ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
யுவா கிரகத்திற்கு ஏற்படப்போகும் பேராபத்தைப் பற்றி வாசு சொல்லத் தொடங்கவும், அவன் விழி வழி இதயம் புகுந்து அவனது ஆழ்மன எண்ணங்களை அவனது வாய் மொழியாகவே வரவைத்துக் கொண்டிருந்தான் ரூபன்.
அந்த ஆபத்தினைப் பற்றிய வாசுவின் வார்த்தைகள், “எனக்கு அவங்க என்ன திட்டம் வச்சுருக்காங்கன்னு முழுசாத் தெரியல ரூபா. ஆனா, நிறைய ஆணு ஆயுதங்களை ஒரு இடத்துல குவிச்சு வச்சுருக்காங்க. அது மட்டுமில்லாம, என்ன மாதிரி அம்மா அப்பா யாரும் இல்லாதவங்களாப் பார்த்து ஏதோ ஒரு வேலைக்குச் சேர்க்கறாங்க. அது ஏதோ பரிசோதனைக்குன்னு நான் நினைக்கறேன். ஆனா என் பிரண்டு என்ன சொன்னான்னா, நாங்க எல்லாம் சிலருக்குப் பாதுகாப்பாளர்களா இருக்கப் போறோம். அதுக்கான பயிற்சியின் முடிவுல எங்களை யாகுசாக்கு கூட்டிட்டுப் போகப் போறதாவும் சொன்னான்.
அதுவும் அந்தப் பயிற்சியோட கடைசிக் கட்டத்துல அந்த மகிந்தனோட தலைமையில எங்க திறமையை நாங்க காட்டலாமாம். எனக்கு அந்த மகிந்தனைப் பார்த்தாலே மனசுக்குச் சரியாய்ப்படறது இல்ல. அதனால இந்த விசயத்துல மகிந்தனுடைய பேர் வந்ததுமே நான் கொஞ்சம் எச்சரிக்கை ஆகிட்டேன். அதுமட்டுமில்லாம எனக்குச் சந்தேகம் வந்தப்போவே வளநாட்டோட டேட்டா பேஸ்குள்ள திருட்டுத்தனமா நுழைஞ்சு பார்க்கும்போது, நான் இந்தக் கம்ப்யூட்டர் ஹாக்கிங் எல்லாம் கொஞ்சம் படிச்சிருக்கேன் ரூபா, அதனால தான் இதெல்லாம் தெரிஞ்சுது. சரி இத முழுசா சொல்லறேன் கேளு,” என்றுவிட்டு மீண்டும் தொடர்ந்தான் வாசு.
“நிறைய விஷயங்க புரியல. ஆனா அதுல எனக்குப் புரிஞ்ச சில விஷயங்களே எனக்கு ரொம்பப் பயத்த கொடுத்துச்சு” என்று கூறி நிறுத்தியவனின் உடல் அப்பொழுதும் பயத்தால் நடுங்கியது.
“என்ன வாசு… நீ இந்தளவுக்குப் பயப்படற விஷயமா என்ன நடக்கப் போகுது?” என்று அதிரூபன் கேட்கவும்
வாசுவோ, “யுவால இருக்கற ஒவ்வொரு மக்களுக்கும் டி.என்.ஏ மாத்தப் போறாங்களாம். அதுவும் ஏதோ தடுப்பூசிங்கற பேருல. ஏன் பண்றாங்க.. எப்படிப் பண்ணுவாங்கன்னு எனக்கு எந்த விவரமும் தெரியல. ஆனா இதுக்கெல்லாம் சூத்திரதாரி அந்த மகிந்தன்னு மட்டும் எனக்குத் தெரிஞ்சுது” என்றான்.
அதற்குச் அதிரூபனோ, “ஏன்..ஏன் வாசு உனக்கு வ்ரி.. ஹ்ம்ம்.. மகிந்தனைப் பிடிக்காது?” என்று கேட்டான்.
