாக இருந்தாலும் நன்றாக எழுதி இருக்கிறார் இந்தக் குழந்தை. தொடர்ந்து இதே உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி வரப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள்.
நன்றிங்க மாமி