2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
எவ்வளவு நேரம் ரகுவையே பார்த்துக் கொண்டிருந்தாளோ, நேரம் போனதே தெரியவில்லை. சட்டென தலை நிமிர்ந்த ரகு, பால்கனியில் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அன்னபூரணியை அப்போது தான் பார்த்தான். அவன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தான். ஆனால் அன்னபூரணி ரகுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். இப்போது மீண்டும் தலை நிமிர்ந்த ரகுவும் பதிலுக்கு பார்த்துக் கொண்டே இருந்தான்.
எப்படி பார்க்கறான் பாரு கல்லுளி மங்கன். அழுத்தக்காரன். எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி ஒரு நடிப்பு. நான் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதம் ஆச்சு. எத்தனை முறை இப்போது பார்க்கிறானே இதே பார்வையை பார்த்திருப்பான்? கொஞ்ச நேரம் கூட பார்வையை விலக்காது, கண் சிமிட்டாது அழுத்தமான பார்வை. அந்த பார்வையே ஆயிரம் கதைகளை சொல்கிறதே என அன்னபூரணி நினைத்தாள்.
அன்று கூட அன்னபூரணி தன் இடத்தில் டைப் அடிக்கப்பட்ட ஸ்டேட்மென்ட்களையும் மேனுவல் ஸ்கிரிப்ட்களையும் சரி பார்த்து கொண்டிருந்தாள். இவள் இருக்கைக்கு நேர் எதிரே ஆடிட்டர் சுபாஷிணி மேடமின் கேபின். அதற்கு அடுத்து குகன் சார் கேபின். அதற்கு அடுத்து தான் கம்ப்யூட்டர் ரூம். குகன் சாரின் கேபினுக்கும் ஆடிட்டர் கேபினுக்கும் இடையே வெறும் கண்ணாடி தடுப்புதான்.
குகன் சார் சொல்ல சொல்ல ஏதோ டிக்டேக்ட் எடுத்துக் கொண்டிருந்தான். காது அவர் சொல்வதைக் கேட்டாலும் கை அதை நோட்டில் எழுதினாலும் பார்வை மட்டும் இரு கேபின்களையும் குறுக்கே இருந்த புக் ஷெல்ப்பையும் துளைத்துக் கொண்டு வந்தது.
இருவருக்கும் இடையே உள்ள மெளனக் கட்டை உடைக்க எண்ணினாள். அவன் டேபிளை நோக்கி நடந்தாள். அவன் முன் நின்று கொண்டு “நான் தான் அந்த சாக்லேட்டை வைத்தேன்.”
எதற்கு என்று விழிகளாலேயே கேட்டான்.
“இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்”
“பிறந்த நாள்னா கைலயே கொடுக்க வேண்டியது தானே. எதுக்கு டேபிள் மேல வைக்கணும்?”
“உங்களுக்கு மட்டும் தான் கொடுத்து இருக்கிறேன்”.
“சரி” என்றவன் எதையும் முகத்தில் காண்பிக்காமல் மீண்டும் வேலையை தொடங்கினான்.
அதற்கு மேல் அங்கே நிற்க வேண்டாம் என தன்னுடைய இடத்தில் வந்தமர்ந்தாள்
மணி இரண்டு அடிக்கவே, மதிய உணவிற்காக கிளம்பியவன் இவளிடம் திரும்பி ஹல்லோ என முடிப்பதற்குள் “ஃபேன் சுவிட்சுதானே நான் நிறுத்திக்கிறேன்” என தன் பெரிய கண்கள் இன்னும் பெரிதாக முறைத்தவாறே கூறிவிட்டு தன் பணியை தொடர்ந்தாள். அதை குறும்புடன் ரசித்த ரகுவோ அவளறியாமல் அவளை ரசித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
மூன்று மாதங்கள் ஒரே இடத்தில் பணிபுரிந்தும் அலுவல் விஷயங்களைத் தவிர வேறு எதுவும் பேசிக் கொள்ளாத அவர்கள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் மற்றவரைப் பற்றிய விவரங்களை சேகரித்து கொண்டு தான் இருந்தனர்.
இன்று அன்னபூரணியே அவனிடம் வலிய சென்று பேசினாலும் ரகுவிற்கு பிடித்திருந்தும் ஏன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை? எது அவனை தடுத்தது? இதே போல இருவரும் பேசாமலே இருந்து விடுவார்களா? இவர்களது பார்வை பரிமாற்றம் எதுவரை நீடிக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
அவன் பாட்டுக்கு சென்றுவிட்ட பிறகு, சாப்பிடக் கூட தோன்றாது அன்னபூரணி கலங்கி போய் உட்கார்ந்திருந்தாள். ராதா மேடம் வந்து அழைத்த பின் தான் சாப்பிட உட்கார்ந்தாள். இல்லையென்றால் ஏன் சாப்பிடவில்லை? ஏன் ஒரு மாதிரி இருக்க? என ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
சே! என்ன மனிதன் இவன்? உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கேனு சொல்றேன். அப்போ கூட புரிய வேண்டாம்? அட்லீஸ்ட் எனக்கு மட்டும் ஏன் கொடுத்தனு கேட்ருக்கலாம்? இல்லையா குறைந்தபட்சம் பார்மாலிட்டிக்காக ஒரு ஹேப்பி பர்த்டேயாவது சொல்லி இருக்கலாம். கோபமாவது பட்ருக்கலாம். எதுவும் சொல்லாம போனா என்ன அர்த்தம்? ஒருவேளை நம்மை பிடிக்கவில்லையா?
அது எப்படி பிடிக்காம போகும் பூரணி ? அவன் பார்வைக்கு உனக்கு அர்த்தம் புரியலயா? பிடிக்காம தான் ஒவ்வொரு முறையும் குகன் சார்ட்ட இருந்து உனக்கு திட்டு விழாம பார்த்துக்கிறானா? போன வாரம் கூட மாடி ஆபிஸ் பிரியாகிட்ட எனக்கு சீம்பால்னா ரொம்ப பிடிக்கும்னு நீ பேசிட்டிருந்ததை கேட்டுட்டு, உனக்கு குடுக்கனும்னு மொத்த ஆபிசுக்கும் கொடுத்தானே, பிடிக்கலனா இது சாத்தியமா? என உள் மனம் குறுக்கிட்டது.
அவங்க வீட்ல மாடு கண்ணு போட்டுருக்கு, அதான் கொண்டு வந்து கொடுத்திருக்கான். தற்செயலா நடந்த ஒரு விஷயத்தை நமக்கு சாதகமாக்கிக் கொள்ள கூடாது என உள்மனதின் வாதத்தை முறியடித்தாள் அன்னபூரணி.
இவ்ளோ தூரம் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசறியே, இந்த மூணு மாசத்துல இதுவரை என்னை ஒரு முறையாவது பேர் சொல்லிக் கூப்பிட்டுருக்கானா?
ஹலோ ! அந்த ஃபேனை போடுங்க. ஹலோ ! அந்த ஃபேனை ஆஃப் பண்ணுங்க. ஹலோ ! இங்க வாங்க! ஹலோ! நில்லுங்க! ஹலோ! இந்த வக்காலத்தை ஃபில் பண்ணுங்க. எத்தனை ஹலோ?! நான் என்ன டெலிபோன் எக்ஸ்சேன்ஜ்லயா வேலை பார்க்கிறேன்?
பொங்கி வரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கியதன் விளைவால் கண்களில் சுரந்த ஊற்றானது அருவியாகி அவளது கன்னங்களில் வழிந்தோடின. போதும் அவனை நினைத்து அழுதது. அவன் என்றாவது ஒரு நாள் நம்மை புரிந்து கொண்டால், அவனே நம்மிடம் பேச வருவான். அது வரை அவனை தொந்தரவும் செய்ய வேண்டாம். அவனிடம் மண்டியிடவும் வேண்டாம் என ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.
எழுந்து போய் முகம் கழுவிக் கொண்டு பால்கனியில் நின்றாள். வானிலை இன்னும் மேக மூட்டமாகத்தான் இருந்தது. மேக கூட்டங்களையும் முகில்களையும் ரசிப்பது அன்னபூரணிக்கு மிகவும் பிடிக்கும். மயில் போல இருந்த முகில் கூட்டங்களை உற்று பார்த்தாள். அந்த மயில் சிறிது சிறிதாக தோகை விரித்து ரகுவின் முகத்தைக் காட்டத் தொடங்கியது. அமைதியான அந்த தெருவில், அந்த முன்மாலைப் பொழுதில் ஏதோ வண்டி சத்தம் கேட்டு, ரகு தான் வருகிறானா? என தெருமுனையை பார்த்தாள்.
அவள் நினைத்தது சரி என்பது போல், மதிய உணவு முடித்து தன் கருப்பு நிற பல்சரில் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தான் ரகு. ஸ்டைலாக வண்டியை விட்டு இறங்கியவன், பக்கவாட்டுக் கண்ணாடியை பார்த்து தலை கோதினான்.
பால்கனியிலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த பூரணி, அங்கிருந்து நகர விருப்பமில்லாமல் தன் இருக்கைக்கு திரும்பினாள். இது எதையும் அறியாத ரகு மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் என்னை என பாட்டு பாடியபடி அலுவலகம் உள்ளே நுழைந்தான்.
வரவேற்பறையில் யாருமில்லை. ராதா மேடம் கம்ப்யூட்டர் ரூமில் தன் வேலையில் பிஸியாக இருந்தார். அவன் வருவதை பார்த்த அன்னபூரணி, அவன் பார்வையை தவிர்க்க நினைத்து தலையை குனிந்து கொண்டாள்.
அனு! அனு! என இரண்டு முறை ரகு அவளை அழைத்தான். நாமும் இனி அவளை அனு என்றே அழைப்போம். தலை நிமிர்ந்த அனு “சொல்லுங்க சார்” என்று இருக்கையை விட்டு எழுந்தாள்.
ஒரு நிமிடம் அவளையே உற்று நோக்கிய ரகு, “அழுதாயா அனு?”அவளிடம் பதிலில்லை.
“மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே அனு” என்றவாறே அவள் கைகளில் அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு கிப்ட் பாக்ஸை கொடுத்தான். அடுத்தடுத்து அங்கே நிகழ்ந்தவைகளை அனுவால் கனவா? நிஜமா என நம்ப முடியவில்லை.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings