ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஒரு நாள் ராஜாபாதர், வல்லபியின் மருத்துவமனைக்கு வந்தான். ஆக்ஸிடன்ட்டில் விஷ்ணுவிற்கு ஏற்பட்ட காயங்கள், மிக லேசானவைதான் என்றும், காயங்களின் தீவிரம் பத்து பர்ஸன்ட் மட்டுமே என்று மெடிக்கல் ரிப்போர்ட் தரவேண்டும் என்றும், அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூறிக் கொண்டு அடிக்கடி வர ஆரம்பித்தான்.
அவன் முதல் முறை வந்தவுடனே அப்படியெல்லாம் ரிப்போர்ட் கொடுக்க முடியாதென்று கண்டிப்பாகக் கூறி வல்லபி மறுத்து விட்டாள். மதுரை பெரிய ஆஸ்பத்திரி ரிப்போர்ட், பெரியகுளம் மருத்துவமனை ரிப்போர்ட், காயங்களின் தீவிரம் குறித்தும் ஒரு கன்ஸாலிடேட்டட் ரிப்போர்ட் விஷ்ணுவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதென்றும் கூறினாள்.
“ஏன் டாக்டரம்மா, அவ்வளவு அவசரமாக அந்த ரிப்போர்ட் அனுப்பினார்கள்? நான் இந்த ஊரிலேயே பணத்தாலும், அரசியலாலும் பெரிய ஆள். என்னைக் கொஞ்சம் கலந்து ஆலோசித்திருக்கலாமே”
வல்லபிக்கு மிகவும் கோபம் வந்து விட்டது.
“அந்த ரிப்போர்ட் அனுப்பினால் தான் அவருக்கு மருத்துவ விடுப்பிற்கு அனுமதி கிடைக்கும். மருத்துவ ரி-இம்பர்ஸ்மென்ட் கிடைக்கும். அரசாங்க அலுவலகங்களின் சட்டதிட்டங்கள் உங்களுக்குப் புரியாது. அதெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கோபத்துடன் கூறி விட்டு எழுந்து உள்ளே போய் விட்டாள்.
“ஊர் விட்டு ஊர் வயிற்றுப் பிழைப்புக்காக வந்திருக்கும் பெண்ணுக்கு எவ்வளவு திமிர் பார். என்றாவது ஒரு நாள் நீ என்னிடம் மாட்டாமலா போவாய்” என்று கறுவிக் கொண்டே வெளியேறினான்.
வல்லபி ஒரு நாள் விஷ்ணுவிடம் அந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறிச் சிரித்தாள். விஷ்ணுவோ அவளைக் கவலையுடன் பார்த்தான்.
“என்ன?” என்றாள் வல்லபி, அவன் பார்வையின் பொருள் புரியாமல்.
“டாக்டர், அவன் மிக மோசமானவன். மகாமட்டமானவன். பிறப்பிலேயே ரௌடி. அவனிடம் ஏன் நேரிடையான பதில் கூறினீர்கள்? மதுரை ஆஸ்பத்திரியில் வைத்தியம் செய்த டாக்டர்களும் மற்ற மருத்துவர்களும் சேர்ந்து தான் ரிப்போர்ட் தர வேண்டும் என்று சொல்ல வேண்டியது தானே” என்று விஷ்ணு கவலையுடன் கூறினான்.
“இன்ஜினியர் சார், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் ஒரு அரசாங்க மருத்துவர். என்னை அவனால் ஒன்றும் செய்ய முடியாது” என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு கர்வத்துடன் சிரித்தாள் வல்லபி.
“முட்டாள் மாதிரிப் பேசாதே வல்லபி. நானும் அரசாங்க அதிகாரிதான். என் மேல் கார் ஏற்றி என்னைப் படுக்க வைத்து விட்டான் இல்லையா? உங்களுக்கு ஏதாவது என்றால் நான் அவனைக் கொன்று விடுவேன்” என்றான் விஷ்ணு பதட்டத்துடன், பற்களைக் கடித்துக் கொண்டு. கோபத்தில் அவன் உடல் உதறியது.
