in

ஆழம் ❤ (சிறுகதை) – ✍ ரெங்கபார்வதி

ஆழம் ❤ (சிறுகதை

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“எம்மாடியோவ் எவ்வளவோ நேரம் மூச்சடிக்கி முங்கி கிடக்கான் உம் மவே!” என்று ஆச்சரியமும் பயமுமாக சண்முகம் கேட்ட கேள்விக்கு, சிரித்துக் கொண்டே துணிகளை துவைக்கலானாள் மாரி.

“ஏ அத்த அப்புடி அப்பாவியா கேக்கிய, அவந்தேன் அப்புடித் தானே முங்கு நீச்சல் போட்டு விளையாடித் தானே நெதமும் குளிக்கான்” என்ற தன் மகனின் வீரத்தை பெருமிதத்தோடு எடுத்துரைத்தாள் மாரி.

மாரிக்கு மூன்று குழந்தைகள், இரண்டு மகன்களும், ஒரு மகளும். கணவன் சரவணன் மிகப் பெரிய பணக்காரன், ஆனால் கடும் உழைப்பாளியாகவும், நேர்மையாகவும் வாழும் வகையினன்.

குடும்ப சுமையினால் அத்துணை பொறுப்பையும் மாரியிடம் கொடுத்துவிட்டு சம்பாதிப்பது மட்டுமே கொள்கை ஆகி உள்ளவன். மாரியும் அவனை அனுசரித்தும் அன்பு காட்டியும் வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறாள். 

கோலூரில் சொந்தமாக உள்ள வீட்டில் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். துணிகள் சேர்ந்து விட்டதால் ஆற்றில் வந்து துவைக்க வந்திருந்தாள். ஒரு மாறுதலுக்காக ஆற்றில் குளிக்கலாம் என வந்தவளிடம் தான்,  தன்னுடன்  வந்த அவன் இரண்டாவது மகனைப் பற்றி சண்முகமும் இவளும் பேசிக் கொண்டிருந்தனர்.

துணிகளை துவைத்து முடித்து படியில் வைத்து விட்டு குளித்து முடித்த மாரி, மகனுக்காக காத்திருந்தாள். இரண்டரை வருடமாக கொரோனா பெருந்தொற்றினால்  வெளியில் எங்கும் செல்ல முடியாததால், பாவம் குழந்தைகள் மிகவும் ஏங்கி போய் விட்டனர் கொஞ்ச நேரம் ஆற்றில் விளையாடட்டும் என அவளும் உடை மாற்றி அமர்ந்திருந்தாள்.

சிறிது தலையை கோதி விட்டு திரும்பியவளுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம் அன்பு, அழுகை என அத்துணை மெய்ப்பாடுகளும் ஒரு சேர உடம்பில் பட்டு படபடத்தது.

வள் மனம் அப்படியே பின்னோக்கி அந்த நாளுக்கே பயணிக்கத் தொடங்கியது

“கால் வலிக்கி, எம்ப்புட்டு தூரம் நடந்தே வந்தேன்னு தெரியுமா?” என்றவளின் கண்ணசைவை கண்டு, கிரங்கித் தான் போனான் பழனி.

“நா பொலம்பிக்கிட்டே வாரேன், நீ என்னடான்னா இப்பிடி பாக்கே” என்று அவள் உலுக்கியவுடன் தான் அவனுக்கு நினைவே வந்தது.

மலையில் பிறந்தாலும் சந்தனம் மலைக்கு சொந்தமில்லை, பூசுபவருக்கே சொந்தம் என்றது சங்க இலக்கிய காதல். அது போலவே இறுமாப்புடன் திரிந்து கொண்டிருந்தவனின் மனதை கயிறாக திரித்து நடமாட செய்து விட்டாள் இந்த கன்னியானவள்.

மாரியின் அப்பா வேலன்  கருங்குளத்தில் வேலை பார்த்த பொழுது, பழனியின் குடும்பத்தோடு பழகி நெருங்கிய குடும்ப நண்பராக இருந்தார். அதன் பின் வேலையை தன் சொந்த ஊரான புளியம்பட்டி போஸ்டலில் மாரி பிறந்தவுடன் மாற்றிக் கொண்டு வந்தபின், அந்த அளவுக்கு குடும்பத்தோடு நெருக்கம் இல்லையென்றாலும், கருங்குளம் கோவிலுக்கு போகுபோதெல்லாம் பழனியின் வீட்டுக்கு போய் வருவார்.

இருபத்திரெண்டு வருடத்திற்கு பிறகு தன் மகளை கூட்டிக் கொண்டு கருங்குளம் சாமியை பார்த்து விட்டு பழனி வீட்டுக்கு போன போது தான், மாரியை பார்த்தான் பழனி.

“என்னடே மருமவனே இப்புடி பாக்கீரு எம் பொண்ணு மாரி தா இது” என்று அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை.

மாரி சிரித்துக் கொண்டே, “அத்தே நல்லாயிருக்கீகளா?” என்று அவனை உரசிக் கொண்டு ஓடினாள்.

“வாட்டி எங்க அண்ண பெத்தவளே” என உரிமையோடு கட்டிக் கொண்டாள்.

பழனி அம்மாவை பார்த்துக் கொண்டே வந்தான். அவன் தங்கை கனகாவும் மாரியும் குதூகலமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். 

பழனியின் அப்பா மாரடைப்பில் இறந்து போன பின்னர் அவன் அம்மா சரசுவதிக்கு அவரின் வேலையே கிடைத்து விட்டது. அதனால் தன் இரு பெண்களுக்கும் படிப்பு முடித்த கையோடு வரன் பார்த்து இரண்டு மாத இடைவேளையில் அடுத்தடுத்து திருமணத்தை சீக்கிரம் நடத்த தீர்மானித்து விட்டாள்.

கோவிலுக்கு வந்து விட்டு வீட்டிற்கு வந்த மாரி குடும்பம், இரண்டு நாட்கள் பழனி வீட்டில் தங்கிவிட்டு ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர். மாரி வீட்டில் அவள் உடன் பிறந்தது ஒரு அண்ணன்  ராசு மட்டும் தான். அவனும் இன்சூரன்சில் நல்ல வேலையில் இருந்தான்.

அன்றைய இரவில் பழனி மாரியின் அப்பாவோடு படுத்துக் கொண்டிருந்தான். அவரின் குறட்டை ஒலியா இல்லை அவர் மகள் மாரியின் நினைவா என தெரியவில்லை, இரவு முழுக்க அவன் உறங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

அது வரை கட்டிளங் காளையாக திரிந்து கொண்டிருந்தவனின் மனது அலை பாய்ந்து கொண்டிருந்தது.

‘இத்தனை நாளா இல்லாத நிலைக்கு நம்மள இப்படி தூங்கவிடாம செய்கிறாளே?’ என மணி மூன்றைக் கடந்த நிலையில் உறங்க ஆரம்பித்தான்.

ஆற்றில் முங்கிக் குளித்த வேலன், பழனி டைவ் அடித்து குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

“சூப்பர் மாப்ள” என்றவர், கரையேறி வீட்டுக்கு கிளம்பினார்.

வள்ளி மாரியிடம், “எங்க அண்ணே முங்கு நீச்சல் போட்டுச்சுண்ணா யாருமே அவுங்க கூட செயிக்க முடியாது தெரியுமா?” என்று பெருமிதமாகக் கூற

மாங்காயைக் கடித்துக் கொண்டே, “அப்புடியா இது பொய்” என்றவளுக்காக

“ஏண்ணே நீ முங்கு நீச்சல் போட்டு மூச்சடக்கிட்டு அப்புறம் நீச்சல் போடு” என்ற வள்ளியோடு நின்றிருந்த மாரியை  விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டே மூச்சடக்கி தண்ணீரில் கிடந்தவன், வெகுநேரமாக வராதது கண்டு பயந்த மாரியைப் பார்த்த வள்ளி

“பயப்படாத எங்க அண்ணே வந்துடும்” என சிரித்தாள். மாரியும் பயத்த வெளிக்காட்டாமல் சிரித்தாள். சுமார் பதினைந்து நிமிட இடைவெளிக்குள் மூழ்கி எழுந்தவனைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், காதலோடு அவனையே பார்த்தாள்.

சத்திரத்துக்கு சாமான்களை அடுக்கிக் கொண்டே, “எல்லாத்தையும் ஏத்திட்டு நாங்க சத்திரம் போறோம், நீ ஒரு தடவ வீட்டை சுத்தி எல்லாக் கதவையும் சரி பண்ணிட்டு வண்டில வந்துடு” என்று மகனிடம் கூறி முடித்தாள் பழனி யின் அன்னை.

“ம்ம்…” என தலையாட்டிக் கொண்டே சாமான்களை ஏற்ற வண்டியினை வாசலில் போய் பார்த்தவனுக்கு, ஆயிரம் பட்டாம்பூச்சி மனதுக்குள் பறந்தது.

“வாங்க மாமா அத்தை” என்று ஒப்புக்கு சொன்னவன் கண்கள் முழுதும் அவளைச் சுற்றியே வட்டமடித்தன.

“வாங்க” என கூறிய சரசுவதி, மாரியின் அம்மாவிடம் “நம்ம சத்திரம் போவோம், இவனை வீட்ட சரி பார்த்துட்டு வரச் சொல்லியிருக்கேன்” என்றாள்.

வேனில் ஏற்றிய சாமான்களோடு மாரியின் பெற்றோருக்கும், சரசுவதிக்கும் மட்டுமே இடமிருந்தது. அது போக தெருவில் மூத்தவளான வடிவு ஆச்சி வருவதால், மாரியின் தந்தை பழனியிடம், “நீ வரும் போது அவள கூட்டிட்டு வந்துருப்பா” என்றார்.

“சரிங்க மாமா” எனக் கூறிய பழனிக்கு ஒரே மகிழ்ச்சி.

“கால் வலிக்கி” என்றவளின் அலறலில் தான் அவனுக்கு சுயநினைவே வந்தது

“நா சொல்லிக்கிட்டே இருக்கேன் நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க” என்றவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்கலானான் பழனி. சர்வீஸ் கொடுத்த பைக்கை எடுத்துக் கொண்டு மாரியோடு சத்திரத்துக்கு பயணமானான்.

அந்த நிலையில் தான் அவளும் அவனிடம் தன் மனதை பறிகொடுத்தாள். சந்தையில் மல்லிகை முழமாக வாங்கி ஆத்துப்பாலம் தாண்டிய ஐயனார் கோவில் வாசலில் அவள் தலையில் வைத்து விட்டான்.

முதல் தங்கையின் திருமணம் இனிதே முடிந்தது. அடுத்த தங்கையின் திருமணத்துக்கான வேலையில் இறங்கிய சரசுவதி, பழனியிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“வள்ளியும்,தேவியும் இல்லாம இந்த வீடு எப்படி இருக்க போவுதோ தெரில. ஆனா விளக்கேத்த ஒருத்தி வந்தா எல்லாம் சரியாயிடும்” என்று கூறி முடித்தாள்.

“முதல்ல வீட்டை சரிபண்ணிட்டு தான் மறுவேலை” எனக் கூறி தன் திருமணம் பற்றிய பேச்சை குறித்து முற்றுப்புள்ளி இட்டான் பழனி. அவன் சொல்வதும் சரிதான் எனத் தோன்றியது சரசுவுக்கும்.

பழனி இளங்கலை முடித்த கையோடு வங்கியில் கணக்கர் வேலையில் அமர்ந்து விட்டான். தவுட்டுக்கு உழைச்சாலும் கவர்மெண்ட்டுக்கு உழைக்கணும் என்ற அவன் அம்மாவின் தாரக மந்திரத்தைப் பற்றிக் கொண்டு, இப்பொழுது அரசாங்க வங்கியில் நல்ல பதவியில் இருக்கிறான்.

அந்த காலத்து நடிகர் முத்துராமனைப் போன்ற தேகமும் உடல் வாகும் ஒருங்கே அமையப் பெற்று அழகான தோற்றம் கொண்டிருந்தான் பழனி.

இரண்டாவது தங்கை திருமணம் பத்திரிகை வைப்பதற்கு வேலன் வீட்டிற்கு சென்றிருந்தான் பழனி. தையல் பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்குள் நுழைந்த மாரியால் நம்ப முடியவில்லை,

கண்களால் வாருங்கள் என சொல்லிக் கொண்டே பின்வாசல் போனவளை தடுத்த அம்மா, “கைய கழுவிட்டு இந்த பலகாரத்தை அவங்களுக்கு  வெச்சிட்டு வா” என்ற கமலத்திடம் சரி என தலையாட்டினாள்.

காபியும் பலகாரத்தையும் எடுத்துக் கொண்ட பழனியும் அவன் நண்பனும் விடைபெற்றுச் சென்றனர். கல்யாணத்துக்கு இரு நாட்கள் முன்பு பழனியின் வீட்டுக்கு போன் அழைப்பு வந்தது.

“சொல்லுங்க மாமா, அப்படியா இந்தா அம்மாகிட்ட தாரேன்” என்ற பழனி, “வேலன் மாமா பேசறாரு” என்று கொடுத்தான்.

“அப்படிங்களா அண்ணே, சரி பசங்களயாவது அனுப்புங்க” எனக் கூறி இணைப்பை முடித்துக் கொண்டாள்.

“வேலன் மாமாவோட ஆச்சி இறந்துட்டாங்களாம் அதான் அவங்களும் அத்தையும் வர சந்தேகம், மகனயும் மவளையும் அனுப்புதேன் சொல்லியிருக்காரு” எனக் கூறினாள். பழனி தனக்குள் மகிழ்ந்து கொண்டான்.

சத்திரத்துக்கு மூட்டைகளை ஏற்றிவிட்டு திரும்பிய பழனி, மாரியை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளினான்.

“ஆமா நீ தனியாவா வந்தே” என்றவனைப் பார்த்தவள்

“ம்… உங்களுக்கு ரொம்ப தான் ஆசை. எங்க அண்ணே அவங்க கூட படிச்ச பையன பார்த்துட்டு சாயங்காலம் சத்திரம் வாரேன்னு சொன்னான்” என்று சொல்லி முடித்தாள்.

வீட்டிற்குள் எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு திரும்பியவன், தன் சேலையை சரிசெய்து கொண்டு கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொண்டிருந்த மாரியைப் பார்த்து அவள் அருகினில் வந்து நின்றான்.

அவன் மூச்சுக் காற்று பட்டவுடன் கையில் கிடைத்த பட்டாம்பூச்சி தன் சிறகை விடுவிக்க படபடப்பது போல் மாரியின் இமைகளும் இதயமும் படபடத்தன.

அவள் கையை இறுகப்பற்றி தன் அதரத்தால் அவளின் நெற்றித்திலகத்தில் முத்தமிட்டான். அவளின் கண்களில் இருந்து இருதுளிகள் அவன் கைகளில் பட்டது.

பதறிய பழனி, “என்னாச்சு மாரி?” என்றவனின் மார்பினில் முகம் புதைத்து, “என்ன கல்யாணம் செய்துகிடுவீங்களா?” என்ற உணர்ச்சி வார்த்தைகளுக்கு, “நிச்சியம்” என கையமர்த்தினான்.

முதல் கல்யாணம் போலவே இந்த கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது. மாரி சரசுவிடம் சொல்லிக் கொண்டு ஊருக்கு கிளம்பினாள்.

பேருந்து பயணம் முழுவதும் பழனியோடு இருந்த இரணடு நாட்கள் தான் நினைவில் வந்து போனது. அருகில் அமர்ந்து பேசிக் கொண்டு வந்த அவள் அண்ணன் கதிரின் வார்த்தைகள் எதுவும் அவள் காதில் விழவில்லை.

கதிரும் கல்யாணத்தில் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் வந்தான். பழனியின் குணம் அவனுக்கு நன்றாகவே தெரியும் அதனால் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் பெற்றோரிடமும் இது பற்றி சொல்லி விடுவது நல்லது என மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

பனி பொழியும் மார்கழி மாதத்தின் இரவில் ஒரு நாள் கமலமும் வேலனும் பேசிக் கொண்டிருந்தனர்.

“மாரிக்கு கல்யாணம் பண்ண வேண்டியது தான்” என்றாள் கமலம்.

ஆம் என தலையை ஆட்டிய வேலன், “இந்த மாசத்தோட அவ பேசன் டிசைனிங் கிளாஸ் முடியுது, அடுத்தாப்புல ஆரம்பிச்சிடலாம்” என்றவனின் பேச்சை ஆமோதிப்பது போல் கமலம் தலையசைத்தாள்.

“அவளுக்கு பழனிய பிடிச்சிருக்கு அவனுக்கும் இவள பிடிச்சிருக்கு” என்றவளை ஏறிட்டு பார்த்த வேலன் சிரித்துக் கொண்டார்

“சரசுவதிகிட்ட அப்போ நீயே பேச்ச ஆரம்பிச்சிடு” என சொல்லி முடித்தார்.

பூக்களின் வசந்தகாலமான தைமாத வெள்ளியன்று கமலம் பூக்களை வாங்கிக் கொண்டு சரசு  வீட்டிற்கு வேலனோடு கிளம்பினாள். முன் கூட்டியே தகவல் தெரிவித்ததால் இவர்களின் வருகைக்காக காத்திருந்தாள் சரசு.

“வாங்க அண்ணே, வா கமலம்” என அழைத்துக் கொண்டு பலகாரங்கள் கொடுத்து உபசரித்தாள்.

“வீட்ட சரி பண்ணிட்டீங்க போல” என பேச்செடுத்த கமலம், “தம்பி இல்லிங்களா?” என பழனியைத் தேடினாள்.

“அவன் வேல விசயமா வெளியூர் போயிருக்கான்” என்றாள் சரசுவதி.

“மாரி படிப்ப முடிச்சுட்டா, ஏதோ பேசன் டிசைன் படிச்சா, அதுவும் போன மாசம் முடிஞ்சிடுச்சி. அவளுக்கு கலியாணம் முடிச்சாத்தான் கதிருக்கு பாக்க முடியும்” என்ற வேலனின் முகத்தை பார்த்த சரசு சிரித்துக் கொண்டாள்.

“நாங்களும் பழனிக்கு முடிச்சிடலாம் நினச்சிருக்கோம்” என கூறிய சரசு, “எங்க மச்சான் தெரியுமில்ல, பழனி பெரியப்பா. அவரு தான் வீட்டுக்கு மூத்தவரு. பழனிக்கு சாதகம் பார்த்து எழுதிட்டு வந்திருக்காரு, அடுத்த பங்குனிக்குள்ள நடந்திடும் சோசியர் சொல்லி இருக்காரு”ன்னு சொல்லி முடித்தாள்.

“இந்த பாருங்க அக்கா நா மனச விட்டு சொல்லுதேன் எம் மவ உங்க மவனத்தான் நெனச்சிட்டு இருக்கா, உங்க மகனும் அப்புடித்தான். அதனால சீக்கிரமே நல்ல நாள் பார்த்து தாம்பூலம் மாத்திக்கிடுவோம்” என பட்டென்று தன் முடிவினை சொல்லி முடித்தாள் கமலம்.

“சரிங்க மதினி, நா மச்சான்கிட்ட சொல்லிட்டு உங்ககிட்ட சொல்லுதேன். எனக்கும் அசல விட தெரிஞ்ச இடம்னா என்னய காலத்துக்கு நல்லா பாத்துக்கிடுவாங்க. நம்ம மாரி தங்கமான பொண்ணு”

மாரியின் சாதகம் கொடுத்துவிட்டு விடைபெற்றனர் வேலன் தம்பதியினர். இரண்டு மாதம் கழித்து சரசுவிடம் இருந்து அழைப்பு வந்தது, கொஞ்சம் ஊரு வரையில வந்து போக சொல்லி அழைத்தாள். வேலன் மட்டும் கிளம்பிச் சென்றார்.

மதியம் சாப்பிட்டு கிளம்பிய வேலன் இரவில் ஊர் உறங்கும் நேரத்துல கடைசி பஸ்சில் வந்து இறங்கினார். மௌளமாக உணவினை முடித்துக் கொண்டவர், திண்ணையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு அமர்ந்தார். அவரின் முகம் பார்த்த கமலம் களைப்பு நீங்கிய பின் பேசத் தொடங்கினாள்.

“எல்லாரம் சொகம் தானே?” என பேச்சைத் தொடங்கினாள்.

“ம்ம்” என தலையசைத்த வேலன், “சரசுவோட அண்ணன் இறந்துட்டாராம், போன வாரம் அவங்க மதினிக்கும் உடம்புக்கு முடியலயாம். நிறைய சொத்து பத்து இருக்கு ஒரே மவளாம். நல்ல படிச்சிருக்கா ஆனா யாருமில்லை அதனால அந்த பொண்ணுக்கு பழனிய பேசி முடிச்சுட்டாங்களாம். அதுவும் போக பழனி சாதகம் நம்ம மாரி சாதகத்தோட ஒத்து வரலயாம்”

ஒரே மூச்சில் சொல்லி முடித்து உறங்கச் சென்றார் வேலன். கமலமும் மௌனமாக உள்ளே சென்று படுத்துக் கொண்டாள். சன்னலோரம் கேட்டுக் கொண்டிருந்த மாரிக்கு நெஞ்சுக்குள் இடியை இறக்கியது போல் இருந்தது.

எப்போதும் விடியும் விடியல், மாரிக்கு மட்டும் அன்றைய நாள் கருப்பாக இருந்தது. இரவு முழுதும் உறங்காமல் அழுதழுது கண்கள் வீங்கியிருந்தது.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து கோவிலுக்கு கிளம்பி விட்டாள். கமலமும் அவளிடம் காலையிலேயே விசயத்தை சொல்ல வேண்டாம் என நினைத்துக் கொண்டாள்.

மாரி பக்கத்து தெருவில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பிரகாரம் சுற்றி விட்டு அமர்ந்தாள். மனம் பழனியைச் சுற்றி சுற்றியே வலம் வந்தது. வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் கோவிலிலிருந்து நடக்கத் தொடங்கினாள்.

திண்ணையில் அமர்ந்திருந்த வேலன் செய்தித்தாளை மடித்து விட்டு மாரியைப் பார்த்தார்.

“என்னம்மா காலையிலேயே கோவிலுக்கு போறதா உங்க அம்மை சொன்னா போய்ட்டு வந்திட்டியா?” என்றவரின் முகத்தை பார்க்க துணிவின்றி தலையை மட்டும் அசைத்தாள்.

“வாம்மா இங்கிட்டு வந்து உக்காரு. நேத்து கருங்குளம் போய்ட்டு வந்தேன், உன் கல்யாண விசயமா சரசுவதி அத்தை வீட்ல பேசிட்டு இருந்தேன். அவங்க பழனியோட சாதகத்துல ஏதோ பிரச்சனையாம் அதனால உன் சாதகத்துக்கு ஒத்து வரலைன்னு சொல்லிட்டாங்க. நாம மேற்கொண்டு நல்ல இடமா பாக்கலாம்” என மகளிடம் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றார்.

பாறாங்கல்லை மனதில் ஏற்றிவிட்டு குளிக்கச் சென்றவரை இமைக்காமல் பார்த்த மாரியம்மாளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. காலை உணவினை பரிமாறிக் கொண்டே மகளைப் பார்த்த கமலத்துக்குத்தான் தெரியும் மகளின் வேதனை.

“ஏங்க?”

 “ஹும்” என சொல்லிக் கொண்டே இட்டலியை சாப்பிட்டவர், “சாம்பார ஊத்து எனக்கு கொஞ்சம் வெளி வேல இருக்கு முடிச்சுட்டு வந்து பேசுதேன்” என்றவருக்கு பரிமாறிய கமலம்

“இல்லங்க மாரீ…”

கையமர்த்தி “எனக்குந் தெரியுந்தா, அப்புறமா பேசிக்கோங்க அம்மையும் மகளுமா” எனக் கூறிவிட்டு கையை கழுவி பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார்.

“இன்னொரு இட்டலி போட்டுக்கடா” என்ற மகனைப் படுத்திக் கொண்டிருந்தாள் கமலம்.

“யம்மா கேக்க மறந்துட்டேன், அப்பா போனாங்களே என்னாச்சு?” எனக் கேட்டான்.

“அவுக அண்ண மகளையே பழனிக்கு முடிக்கப் போறங்களாம்” என சொன்னதைக் கேட்டு நிமிர்ந்த ராசு

“ஏனாம் அன்னிக்கு அத்த தலைய அசைச்சு சம்மதம்னு சொல்லிப்புட்டு இப்பிடி சொல்லிட்டாக” என்றவனை பார்த்த கமலம்

“ஏலேய் இன்னாருக்கு இன்னாருன்னு கடவுளு போட்ட முடிச்ச நம்ம மாத்த முடியமாடா?” என திருப்பிச் சொன்னாள் கமலம்.

“அது சரி, மேற்கொண்டு என்ன பண்ணப் போறீங்க. ஏன்னா நா கம்பெனில லோன் போடணும்” எனக் கூறிக் கொண்டே பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனான்.

முற்றத்தில் மளிகை சாமான்களை உலர்த்திக் கொண்டிருந்தவள் பின்னாடி வந்து நின்ற மாரியின் வருகையை உணர்ந்தவள், “ம்மா” என அழைத்தவளை

“ம் சொல்லு மாரி என்னம்மா?” எனக் கேட்டாள்.

“நா கொஞ்சம் செல்வி வீட்டுக்கு போயிட்டு வாரேன். வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தேன், அது விசயமா பேசிட்டு வாரேன்” எனக் கூறியவளைப் பார்க்காமலே

“சரிம்மா சீக்கிரம் வந்துடு” என்றாள்.

பெண் மனம் பெண் மட்டுமே அறிவாள் என்பதற்கேற்ப மாரி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலம்.

கானல்நீரின் வீரியம் கண்ணாடியென சாலையில் கிடக்க மறுபக்கமாக நடந்து செல்வி வீட்டை அடைந்த மாரியை, வாசலிலேயே பார்த்த செல்வியின் அம்மா “வாம்மா… அவ மாடியில தான் இருக்கா போ” என சிரித்துக் கொண்டே உள்ளே அனுப்பினாள்.

மாரியைப் பார்த்தவுடன் பூரிப்பில் சிரித்த செல்வி, “என்ன இளவரசி எப்படி இருக்கீங்க? உங்க காதல் இளவரசர்….” என வார்த்தையை முடிக்கும் முன்னரே கதறி அழுத மாரியைப் பிடித்து அமர்த்திய செல்வி அதிர்ச்சியானாள்.

“ஏ மாரீ நா சும்மா ஏதோ… என்னாச்சு டீ?” என உரிமையோடு கேட்டவள், கதவைத் தாழ்ப்போட்டு  அருகில் அமைதியாக அமர்ந்தாள்.

அழுது முடிக்கும் வரை அமைதி காத்த செல்வி, “என்னாச்சு மாரீ? வீட்ல எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டாள்.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு செல்வியைப் பார்த்தவளை ஆறுதலாக பார்த்தாள் செல்வி.

“பழனி வீட்ல வேற இடத்துல பேசி முடிச்சுட்டாங்களாம்”

“ஏய் என்னடி சொல்லுற? இரண்டு வீட்லயும் கிரீன் சிக்னல் சொன்ன, இப்ப இப்படி சொல்ற. எனக்கொண்ணுமே புரியல” என்றாள் செல்வி.

“எல்லாமே முடிஞ்சு போச்சுடி, இனி என்ன சொல்ல” என விரக்தியுடன் சொனனாள்.

“புரியும்படியா சொல்லு மாரி” என கையினைப் பற்றிக் கொண்டாள்.

“பழனியோட மாமா திடீர்னு இறந்துட்டாங்களாம் அவங்க அத்தையும் ரொம்ப உடம்புக்கு முடியாம இருக்காங்களாம் ஏகப்பட்ட சொத்து இருக்கறதால வெளியில மாப்ள பார்த்தா சொத்துக்காக ஆசப்பட்டு என்ன நடக்கும்னு தெரியாது, அதனால இவருக்கு பேசி முடிச்சுட்டாங்களாம்” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

ஒரு நீண்ட நிசப்தம் அறையைச் சுற்றிலும் நிலவியது. செல்வியின் அம்மா கதவைத் தட்டும் ஓசையில் தான் மௌனம் கலைத்து கதவைத் திறந்தாள் செல்வி.

“என்ன ரெண்டு பேரும் இப்படி கதவ அடச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள். “இந்தாங்க காப்பியும் பஜ்ஜியும் சாப்பிட்டே பேசுங்க” என்று வைத்து  விட்டு கிளம்பினாள்.

மீண்டும் கதவை சாத்திக் கொண்டு மாரியிடம் வந்தவள், “இப்ப என்ன பண்ணப் போற மாரி?”

“என்ன பண்ண முடியும், நீ ஏதாவது யோசனை சொல்லு செல்வி” என்றாள்.

“சரி முதல்ல சாப்பிடு” என பலகாரத்தை முடித்துக் கொண்டு பேசத் தொடங்கினர்.

“எனக்கொரு யோசனை பேசாம கருங்குளம் போயி பழனிய பாத்தா?” என சொன்ன செல்வியைப் பார்த்த மாரி

“வேண்டாம் அவுங்க ஊருல என்னய எல்லாருக்கும் தெரியும், அதனால பழனி வேலை பாக்குற பக்கத்து டவுனுக்கு போய் பேசலாம்” என்றாள்.

இருவரும் வேலைக்கான தாள்களை எடுத்து பைல்களாக அடுக்கிக் கொண்டு முடிவெடுத்தனர்.

வெள்ளிக்கிழமை என்பதால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மாரியும் செல்வியும் பக்கத்து பக்கத்தே அமர்ந்து கொண்டனர். அதிகாலை என்பதால் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தது.

பஸ்சில் இருந்து இறங்கி அதே மாரியம்மன் கோவிலுக்குள் சென்ற மாரிக்கு கண்ணீர் பொங்கியது. செல்வி அவளைப் பார்த்ததும் “என்னாச்சு மாரி, என்ன இந்த கோவில்ல வச்சு தான் அவுக பூ வச்சு சத்தியம் பண்ணாங்க” என்றவளின் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.

செல்விக்கு ஒரு யோசனை தோன்றியது, “மாரி நீ இங்கிட்டு இரு, நா அவுகளுக்கு போன் போட்டு இங்க வர சொல்லிடுதேன்” என்றவளின் யோசனையும் மாரிக்கு சரியெனத் தோன்றியது.

ஏனெனில் பழனியின் வங்கியிலும் மாரியை அனைவருக்கும் ஓரளவு தெரியுமாதலால் இருவருக்குமே தர்ம சங்கடமாகும்.

தொலைபேசியின் நீண்ட அழைப்பில், “பழனி சார்… உங்களுக்குத் தான் போன்” என நீட்டியவரின் கையிலிருந்த ரீசிவரை வாங்கியவனின் முகம் சுருங்கி விரிந்தது.

“இதோ சீக்கிரமா வாரேன்” என போனை வைத்துவிட்டு திரும்பிய பழனியைப் பார்த்த கணபதி

“என்ன பழனி யாரு போன்ல?”

“எங்க அத்த வீட்ல இருந்து தான் வரச் சொல்லுதாங்க, பாங்கு அரநாள் தானே! நீ என் கேபின பார்த்துக்க மக்கா, நான் கிளம்புறேன்,ப்ளீஸ் டே” எனக் கெஞ்சியவனைப் பார்த்து

“உங்க அத்த வாய்ஸ் மாதிரி தெரியலையே, நீ கெஞ்சுத பாத்தா ரூட் எங்கயோ போவுதே” என கிண்டலாக கேட்டவனைப் பாத்து விக்கித்தாலும் சமாளித்துக் கொண்டு முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு

“சரி என் வேலைய நானே முடிச்சுட்டு போறேன்” என்ற பழனியை கையமர்த்தி

“சரி டே கோவிச்சுகாத, போய்ட்டு வா” என வழியனுப்பினான் கணபதி.

பூவரசு மரத்தின் காற்றின் சிலுசிலுப்பு மாரிக்கு இப்போது வெப்பக்காற்றாக விழுந்தது. கல்லில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செல்வியோ, ஊரின் அழகை இரசித்துக் கொண்டிருந்தாள்.

வண்டி சத்தம் கேட்டு திரும்பிய செல்வி, எழுந்து நின்று பார்த்தாள். பழனி வண்டியை ஓரம் கட்டி விட்டு கோவிலுக்கு பக்கமிருக்கும் பூவரசம் மரத்தினடியில் உட்கார்ந்திருக்கும் வாடிய பூவின் இதழாக தோன்றும் மாரியின் முகத்தைப் பார்த்து அழைத்தான்.

பத்து நிமிடத்துக்கும் குறையாமல் அழுத அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “மாரி மாரி” என கூப்பிட்டு பார்த்தான்.

“சொல்லுங்க பழனி சார்” என்ற அவளின் ஒத்த வார்த்தையில் நொறுங்கிப் போனான்.

“ஏன் மாரி நீயும் என்ன இப்படி கஷ்டப்படுத்துற, என்ன நீயும் புரிஞ்சுக்கவே இல்ல பாத்தியா?” என்றவனை விரக்தியுடன் பார்த்தாள்.

“அதானே… நா எப்புடி உங்கள சொல்ல உரிமை இருக்கு, மன்னிச்சுடுங்க சார்” என்றாள்.

“என்னய யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா?” என்று கத்தியவனை ஒரு முறை பார்த்தவள், அமைதியானாள்.

“நா பண்ணினது தப்பு தான், உன்னய காதலிச்சு இன்னொருத்திய மணக்கறது தப்புத்தான். ஆனா பேச ஒரு சந்தர்ப்பம் கொடு”

இருவரும் பேசட்டும் என தீர்மானித்த செல்வி, “நா கடைக்கு போயிட்டு வாரேன்” என நழுவப் போனவளை

“இரு செல்வி இங்க உனக்கு யாரையும் தெரியாது”

“இல்ல மாரி நா பக்கத்துல உள்ள கோயில்ல இருக்கேன், நீங்க பேசிட்டு வாங்க” என பதிலுக்கு காத்திராமல் கிளம்பிப் போனாள்.

மாரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச எத்தனித்தவனை உதறி தள்ளியே நின்று கொண்டாள். அவனுக்கு குற்றம் நெஞ்சைக் கிழித்தது.

“மாரி உங்க ஐயா எங்க வீட்ல பேசிட்டு போனதும் எங்க அம்மா நேரா எங்க பெரியப்பா வீட்டுக்கு சாயந்தரம் கூட்டிட்டு போகச் சொன்னாங்க. உன்ன பத்தி சொன்னதும் யாருமே சாதகத்த பத்தி பேசாம நேர பந்தகால் நாட்டுற அளவுக்கு பேச்சு வளர்ந்து போச்சு. நானும் சந்தோசமா அம்மா கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். தங்கச்சிகளுக்கு போன் போட்டு சொன்னதும் அவளுகளுக்கும் ஏக சந்தோசம். ஆனா கடவுளுக்கே நாங்க சந்தோசமா இருந்தது பிடிக்கல போல. அதான் என் வாழ்க்கைல விதி விளையாட ஆரம்பிச்சிடுச்சு.

உனக்காக எங்க அம்மா சேலை எடுக்க கடைக்கு போகையில தான் எங்க மாமா வீட்ல இருந்து போன் வந்துச்சு. எல்லாம் போட்டபடி ஊருக்கு கிளம்பி போனா அங்க எல்லாம் முடிஞ்சு போச்சு. எங்க அத்தைக்கு பயங்க அதிர்ச்சி, ஏன்னா அவுக தான் எப்போதும் முடியாம கிடப்பாங்க, ஆனா மாமாவோட சாவு மாத்திடுச்சி.

காரியம் முடிஞ்சு கிளம்பி வந்த பிறகு எங்க அத்த பொண்ணு மல்லிகாவுக்கு நிச்சயம் பண்ண வீட்ல அவங்க சொத்து எல்லாம் எங்க மக பேர்ல எழுதுங்க, அப்போ தான் கல்யாணம்னு கண்டிசன் போடவும் அத்தைக்கு மனபாரத்துல திரும்பவும் உடம்புக்கு நோவு அதிகமாயிடுச்சு.

அத்த வீட்ல இருந்து எங்க பெரியப்பா வீட்டுக்கு சேதி போனதும் எல்லாரும் திரும்ப கிளம்பி வேலங்குளம் போனாங்க. நா ஆபிஸ் விசயமா ஊருக்கு போயிட்டு வந்த பிறகுதான் எனக்கு எல்லா விசயமும் தெரிஞ்சது. நா பிடிவாதமா உன்னத்தான் கட்டுவேன்னு சொன்னேன், ஆனா எங்க அம்மா எங்க அண்ண குடும்ப மானமே உன் கிட்டத்தான் இருக்குனு கால்ல விழ வந்துட்டாங்க மாரி” எனக் கூறி அழுதான்.

காலத்து மீறிய கனவில் மிதந்தவர்களின் காதல், காகித கப்பலாக தண்ணீரில் மிதந்து கவிழ்ந்து போனது. எல்லாவற்றையும் கேட்ட மாரிக்கு எதுவும் சொல்ல தெரியாமல் கிளம்பத் தயாரானாள்.

“ஆனா மாரி… இப்பவும் எப்பவுமே என் மனசுல உனக்கு எடமுண்டு” என்றவனின் முகத்தை விரக்தியோடு சிரித்துவிட்டுக் கடந்தாள்.

வீட்டிக்குள் நுழையும் போதே வேலனின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“நல்ல இடம்டா, பெரிய குடும்பம். சொத்து பத்தெல்லாம் நிறைய இருக்கு, ஆனா உழைச்சு சம்பாதிக்கணும்னு வாழறவங்க. நம்ம மாரிக்கு ஏத்த இடம்” என தன் மகன் ராசுவிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

கேட்டுக் கொண்டே வந்த மாரி அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.

மகளைப் பார்த்தவுடன் உள்ளே சென்ற கமலம், “உங்க அப்பா உனக்கு மாப்ள பாத்துருக்காரு, சொந்தமா ரைஸ்மில் வச்சிருக்காங்க. தியேட்டரு, கடை எல்லாம் இருக்கு. நஞ்ச புஞ்சன்னு எக்கச்சக்கமா சொத்து. ஆனா குடும்பம் ரொம்ப எளிமையா இருக்காங்க. உன்ன பாத்ததும் அவுக வீட்ல எல்லாருக்கும் உன்ன பிடிச்சுப் போச்சு” என்ற தாயின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பார்த்து மனதுக்குள் நெகிழ்ந்தாள்.

திருமணம் முடிந்த கையோடு கோலூரில் வாழ்க்கையைத் துவங்கிய மாரிக்கு, காலம் கடந்ததே தெரியாமல் நகர்ந்து போனது. அன்பான கணவன் மூன்று குழ்ந்தைகள் என வாழ்க்கைக்குள் சுழல ஆரம்பித்தாள். 

மகனின் செயலைக் கண்டு பெருமிதம் கொண்டு தலையைக் கோதிக் கொண்டே திரும்பியவள், பழனியின் முகம் பார்த்ததும் அத்துணை மெய்ப்பாடும் ஒரு சேர முகத்தில் கண்டு நின்றாள்.

“மாரி எப்புடி இருக்க?” என்றவனைப் இத்தனை வருடங்களுக்கு பின் பார்த்தவளுக்கு, பேச நா எழவில்லை.

“நல்லாயிருக்கேன், நீங்க?” எனக் கேட்டுக் கொண்டிருந்தவள்

அவன் பதிலை அளிக்கும் முன், “போலாமா?” என அவனை ஒருத்தி இழுத்து போவதைப் பார்த்து கோபம் வந்தாலும், அடக்கி திரும்பிக் கொண்டாள்.

வீட்டுக்குள் நுழைந்தவள் அரைமணி நேரமாக கொல்லைப்புறத்தில் அமர்ந்து கொண்டு பின் உள்ளே வந்து வேலைகளை செய்யத் துவங்கினாலும், மனம் ஒருநிலைப்படாமல் அவனையே சுற்றி வந்தது.

ஏன் வந்தான் ஏன் போனான் என்பதற்கு விடையேதுமின்றி மனம் தவித்தது.

விளக்கினை ஏற்றிவிட்டு திரும்பியவள், வாசலில் சரவணின் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி ஆச்சரியம். அவன்தான் மீண்டும் அவளோடு வந்தான், கூட ஒரு ஆண் பிள்ளையும், அவன் போலவே இருந்தான்.

“மாரி குடிக்க ஏதாச்சும் கொண்டா மா” என இரைந்தவனைப் பார்த்து

“இதோ வாரேன்” என பலகாரமும் காப்பியும் கொணர்ந்து வைத்தாள்.

“இவங்க நம்ம வீட்ல ஒரு நாளு இருந்துட்டு போவாங்க, அவுகளுக்கு மேல ரூம் ஒதுக்கி குடுத்துடு சரியா” என உத்தரவிட்டு மறுபேச்சுக்கு காத்திராமல் அவர்களிடம் பேசத் தொடங்கினான்.

சரவணணோடு விவாதித்தாலும் பழனியின் கண்கள் மாரியைச் சுற்றியே இருந்தது.

இரவில் உணவினை முடித்துக் கொண்டு மாடிப்படி ஏறி வந்து படுக்க வந்தவளிடம், “இவங்க நம்ம தோட்டத்துல இந்த சோலார் மிசின் வைக்க பேங்கல லோன் போட்டுக் கொடுக்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்தவரு. குடும்பத்தோட சுற்றுலா போறோம்னு சொன்னாரு, நம்ம வீட்ல இரண்டு நாள் தங்கிட்டு போகச் சொன்னேன்” எனக் கூறிவிட்டு தூங்க போனான் சரவணன்.

இரவெல்லாம் உறக்கமின்றி தவித்தாள். எத்தனை வருடங்கள் ஆயிற்று, ஆனாலும் அவளுக்குள் இன்னும் இலையில் ஒட்டிய நீர்த்துளி போல் அவன் மேல் கொண்ட காதலின் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

மாடியில் இன்னொரு புறமும் அதே போல் மற்றொரு இதயம் துடித்துக் கொண்டிருந்தது.

‘அதே வட்டமுகம் நீண்ட நெடுங் கருங்கூந்தல் ஆனால் முகம் மட்டும் களைப்பாயிருந்தது அவளுக்கு’ என மாரியைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான் பழனி.

விடியற்காலையில் எழுந்து குளித்து வாசல் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருந்தவளை ஏதேச்சையாக சன்னலோரமாக வந்து நின்ற பழனி எட்டிப் பார்த்தான். பிறகு தன் காலைக்கடனை முடித்துக் கொண்டு மனைவியோடு இறங்கியவன், மாரியைப் பார்த்தான்.

குளித்து முடித்து வந்த சரவணன், “அதுக்குள்ளாற கிளம்பிட்டீங்களா? ஏய் மாரி, சின்ன புள்ளைக்கு பால் எதாச்சும் குடுத்தியா?” என அதட்ட

“கொடுத்தேங்க” என்றாள்.

“பைய பேரு என்னப்பா” என குழந்தையை தூக்கி கொஞ்சிய சரவணன் கேட்க

“கிருஷ்ணா” எனக் கூறியவுடன்

“அட எங்க பைய பேரும் அதே தான்” என்றதும் மாரியை ஏறிட்டு பார்த்தவனுக்கு வியப்பு மேலிட்டது.

“யாரு பேரு வெச்சது” என சரவணன் கேட்க

“எங்கப்பா” என்று பழனியைக் கை காட்டியது குழந்தை.

“உங்க வீட்ல?” என பழனியின் மனைவி சுதா கேட்க

“எங்க வீட்ல எல்லாமே என் வீட்டு மகராணி மாரி தான்” என அவளைப் பார்த்து பாசத்தோடு சிரித்துக் கொண்டே சொன்னதைப் பார்த்த பழனிக்கு, உள்ளூற ஏதோ நெருடியது.

வந்திறங்கிய நாட்களில் இருந்து பழனியும் மாரியும் பேசிக் கொள்ளவே இல்லை.

கிளம்புவதற்கு முந்திய நாள் இரவு சரவணன் தனக்கு சொந்தமான நிலங்களை காண்பித்து விட்டு மாலை வீடு திரும்பியவன் மாரியிடம், “ராத்திரிக்கு சோறாக்க வேண்டாம் அவங்கள நம்ம ஹோட்டலுக்கு கூட்டிட்டு போவோம். நீயும் தயாரா இரு, பசங்க வந்ததும் சொல்லிடு” என்றான்.

இரவு வெளியில் செல்வதற்காக நீல நிறத்தில் புடவைக் கட்டிக் கொண்டு குழந்தைகளையும் தயார்படுத்திக் கொண்டிருந்த மாரி, மாடியில் இருந்து இறங்கிய பழனியின் குடும்பத்தாரைப் பார்த்தாள்.

அவளிடம் நெருங்கிய பழனியின் மனைவி சுதா, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, அதுவும் இந்த புடவையில தேவதை மாதிரி இருக்கீங்க. மூணு குழந்தைகளுக்கு அம்மா மாதிரியே தெரியல” என சொல்லி பழனியைப் பார்த்தாள்

அவன் மாரியைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான்

“என்ன மாமா இங்க வந்ததில் இருந்து பாக்கேன் ஒரு மாதிரியே இருக்கீங்க?” எனக் கேட்டாள்

“ஒண்ணுமில்லை” என்றான்

“சரி போலாமா” எனக் கேட்டுக் கொண்டே வந்த சரவணனும் ஜம்மென்று இருந்தான்

சரவணன் முதுகலையில் தேர்ச்சி பெற்றவன். பார்ப்பதற்கு உயரமாகவும் களையாகவும் இருப்பான், அந்த காலத்து நடிகர் பாலாஜி போன்ற உருவம். 

இது தான் நம்ம ஹோட்டல் என அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டே உள்ளே சென்று பதார்த்தங்களை ஆர்டர் செய்து சாப்பிட்டு இரவு மாடியில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். பொதுவான விசயங்களைப் பேசிவிட்டு உறங்கச் சென்று, அதிகாலையிலேயே ஊருக்குக் கிளம்பத் தயாராகினர்.

எல்லோரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பும் போது, “நில்லுங்க… எம் மனைவி மாரிகிட்ட ஒரு வார்த்த கூட பேசாம போறீங்களே” என்ற சரவணின் கேள்வியால் திடுக்கென்று நின்றார்கள்.

“வாரேன் மாரி” என்ற சுதா கிளம்பினாள்

“சார் ஒண்ணுமே சொல்லாம போறீக”

“வரேங்க” என மாரியைப் பார்க்க வலுவின்றி சொல்லிக் கிளம்பினான். மாரிக்குள் ஏதோ ஊடுருவிச் சென்றது போல் இருந்தது. 

“என்ன பழனி சார் நீங்களாவது சொல்வீங்கன்னு பார்த்தேன், எம் மனைவியும் ரொம்ப வீராப்பு தான் காட்டி நிக்கா” என்ற அவனின் கேள்வி புரியாமல் முழித்தாள் சுதா.

“நீங்க என்ன சொல்றீங்க சரவணன் சார்”

“அப்போ உங்களுக்கும் விசயத்தை மறச்சிட்டாரா சாரு”

சுதா பழனியைப் பார்த்துக் கொண்டே, “புதிர் போடாதீங்க மாமா நீங்களாவது சொல்லுங்களேன்” என புலம்பினாள்.

மாரியால் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை தலை சுற்றி கீழே விழுந்தாள்.

பதறிப்போன சரவணன் தாங்கலாக பிடித்துத் தூக்கி “ஏ மாரி என்னாச்சு மா?” என கட்டிலில் படுக்க வைத்தான். ஒரு நீண்ட நெடு மௌனத்துக்கிடையே பேச்சினைத் துவங்கினான் பழனி.

“மாரி அப்பாவும் எங்க அப்பாவும் நண்பர்கள். மாரி அப்பாவோட எங்க அப்பா வேலை பார்த்துட்டு இருந்தாரு. அப்புறமா மாரி குடும்பம் சொந்த ஊருக்கு அவங்க அப்பா வேல மாத்திட்டு போய்ட்டாங்க. அதுக்கப்புறம் எங்க அப்பா இறந்ததுக்கு மாரி அப்பா மட்டும் வந்துட்டு போனார். பல வருசம் கழிச்சு ஒரு நாள் திரும்பவும் மாரி குடும்பம் எங்க ஊரு கோவிலுக்கு வந்தபோது எங்க வீட்டுக்கு வந்தாங்க, வந்ததுமே என் மனசு மாரிக்கிட்ட போய்டுச்சு.

அவளும் என் தங்கச்சிங்க கல்யாணத்துல வந்து போன நேரம் தான் என்னைய பிடிச்சதுன்னு தெரிஞ்சது. குடும்பத்துல எல்லோருக்குமே எங்க காதல் தெரிஞ்சாலும் அவங்க பெரிசா ஒண்ணும் தெரிஞ்சுக்கல. மாரி அப்பா சம்மந்தம் பேசிட்டு போனப்பதான் உங்க அப்பா அதாவது, எங்க மாமா மரணித்த செய்தி வீட்டுக்கு தெரிஞ்சது. அதுக்கப்புறம் நா வேல விசயமா வெளியூருக்கு போன நேரத்துல தான் என் திருமணத்தோட மாற்றமே எனக்கு தெரிய வந்து நா வீட்ல சண்ட போட்டேன்.

ஆனா எங்க அம்மாவோட வற்புறுத்தல், அப்புறம் அவங்களோட அண்ணன் குடும்பத்தோட நிலைமை எல்லாத்தையும் சொல்லி அழுதாங்க. நா இருதலைக்கொள்ளி எறும்பா இருந்தேன். மாரியோட காதலை நினைச்சு நினைச்சு நா அழாத நாளே இல்லை. என் மனசுக்குள்ள அவள்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டே இருந்தேன். மாரிகிட்டயும் என் நிலைமையை எடுத்துச் சொன்னேன், ஆனா அவ புரிஞ்சுக்கல.

கால ஓட்டத்துல எல்லாம் மாறிடுச்சு. உங்கள பார்த்தப்போ கூட எனக்கு ஐடியா இல்ல. ஆனா உங்க பர்சுல மாரியோட நீங்க நிக்கறத பார்த்ததும் தான் தெரிஞ்சது, நீங்க கூப்பிட்டதும் மறுக்காம வரக்காரணம் எங்க வீட்டு பொண்ணு சந்தோஷமா இருக்காளான்னு பார்க்கணும்னு தான்.

சொல்லி முடித்து நிமிர்ந்து மாரியைப் பார்த்தவனை கதறி அழுது கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவனையே பார்த்துக் கொண்டு விழியோரம் தேங்கி நிற்கும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் “சாரிங்க இவ்வளவு விசயமும் தெரியாம நா உங்கள” என அழுதாள் சுதா.

“உங்களுக்கு எப்படி தெரியும்” என்பது போல் சரவணனைப் பார்த்தாள் மாரி.

“போன வாரம் வேலை விசயமா மாரி வீட்டுக்கு போயிருந்தேன், அப்போ தான் பத்திரிக்கை ஒண்ணு கையில கிடைச்சது. பாத்தா ஒரே மாதிரி இரண்டு பத்திரிக்க, பேரு மட்டும் வேற வேறயா இருந்துச்சு. மாரி அப்பாகிட்ட பேசினப்போ விசயம் எல்லாத்தையும் அவரு அரசல் புரசலா சொன்னாரு. ஆனா உங்க வீட்டுக்கு சோலார் பேனர் விசயமா பேச வந்தப்போ நீங்க உங்க தங்கச்சிங்க கல்யாண போட்டோ காமிச்சதும் எனக்கு எல்லாமே தெளிவாயிடுச்சு. ஆனா கண்ணியமான ஆழமான காதலா தான் உங்களது இருந்திருந்தது தெரிஞ்சப்போ பெருமிதமாகவும் சங்கடமாவும் இருந்தது” என சொல்லி முடித்தான் சரவணன்.

மறுநாள் விடியலில் எந்த களங்கமுமின்றி விடிந்தது. ஒரு உண்மையான உறவு அடுத்த தலைமுறைக்கும் உறவாக வளர இந்த நிகழ்வு ஒரு நூலாக அமைந்த மகிழ்ச்சியில், பழனி குடும்பத்தோடு விடைபெற்று சென்றான். தீர்க்கமான பார்வையால் கணவன் சரவணனை ஏறிட்டுப் பார்த்தாள் மாரி.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

காக்க! காக்க! ❤ (பகுதி 4) – ✍ விபா விஷா, அமெரிக்கா

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 16) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்