ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மஞ்சுவின் அருகில் வந்த நந்தகோபால், ”மஞ்சு, என்னை மன்னிப்பாயா? நான் உனக்கு செய்தது மிகப் பெரிய துரோகம். நீ என்னை மன்னிக்காவிட்டால் சாகும் வரை உன் நினைவுகளோடும், கோபியின் நினைவுகளோடும் தான் வாழ வேண்டும். சத்தியமாக நான் திருந்தி விட்டேன். நாம் சேர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பம் தருவாயா மஞ்சு?” என்று அவள் கைகளைப் பிடித்து கெஞ்சினான்.
“டாடி தான் சாரி கேட்கிறாரே அம்மா. ஸாரி கேட்டால் மன்னிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தருவாயே அம்மா” என்றான் கோபி மழலை மாறாத குரலில்.
“உங்களைப் பிரிந்து போவதற்கே எனக்கு மனமில்லை மஞ்சு. வரும் கோடை விடுமுறைக்கு உங்கள் இருவருக்கும் இந்தியா வர நான் டிக்கெட் எடுத்து அனுப்புகிறேன். நீங்கள் இருவரும் கட்டாயம் வர வேண்டும். என் மேல் ஆணை! நீ வருவாயா?” என்றான் நந்தகோபால் ஏக்கத்துடன்.
அவன் வாயைத் தன் கையால் பொத்தினாள். “எதற்கு ஆணையென்றெல்லாம் பேச வேண்டும்? நாங்கள் வருகிறோம்” என்றாள்
உணர்ச்சிப்பெருக்கில் அவள் கண்களிலும் கண்ணீர். அவள் கண்ணீரைத் துடைத்த நந்தகோபால், ‘டக்’கென்று அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மஞ்சுளா முகம் சிவந்தாள்.
கோபியை கீழே இறக்கி விட்டு, அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு பிரியாவிடை பெற்று நந்தகோபால் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே விமானம் ஏறவேண்டிய ‘ கேட்’ ஐ நோக்கிப் போனான்.
அப்போது தான் முதன் முறையாக அவன் பிரிவின் சோகத்தை உணர்ந்தாள் மஞ்சு. தன்னைச் சுற்றி அவ்வளவு கூட்டம் இருந்தாலும் தனித்து விடப்பட்டது போல் தவித்தாள். ஆதரவாக கோபியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. உறைய வைக்கும் குளிர்காலம் கரைந்து, கோடைக் காலம் தொடங்கியது.
தினமும் சரியாக இரவு எட்டு மணிக்கு நந்தகோபாலின் போன் வரும். மஞ்சுளா இரண்டொரு வார்த்தைகளில் நலம் விசாரித்து விட்டு போனை கோபியிடம் கொடுத்து விடுவாள். என்னதான் பேசுவார்களோ, மணிக்கணக்கில் பேசுவார்கள் சிரிப்பார்கள் அப்பாவும் மகனும்.
ஒரு நாள் போனில் நந்தகோபால் கோடை விடுமுறையில் இந்தியா வர விமான டிக்கெட், கொரியர் மூலம் மஞ்சுளாவிற்கு அனுப்பியிருந்தான்.
“என் சௌகர்யத்தையும், என் விருப்பத்தையும் கேட்க வேண்டாமா?” என்றாள் மஞ்சுளா காரமாக.
“நீ மறுத்து விட்டால் என்ன செய்வது என்று பயம்? எனக்கு உன்னையும், நம் குழந்தை கோபியையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை. தயவு செய்து மறுக்காதே மஞ்சு ” என்றான் கெஞ்சுதலாக.
இந்தியா வருவதாக ஒத்துக் கொண்டாள் மஞ்சுளா. ஆனால் தினமும் இரவு எட்டு மணிக்கு நந்தகோபாலிடமிருந்து வரும் போன், ஒரு வாரம் முன்பிருந்தே வரவில்லை.