“விஷ்ணு, என்ன இப்படியெல்லாம் கோபப்படுகிறீர்கள்? இன்னும் நீங்கள் ட்ரீட்மென்ட்டில் தான் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மருந்தெல்லாம் எடுத்துக் கொள்ளும் போது இப்படி உணர்ச்சிவசப்படக் கூடாது” என்றாள் வல்லபி, கோபத்தில் துடிக்கும் அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு.
“வல்லபி, நான் ஏற்கனவே என் யாமினிப் பாப்பாவைத் தொலைத்து விட்டுத் தவிக்கிறேன். உங்களையும் இழக்கத் தயாராக இல்லை. இனிமேல் நீங்கள் ‘செல்ப் டிரைவ்’ செய்யாதீர்கள். என் வீட்டு டிரைவர் கோபால் அண்ணன் தான் உங்கள் காரை ஓட்ட வேண்டும். இனிமேல் எந்தக் காரணமாக இருந்தாலும் நீங்கள் கார் ஓட்டக் கூடாது” என்று வற்புறுத்திக் கூறியவன், அவன் கரங்களைப் பற்றியிருந்த அவள் கைகளைத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
விஷ்ணு தன்மேல் காட்டும் அக்கறையில் உள்ளம் உருகி கண்கள் லேசாகக் கலங்கி நின்றாள். அவனிடமிருந்து தன் கைகளை மெதுவாக உருவிக் கொண்டு “இன்று முதல் பிஸியோதெரபிஸ்ட் வருவார். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீர்கள், அவர் சொல்வதை மட்டும் செய்யுங்கள்” என்று கூறி விடைபெற்றுக் கிளம்பினாள்.
வல்லபியின் அம்மா மல்லிகா, சென்னைக்குத் திரும்பி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. தினமும் இரவில் போனில் மகளுக்கு அட்டென்டன்ஸ் தந்து விடுவாள்.
வல்லபியை இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்து இருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தாள் மல்லிகா. சுகந்தியிடம் தெரிவிக்க, அவள் தானும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அவளுடன் வருவதாகத் தெரிவித்தாள்.
சென்னைக்கு தன் தாயிடம் போகப் போவதை வல்லபி உற்சாகமாக விஷ்ணுவிடமும், மூர்த்தியிடமும் தெரிவித்தாள். தன்னுடன் சுகந்தி வரப் போவதையும் சந்தோஷத்துடன் கூறினாள். விஷ்ணு தன் கட்டுகளைப் பார்த்துக் கொண்டான்.
“என்னை மட்டும் கட்டிப் போட்டு விட்டீர்கள், இல்லையென்றால் நானும் உங்களோடு ஆன்ட்டியைப் பார்க்க வந்திருப்பேன்” என்றான்.
“உயிர் பிழைத்ததே பெரிய அதிசயம், இதில் ஊர் சுற்ற வேறு ஆசை. இந்த இரண்டு பெண் டாக்டர்களின் உதவியால் பிழைத்துக் கொண்டாய், கொஞ்சம் பக்குவமாக இரு” என்றார் மூர்த்தி சிரித்தவாறு.
காரில் போகும் போது சுகந்தி வல்லபியை எச்சரித்தாள்.
“வல்லபி, போனவுடனே அம்மாவிடம் குழந்தை படம் பற்றி விசாரிக்காதே. அம்மாவும் வயதானவர் தான், பழைய நினைவுகள் அவரை எப்படித் தாக்கும் என்று தெரியாது. அம்மாவின் உடம்பிலும் உப்பு, சர்க்கரை, மனஅழுத்தம் எல்லாம் இருக்கிறது. முதலில் விஷ்ணு வீட்டில் தனித்தனியே விசாரிக்கலாம்” என்றாள்.
வல்லபி அமைதியாக அவள் கூறியதற்குத் தலையாட்டினாள். வழக்கமாக மல்லிகா, வல்லபி வருகிறாள் என்றால் விதவிதமாக சமைப்பாள். ஆனால் இந்த முறை இவர்கள் இருவரும் ஆன்லைனில் பார்த்து விதவிதமாக சமைத்து மல்லிகாவை அசத்தினார்கள்.
மல்லிகாவும் பள்ளிக்கூடத்தில் உள்ள அதிக வேலையால் அமைதியாக இருந்து விட்டாள். விடுமுறையை சந்தோஷமாக அனுபவித்து விட்டு இருவரும் ஒருவழியாகத் தாமரைக்குளம் திரும்பினார்கள்.
இந்த நான்கு நாட்களில் விஷ்ணுவின் வலியும் கொஞ்சம் குறைந்திருந்தது. வல்லபியின் முகம் மலர்ந்திருந்தது. தாய்ப்பாசத்தின் அளவில்லாத அன்பினாலோ அல்லது நான்கு நாட்கள் ஓய்வினாலோ அவள் உடம்பும், மனமும் நன்றாகத் தேறியிருந்தது. தாமரைக் குளத்தின் பஸ்ஸ்டாண்டில் வந்து இறங்கியவுடன், டாக்ஸி பிடிக்கலாம் என்று நினைத்து தங்கள் பெட்டிகளை இருவரும் எடுத்து வைத்து சரி பார்க்கும் போது மூர்த்தி அவர்கள் அருகில் வந்து நின்றார்.
“வல்லபி, சுகந்தி வாருங்கள். நம் காரில் போய் விடலாம்” என்றார்.
“வேண்டாம் சார், உங்களுக்கு ஏன் கஷ்டம்? நாங்கள் டாக்ஸி பிடித்துப் போகிறோம். வீட்டில் கனகா காத்திருப்பாள்” என்றாள் .
“சரி வாருங்கள், உங்கள் வீட்டில் உங்களை இறக்கி விடுகிறேன். அதற்காவது ஒத்துக் கொள்வீர்களா?” என்று கேட்டார் மூர்த்தி சிரித்துக் கொண்டு.
“விஷ்ணு எப்படி இருக்கிறார் சார்? வலி குறைந்திருக்கிறதா?” என்றாள் வல்லபி.
“அவனுக்கென்னம்மா, மெடிக்கல் லீவ் நன்றாக என்ஜாய் செய்து கொண்டு ஜாலியாக இருக்கிறான்” என்றார் மூர்த்தி உரக்க சிரித்துக் கொண்டு.
“இந்த வாரக் கடைசியில் அவருக்கு ஒரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும், பெரியகுளம் வர வேண்டியிருக்கும்” என்றாள் சுகந்தி.
“எலும்புகள் நன்றாக சேர்ந்திருந்தால், கட்டைப் பிரித்து விடலாம்” என்றாள் வல்லபி.
“நம் ஊர் ஆஸ்பத்திரியில் ஒரு எக்ஸ்-ரே யூனிட் கூட இல்லையென்பது ரொம்ப வேதனையான விஷயம். வசதி இல்லாதவர்கள் ஒவ்வொரு முறையும் பெரியகுளம் போவதென்பது முடிகின்ற காரியமா? அதனால் தான் அவர்கள் பச்சிலைக் கட்டையும் நாட்டு மருந்தையும் நம்பியே இருக்கிறார்கள்” என்றார் மூர்த்தி.
“மூன்று வருடங்களாக இந்த மருத்துவமனையிலிருந்து எக்ஸ்-ரே யூனிட் கேட்டு மேலிடத்திற்கு வேண்டுதல் கடிதம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் பணம் இல்லையென்று தான் சொல்கிறார்கள்” என்றாள் வல்லபி.
“நாங்கள் எங்கள் பணத்தில் வாங்கி இன்ஸ்டால் பண்ணலாமா டாக்டர் வல்லபி?” மூர்த்தி.
“தாராளமாக செய்யலாம் சார், ஆனால் அதற்கும் அரசாங்கத்தின் முன் அனுமதி பெற்றுத் தான் செய்ய வேண்டும்” வல்லபி.
“அதற்கு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் டாக்டர். இந்த மருத்துவமனையில் எக்ஸ்-ரே யூனிட் வைப்பது பினான்ஷியலாக என் பொறுப்பு. என் விஷ்ணு, மதுரைக்கும், பெரியகுளம், தாமரைக்குளம் என்று இந்த வலியில் எவ்வளவு அவஸ்தைப்பட்டு விட்டான்” என்றார் மூர்த்தி.
“மூர்த்தி சார்! உங்களுக்கு விஷ்ணு என்றால் அவ்வளவு பிரியமா?” சுகந்தி.
“ஆம் டாக்டர் சுகந்தி, எல்லாவற்றையும் இழந்து சோகத்தில் நான் தத்தளிக்கும் போது, எனக்குக் கிடைத்த ஊன்றுகோல் அவன்” என்று கூறிப் பெருமூச்சு விட்டார் மூர்த்தி.
அதற்குள் வல்லபியின் வீடு வந்து விட்டது.
“ரொம்ப நன்றி சார். உள்ளே வாங்களேன், ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டுப் பிறகு போகலாம்” என்று உபசரித்தார்கள் வல்லபியும், சுகந்தியும்.
“நான் உள்ளே வரவேண்டும் என்றால் டாக்டர் வல்லபி என்னை ‘அப்பா’ என்று அன்றொரு நாள் கூப்பிட்டதைப் போல் கூப்பிட வேண்டும், அப்போது வருகிறேன்” என்று கூறிச் சிரித்தார் மூர்த்தி.
“நானும் உங்களை அப்பா என்றே கூப்பிடுகிறேன், அப்படியென்றால் இரண்டு காபி குடிக்க வேண்டும்” என்று கேலியாகக் கூறினாள் சுகந்தி.
மூர்த்தி சிரித்துக் கொண்டே உள்ளே போனார். கனகாவிற்கு அவரைப் பார்த்தவுடன் கை கால்கள் எல்லாம் தடதடவென்று உதறின.
‘எவ்வளவு பெரிய பணக்காரர். நம்ம டாக்டரம்மாவோடு மிகச் சுலபமாக சிரித்துப் பேசுகிறாரே. சுகந்தி அம்மாவை விட நம்ப வல்லபி அம்மாவிடம் பேசும் போது அப்பாவும் பெண்ணும் பேசுவது போல் இருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டாள். வெள்ளி டம்ளரில் காபியைக் கொண்டு வந்து பணிவுடன் மூர்த்தியிடம் கொடுத்தாள் கனகா.
அந்த வாரக் கடைசியில் வல்லபியுடன் விஷ்ணு தன் காரில் பெரியகுளம் மருத்துவமனையில் எக்ஸ்-ரே எடுக்கச் சென்றான். எக்ஸ்-ரேவில் நல்ல பலன் தெரிந்தது. எல்லா எலும்புகளும் நன்றாகக் கூடியிருந்தன.
கொஞ்ச நாட்களுக்கு வீட்டில் நடந்து பழக வேண்டும் என்றும், பிசியோதெரபிஸ்ட் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும், சுகந்தியும் அந்த மருத்துவமனையைச் சார்ந்த ஆர்த்தோ டாக்டரும் வலியுறுத்தினர். விஷ்ணு வேலையில் சேருவதற்குத் தகுதிச் சான்றிதழும் கொடுத்து விட்டார்கள்.
விடுமுறை முடிந்து பணியில் சேரும்போது அவனை மதுரைத் தலைமை அலுவலகத்தில் சேரும்படி வேலைக்கான உத்தரவு கிடைத்தது. தேனியைப் போல் சுறுசறுப்பாகச் சுற்றியவனுக்கு ஆபீஸில் டேபிள் ஓர்க்கில் போட்டது மிகவும் கஷ்டமாக இருந்தது.
“எல்லாம் உங்களால் தான்” என்று வல்லபியிடமும், சுகந்தியிடமும் கோபித்துக் கொண்டான்.
“நீங்கள் ஃபிட்னஸ் சர்டிபிகேட் சரியாகத் தரவில்லை, அதனால் தான் என்னை ஆபிஸில் உட்கார வைத்து விட்டார்கள்” என்று புலம்பினான்.
வல்லபியும், சுகந்தியும் சிரித்துக் கொண்டனர். ராஜா பாதர் செய்த தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வந்து விட்டதால், அவனுடைய ‘கான்ட்ராக்ட்’ நெடுஞ்சாலைத் துறையில் கருப்பு குறியீட்டோடு ரத்து செய்யப்பட்டது. விஷ்ணு மதுரைத் தலைமை அலுவலகத்தில் பணியில் இருந்ததால், அந்த உத்தரவு அவன் மூலம் வழங்கப்படாமல் வேறு ஒரு பொறியாளர் மூலம் வழங்கப்பட்டது.
ராஜாபாதர் புழுங்கினான். எல்லாவற்றுக்கும் வல்லபி கொடுத்த மருத்துவச் சான்றிதழ் தான் முக்கிய காரணம் என்று கோபப்பட்டான். வழக்கமாக எல்லோரையும் லாரியிலோ, டூ வீலரிலோ தட்டுவது போல், இந்த வல்லபியை உயிர் மட்டும் போகாமல் லேசாக ஒரு தட்டு தட்டி ஆறு மாதம் படுக்கையில் தள்ள முடிவு செய்தான்.
சுகந்தியின் கணவன் முரளி ஒரு மாத விடுமுறையில் சுகந்தியிடம் வந்து தங்கியிருந்தான். சுகந்தியும் ஒரு வாரம் விடுமுறை எடுத்து அவனுடன் தென்காசி, குற்றாலம் என்று சுற்றி விட்டு வந்தாள்.
வல்லபிக்கு ஒரு நாள் போன் செய்து, “மதுரையில் உள்ள முக்கிய இடங்களுக்குப் போய் வரலாமா? விஷ்ணுவும் மதுரையில் இருப்பதால் அவனையும் அழைத்துக் கொள்ளலாம்” என்றாள்.
“என்ன திடீரென்று?” என்று கேட்டாள் வல்லபி.
“முரளிக்கு ஒரு மாத விடுமுறை இன்னும் ஒரே வாரத்தில் முடிகின்றது. தென்காசி, குற்றாலம், திருச்செந்தூர் எல்லாம் போய் வந்தோம். கும்பக்கரை நீர் வீழ்ச்சியில் அந்த நீர்வீழ்ச்சியே வற்றுமளவு குளித்து ஆட்டம் போட்டாயிற்று. மதுரையையும் ஒரு கலக்கும் கலக்கலாமென்று நினைக்கிறோம். நீயும் உடனே கிளம்பி வா. விஷ்ணுவும் உன்னிடம் ஏதோ பேசி எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்று கூறினான்” என்றாள் சுகந்தி.
“ஏன் அவனுக்கு என்ன வேண்டுமாம்?” வல்லபி. பேசிக் கொண்டிருக்கும் போதோ விஷ்ணுவிடமிருந்து வல்லபிக்கு போன்.
“டாக்டர், நீங்கள் மதுரை வருவதாக இருந்தால் மாமா வீட்டில் என் அறையில் பெரிய கப்போர்ட் இருக்கிறதல்லவா? அதன் மூன்றாவது அறையில் எங்கள் இலாக்கா டயரி இருக்கும். அதைக் கொஞ்சம் எடுத்து வர முடியுமா?” என்று கேட்டான்.
இந்த “வல்லபி” நாவல், நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் மூலம் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், 77082 93241 என்ற WHATSAPP எண்ணில் மெசேஜ் அனுப்பி ORDER செய்யலாம். நன்றி
(தொடரும் – திங்கள் தோறும்)
Super Aunty