2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16
ஆதர்ஷ் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே நீரஜா விஷயத்தில் அவன் மனம் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தது. அன்று அப்பா பேசியது மேலும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அப்பா இன்னும் எந்த காலத்தில் இருக்கிறார். என்னிடம் கேட்காமல், என் திருமணத்தை முடிவு செய்யும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது மனம் புழுங்கியது.
அவருக்கு என்னையும், என்னுடைய எதிர்கால வாழ்க்கையையும் பற்றி கவலையில்லை. என்னுடைய மனதைப் பற்றியும், அதன் உணர்வுகளை பற்றியும், கவலையில்லை. அவருடைய கவலையெல்லாம் பிஸினசை ஐந்தாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு கொண்டு வர ஒரு குறுக்குவழி… அதற்கு இந்த திருமணம்… “
“ஏன் இப்படி இருக்கிறார்? தன் ஒரே மகன் அவனுடைய உணர்வுகளை கூட புரிந்துகொள்ள வேண்டும் என்று யோசிக்காமல்.. பணம்.. பணம்.. பணம்.. என்று இருக்கிறாரே ..இவ்வளவு பணமும் நான் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காகத் தானே. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தான் காட்டும் பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்கிறாரே இது என்ன நியாயம்?”
கதவு திறக்க ருக்மணி தேவி உள்ளே வந்தாள்.
” என்னடா.. இன்னும் தூங்கலையா?” என்றாள்.
“ஏம்மா.. நீங்க இன்னும் தூங்கலையா?”
“தூங்கும் படியாவா உங்கப்பா நம்மள வச்சிருக்காரு ? உன் நிம்மதியும் ஏன் நிம்மதியும் சேர்த்து எடுத்துட்டாரு.. எப்படி பேசுறாரு பாரு ஆதர்ஷ்! “என்றாள் ஆதங்கத்துடன்.
“இவர் சொன்னால் என்னம்மா? இவர் சொன்னதுக்கெல்லாம் நான் தலையாட்டுவேன்னு நினைச்சா கண்டிப்பா கிடையாது. இவர் சொல்வதற்காகவே நான் செய்ய மாட்டேன்” என்றான் பிடிவாதமாக.
“உனக்கு உங்கப்பாவைப் பத்தி சரியா தெரியாது ஆதர்ஷ் . நானும் அவரைப் பத்தி சொல்லி அவர் மேல உனக்கிருக்கும் மரியாதையை கெடுக்க வேணாம்னு சொல்லல. ஆனா இப்போ அவருடைய இன்னொரு முகத்தை நீ தெரிஞ்சுக்க வேண்டிய நேரமும் வந்துருச்சு”
“என்னம்மா புதிர் போடுறீங்க? ஏதோ சொன்னாரே கோவத்துல ,உங்கம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுக் -கோங்கன்னு… அதைத்தான் சொல்றீங்களா?”
“ஆமாண்டா அதைத்தான் சொல்றேன். உன் அத்தை நம்ம சாரதாவுடைய கதை…”
“நமக்குத் தெரிஞ்சு அத்தையோட வாழ்க்கையில ஒன்னும் பிரச்சனை இல்லையேம்மா. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலையே”
“ஆதர்ஷ்! அந்த காலத்துல நான் கல்யாணமாகி வரும்போது சாரதா படிச்சிகிட்டிருந்தா. அப்ப உன் தாத்தா, பாட்டி இருந்தாங்க. மாமா ,அத்தை நாங்க ரெண்டு பேரு, சாரதான்னு நாங்க 5 பேரும் ஒரே வீட்டில் இருந்தோம். அப்ப பெரிய பங்களா கிடையாது … ஒரு பெரிய வீடு.. சாதாரண வாழ்க்கை..”
“ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ் உங்க தாத்தா ஆரம்பிச்சது. அவர் கடுமையா உழைச்சு இதை மேலே கொண்டு வந்தார். ஆனால் அவர் உங்கப்பாவைப் போல குறுக்கு வழியில் போகல. நேர்மையா உழைச்சாரு.. “
“தன்னுடைய ஊழியர்களை யெல்லாம் சொந்தப் பிள்ளைகளைப் போல பாத்துகிட்டாரு. அதனால அவங்களும் கடுமையா உழைச்சாங்க. கம்பெனியும் கொஞ்சம் கொஞ்சமா மேல வந்தது. நம்முடைய வசதி வாய்ப்பெல்லாம் கூடுச்சு .அதோட உங்க அப்பாவுடைய குணமும் மாறுச்சு.. பணம் அவரை மாற்றிடுச்சு.. நிறைய சம்பாதிக்கனும்னு குறுக்கு வழியில போக ஆரம்பிச்சாரு..”
“தாத்தாக்கும், அவருக்கும் எப்போதுமே ஒத்துவராது. அப்ப சாரதா கல்லூரியில படிச்சுகிட்டிருந்தா. பெண்களை அவ்வளவு ரொம்ப படிக்க வைக்கிற காலம் இல்லை .. இருந்தாலும், உங்க தாத்தா அவளை படிக்க வச்சாரு. “
“அப்ப நம்ம கம்பெனில வேலை பாக்குற ஒரு பையன் பேரு ஆனந்தன். அவன் தாத்தாக்கு எல்லா விஷயத்திலேயும் வலதுகை மாதிரி. அதனால் அடிக்கடி வீட்டுக்கு வருவான்.ரொம்ப நல்ல பையன். சூட்டிகையான பையன் என்பதால தாத்தாவுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். சாரதாவும், அவனுக்கும் பழக்கமாகி காதல் மலர்ந்தது”
“இதைத் தெரிஞ்சுகிட்ட உங்கப்பா அவளை காலேஜிலிருந்து நிறுத்திட்டார்.வீட்டுக்குள் அடச்சு வைச்சு எங்கேயும் வெளியே போக கூடாதுன்னு அவளுக்கு காவல் போட்டாரு. ஆனால் ஒருநாள் சாரதா எல்லாரையும் ஏமாத்திட்டு, ஆனந்தனை கல்யாணம் பண்ணிகிட்டு வீட்டுக்கு வந்தா. “
“உங்கப்பா அவங்கள அடிச்சு விரட்டினாரு. ஆனால் தாத்தா தன் மக மேல உயிரையே வைச்சிருந்தாரு. அதனால அவங்களை ஏத்துகிட்டாரு. ஆனந்தன் ஜாதில நம்மள விட ரொம்ப குறைச்சல்.. அதனால உங்கப்பாக்கு சுத்தமா பிடிக்கல.. அதிலிருந்து தங்கச்சி கிட்ட முகம் கொடுத்து பேசுவதையும் நிறுத்தி விட்டார்.”
அண்ணன் சமாதானம் ஆகலை என்றாலும் தங்களை வெறுக்கலன்னு சந்தோஷத்துல சாரதா இருந்தா .ஒரு ஆறு மாசம் இருக்கும். திடீர்னு ஆனந்தனை காணோம் ..போலீஸ்ல புகார் கொடுத்தோம் ..”அவன் எந்த பொண்ணோடயாவது ஓடிப்போய் இருப்பான்”னு கேலி பண்ணாரு.. ஆனால் அப்புறமா ஒரு ரயில்வே டிராக் பக்கத்தில உன் மாமா பாடியயை கண்டுபிடிச்சு போலீஸ் கொடுத்தாங்க .அப்ப சாரதா மாயாவை உண்டாகி இருந்தா..எங்க எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சி. “
“சாரதா நொறுங்கிப் போயிட்டா .. நிச்சயம் தற்கொலை பண்ண வாய்ப்பில்லை ..என்ன காரணத்தினால் அந்த பக்கம் போனார்? எப்படி ரயிலில் அடிபட்டார்? என்றெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருந்தது.
ஆனால் ஒருநாள், ஒரு கூலிப்படை ஆளு கிட்ட உங்கப்பா பேசுவதை தாத்தா கேட்டுட்டார். ஆறு மாசம் பேசாமல் இருந்துட்டு.. அதுக்கப்புறமா தன் பேரில் சந்தேகம் வராதபடி ஆனந்தனைக் கொன்னு ரயில்வே டிராக்கில போட்டிருக்காரு ..அப்படி ஒரு கொடூர புத்தி.. தன் தங்கச்சிக்கு வாழ்க்கை போனாலும் பரவாயில்லை, அவனோடு சந்தோஷமா வாழ கூடாதுன்னு.”
“தாத்தாவும், ஆச்சியும் ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. அவங்க மகள் உயிரையாவது காப்பாத்தனும். பிறக்கப் போற குழந்தையையும் ஏதாவது பண்ணிடக் கூடாதுன்னு சொல்லிட்டு மகளைக் கூட்டிக்கிட்டு சொந்த ஊருக்கே போயிட்டாங்க .”
“அங்க தான் மாயா பிறந்தா….அப்புறம் அடுத்த சில வருஷங்கள்ல ..மாயா சின்னப் பிள்ளையா இருக்கும்போது உன் தாத்தாவும், ஆச்சியும், அடுத்தடுத்து இறந்து போக.. சாரதா தனியா அந்த வீட்டில இருந்தா .உங்க அப்பாவுடைய கோபமும் குறைந்திருந்தது.”
“அதனால நான் சாரதாவையும், மாயாவையும் கூட்டிட்டு வந்து தாத்தாவுடைய வீடு இங்கேயே பக்கத்துல ஒன்னு இருக்கு .அங்க குடி வைக்கலாமான்னு கேட்டதுக்கு உங்கப்பா சம்மதிச்சாரு ..”