கோபி தான் அடிக்கடி “டாடியிடமிருந்து ஏன் போன் வரவில்லை?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஏதாவது வேலையாக இருக்கும்” என்று மகனைச் சமாதானம் செய்தாள் மஞ்சுளா.
மஞ்சுளா சென்னை கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன் அவள் தோழி நிவேதிதா, தன் மகன் நிஷாந்த்துடன் மஞ்சுளாவைக் காண வந்தாள்.
“வா நிவேதிதா” என்று வரவேற்றாள்.
“எனக்குக் கூட சென்னை வர ஆசைதான், ஆனால் வரமுடியாது ” நிவேதிதா.
“ஏன் வரமுடியாது?”
“என் திருமணத்தை வெறுத்த பெற்றோர், பிறகு என்னையோ வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். அவர்கள் இருப்பதும் சென்னை தான். சரி, அந்த வேண்டாத கதை எதற்கு? இந்த ஸ்நாக்ஸ் டப்பா கோபிக்காக. நிஷாந்த் இங்கே கோபியுடன் விளையாடிக் கொண்டு இருக்கட்டும். மாலை வந்து அழைத்துப் போகிறேன்” என்று கூறி விட்டு நிவேதிதா கிளம்பி விட்டாள்.
மஞ்சுளா சென்னையில் வந்து இறங்கினாள். இரவு ஒன்பது மணி. ஏர்போர்ட்டிற்கு நிச்சயம் நந்தகோபால் வந்திருப்பான் என்று மஞ்சுளா நம்பினாள். கோபி வாயைத் திறந்தால் அவன் தந்தையைப் பற்றித் தவிர வேறு ஏதும் பேசவில்லை.
மஞ்சுளாவும், கோபியும் ஏர் போர்ட்டிலிருந்து வெளியே வரும் வரை நந்தகோபால் எங்காவது தெரிகின்றானா என்று பார்த்தார்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை நந்தகோபால் எங்கும் தெரியவில்லை. ராகவன், சாரதா, ஜானகி மூவரும் வந்து ஆவலுடன் வரவேற்றார்கள்.
வீட்டிற்கு வந்த பிறகு சாரதா இவர்களுக்கு வேண்டிய உணவை சூடு படுத்தி சாப்பிட வைத்தாள். விமானத்தில் வந்த களைப்பினாலோ அல்லது ஜெட்லாகினாலோ மஞ்சுளாவிற்குத் தூக்கம் வரவில்லை. மனம் நந்தகோபாலைச் சுற்றியே வந்தது. இரண்டாவது முறையும் அவனை நல்லவன் என்று நம்பி ஏமாந்து விட்டோமே என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்.
இரவு மணி ஒன்று. அப்போதும் மஞ்சுளா தூங்கவில்லை. அவளுக்கு ஒரு பக்கம் ஜானகியும், மறுபக்கம் சாரதாவும் படுத்திருந்தனர். கோபி அவன் மாமாவுடன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, ஒரு காலைத் தூக்கி ராகவன் வயிற்றின் மேல் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.
இடையில் கண் விழித்த சாரதா, சந்தேகம் வந்து மஞ்சுளாவின் கன்னங்களைத் தடவினாள். கன்னமெல்லாம் ஈரம்.
“மஞ்சு, அழுதாயா ? ” என்றாள்.
“ஏதோ நினைவுகள் மன்னி” என்றாள் மஞ்சுளா மெதுவாக.
“எதுவாக இருந்தாலும் கண்களைத் துடை. தலைவலி தான் வரும். கோபி வேறு ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து விடுவான். காலையில் பேசிக்கொள்ளலாம்”
“அமெரிக்காவில் அவர் காட்டிய அன்பு, பேசிய பேச்சு எல்லாம் பொய்யோ? நல்லவர் என்று நம்பி மீண்டும் ஏமாந்து விட்டேனோ என்று நினைக்கும் போது மிகவும் ஆற்றாமையாக இருக்கிறது” என்று அண்ணியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மினாள்.
ஆறுதல் வார்த்தைகள் கூறி, குழந்தை போல் முதுகில் தட்டித் தூங்க வைத்தாள் சாரதா.
மறுநாள் காலை காபி சாப்பிட்டுக்கொண்டு ராகவன், “மாப்பிள்ளை இப்போதெல்லாம் எங்களுடன் அடிக்கடி, நீங்கள் வருவதைப் பற்றி போனில் பேசுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரமாக அவரிடமிருந்து போன் இல்லை ” என்றான் .
நந்தகோபால் எப்படியும் தங்களைப் பார்க்க வருவான் என்று அன்று முழுவதும் எதிர்ப்பார்த்தார்கள். தெருவில் போகும் எந்த காரின் சப்தத்திற்கும் கோபி ஓடிப்போய் பார்ப்பான்.
‘என்னை ஏமாற்றியது போல் குழந்தையையும் அல்லவா ஏமாற்றி விட்டான்’ என்று மனதிற்குள் நொந்து கொண்டாள் மஞ்சுளா .
“இந்த ஆண்களே இப்படித்தான் ; நம்ப வைத்து ஏமாற்றுவார்கள்” என்றாள் ஜானகி கோபத்துடன்.
“போதும் வாயை மூடு, கிழவி போல் பேசிக் கொண்டு. அவருக்கு என்ன சந்தர்ப்பமோ? மஞ்சுளா சொல்வதைப் பார்த்தால், அவர் அமெரிக்காவில் மிகவும் அன்பாகத்தான் வாழ்ந்திருக்கிறார்” என்றார் சாரதா.
“வீண் பேச்சு எதற்கு? மஞ்சு, நீ கிளம்பு. நான் ஒரு கால் டாக்சி வரவழைக்கிறேன். நாம் இருவரும் அவர் கிளினிக்கிற்கே போய்ப் பார்த்து விட்டு வரலாம்” என்ற ராகவன் உடனே வாடகைக் கார் ஏற்பாடு செய்தார்.
கோபியை சாரதாவிடம் விட்டு விட்டு அண்ணன், தங்கை இருவரும் கிளம்பினார்கள் . இவர்கள் வீட்டில் இருந்து நந்தகோபாலின் கிளினிக் காரில் அரை மணி நேரப் பயணம் தான். மருத்துவமனை வந்தவுடன் மஞ்சுளாஅவசரமாக காரை விட்டு இறங்கப் போனாள். அப்போது உள்ளேயிருந்து ஒரு பென்ஸ் கார் வேகமாக வந்தது.
“கொஞ்சம் பொறு அம்மா. மருத்துவமனை நிலமை ஒன்றும் சரியாக இல்லை. வேண்டியவர்கள் , வேண்டாதவர்கள் என்று யாராவது வருகிறார்களா என்று பார்க்கலாம்” என்றார் ராகவன்.
மெதுவாக வெளியே வந்த பென்ஸ் காரைப் பார்த்து மஞ்சுளா அதிர்ந்தாள். காரில் பின் வீட்டில் மிக ஸ்டைலாக ‘பாப்’ செய்த தலையுடன் சிந்து. அவளுடன் வேறு யாரோ ஒரு ஆள் மிக நெருக்கமாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டு போனார்கள்.
“அண்ணா இது நந்தகோபால் கார், சிந்துவுடன் வேறு யாரோ போகிறார்கள்” என்றாள் ராகவனிடம் மஞ்சுளா.
“ஆம் அம்மா, கொஞ்சம் பொறு. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் முரளி எனக்குத் தெரியும். நான் அவருக்கு போன் செய்து வரச் சொல்லியிருக்கிறேன். இப்போது வந்து விடுவார்” என்றான் ராகவன்.
பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருந்து ஒரு கார் வந்தது. இவர்கள் அருகில் நிறுத்தி காரிலிருந்து ஒரு டாக்டர் இறங்கினார். அவர்களிடம் தன்னை முரளி என்று அறிமுகம் செய்து கொண்டான். ராகவன் அவருக்கு மஞ்சுளாவை அறிமுகப் படுத்தினான் .
“நாம் இங்கிருந்து பேச வேண்டாம் . பக்கத்தில் அண்ணாமலையார் ஹோட்டல் என்று ஒன்று இருக்கிறது. இதே வண்டியில் நீங்கள் அங்கே வந்து விடுங்கள், நான் என் காரில் வருகிறேன்” என்று கூறி விட்டுத் தன் வண்டியில் ஏறிக் கொண்டான்.
அவன் பேச்சும் நடத்தையும் வித்தியாசமாக இருந்தது. மஞ்சுளா ஒன்றும் பேசவில்லை. இவர்கள் ஹோட்டலில் போய் இறங்கியதும், டாக்டர் முரளியும் தன் காரில் அங்கு வந்து சேர்ந்தான்.
“டாக்டர் ஏன் எங்களைப் பார்க்க ஏர்போர்ட் வரவில்லை? அவர்கள் வீட்டில் போகக் கூடாது என்று தடைவிதித்து விட்டார்களா?” என்றாள் மஞ்சுளா கவலையுடன்.
“அதெல்லாம் இல்லை மேடம். அவர் பெற்றோர் உங்களையும், கோபியையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்களை உடனே கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்” என்றான் முரளி .
“அது சரி, டாக்டர் நந்தகோபால் எங்கே? ஏன் எங்களைப் பார்க்க இன்று வரை வரவில்லை?” என்றாள் மஞ்சுளா கவலையுடன்.
“அவருக்கு ஒரு ஆக்ஸிடென்ட். கும்பகோணத்தில் பெற்றோர் கண்காணிப்பில் இருக்கிறார். உங்களை உடனே அழைத்து வரச் சொன்னார்கள். நானே உங்கள் வீட்டிற்கு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை, நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள் . என் காரில் நீங்களும் நானும் போகலாம். ராகவன் ஸார், வீட்டிற்கு சென்று குழந்தை கோபியை அழைத்து வரட்டும்” என்று பேசிக் கொண்டே மிக அவசரமாகக் காரில் ஏறினான்.
மஞ்சுளாவும் , அவன் காரில் கும்பகோணம் சென்றாள்.
போகும் வழியில், “டாக்டர் முரளி , உண்மையைச் சொல்லுங்கள். இப்போது அவர் எப்படி இருக்கிறார்? என்ன ஆக்ஸிடென்ட்?” என்றாள் மஞ்சுளா பரபரப்புடன் கேள்வி மேல் கேள்வி கேட்டு.
“நீங்கள் வருவதற்கு சில நாட்கள் முன்பு தான் நடந்தது. தலையில் தான் பலமான அடி, சுயநினைவு இல்லை. சென்னையில் இருந்து பிரபல மருத்துவர்கள் இருவரை அழைத்து வந்தும் சிகிச்சை தருகிறார்கள். அதனால் நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் பெற்றோர் நினைக்கிறார்கள்” என்றான் முரளி.
மஞ்சுளாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“நான் மிகவும் துரதிருஷ்டசாலி முரளி. அதனால் தான் எங்களைப் பார்க்க முடியாமல் இப்படி ஆகிறது” என்றாள் லேசான விம்மலுடன்.
“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அண்ணி . உங்கள் அதிர்ஷ்டத்தால் தான் அவர் இவ்வளவு பெரிய ஆக்ஸிடென்ட்டிலிருந்து தப்பித்துள்ளார். உங்களை நான் அண்ணி என்று கூப்பிடலாம் இல்லையா?”
“தாராளமாக. அந்த சிந்து டாக்டரின் பென்ஸ் காரைத் தான் உபயோகிப்பாளா?” என்று கேட்டாள்.
“யாரும் எதுவும் கொடுத்தால் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தன்மானமுள்ள பெண் அளவில்லை. அவளைப் பற்றி நீங்களே போகப் போக தெரிந்து கொள்வீர்கள் அண்ணி”
மஞ்சுளாவும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. போகும் வழியில் காரை நிறுத்தி ஒரு இளநீர் வாங்கி அவளிடம் கொடுத்து, அவனும் ஒன்று வாங்கிக் கொண்டான் .
மஞ்சுளா வேண்டாம் என்று மறுத்தும், “அமெரிக்காவின் சீதோஷ்ண நிலையில் நான்கு வருடங்கள் இருந்து விட்டு வந்து சென்னையின் வெயிலை அனுபவிப்பது கொடுமை. அதனால் மறுக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள் .ப்ளீஸ்” என்று வற்புறுத்தினான்.
கும்பகோணத்தில் நந்தகோபாலின் வீடும் வந்தது. கீழே ஒரு பக்கம் ‘கோபி கிருஷ்ணா கிளினிக்’ என்ற பெயருடன் பெரிய கிளினிக்காக மாற்றப்பட்டிருந்தது. முதல் மாடிக்கு அழைத்துச் சென்றான் முரளி.
வரவேற்பு எப்படி இருக்குமோ என்று தயக்கமாகத் தான் இருந்தது.
‘எப்படி இருந்தாலும் நந்தகோபாலைப் பார்த்து விட்டுப் போய் விடப் போகிறோம். அவ்வளவு தானே’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.
முரளி, போனில் மஞ்சுளாவின் வருகையை ஏற்கனவே தெரிவித்து விட்டான் போலும். நந்தகோபாலின் தாய் லட்சுமியும், தந்தை ஸ்ரீதரும் எதிர் கொண்டு அழைத்தனர்.
“டாக்டரைப் பார்க்கலாமா ?” என்றாள் மஞ்சுளா தயக்கத்துடன்.
“வாம்மா, உனக்காகத்தான் காத்திருக்கிறோம். நான்கு நாட்களாகியும் நந்தகோபாலிற்கு நினைவு திரும்பவில்லை. ஆனால் மஞ்சு, கோபி என்ற அந்த இரண்டு பெயர்களை மட்டும் தான் சொல்கிறான்” என்றாள் லட்சுமி கண்களில் நீர் வழிய.
“குழந்தை கோபி வரவில்லையா அம்மா” என்றார் ஸ்ரீதர் – நந்தகோபாலின் தந்தை ஏமாற்றமாக.
“நான் மட்டும் தான் முரளியுடன் வந்தேன். என் அண்ணா கோபியை அழைத்துக் கொண்டு வருவார்” என்றவள், லட்சுமியைத் தொடர்ந்து நந்தகோபாலின் அறைக்கு சென்றாள்.
அங்கே பெரிய கட்டிலில் நந்தகோபால் தலையில் பலத்த கட்டுகளுடன் படுத்திருந்தான். அவனை அந்த நிலையில் பார்க்கும் போது மஞ்சுளாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. கைகளிலும், கால்களிலும் கூட பலத்த கட்டுகள்.
“வாய் தான் ஏதேதோ சில வார்த்தைகள் பேசுகின்றதே தவிர உடம்பில் வேறு எந்த அசைவும் இல்லை அம்மா” என்றார் டாக்டர் ஸ்ரீதர் நந்தகோபாலின் தந்தை கவலையுடன்.
‘எத்தனை ஆப்பரேஷன்கள் வெற்றிகரமாக செய்த கைகள்; எத்தனை உயிர்களைக் காப்பாற்றிய கைகள். இப்படி செயலற்று இருக்கிறதே’ என்று நினைத்து துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் நீர் பெருகியது. அந்த கைகளை மெதுவாகத் தன் கைகளில் எடுத்தாள்.
மஞ்சுளா மெதுவாக அவன் கை மேல் தன் கைகளை வைத்தாள். அவன் கைகளை மென்மையாக வருடிக் கொடுத்தாள். லட்சுமியும் ஸ்ரீதரும் ஆவலுடன் மகனையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தனர். நர்ஸும் அருகில் இருந்து நந்தகோபாலை கவனித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக…
(தொடரும் – புதன் தோறும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings