in

தேடி வந்த முட்கள் (சிறுகதை) – ✍ ரமணி.ச

தேடி வந்த முட்கள் (சிறுகதை)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பாபதி, வயது 60…. கையில் அன்றைய தினமலருடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

“ஐயா பெரிசு…. நல்லாருக்கீங்களா?”

“அடடே… யாரு நம்ம சுடலையாண்டி பையனா…. என்னடே… வெள்ளையும் சொள்ளையுமா…. நாலஞ்சு பேரா….இந்தப் பக்கம்… என்ன விசேஷம்?”

“ஒன்னுமில்லீங்க ஐயா… சித்திரை பொறக்கப் போகுது…”

“ஆமா…. அதுக்கென்ன இப்ப… வருஷா வருஷம் சித்திரை பொறக்கும்….”

“அதுக்கில்லீங்க… ரொம்ப நாளாச்சு… கொரானா, அது இதுன்னு சொல்லி ரெண்டு வருஷமா அம்மனுக்கு கொடையே நடக்கலே…. அதான் இந்த வருஷம் பிரமாதமா நடத்திப்புடலாம்னு”

“நடத்திப்புடலாம்னா நடத்திட வேண்டியதுதான். அதுக்கு நான் என்ன செய்யோணும்”

“என்ன பெரிசு…. இப்படி சொல்லிட்டீங்க… நீங்கதான் முன்ன வந்து நடத்தணும்”

“இதோ பாரு, ஓம் பேரென்ன”

“சுந்தர்”

“சுந்தர்…… எங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சு…. இனி ஒங்க காலம்…. நாங்க ஆயுசு பூரா ஒழைச்சுட்டோம். இனிமே ஓடியாடவெல்லாம் ஒடம்புல தெம்பில்ல…..”

“என்ன பெரிசு…. நேத்துக்கூட ஏரத்தூக்கிட்டுப் போனதைப் பாத்தேன். ரெஸ்ட் எடுக்கற உடம்பா இது….”

“அது என் வேலே…. கடைசி வரை ஒழைச்சிட்டே இருக்கணும். ஆனா… நீ சொல்ற பொதுக் காரியத்துக் கெல்லாம் ஓடியாட ஏலாது.”

“சரி…. பெரிசு…. அப்ப என்னதான் செய்வீங்க சொல்லுங்க…”

“புரியலையே…. என்ன சொல்ல வரே”

“அதான் ஏதாவது காசு பணம் தரலாமில்லையா…”

“எதுக்குங்கறேன்…. கோயிலுக்கு சொத்து இருக்கு… நல்லா வெளையுது… அப்புறம் என்ன….ஒங்கப்பன்தானே தர்மகர்த்தா…. அப்புறம் என்ன”

“இல்லிங்க….. இந்த முறை கொஞ்சம் பெரிசா தடபுடலாக பதினெட்டுப் பட்டியும் அதிரற மாதிரி…. கரகம், வில்லுப்பாட்டு, கச்சேரின்னு அமர்க்களப்படுத்தலாம்னு……… ஊர்க்காரங்ககிட்ட அஞ்சு பத்துன்னு வாங்கி……”

“வாங்கி…..?”

“என்ன பெரிசு வெளையாடறீங்களா…. ஒங்களுக்கு தெரியாததா”