அதற்குப் பதிலாய் அவனை ஒரு நிமிடம் தீர்க்கமாய்ப் பார்த்த வாசுவோ..”ஒரு மனுஷன் வாழ்க்கையில் உயரணும்ன்னா என்ன செய்யணும்? ஒன்னு அவன் சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டிருக்கணும். இல்ல.. பெரிய பணக்காரனா இருந்து அது மூலமா தனியா தொழில் தொடங்கி அதன் மூலமா பெரிய ஆளாகியிருக்கணும். இல்ல அவனோட அப்பா அம்மாவோட பணம் புகழால, தனக்குப் பணம் புகழ் சேர்த்து வச்சிருக்கணும். அதாவது ஒரு மனுஷனுக்குத் தொடக்கப்புள்ளின்னு ஒன்னு இருக்கணும்ல?
அது அந்த மகிந்தன்கிட்ட இல்ல. அவன் யாரு என்னன்னு எதுவும் தெரியாது. ஆனா உலக அரசியல்ல இன்னைக்கு அவன் தான் மிகப் பெரிய தலைவனா இருக்கான். அதே சமயம் அவன் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்ல. ஆனா எல்லா அரசியல் கட்சிகளும் அவனைச் சார்ந்து தான் இருக்கு. அதாவது வெறும் வளநாடு, யகுசா மட்டுமில்ல. இந்த யுவால இருக்கற ஆறு கண்டங்களும் அவனைச் சார்ந்து தான் இருக்கு” என்று கூறிக்கொண்டே போகவும்
இடைபுகுந்த அதிரூபனோ, “ஏய் இரு இரு.. அதென்ன ஆறு கண்டம்? மொத்தம் ஏழு கண்டமா இல்ல இருக்கணும்?” என்று வினவினாள்.
ஆனால் சற்று அதிர்ச்சியடைந்த முகபாவத்துடன், “என்ன அதிரூபா, இத்தனை நாள் நீ கோமாவுல இருந்தியா என்ன? நம்ம யுவால இப்போ ஆறு கண்டம் தான் இருக்குன்னு உனக்குத் தெரியாதா? சரியா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் இங்க இருந்த ஒரு கண்டம் கடல்ல மூழ்கிடுச்சே? மறந்துட்டியா?” என்று கேட்டான் வாசு.
அப்பொழுது தான் அதிரூபனுக்கே உரைத்தது யுவா எப்பேற்பட்ட பேராபத்தில் இருக்கிறது என்று. ஏனென்றால் இந்தக் கிரகத்தின் சமநிலை அதன் ஏழு கண்டங்களில் தான் இருக்கிறது.
அப்படி ஏதாவது ஒரு கண்டம் ஏதாவது ஒரு காரணத்தினால் அழிந்தாலும், இயற்கையே மற்றொரு கண்டத்தை உருவாக்கிவிடும். அத்தகைய தகவமைப்புக் கொண்டது யுவா.
ஆனால் அந்த அடிப்படைத் தன்மையையே யுவா இழந்துவிட்டதென்றால், அது இப்பொழுது அழிவுப்பாதையை நோக்கி வெகுதூரம் வந்து விட்டது என்பதைத் தான் காட்டுகிறது என்பதை உணர்ந்த அதிரூபனோ, அதைப் பற்றி மேலும் விவரம் கேட்டறிந்தான்.
“அட என்னப்பா எதுவுமே தெரியாத மாதிரி கேட்கற? 5 வருஷத்துக்கு முன்னாடி இதுதான் பரபரப்பா பேசப்பட்டுச்சு. சரியா அப்போ தான் இந்த மகிந்தனைப் பற்றிய செய்திகளும் வெளில வர ஆரம்பிச்சுது. ஆள் மத்த விஷயத்துல எப்படியோ.. ஆனால் மருத்துவத்துல பெரிய ஆள் தான். அதனால தான் ரொம்ப வருஷமா வயசே ஆகமா முப்பது வயசுப் பையன் மாதிரி இருந்தான். ஆனா கடந்த ஒரு வருஷத்துல அறுபது வயசு ஆளாகிட்டான். எல்லாரும் அது அவன் பொண்ண பற்றிய கவலையினாலன்னு சொல்றாங்க” என்றான்.
உடனே அதிரூபனோ சந்தேகமாக, “என்ன பொண்ணா? மகிந்தனுக்குப் பொண்ணு கூட இருக்கா? என்னாச்சாம் அவளுக்கு?” என்று வினவினான்.
“அது என்ன பிரச்சனைன்னு தெரியல. கடந்த ஒரு வருஷமா அந்தப் பொண்ணுக்கு தலையில ஏதோ நோய் இருக்காம். மருத்துவத்துல பெரியாளா இருந்தும் கூட அவன் பொண்ணோட நோயை குணமாக்க முடியலையாம். அதுக்கான ஆராய்ச்சியில தான் இப்போ அவன் தீவிரமா ஈடுபட்டு இருக்கானாம். ஆனா இதுக்கும் இந்த மக்களோட டி.என்.ஏ’வ மாத்தறதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு” என்று வாசு கூறவும்
“சந்தேகம் தான? சீக்கிரம் தெளியவச்சுடலாம்..” என்று கூறினான் அதிரூபன்
அதன் பொருள் என்னவென்று புரியாத வாசு, “என்னப்பா? நீ என்ன சொல்ற?” என்று கேட்டான்.
அதற்கு அதிரூபன், புரிந்துகொள்ளவியலாத புன்முறுவலுடன், “உன் பிரண்டு சொன்ன அந்த அமைப்புல நீ சேர்ந்துடு” என்று சூட்சமமான முறுவலுடன் சொன்னான்.
அவன் கூறியதைக் கேட்ட வாசு அதிர்ந்து போனவனாக, “நீ என்ன சொல்ற ரூபா?” என்று கேட்கவும்
அதிரூபன் மிகவும் சாதாரணமாக, “நீ மட்டுமில்ல.. நானும் அதுல சேரனும்” என்று கூறினான்.
அதைக் கேட்ட வாசு, பேரதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்..
********************************
யகுஸாவில்… சிருஷ்டியின் தலை வேதனையைக் குறைக்கும் மருந்துகளை மகிந்தனின் வழிகாட்டுதலின்படி அளித்த மருத்துவக் குழு, எவ்வளவு முயன்றும் அவளுக்குச் சரியாகாத காரணத்தினால், மகிந்தனை உடனே தொலைப்பேசியில் அழைத்தனர். அவர்கள் கூறிய விவரம் அறிந்தவர், சிறிதும் யோசிக்காது யகுசா விரைந்தார்.
அவரைத் தடுத்த ஸ்வரதீபத்தினரிடம், “எனக்கு இப்போ வளநாட்டைவிட, யகுசாவை விட, இவ்வளவு ஏன்? யுவாவ விட, சிருஷ்டி தான் முக்கியம். நம்ம ப்ராஜெக்ட் பத்திய தகவல்கள் எல்லாம் எனக்கு மெயில் அனுப்பிடுங்க. நீங்க தேர்ந்தெடுத்திருக்கற ஒவ்வொரு ஆளைப் பத்திய விவரங்களையும் எனக்கு அனுப்புங்க. முக்கியமா கேள்வி கேட்க ஆளில்லாதவங்களைத் தான் நம்மளோட முதற்கட்ட பணிக்குத் தேர்ந்தெடுக்கணும். அவங்களோட உடல் வலிமையை முதல்ல சோதிங்க. இப்போதைக்கு அது இருந்தாலே போதும்” என்று கூறிவிட்டுத் தான் வந்த தனது தனி விமானத்திலேயே விரைந்து யகுசா வந்தடைந்தார் மகிந்தன்.
அங்கு வந்து அத்தனை அத்தனை வலியில் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் தன் மகளைக் கூடப் பார்க்காது, நேரே தனது ஆய்வகத்தினுள் நுழைந்தார்.
பின்பு இரண்டு மணிநேரத்தில் வெளியே வந்தவர், தனது கையிலிருந்த குடுவையிலுள்ள திரவத்தை அப்படியே சிருஷ்டியின் வாயில் புகட்டினார். அந்தத் திரவம் அவள் உதடுகளைத் தொட்டது தான் தாமதம், அவ்வளவு நேரம் தலை வலியால் துடித்துக்கொண்டிருந்த சிருஷ்டி, ஏதோ உறங்கி எழுந்ததைப் போல உற்சாகத்துடன் எழுந்தாள்.
ஆனால் எழுந்தவள் விழிகளில் மட்டும் கண்ணீர் வடிந்தது. அதைக் கண்டு கொண்ட மகிந்தனோ, “எதுக்கும்மா அழற? அது தான் வலி நின்னுடுச்சுல்ல?” என்று கேட்டார்.
அதற்குச் சிருஷ்டி, “அப்பா… எனக்கு ஏதோ பெரிய வியாதி தான? அதனாலத் தான இப்படி அடிக்கடித் தலைவலி வருது. அதனாலத் தான அடிக்கடி அடிக்கடி மயங்கியும் விழறேன்?” என்று வினவினாள்.
உடனே மகிந்தன், “கண்டதையும் நினச்சு கவலைப்படாத சிருஷ்டி. நல்லா ரெஸ்ட் எடு. இந்த மருந்து உடனே செயல்படுதுல்ல? அதனால இத அதிகமா தயாரிச்சு ஸ்டாக் வச்சுக்கணும். நான் அந்த வேலையைப் பார்க்கப் போறேன். பயப்படாத.. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்” என்று கூறி மகிந்தன் விடை பெறவும், சிருஷ்டிக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.
ஏதோ முக்கியமான வேலையாக வெளிநாட்டிற்குச் சென்ற தன் அப்பா.. தனக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்ததுமே அந்த வேலையையெல்லாம் அப்படியே விட்டு விட்டு இங்கே வந்தது சிருஷ்டிக்கு மனதிற்குத் தென்பளித்தது.
ஆனால் இவ்வளவு தூரம் வந்தவர், தன் அருகே அமர்ந்து இன்னும் கொஞ்சம் ஒட்டுதலாக, பாசமாகப் பேசியிருந்தால் மனதுக்கும் இதமாக இருந்துருக்கும் என்று எண்ணியவாறே, தன்னையும் அறியாது துயில் கொண்டு விட்டாள் சிருஷ்டி.
மறுபுறம் மகிந்தன், யோசனையில் நெற்றி சுருங்க கண்மூடி தனது இருக்கையில் அமர்ந்திருந்தான்.
“நம்ம புதிய முயற்சிக்கு ஆட்களைச் சேகரிக்கற விஷயமா வளநாட்டுக்கு போனா.. உடனே இங்க திரும்பி வர மாதிரி ஆகிடுச்சு. நாம எப்போ வளநாட்டுக்கு, அதுவும் குறிப்பா ஸ்வரதீபத்துக்குப் போனாலும் சிருஷ்டிக்கு இந்த மாதிரி ஆகிடுது. இப்போ அவ குணமானது கூட நாம கொடுத்த மருந்தினாலையா? இல்ல நாம அங்கிருந்துத் திரும்பி வந்ததாலையா?” என்று தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தவரை, அவரது செல்போன் ஒலி கலைத்தது.
போன் செய்தது சிருஷ்டிக்கு வைத்தியம் பார்த்த மருத்துவக் குழுவின் தலைவர் விக்டர் என்பதை அறிந்த மகிந்தன், “ஹ்ம்ம்.. சொல்லு விக்டர்.. “
“………………….”
“எனக்கும் புரிஞ்சுது. ஆமா.. அவளுக்கு நாம கொடுத்த அந்த மருந்து சேர்ந்துக்கல”
“……….. ………………. ……… ……….”
“எஸ் எஸ் எஸ்… எனக்கும் இது புரியுது. அவளை இதுக்கு மேல நாம நம்ம ஆராய்ச்சிக்கு உபயோகப்படுத்த முடியாது. ஆனா அதே சமயம் அவளை என்னாலக் கொல்லவும் முடியாது. அது உனக்குப் புரிஞ்சுதா?”
“………………….. …………. ….. ……. …………”
“உன்ன விட எனக்கு அதிகமாவே தெரியும் விக்டர், அவளோட மற்ற மருந்துகளையெல்லாம் நிறுத்திட்டு.. நான் இப்போ கடைசியா தயாரிச்சுக் கொடுத்த மருந்தை மட்டும் கன்டினியூ பண்ணுங்க” என்று கூறித் தொலைபேசியை அணைத்தவர், அதில் தெரிந்த சிருஷ்டியின் புகைப்படத்தைப் பார்த்துக் கொடூரமாகச் சிரித்தார்.
(தொடரும் – புதன்தோறும்)
GIPHY App Key not set. Please check settings