in

பிண்டம் (சிறுகதை) – வெங்கடேஷ் கணபதி

எழுத்தாளர் வெங்கடேஷ் கணபதி மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பாம்பே.

கமலா மாமி மறைந்து அன்று அவருக்குப் பத்து. மாமியின் மருமகள் லல்லி என்கிற லலிதாவும், அவளுடைய அம்மாவும் ஒரு மூலையில் குசுகுசுவென்று பேசிக்கொண்டு இருந்தனர்.

மாட்டுங்கா ஃப்ளவர் மார்க்கெட்டைத் தாண்டி நேராக நடந்தால் மாட்டுங்கா ரயில் நிலையம் வந்துவிடும். ரயில் நிலையத்திற்குச் செல்ல அங்கே ஒரு ஸ்கை வாக் உண்டு. அந்தப் பாலத்தின் மீது ஏறி நடந்தால், மேற்குப் பக்கமாக மாட்டுங்காவுக்குச் செல்லலாம்.

அந்தப் பாலத்திற்கு “Z Bridge” என்று பெயர்.

பூ மார்க்கெட்டில் இருந்து வலது பக்கமாக நடந்து, இடமாகத் திரும்பினால் சங்கரமடம். அதற்கு அருகிலேயே கன்சென்ஸ் உணவு நிலையம். அதே சாலையில் பத்தாவது கட்டடமாக இருந்த “சூர்யா மஹால்” என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் மாமி வசித்து வந்தார்.

மாமா சுந்தரம் போய்ச் சேர்ந்தும் நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.

மாமியின் மூத்த மகன் பாபு என்கிற கல்யாணராமன் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். மாமிக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மகனிடம்தான் மாமா மறைவுக்குப் பின்னர் மாமி தஞ்சம் புகுந்தார்.

மாமியும் மாமாவும் இருந்தது சாயன் என்கிற பகுதியில் உள்ள ஈஸ்வர புவன் என்ற கட்டடத்தில்தான்.

மாமி அடிக்கடி, “எங்காத்துக்காரர் என்னை ராணி மாதிரி வைத்திருந்தார். அவர் இருக்கும் போதே அவருடைய அருமை தெரியாமல் போய்விட்டதே…” என்று கண்ணீர் வடிப்பார்.

மாமியின் மகன் தியாகுவோ, உடம்பைக் கவனித்துக்கொள்ளாமல், உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்து, பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்குத் தன்னை கொண்டு வந்துவிட்டான்.

கமலா மாமிக்கு தனது இரண்டாவது பையன் தியாகு மீது கொள்ளைப் பிரியம். அளவுக்கு அதிகமாக அவனுக்குச் செல்லம் கொடுத்து, அவனை இப்படிக் குட்டிச்சுவராக்கியதே மாமாவும் மாமியும் தான்.

மாமியின் சொந்த ஊரான சாத்தூரைச் சேர்ந்த ரகுராமன் என்பவரின் மகள்தான் லலிதாலக்ஷ்மி.

ரகுராமனும், அவருடைய தர்மபத்தினியான சொர்ணலட்சுமியும் தங்கள் பெண்ணுக்குச் செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கியது கொடூரம். லலிதாலக்ஷ்மிக்குக் காபி கூடப் போடத் தெரியாது.

“என் பெண் பூ போன்றவள். அவள் மனம் கண்ணாடி போன்றது…” என்று கன்னிகாதானம் பண்ணிக்கொடுக்கும் போது, ரகுராமன் சபையில் கண்ணீர் விட்டார். அந்தப் பாசத்தில், “பாசமலர்” சிவாஜியையே தோற்கடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!

ரகுராமனைப் பார்க்கக் கொஞ்சம் நடிகர் ஸ்ரீகாந்த் மாதிரி இருப்பார். ஸ்ரீகாந்த் என்றால், “வெண்ணிற ஆடை” படத்தில் அறிமுகமான அதே ஸ்ரீகாந்த்தான்.

திருமணத்திற்குப் பின்னர் நொடிக்கொரு தடவை பிறந்த வீட்டிற்குப் போவது, “தலை சுற்றுகிறது” என்று நாடகம் ஆடுவது என்பதெல்லாம் லலிதாலக்ஷ்மியின் வாடிக்கையாகி விட்டது.

அவளுக்குத் தன் சிவப்புத் தோலின் மேல் அத்தனை கர்வம். ஆனால், அவளைவிட அவளுடைய அப்பாவுக்குத்தான் அதற்கும் மேலாகத் தலைக்கனம்!

ரகுராமன் மறைந்த பிறகு, சொர்ணா தனது மகளுடன் அவளுடைய வீட்டிற்குள் புகுந்து விட்டாள்.

“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அதுபோலத்தான், மாமியார் புகுந்த வீடும் உருப்படாது!

மகளின் வீட்டிற்குள் “உதவி செய்கிறேன்” என்ற பெயரில் புகுந்து, அந்த வீட்டின் நிர்வாகத்தையே தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் அம்மாக்களின் வீடும் உருப்படாது!

லலிதா தனிக்குடித்தனம் போன பிறகு, ஒரு நாள் கூட தனது மாமியாருக்கும் மாமனாருக்கும் சோறு போட்டதாகச் சரித்திரமே இல்லை.

“என் பெண் பூ போன்றவள். அவளால் வேலையே பண்ண முடியாது” என்று சொர்ணா செல்லமாக அலுத்துக்கொள்வாள்.

லலிதாவும் மூன்று பிள்ளைகளைச் சாமர்த்தியமாகப் பெற்றுக்கொண்டாள். முதலில் ஒரு மகள். அதற்குப் பிறகு இரட்டைக் குழந்தைகள்.

சுந்தரம் மாமாவின் பத்தாவது நாள் காரியம் நடந்துகொண்டிருந்தபோது, மூத்த மருமகளால் சென்னையிலிருந்து வர முடியவில்லை. அடுப்பில் சாதம் பொங்கி வழிந்துகொண்டிருந்தது.

உம்மாச்சு வாத்தியார் அதைப் பார்த்துவிட்டு, “என்ன, சுந்தரம் மாமாவிற்கு நல்ல பசி போலிருக்கே!” என்றார்.

அதற்கு சொர்ணா மாமி, “மாமா, சுந்தரம் மாமாவிற்கு அவருடைய இரண்டாவது நாட்டுப்பெண் கையால் சாப்பிட வேண்டும் என்று ஆசை. அதுதான் உண்மை!” என்றாள்.

மாமாவின் மறைவுக்குப் பின்னர், கமலா மாமி தியாகுவுடன் வந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. “இதுதான் சாக்கு” என்று நினைத்த லலிதா, மாமியின் பென்ஷன் பணத்தைத் தன் கணக்கில் சேர்த்துக்கொண்டு, வேறு ஒரு வாடகை வீடு பார்த்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவளுடைய அம்மா சொர்ணாவும் கூடவே ஒட்டிக்கொண்டாள்.

தியாகுவும் கமலா மாமியும் அந்த வீட்டிலேயே வசித்து வந்தார்கள்.

மாமிக்கு இருதய நோயும் வேறு இருந்தது. ஆரம்பத்தில் லலிதா ஒரு சமையல்காரப் பெண்ணை ஏற்பாடு செய்து, மாமிக்கு மதியச் சாப்பாடு மட்டும் அனுப்பி வைத்தாள். ஆனால், கொஞ்ச காலத்திலேயே, “நான் என்ன இந்தக் கிழப்பிண்டத்துக்கு சமையல்காரியா?” என்று சொல்லி அந்த ஏற்பாட்டையும் நிறுத்திக்கொண்டாள்.

வேறு வழியில்லாமல், தியாகு வெளியிலிருந்து மாமிக்கு சாப்பாடு வர ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.

கமலா மாமி பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. மாமியாருக்கு ஒரு வேளை சாதமும் ரசமும் கூடப் போடத் தெரியாத, போடவும் முடியாத அந்தப் பெண்மணி, மாமியின் சாமான்கள், நகைகள் என்று ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டும், சிலவற்றைத் திருடிக்கொண்டும் போய்க்கொண்டிருந்தாள்.

கமலா மாமியால் அதிகமாக நடமாட முடியவில்லை. அடிக்கடி படுக்கையிலேயே படுத்துக்கொள்வார். மாமிக்கு வெளிச்சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

தியாகு, மாமியிடம் ஒவ்வொரு பேப்பராகக் கையெழுத்து வாங்கி, மாமியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் தன் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொண்டான்.

லலிதாலக்ஷ்மி அவ்வப்போது அவர்களுடைய வீட்டிற்கு வந்து, மாமியிடம் சண்டை போடுவாள். தியாகுவின் காதுபடவே, “நீ இன்னமும் எத்தனை நாள் உயிரோட இருக்கப் போறே? நீ செத்துத் தொலைய மாட்டியா?” என்று கூசாமல் கேட்பாள்.

தியாகுவுக்குப் பெண்டாட்டியின் தயவு தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது. அதனால், அவளிடம் எதுவும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விடுவான்.

சொர்ணாவும் அவ்வப்போது வந்து தூபம் போடுவது வழக்கமாகிவிட்டது. மாமியின் பணம், பாத்திர பண்டங்கள், நகைகள் என்று எல்லாவற்றையும் எடுத்துக்கொண்ட பிறகும், மாமியாரைச் சாக வேண்டும் என்று சொல்லும் குணம் கொண்டவள்தான் லலிதாலக்ஷ்மி.

இதில்தான் ஒரு வேடிக்கையான முரண்பாடு. லலிதா ஷீரடி சாய்பாபாவின் பக்தை. வியாழக்கிழமை என்றால் இரவு பத்து மணிக்குக்கூட பாபாவின் ஆரத்தி பார்க்க ஓடிவிடுவாள்.

ஒருபுறம் சாய்பாபாவின் பக்தி… இன்னொருபுறம், தன்னை நம்பி வாழ்ந்த மாமியிடம் இப்படியொரு கொடூரம்! மனித வாழ்க்கையில் சில முரண்பாடுகளுக்கு விடை தேடுவது மிகவும் கடினம்.

கடைசியில், “நம்மால் எதற்கு எல்லோருக்கும் சிரமம்?” என்று மாமி நினைத்தாரோ என்னவோ… பட்டென்று சாய்ந்துவிட்டார்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை. மியின் மறைவு செய்தி தெரிந்ததும், தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். மூத்த மகனும் மருமகளும் சென்னையிலிருந்து ஓடி வந்தார்கள்.

லலிதாலக்ஷ்மியோ, “அய்யோ அம்மா… என்னை விட்டுப் போய்விட்டீர்களே!” என்று கதறிக் கதறி அழுதாள்.

அவளுடைய அழுகையை ஊரே வேடிக்கை பார்த்தது. ஆனால், அந்த அழுகையின் பின்னால் இருந்த உண்மை அங்கேயிருந்த அண்டை வீட்டுக்காரர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள்.

மாமி உயிரோடு இருந்தபோது யார் அவரைக் கவனித்தார்கள் என்பதையும், யார் அவருடைய பணத்தையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டார்கள் என்பதையும், யார் அவருடைய மரணத்தையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள்.

அதனால், லலிதாலக்ஷ்மியின் ஒப்பாரி அவர்களுக்குப் புதிதாகவோ உண்மையாகவோ தெரியவில்லை. சில உண்மைகளுக்கு சாட்சிகள் தேவையில்லை. அவற்றை அடுத்த வீட்டுச் சுவர் கூட அறிந்திருக்கும்.

இப்போது பத்தாவது நாள் நிகழ்ச்சிக்கு வருவோம்.

பத்தாவது நாள் காரியம் தொடங்கியது. மாமிக்கு பிண்டம் போட வேண்டிய நேரம் வந்தது. பிண்டம் வைக்கப்பட்டும், அதைத் தின்ன ஒரு காக்கை கூட வரவில்லை. ஆனால், அதிசயமாக, வானத்தில் நிறையக் காக்கைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன.

கீழே பிண்டம் அப்படியே கிடந்தது. மேலே காக்கைகள் கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன. அங்கே இருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“ஏன் ஒரு காக்கை கூட கீழே இறங்கவில்லை?”

அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால், அந்தக் காட்சியைப் பார்த்தவர்களின் மனதில் மட்டும் ஏதோ ஒரு பதில் மெதுவாக உருவாகிக்கொண்டிருந்தது.

எழுத்தாளர் வெங்கடேஷ் கணபதி மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஓட்டை அதிகாரம் (சிறுகதை) – வெங்கடேஷ் கணபதி

    பந்தி (சிறுகதை) – வெங்கடேஷ் கணபதி