“தெரிஞ்சதுனாலதான் கேக்கறேன். ஒன்னையும் தெரியும் ஒங்கப்பனையும் தெரியும். டேய்…. நாங்கள்ளாம் ஒரே பள்ளிக்கூடத்துல ஒன்னா படிச்சவங்கடா. ஒங்க தாத்தா ஒங்கப்பன்கிட்ட நாலணா கொடுத்து மூக்குப்பொடி வாங்கிட்டு வரச் சொல்வாரு, பயபுள்ளை கோனார்கடைல பத்து பைசாவுக்கு கடலைமிட்டாயும் மீதிக்கு பொடியும் வாங்குவான். எனக்கும் தருவான். தாத்தா கேப்பாரு ‘என்னடா பொடி கொறைவாயிருக்கு…’ அதுக்கு இவன் ‘தாத்தா வெலைவாசியெல்லாம் எக்கச்சக்கமா ஏறிடுத்து…. ஒங்க பொடியும்தான்’. ஒரு நாள் தாத்தா அவரே கோனார் கடைக்குப் போயிருக்காரு. ‘கோனாரே … என்ன வெலவாசியெல்லாம் ஏறிப் போச்சாமே… நாலணாக்கு பொடி கேட்டா ரொம்ப கொறச்சலாத் தரீறு….’ கோனாரு சொன்னாரு…. ‘யாருவே நாலணாவுக்குப் பொடி கேட்டது…’ ‘வேற யாரு எம்மவன்தான்’ ‘அப்படிப் போடுங்க அருவாள…. ஒங்க மவன் நாலணாவத் தந்துட்டு, ‘பத்து பைசா கடலை முட்டாயி, மீதிக்குப் பொடி’ ன்பான். அப்ப பொடி கொறைவாத்தானேயிருக்கும்’…. ‘அடப்பாவி’…. அன்னிக்கு அவரு ஒங்கப்பனை சாத்தின சாத்துல… எனக்கு கைகாலெல்லாம் பதறிப் போச்சு…. இன்னிக்கு நெனச்சாலும்…. அம்மாடி…..!”

“அதுக்கென்னங்க…. இப்ப ஒங்கபேருல ஒரு அஞ்சு ரூபா எழுதிக்கவா…?” .

“அஞ்சு ரூவான்னா.”

“500”

“அம்புட்டா….. நான் ஒழைச்சு ஒவ்வொரு நெல்லா எண்ணி சேத்துட்டிருக்கேன்…. அதுல ஒரு ரூபா கூட எடுக்க மாட்டேன்”

“பெரிசு…. போறகாலத்துல என்னத்தைச் சேத்து வச்சி என்ன பண்ணப் போறீங்க?”

“அதை ஒங்கப்பன்கிட்ட கேளு…. ஏதோ நீ கேட்டியேன்னு ஒங்கப்பன் மூஞ்சிக்காக நூறு ரூபா தரேன்… வாங்கிட்டுப் போ…”

“என்ன பெரிசு…. நீங்களே தரலேன்னா ஊருல ஒரு பய தர மாட்டான். ப்ளீஸ்…. கொஞ்சம் கூட….”  

ஆனால் அவர் மசியவில்லை. வாங்கிட்டுப் போனான் சுந்தர் மற்றும் அவனுடன் வந்தவர்கள்.

அப்போது வந்தார் சபாபதியின் நண்பர் தியாகு.

“பசங்ககிட்ட என்ன தகராறு சபாபதி?”

“ஒன்னுமில்லே கொடை நடத்தணும்னு சுடலையாண்டி மகன் வந்தான்… கொடுத்து அனுப்பினேன். போறாதாம். இவனுக குடிச்சு கும்மாளமடிக்க நாம காசு குடுக்கணுமா. எனக்கென்னமோ சுத்தமா இதெல்லாம் புடிக்கலே… “

“சபாபதி…. சின்னஞ்சிறு சுங்க அப்படி இப்படி இருப்பாங்க. நாம கண்டுக்காம போயிட்டே இருக்கணும்.”

“அதெப்படி தியாகு…. யாரோன்னா பரவாயில்லே. நம்ம ஊர் பசங்க நம்ம முன்னாடியே நாசமாப் போறதப் பாத்துக்கிட்டே இருக்க முடியுமா…. அதுதான் எம் புள்ளையை ஃபாரினுக்கு அனுப்பிட்டேன்…..”

“அங்கே மட்டும் அவங்க நல்லாருப்பாங்கன்னு நம்புறீங்களா?”

“ஏன்…. நல்லாத்தான் இருக்காங்க…. வாராவாரம் என்கூடப் பேசறான் இல்லே…”

“அதை வச்சு நாம முடிவுக்கு வர முடியாது. ஆமா…. ஓம் பையன் அங்கே போனப்புறம் எத்தனை முறை இங்கே வந்து ஒன்னப் பாத்தான்….சொல்லு”

“போய் ஆறு வருஷமாச்சு… பெண்டாட்டி புள்ளையோட நல்லா இருக்கான். திடீர்னு வரணும்னா லீவு கெடைக்காதே. அப்புறம், எல்லாரும் வந்து போற செலவு வேறே…. எப்படியாவது நல்லாருந்தாப் போரும்…..”

“நீ சொல்றே….. அவன் என்ன நெனைக்கறான்னு யாருக்குத் தெரியும். நான் சொல்றேனேன்னு தப்பா நெனைக்காதே சபாபதி…. வெளிநாட்டுக்குப் போன நெறயப்பேரு, அப்பன் கருமாதிக்குக் கூட வறதில்லேன்னு கேள்விப்படறேன்…. அதுக்காக ஒன் பையனைச் சொல்லலே பொதுவாகச் சொல்றேன்.”

“சேச்சே…. எம் புள்ளை அப்படியெல்லாம் இல்லே…..”

சபாபதிக்கு ஒரு பெண்ணும் திருமண வயதில் இருக்கிறாள். சுமதி…! கிராமத்து மண் வாடை. பாவாடை தாவணியில் ஊரை வலம் வருவாள். காளையர்கள் பலர் தூண்டில் போட்டுப் பார்க்கின்றனர். மீன் சிக்கவில்லை. ஆனால் சுந்தரம் வீசிய வலையில் சிக்கிவிட்டாள் சுமதி.

“என்ன மச்சான். ரொம்ப குஷியாக இருக்கற மாதிரி இருக்கு.”

“ஒன்னுமில்லே அந்தப் புள்ளைகிட்ட பேசிட்டிருந்தேன். உன்னைப் பார்த்து ஓடிட்டா. பூசையிலே பூந்த கரடி மாதிரி”

“அப்ப நான் கரடியா… சரி இருக்கட்டும். ஆனா ஒன்னு நீ போற போக்கு சரியில்லே. நாளைக்கே ஏடாகூடமா ஏதாவது ஆயிட்டா… மாட்டிப்பே….”

“டேய்… இதெல்லாம் ஒரு ஜாலியா…. அப்படியே நுனிப்புல் மேஞ்சிட்டுப் போய்கிட்டே இருக்கணும். “

“அப்புறம் ஒன் இஷ்டம்… சரி வா நம்ம கடையத் தொறப்போம்…”

தோட்டத்திற்குள் போனார்கள். அங்கு வேறு சிலர் இருந்தார்கள். பாட்டில்கள் திறக்கப்பட்டன.

அன்னிக்கொருநாள் தியாகு அரக்க பரக்க சபாபதியைத் தேடி வந்தார். 

“சபாபதி கொஞ்சம் வறியா. அப்படி வயக்காட்டுப் பக்கம் நடந்துட்டு வருவோம்”

“உனக்கு அவசரம்னா போயேன். என்னை ஏன் கூப்பிடறே”

“சீச்சீ…. அதெல்லாமில்லே… உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்….”

“என்ன ஏதாவது வேணுமா…. இங்கேயே கேளேன்… அதுக்கு அங்கே போகணுமா”

“சபாபதி…. என்ன, இப்பிடி மக்காயிருக்கே… சும்மா கூப்பிடுவேனா…. இது உங்க குடும்ப விஷயம். அதான் உன் காதுல போடலாம்னு பாக்குறேன்…”

” சரி சரி வா”

இருவரும் அமைதியாக வயல்காட்டை நோக்கி நடந்தனர். தியாகு பேசாமலே வந்தார். “என்ன தியாகு, என்னமோ விஷயம்னு சொன்னே…. பேசாம வர்றே….”

“இல்லே…. எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலே…. அதான்….”

“என்ன கச்சேரியா பண்ணப் போறே…. சொல்ல வந்ததை மாங்காமூட்டை அவுத்தமாதிரி பொல பொலன்னு சொல்லுவியா…..”

“அதில்லே சபாபதி, நீ உன் பொண்ணை வளக்கற முறை சரியில்லே. நாளைக்கு கல்யாணம் காட்சின்னு பார்க்கணுமா வேண்டாமா?”

“அப்படியா… அப்ப ஏதாவது பசங்க இருந்தா சொல்லேன்… பாத்திடுவோம்”

” நீ ஏன் பாக்கறே…. அவளே பாத்திட்டா?”

“என்ன உளர்றே”

“நான் ஒன்னும் உளறலே…. கண்ணால் பார்த்ததை, உன் காதுல போடுவோம்னு”

“என்ன பாத்தே?”

“நேத்திக்கு சாயங்காலம் மாரியம்மன் கோவிலுக்குப் போனேனா…. அப்படியே காலாற கோவிலைச் சுத்தினேன். பூங்கா பக்கத்துல வந்தப்போ சுமதியைப் பாத்தேன்”

“அதுக்கென்ன…. கோவிலுக்கு வந்திருப்பா”

“இருக்கலாம்… ஆனா… தனியா வரலே.”

“தோழியோட வந்திருப்பா”

“இல்லே…. தோழனோட….”

“என்ன மறுபடியும் உளர்றே….”

“இல்லே சபாபதி…. கோபப்படாம கேளு…. நம்ம சுடலையாண்டி மவன் சுந்தரில்லே… அவனோட பூங்காவுல செடி மறைவுல சுமதி பேசிட்டிருக்கறதைப் பாத்தேன்”

“அடி செருப்பால…. சரியாத்தான் பாத்தியா…..”

“என்ன சபாபதி உன் பெண்ணை எனக்குத் தெரியாதா?”

சும்மாக் கிடந்த சங்கை எடுத்து ஊதினானாம் ஆண்டிங்கற மாதிரி….. சபாபதிக்கு கையும் ஓடலே…. காலும் ஓடலே.

“சுமதீ…….!” வீடே அதிர்ந்தது.

“நேத்திக்கு நீ எங்கே போனே…..?”

“என்னப்பா…. கேக்க வந்ததை நேரா கேளுங்க”

“இது எத்தனை நாளா நடக்குது….?”

“எதுன்னு சொன்னாத்தானே தெரியும்.”

“அந்தக் கணறாவியை என்வாயால எப்படி சொல்றது….. ஆமாம்…. அந்த சுந்தர் பயலோட எத்தனை நாளா பழக்கம்…?”

“அப்பா…. கத்தாதீங்க…. நம்ம விஷயம் நாலு சுவத்துக்குள்ளேயே இருக்கட்டும்…”

“சரி… சொல்லு”

“அப்பா…. அவரு ரொம்ப நல்ல மனுஷன்பா… கொஞ்ச நாளா எங்கிட்ட பேசறாரு…. ரொம்ப மரியாதையா பேசறாரு…. என்னை ரொம்ப விரும்பறாரு”

“நீ விரும்பறையா…?”

“ஆமாம்பா…. உங்ககிட்ட முறையா பெண்ணு கேட்டு வருவாருப்பா…”

“அட போக்கத்தவளே….. அவன் ஒரு அயோக்கியன், குடிகாரன்….”

” யாருப்பா குடிக்கலே…. அப்பிடிப் பார்த்தீங்கன்னா எனக்கு நீங்க மாப்பிள்ளையே பாக்க முடியாது. ஊருக்கு ஊரு வீதிக்கு வீதி கடையைத் தொறந்து வச்சிட்டு, குடிக்காதேன்னா….. எல்லாம் அப்பிடி இப்படி இருந்தாலும் எங்கிட்டே ரொம்ப அன்பாக நடந்துக்கறாரு. கல்யாணத்துக்கப்புறம் எப்படி இருக்கணும்கறதுக்கு பெரிய பிளானே வச்சிருக்காருப்பா”

“அப்படின்னு சொன்னானா…. அதை நம்புறியா,  இதோபாரு….. இதெல்லாம் வேண்டாம்… உனக்கு நல்ல மாப்பிள்ளையாக தேடிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் கெடச்சுடும். அது வரை இதையெல்லாம் விட்டுட்டு, வீட்டுல அடங்கி ஒடுங்கிக் கெட….. “

“இல்லப்பா”

“நான் சொன்னா சொன்னதுதான். இல்லே… வேற மாதிரின்னா…. என்ன மனுஷனா பாக்க மாட்டே”

“அப்பா…. கொஞ்சம் பொறுமையா நான் சொல்லறதைக் கேளுங்கப்பா…”

“எதையும் கேக்கற நிலையில் இல்லே…. இதோ இப்பவே என் அக்கா மகன் ஃபாரின்ல இருக்கான்… அவனை காண்டாக்ட் பண்றேன்”

“அப்பா…. ஸாரிப்பா…. எனக்கு சுந்தர் தான் வேணும்… அதுல எந்த மாத்தமும் இல்லே…”

“அப்படீன்னா உனக்கு அப்பா அம்மா வேண்டாமில்லே….”

“இல்லேப்பா…. கொஞ்சம் எங்க எடத்துல இருந்து திங்க் பண்ணுங்க… ப்ளீஸ்”

“என்ன ரொம்பப் பேசறே…. இது சரியாகப் படலே….. “

இந்த வேளையில் தர்மகர்த்தா சுடலையாண்டி வந்தார்.

“சபாபதி…. சபாபதி…..”

“வாடா இப்பத்தான் நெனச்சேன்… வந்துட்டே”

“என்ன நெனச்சிருப்பே… இவன் ஏண்டா இன்னும் மண்டையைப் போடலேன்னு தானே….”

“சே…. அப்படி யெல்லாமில்லே…. என்ன ரொம்ப தூரம் வந்திருக்கிற மாதிரி…..”

“வரவேண்டிய வேளை வந்தா வர வேண்டியது தானே….”

“இல்லே சொல்லிவிட்டா நானே வந்திருப்பேனேன்னேன்”

“என்னடா…. நமக்குள்ள மரியாதை…. சரி காப்பி, கீப்பி கெடக்குமா?”

சபாபதி மனைவியைப் பார்த்தார். “இதோ வரேங்க” மனைவி சென்றாள்

“சரி…. சபாபதி…. பொண்ணுக்கு வயசாயிட்டே போகுதே… மாப்பிளை ஏதும் பாத்தியா….”

“பாத்துட்டேயிருக்கேன்… ஒன்னும் அமைய மாட்டேங்குது…..”

“அப்படியா… சரி…. இப்போ அமைஞ்சிடுச்சின்னு வச்சுக் கோயேன்”

“சுடலை…. என்ன சொல்றே…. புரியலையே.”

“உனக்குப் புரியாது. ஆனா ஒம் பொண்ணுக்கு புரியும்…. எதுக்கு சுத்தி வளைச்சிகிட்டு…. டேய்…. நேராகவே கேக்குறேன். நாம்ப சம்பந்தியாயிட்டா….?”

“என்ன விளையாடறையா…. நீ யாரு… ஓம் பக்கத்துல நிக்க முடியுமா…. நான் ஏதோ கொஞ்சம் நிலத்தை வச்சிக்கிட்டு, ஏரோட்டிட்டிருக்கேன்…. எனக்கு சம்பந்தியா….”

“டேய்…. நமக்குள்ள என்னடா ஃபார்மாலிட்டீஸ்….. சுந்தரத்தை மாப்பிள்ளையாக்கிக்கறயா? நான் ஒன்னும் கேக்க மாட்டேன்…. கல்யாணத்தை சிம்பிளா நடந்து…. மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்…. என்ன நிச்சயதார்த்தம் எப்ப வச்சுக்கலாம்”

“டேய்…. சுடலை…. எம் பொண்ணோட வாழ்க்கைடா…. கொஞ்சம் யோசிக்கணும்”

“யோசி….யோசி…. நல்லா யோசி…. ஆனா முடிவு இதுவாத்தான் இருக்கணும்…. இல்லே…..?… .வேண்டாம்….. நீ நல்ல முடிவாத்தான் எடுப்பே….. வரேன்”

மழை பெய்து ஓய்ந்தமாதிரி இருந்தது. ஐயையோ…. இப்ப என்ன செய்யலாம்… சுடலையாண்டியை பகைச்சுக்க முடியாது. இப்படி ஒரு தர்ம சங்கடம் வருமா….?

சபாபதி நேரா கோவிலுக்குப் போனார். குருக்களிடம் பூக்கட்டிப் போடச் சொன்னார். சம்மதம்னே  வந்தது. தொடர்ந்து கல்யாண வேலைகள் நடந்தன. 

கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னால் சபாபதியின் மூத்த மகன் சுரேஷ் வந்தான். அவனுக்கும் இந்த சம்பந்தத்தில் திருப்தி இல்லை. இருந்தாலும் ‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்’ என்று பேசாமலிருந்தான்.

திருமணம் முடிந்தது. சுமதி, சுந்தர் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

அன்று முதலிரவு…. சுமதி பள்ளியறையில் இருந்தாள். ஆயிற்று மணி இரவு பத்தை நெருங்கி விட்டது. சுந்தர் வரவில்லை. எங்கு போனான் தெரியவில்லை. ஊரில் மூலை முடுக்கெல்லாம் தேடினார்கள். சுந்தரின் நண்பர்களும் அங்கும் இங்கும் ஓடினார்கள்.

இரவுமணி 12. யாரோ சுடலையாண்டியிடம் ரகசியமாக என்னவோ சொன்னார். அப்படியே கொதித்தெழுந்தார் சுடலையாண்டி.

“இருக்காது…. அப்படியெல்லாம் இருக்காது….. அவன் அப்படிப்பட்டவனல்ல….” எழுந்து வந்தவருடன் எங்கோ போனார். நேரம் போய்க் கொண்டே இருந்தது. சபாபதி நிலை கொள்ளாமல் தவித்தார்.

கட்டிவைத்த மாலைகளெல்லாம் வாடிவிட்டன. சுமதி அழுது கொண்டே இருந்தாள். பொழுது விடியும் நேரத்தில் சுடலை வந்தார். சுமதி ஓடி வந்தாள்.

“என்ன மாமா?”

அப்படியே தலையைக் குனிந்தவாறே சோஃபாவில் உட்கார்ந்தார் சுடலை.‌

“ஒன்னுமில்லேம்மா…. சுந்தரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க…. “

“ஐயையோ…. எதுக்கு மாமா….?”

இப்போது உள்ளே வந்தார் சபாபதி. சுடலை விளக்கினார்.

“என்னமோ ஃப்ரண்ட்ஸுக்குள்ள சின்ன தகராறு…. யாரோ ஒருத்தன் செத்துட்டானாம்…. இவன்தான் கொன்னான்னு…. சுந்தரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க….”

ஆனால், நடந்தது வேறு. முதலிரவன்று ராத்திரி ஃப்ரண்ட்ஸ் பார்ட்டி கேட்டிருக்காங்க…. சரி லைட்டா குடிச்சுட்டுப் போகலாம்னு எல்லாரும் தோட்டத்துக்குப் போனாங்க…. குடிவெறில எவனோ சுமதியைப் பற்றி கிண்டலாகப் பேச… சுந்தருக்கு பயங்கர கோபம் வந்தது.

நண்பனைத் தாறுமாறாகத் தாக்கவே… பக்கத்திலிருந்த பாறையில் அவன் தலை மோதி ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டான். சுந்தர் தற்காப்பிற்காக காவல் நிலையத்தில் அடைக்கலமானான்.

இது மற்ற நண்பர்களுக்குத் தெரியாது. சுந்தர் வீட்டிற்குப் போய் விட்டதாக நினைத்தனர். தோட்டம் ஊரின் மிகக் கோடியில் இருந்ததால், நடந்த விஷயங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

வழக்கு நடந்தது. சுந்தருக்கும் இறந்த நண்பருக்கும் எந்தப் பகையும் கிடையாது. தற்செயலாக நடந்த விபத்து. சுந்தர் விடுதலையானான். சுமதி ரொம்ப சந்தோஷப்பட்டாள்.

மீண்டும் முதலிரவு. காலில் விழுந்த சுமதியை எழுப்பி அணைத்துக் கொண்டான் சுந்தர்.

“சுமதி என்னை மன்னிச்சுடு…. அன்னிக்கு நான் அங்கே போயிருக்கக் கூடாது. ஏதோ எம் போறாத வேளை சிக்கல்ல மாட்டிக்கிட்டேன். இது எனக்கு வேண்டியதுதான். ஏன்னா கல்யாணத்துக்கு அப்புறம் உன்னைக் கொடுமைப்படுத்தி உங்கப்பாகிட்டே கறக்கிற மட்டும் கறக்கணும்னு நினைச்சிருந்தேன். இந்த சம்பவம் என்னை மனுஷனா மாத்திடுச்சு. இனி இந்தக் குடி, கிடி ஒன்னும் கிடையாது. மனுஷனா வாழப் போறேன். நீ இப்பப் பாக்கற சுந்தர் வேறே…. பழைய சுந்தர் இறந்துட்டான்”

விளக்குகள் அணைக்கப்பட்டன. காலை கதிரவன் வழக்கத்தை விட பிரகாசமாகத் தெரிந்தான் சுமதிக்கு!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வல்லபி ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    ‘நீலாவின் அம்மா’ மற்றும் ‘கவித்துளிகள்’ Books for Sale – எழுத்தாளர் மைதிலி ராமையா