“இவரால சாரதா வாழ்க்கை வீணாப் போனது எனக்கு மனசு உறுத்தலா இருந்துச்சு. அதனால நான் சாரதாவையும், மாயாவையும் நல்லா கவனிச்சுக்கிட்டேன். என்னுடைய பொறுப்புல அவ நிம்மதியாக இருந்தா. மாயாவும் வளர..எவ்வளவு அன்பு காண்பிக்க முடியுமோ அவ்வளவு அன்பை ஒரு தாய் மாதிரி நான் காண்பிச்சேன். என்ன இருந்தாலும் அவளுக்கு அவ புருஷன் போனது பெரிய இழப்பு தானே!”
“நீ உங்கப்பா குணத்தை புரிஞ்சுக்கனும்ஆதர்ஷ். அவர் நினைச்சது நடக்க எந்த அளவுக்கு வேணும்னாலும் போவாரு. அதுக்கு இடைஞ்சலா இருக்கிறது யாராயிருந்தாலும், அவங்கள அவருடைய பாதையிலிருந்து நீக்குவதற்கு தயங்கவே மாட்டார். அதனால நீ வேற ஏதாவது முடிவெடுத்தா அதனுடைய விளைவு பெருசா இருக்கும்ப்பா. அதுதான் நான் பயப்படுகிறேன்”
“அதனாலதான் நான் மாயாவையும், சாரதாவையும் இந்த குடும்பத்துல ஒருத்தரா சேர்த்துக்க முடியாதுங்கறத அவங்ககிட்ட தெளிவா சொல்லிட்டேன் ..நீயும் மாயாவை பத்தி பெருசா நினைச்சுக்கல.. மாயா மனசுல இந்த எண்ணம் வரக்கூடாது என்பதற்காக நான் முதலிலேயே அவகிட்ட சொல்லிட்டேன். என்ன..அவளுக்கும் மாமாவின் ஒரு பக்கம் தான் தெரியும்..அவள் அம்மாவின் இன்னொரு பகுதி கதை தெரியாது. தெரிஞ்சா அவளுடைய அப்பாவின் சாவுக்கு காரணமான மாமாவை அவ கண்டிப்பா மன்னிக்க மாட்டா..”
ஆதர்ஷ் அதிர்ந்து போனான். சாரதா அத்தை வாழ்க்கையில் இவ்வளவு பெரிய ஒரு சோகக்கதை இருக்கும்னு நினைக்கல. ஆனந்தன் மாமா இறந்தது தெரியும். ஆனால் தற்கொலை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான் இன்றுவரை..
ஆனால் அவரை ஈவிரக்கமில்லாமல் கொன்றது தன் அப்பா. தங்கையின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் கொலை பண்ணிவிட்டு சட்டத்திலிருந்து தப்பித்து கொண்டிருக்கிறார் என்றால் இவர் எவ்வளவு பெரிய கொடூர மனம் கொண்டவராக இருப்பாரு..இவர் கிட்ட போய் நியாயத்தை பேசி என்ன பிரயோஜனம் ..ஆதர்ஷ் மனம் கொதித்தது..
ருக்மணி தேவி சாரதாவின் கதையை பற்றி ஆதர்ஷிடம் கூறிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சாரதா அதே கதையை மாயாவிடம் கூறிக் கொண்டிருந்தாள் .மாமாவின் பேச்சுக்களால் மனமுடைந்து போய் உட்கார்ந்திருந்த மாயாவிடம் தன் கதை முழுக்க கூறி முடித்தாள் .
“மாயா உங்கப்பாவை பற்றி உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் இவ்வளவு நாளா வைராக்கியமாக இருந்தேன். .ஆனா இப்ப நீ எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்கிற நேரம் வந்தாச்சு. அதனால் தான் உன் கிட்ட எல்லாத்தையும் சொன்னேன்”
“நீ அதனால மாமா மேல கோபப்பட்டு எந்த முடிவும் எடுக்காத.. ஏன்னா.. என்னை எங்க அப்பா அம்மா இறந்த பிறகு நல்லபடியாக பார்த்துகிட்டது.. பாதுகாத்தது ..எல்லாமே அத்தை தான். அவங்க குடும்பத்துக்கு நம்ம எந்த துன்பத்தையும் கொடுக்க கூடாது. “
” நம்ம வேலை, நம்ம வாழ்க்கைய, பார்த்துக்குவோம்.கடவுள் செயலா உங்கப்பா வீட்டுச் சொத்தும்..தாத்தா கொடுத்துட்டுப் போன சொத்தும் இருக்கு ..அது நம்ம வாழ்க்கைக்கு தாராளமா போதும். அதனால எல்லாத்தையும் மறந்துட்டு நீ நிம்மதியா இரு..கூடியவரை மாமா இருக்கும்போது அந்த வீட்டுக்குப் போகாதே ..போனாலும் அவர்கிட்ட எந்த பேச்சும் வெச்சுக்காதே.”
அவள் என்ன ஆறுதல் கூறினாலும் மாயா மனதில் ஆற்றாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது .
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings