“நல்லவை வென்று தீயவை அழிந்து உலகிற்கு ஒளி தருவதே தீபாவளி” என்பது நம்பிக்கை
இது நம்பிக்கை மட்டுமல்ல, நமது நல்ல சிந்தனைகளால் தீய எண்ணங்களை வெல்ல முடிந்தால், நம் வாழ்வில் ஒளி பிறக்கும் என்ற படிப்பினையையும் இந்த பண்டிகை நமக்கு கற்றுத் தருகிறது
தீபாவளி பிறந்த கதை
இரண்யாட்சன் எனும் அசுரன், பூமாதேவியை கடலுக்குள் மூழ்கடிக்க, மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தேவியை காத்த சங்கமத்தில் உதித்தவன் தான் நரகாசுரன்
அசுரவதத்தின் போதான சங்கமத்தில் உதித்தவனிடம் அசுர குணம் மேலோங்கி, நரகன் அசுரன் ஆனான் என்பதாலேயே, அவனுக்கு நரகாசுரன் என பெயர் வந்தது என்கின்றன நம் புராணக் கதைகள்
அந்த நரகாசுரன் மக்களை துன்புறுத்துவதை காணச் சகியாமல், தாயால் மட்டுமே அழிவு என்ற வரத்தை பெற்றவனை, சத்யபாமாவின் உதவியுடன், பகவான் அவனை வதம் செய்த நாளே தீபாவளியாய் கொண்டாடப்படுகிறது
மகனே ஆனாலும், அவனால் மக்களுக்கு துன்பம் நேர்ந்தால், அவன் அழிக்கப்பட வேண்டியவன் தான் என்ற படிப்பினையை உலகுக்கு எடுத்துரைக்கவே இந்த வதம் நிகழ்த்தப்பட்டதாகவும் நம் புராணங்கள் கூறுகின்றன
இந்த தீபாவளி நன்னாளில் நாம் கடைபிடிக்கும் சடங்குகளை, அர்த்தம் புரியாமல் செய்வதில் என்ன பயன்?. அதற்கான காரணத்தோடு கூறும்போது, நமது அடுத்த தலைமுறை முழு ஈடுபாட்டுடன் செய்வதோடு, அந்த விளக்கங்கள் அதற்கு அடுத்து வரும் தலைமுறைக்கும் கொண்டு செல்ல ஏதுவாகும்
1. தூய்மைப்படுத்துதல்
“ஆடியில் விதை விதைத்து, ஐப்பசியில் களையெடுத்து, கார்த்திகையில் கதிராக்கினால் தான் பயிராக்க முடியும்” – இது விவசாயி வகுத்த கணக்கு
பெரும்பாலும் விவசாயத்தையே தொழிலாய் கொண்ட அந்நாளில், ஆடியில் விதைப்பு முடிந்ததும், காலியான விதை நெல் கலன்களையும், வீட்டின் பரண்களையும் சுத்தம் செய்ய ஏதுவான காலம் புரட்டாசி மாதம் தான். ஐப்பசியில் தான் களை எடுக்கும் வேலை வந்துவிடுமே
அதோடு, ஐப்பசி அடை மழை தொடங்கும் முன், வீட்டை சுற்றி உள்ள குப்பைகளை சுத்தம் செய்யாமல் விட்டால், அதில் நீர் தேங்கி கொசுக்களை வரவேற்று, நோய் பரப்பும் கூடாரமாகி விடும்
எனவே, பண்டிகையை சாக்கிட்டு, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து, சாணி போட்டு மெழுகும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
என்ன ஒரு முன்னோக்கிய சிந்தனை பார்த்தீர்களா. அதுமட்டுமின்றி, சாணி ஒரு கிருமி நாசினி என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கும் முன்பே, அதை உபயோகித்த புத்திசாலிகள் நம் முன்னோர்
2. கங்கா ஸ்நானம்
தீபாவளி நாளின் முதல் சடங்கு, கங்கா ஸ்நானம். உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து, சிறிதளவு சந்தனம் மஞ்சள் மற்றும் குங்குமத்தை நீரில் சேர்த்து, நீரை வணங்கி நீராடுவது வழக்கம்.
உச்சியில் நல்லெண்ணெய் வைப்பதின் காரணம், உடல் சூடு தணிக்கும் இயற்கை வைத்தியம் தான். நீரில் சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமம் சேர்த்து வணங்கும் போது, அதை கங்கை நீராய் புனிதப்படுத்துகிறோம் என்பது நம்பிக்கை.
அதோடு, மழைக் காலமான புரட்டாசியில், நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்ற படியால், கிருமி நாசினியான மஞ்சள் கலந்த நீரில் குளிப்பது, பல தொற்று நோய்களில் இருந்து நம்மை காக்கும் என்பதே அதன் பின்னான அறிவியல் காரணியாகும்.
நம் முன்னோர் காரண காரியத்தோடே எதையும் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்
3. புத்தாடை
குளியலுக்கு பின், புத்தாடையின் நுனியில் மஞ்சள் தடவி ஆசீர்வதித்து வீட்டின் மூத்தோர் இளையோருக்கு வழங்குவர். மங்கலத்திற்காய் மஞ்சள் தடவுகிறோம் என கூறப்பட்டாலும், இதற்கும் ஓர் அறிவியல் விளக்கம் உள்ளது
புது ஆடைகளை நாம் வெளுத்து கட்டுவதில்லை, புத்தம் புதியதாய் அப்படியே தான் உபயோகிப்பது வழக்கம். அது கடையில் விற்பனைக்கு இருந்த போது பலரின் கை பட்டே நம் கைக்கு வந்திருக்கும்.
அதில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் தான், முன்னேற்பாடாய் மஞ்சள் என்ற கிருமி நாசினி வைத்து அணிகிறோம்
அறிவியல் பெரிதாய் வளராத அந்த காலத்திலேயே, இதை எப்படி நம் முன்னோர்கள் உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்கள் என்பது ஆச்சர்யமே. இன்று கொரோனா வந்த பின், பலரும் மஞ்சளின் அருமை உணர்ந்து இருக்கிறார்கள்.
4. வழிபாடும் விருந்தோம்பலும்
பூஜை அறையிலும் மற்றும் வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி வணங்கி, “எங்கள் அக இருளையும் அகற்று இறைவா” என வழிபாடு செய்தனர்.
தீபச் சுடர், நம்மைச் சுற்றி உள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்கவல்லது என்ற நம்பிக்கை நம் பாரம்பரியத்தில் உண்டு. அதுமட்டுமின்றி, நல்லெண்ணெய் விளக்கேற்றி, அதை சசுவாசிப்பது நமக்கு புத்துணர்ச்சி தரும் என்பதும் அறிவியல் உண்மை
தீபாவளி இனிப்புகளை நெய்வேதியமாய் படைத்து, இதே போல் நம் வாழ்வும் இனிமையாய் இருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்வர். அதன் பின், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரித்து, இனிப்புகளை பரிமாறி, தாமும் உண்டு, அளவளாவி மகிழ்வர்
5. வெடிச்சத்தம்
பட்டாசு சத்தத்தில் கெட்ட சக்திகள் எல்லாம் விலகி ஓடும் என்ற நம்பிக்கை நம் முன்னோருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கான அறிவியல் விளக்கம் இல்லாத போதும், பண்டிகை நாளில் எதிர்மறை சொற்கள் எதுவும் காதில் விழாமல், மகிழ்வாய் விழாவை கொண்டாட வெடிச் சத்தத்தை பயன்படுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது
அதோடு, வெடியும் வான வேடிக்கையின் வண்ணங்களும், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரின் உடலையும் மனதையும் உற்சாகமூட்டும் என்பதும் காரணமாக கொள்ளலாம்
நவீன நரகாசுரன்கள்
அன்று ஒரு நரகாசுரனை அழித்து, மக்களை அவனிடமிருந்து பகவான் காப்பாற்றினார். அன்றேனும் அசுரன் என ஒருவனை, அவன் குணத்தை கொண்டு அடையாளம் காண முடிந்தது. இன்று உடனிருந்தே கொல்லும் விஷமிகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்வதே பெரும் சவாலாய் இருக்கிறது
இவர்கள் அசுரர்கள் என அறியாமலே, நம் நாளின் பெரும்பாலான நேரத்தை நாம் எல்லாரும் இவர்களுடன் செலவிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.
அவர்களை அடையாளம் கண்டு, நாம் நம் வாழ்வை செப்பனிட்டுக் கொண்டால், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெற இயலும். அப்படி நம் வாழ்வில் நாம் கடக்கும் சில அசுரர்கள் பற்றி பார்ப்போம்:-
1.சமூக வலைத்தளங்கள்
இன்று உடனிருந்தே கொல்லும் முக்கிய அசுரன் சமூக வலைத்தளங்கள் தான். முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற நவீன ஊடகங்கள் மூலம் நிறைய நன்மைகள் இருந்தாலும், இதை சிலர் தவறான நோக்கத்துடன் பயன்படுத்துவதை பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன
அறிந்தவர் அறியாதவர் என்ற பாகுபாடின்றி எல்லோர் கண்ணிலும் படும் வண்ணம், நம் புகைப்படங்களும் அன்றாட நிகழ்வுகளும் கடைவிரிக்கப்படுகின்றன. அதனால் எத்தனையோ பெண்கள் மட்டுமின்றி, ஆண்களின் வாழ்வும் சீரழிந்து போன கதைகள் நம் காதுக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றன
அதற்காக, சமூக வலைத்தளத்தை புறக்கணித்து வீட்டுக்குள் முடங்கி இருப்பது, எலிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதை தான். இன்றைய நிலையில் அப்படி இருப்பது சாத்தியம் இல்லை, அது நம் வளர்ச்சியை முடக்கி விடும்.
நாம் செய்ய வேண்டியது என்னவெனில், அதன் நன்மை தீமைகளை உணர்ந்து, அதற்கு அடிமை ஆகாமல், அளவோடு பயன்படுத்தினாலே போதும்.
அளவுக்கு மிஞ்சினால் தான் எதுவும் நஞ்சாகும். இந்த அசுரனிடமிருந்து நம்மை காக்க, நம் கையே நமக்குதவி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்
2. கூடா நட்பு
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு” என்கிறார் திருவள்ளுவர்
அதாவது, நட்பு என்பது, நம்மோடு சிரித்து மகிழ மட்டுமன்றி, நாம் தவறான வழியில் செல்லும் போது, அதை சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துவது தான் நல்ல நட்புக்கு அழகு என்பதே இதன் பொருள்
அப்படி அல்லாமல், செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்த மஹாபாரத கர்ணன், கௌரவர்களிடம் கொண்டதை போன்ற கூடா நட்பும், உடனிருந்து கொல்லும் இன்னொரு அசுரன் தான்
எந்நேரமும் நம் பெற்றோரோ, நலம் விரும்பிகளோ உடனிருந்து நம்மை வழி நடத்துவது சாத்தியமில்லை. அதனால், ஒருவரை பற்றி நன்கு அறியும் முன், நம் வாழ்க்கை சரித்திரத்தை அவர்களிடம் ஒப்புவிக்கும் செயலை தவிர்ப்பது நலம் பயக்கும். இல்லாவிடின், அது தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்
கூடா நட்பால், இன்றைய இளைய தலைமுறையினர் பலர், தவறே செய்யாமல் வாழ்வை இழந்து நிற்கும் அவலத்தை காண்கிறோம். எனவே, அறிந்து ஆராய்ந்து, நட்பு கொள்ளல் உத்தமம்
3. சாதி மத வேற்றுமை
இன்று நம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரிய அசுரன் இவன் தான் என எண்ணத் தோன்றுகிறது. அவரவர்க்கு, அவரவர் சமயமும், மதமும் பெரிதே.
தன் இனம் மீதான நேசமும், தன் கோட்பாடுகள் மீதான நம்பிக்கையும், தனி மனித உரிமை. அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், அடுத்தவன் கொண்ட நம்பிக்கை மீது சேற்றை பூசுவது அசுர செயலே அன்றி வேறென்ன?
உன் வீட்டில் மற்றவர் கல்லெறிய கூடாதென நீ நினைத்தால், அடுத்தவன் வீட்டின் மேல் நீ கல்லெறியாமல் இருத்தல் வேண்டும்.
இதில் மிகப்பெரிய கொடுமை என்னெவென்றால், இனப்பற்று கொண்ட இளைஞர்களின் இளகிய மனதை தூண்டி விட்டு, குளிர் காயும் தலைவர்கள் தான்
பிரச்சனை என வந்தால், எந்த தலைவனும் தீக்குளிப்பதில்லை, அதற்கு தான் மனவலிமையற்ற தொண்டர்கள் இருக்கிறார்களே. இது கொடுமை அல்லவா? அவன் குடும்பம் செய்த பாவமென்ன?
உங்கள் மதத்தை நம்புங்கள், ஆனால் மதவாதிகளை நம்பி அவர்கள் பின் சென்று உங்கள் வாழ்வை தொலைத்து விடாதீர்கள்
4. உங்களுக்குள் இருக்கும் அசுரனை அழித்திடுங்கள்
எனக்குள் அசுரனா? இல்லை என்கிறீர்களா? நிச்சயம் நம் எல்லோருக்குள்ளும் ஒரு அசுரன் இருக்கிறான், சதவீதம் வேண்டுமானால் முன் பின் இருக்கலாம்.
பொறாமை, கோபம், தீய எண்ணம், இரட்டை வேட மனப்பான்மை, பிறர் துன்பத்தில் மகிழ்தல், இதில் ஏதேனும் ஒன்றாவது ஏதேனும் ஒரு நேரத்திலேனும் உங்களுக்குள் நீங்கள் உணரவில்லை என, உங்களால் உறுதியாய் கூற இயலுமா? அதற்கு வாய்ப்பில்லை தானே
இந்த எண்ணங்கள் தான் அசுர குணத்தின் வெளிப்பாடுகள். இதனால் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு வராவிடினும், இந்த அசுரனை நாம் நமக்குள் இருந்து விரட்ட முடிந்தால், நம் வாழ்வில் இன்னும் பல உயரங்களை தொடலாம் என்பதில் ஐயமில்லை
இந்த நன்னாளில், நம்மை ஆட்படுத்திக் கொண்டிருக்கும் அல்லது நமக்குள் இருக்கும் அசுரர்களை களையெடுத்து, நிர்மலமான மனதுடன், மகிழ்வான பண்டிகையை கொண்டாடுவோம்
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்
சஹானா இணைய இதழின் மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
மற்ற நாடுகளின் (ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல…) Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தாளத்தில் டைப் செய்தால், சஹானா இதழின் புத்தகங்களும், சஹானா கோவிந்தின் நாவல்களும் கிடைக்கும். நன்றி
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
புராணக் கதைகளுடன், அறிவியல் விளக்கங்களும், இன்றைய சூழல் குறித்த விழிப்புணர்வும் என அனைத்தும் அருமை.
மிக்க நன்றிங்க ஆதி
தீபாவளி குறித்த விளக்கக் கட்டுரை தேவையான செய்திகளுடன் அருமையாக இந்தக் காலத்துக்குப் பொருந்தும்படி எழுதி உள்ளீர்கள். பாராட்டுகள். தாமதமான தீபாவளி வாழ்த்துகள்.
Thanks a lot for the compliments and wishes