பஜ்ஜி, சிப்ஸ், பொரியல் என்று வாழைக்காயில் பலவிதமான ரெசிபிக்களை செய்து சுவைத்திருப்போம்
இன்று நாம் பார்க்கப் போவது வாழைக்காயில் சப்பாத்தி, பூரி அல்லது நான் (Naan) போன்ற ஐயிட்டங்களுக்கு தொட்டுக்கையாக செய்து பரிமாறக்கூடிய கோஃப்தா
மலாய் கோஃப்தா, ஆலு கோஃப்தா கேள்விப்பட்டிருப்பீர்கள், அதேப் போல் வாழைக்காய் கோஃப்தா. வாங்க! பீகார் ஸ்பெஷலான இந்த ரெசிபியை எப்படி செய்யறதுனு பார்க்கலாம். செய்முறை சற்றே பெரிது தான், ஆனால் ஒருமுறையேனும் செய்து ருசிக்க வேண்டிய பதார்த்தம்
தேவையான பொருட்கள்:-
கோஃப்தா செய்ய:-
வாழைக்காய் – 2
பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சின்ன துண்டு (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
கிரேவி செய்ய:-
அரைக்க வேண்டியது:-
வெங்காயம் – 1 (மீடியம் சைஸ்)
தக்காளி – 2 (மீடியம் சைஸ்)
இஞ்சி -சிறிதளவு
பூண்டு -2 பல்
பச்சை மிளகாய் – 2
தனியா – 1 ஸ்பூன்
வதக்க:-
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:-
1) வாழைக்காய்களை நன்கு கழுவி, காம்பு மற்றும் அடிப்பகுதியை நறுக்கி விட்டு, தோலுடன் இரண்டாக வெட்டி, இட்லிப்பானையில் பத்து நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
2) ஆறியவுடன், வெந்த வாழைக்காய்களின் தோலை நீக்கி விட்டு, நன்கு மசித்துக் கொள்ளவும்
3) அதனுடன் கோஃப்தா செய்யக் கொடுத்துள்ள பொருட்களான, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துண்டுகள், உப்பு, கடலைமாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து சின்ன சின்ன சின்ன உருண்டைகளாக செய்து கொள்ளவும்
4) சூடான எண்ணெயில் கோஃப்தா உருண்டைகளை போட்டு, பொரித்து எடுத்து தனியே வைக்கவும்
5) அடுத்து அரைக்கக் கொடுத்திருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, தனியா ஆகியவற்றை, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
6) ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் சீரகத்தை போட்டு பொரிய விடவும்
7) அரைத்த வெங்காயம் தக்காளி விழுதைச் சேர்த்து, ஐந்து நிமிடம் போல வதக்கவும்
8) அடுத்து மேலே கொடுத்திருக்கும் மசாலா சாமான்களான, பொடிவகைகளைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
9) அதில் கிரேவிக்கான தண்ணீர் சேர்த்து, சற்றே நீர்க்க வைத்துக் கொள்ளவும்
10) இப்போது கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் செய்து வைத்திருக்கும் கோஃப்தாக்களை போட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்
சூடான சுவையான வாழைக்காய் கோஃப்தா தயார். இதை சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறலாம், உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து சொல்லுங்களேன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
நன்றி
உங்க ஸ்பெஷல் ரெசிபியை சஹானா இணைய இதழுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஆதி வெங்கட். நம்ம சஹானா இதழில் வந்த முதல் சமையல் பதிவே (சிறுதானிய முருங்கை பக்கோடா) ஆதி வெங்கட் எழுதினது தான்.
ஆதி Amazon மூலம் சமையல் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கறது அவங்களோட முதல் பதிவுல சொல்லி இருந்தேன். சமீபத்துல Youtube சேனல் கூட ஆரம்பிச்சு இருக்காங்க. அதோட பேர், “ஆதியின் அடுக்களை”. லிங்க் கீழே குடுத்துருக்கேன்
Adhi Venkat’s YouTube Channel Link
போய் பாருங்க. நல்ல நல்ல ரெசிப்பீஸ் என்ஜாய் பண்ணுங்க. நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
Like this:
Like Loading...
ரெசிபியை வெளியிட்டதற்கும், வாய்ப்பு கொடுத்ததற்கும் மிக்க நன்றி..
Thank you so much Adhi
பண்ணியும் இருக்கேன், சாப்பிட்டும் இருக்கேன். நல்லாச் சொல்லி இருக்காங்க ஆதி வெங்கட். அவங்களோட யூ ட்யூபும் பார்க்கிறேன்.
Thanks a lot