sahanamag.com
சிறுகதைகள்

வருங்கால எழுத்தாளர்  (சிறுகதை) – ✍  க. பூமணி, செஞ்சி தாலுகா, விழுப்புரம் மாவட்டம்

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

நீலவான வெளிச்சத்தில் தென்னகீற்றுகள் காற்றில் அசையும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.

அச்சமயத்தில் “பொன்னி “என்று அம்மாவின் குரல் கேட்டு, பேனாவை வைத்து விட்டு ஓடினாள் பொன்னி.

அவளின் தாய் மதி, “எப்பொழுது பார்த்தாலும் கவிதை, கதை, பாடல் என்று எழுதிக் கொண்டேயிருக்கிறாய். வேலை பார்க்காமல் எங்கே சென்றாய்” என்று திட்டிக்கொண்டிருந்தாள்.

பொன்னியோ வேலை செய்து விட்டு மீண்டும் கவிதை எழுதத் தொடங்கினாள்.

அதற்குள் பொன்னியின் தந்தை சரவணன் “செல்லம்மா” என்று கூப்பிட

“இதோ வந்துவிட்டேன் அப்பா” என்று குரல் கொடுத்தாள் பொன்னி.

பொன்னியின் நினைவிலோ வானவெளியில் அவள் கண்ட நட்சத்திரமும் அன்று பெளர்ணமி என்பதால் சந்திரனின் முழுமதியும் ரசித்தத்தால், அருவி ஊற்று ஓடுவது போல் கவிதையும் செந்தமிழ் போல ஓடிக் கொண்டிருந்தது.

மறுபடியும் “செல்லம்மா” என கோபத்துடன் அழைக்கும் குரல் கேட்டதும், படிக்கட்டுகளில் நின்று கவிதையை எண்ணி மகிழ்ந்த பொன்னி, அவ்விடத்தை விட்டு  ஓடினாள்.

பொன்னியை பார்த்த அவளது தந்தை “செல்லம்மா, படிக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறாய். படிப்பில் அக்கறை என்பதே கிடையாது” என்று கடிந்து கொண்டார்.

தந்தையின் மீது மிகுந்த அன்பு உடையவள். அதனால் தன் தந்தை கட்டளையிட்டதால் தன் அறைக்கு சென்று படிக்க புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள்.

பொன்னி பத்தாம் வகுப்பு படிக்கிறாள். கணிதம் என்றாலே பயம், எப்படி கணக்கு போட்டாலும் வராது. ஒருவழியாக  புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தில் உள்ள கடவுள் வாழ்த்தை வாசிக்க, அவளுக்கு மிகவும் பிடிந்திருந்தது.

அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது

‘எப்படி தான்  இவ்வளவு அற்புதமாக கவிதை எழுதிகின்றனர் தெரியவில்லை’ என்று தன் மனதுக்குள் தானே சொல்லிக் கொண்டாள்.

பொன்னி பல தனி திறமையை பெற்றிருந்தாள். பள்ளியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பொன்னியின் கவிதை இல்லாமல் இருக்காது. எந்த போட்டி வைத்தாலும் பொன்னி தன் பெயரை முதலில் பதிவு செய்து விடுவாள்.

கட்டுரை, கவிதை, ஓவியம் என்று பலப் போட்டிகளில் சேர்ந்து பரிசுகளை பெற்று இருக்கிறாள். பள்ளி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி இருக்கும், அதற்குள் அவளுக்கு அலகு தேர்வு நெருங்கி விட்டது.

அதனால் அவளது அப்பா “படி” என்று அதட்டினார். பொன்னியின் லட்சியமோ ‘எழுத்தாளர்’ ஆகவேண்டும் என்பதே. ஆனால், அவளுடைய  பெற்றோர் அதை விரும்பவில்லை.

தன் மகள் பொறியியல் படிப்பு படிக்கணும் என்று அவளுடைய பெற்றோர்கள்  ஆசையாக இருந்தது.

இரண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மறுநாள் மூன்றாவதாக அவளுக்கு புரியாத புதிர் இந்த கணிதம் தேர்வு தான். அதனால் அன்று இரவு முழுவதும் அவள் கணக்குகளை போட்டு பார்த்தாள். ஆனாலும், அவளால் அந்த கடினமான பாடத்தை புரிந்து கொள்ள இயலவில்லை. இதனால், பொன்னி சாப்பிடாமால் தூங்கிவிட்டாள்.

சூரியன் செங்கதிர் ஒளி ஜன்னலின் வழியாக பொன்னி முகத்தில் சுருளிரென்று  அடித்தது. பொன்னி மெதுவாக கண்களை திறந்து கடிகாரத்தை உற்று நோக்கினாள்

மணி எட்டு ஆகிவிட்டதால். அவசரமாக தன் அறையை விட்டு வெளியேறி குளித்து விட்டு, கடவுளை தொழுது இன்று நான் எழுத போகும் கணிதம் தேர்வு எளிமையாக வர வேண்டும் என்று வேண்டி கொண்டாள்.

தன் பையில் புத்தகங்களை வைத்து கொண்டு வெளியில் நிறுத்தி வைத்திருந்த மிதிவண்டியை எடுத்து கொண்டு வேகமாக மிதித்து கொண்டு சென்றாள்

அவள் செல்லும் வழியில் பசுமையான வயல்வெளியும், குயில்கள் கீச்,கீச் என்று கூவும் இனிய கீதத்தை கேட்டு அவளுக்கு கவிதை எழுத ஆவலாக இருந்தது. அந்த பசுமையான வயல்வெளியை பார்க்க ராஜராஜ சோழன் வாழ்ந்த தஞ்சை ஞாபகம் வந்து விட்டது.

ஒருவேளை தான் அவ்விடத்தில் இருக்கிறோம் என்று திகைத்து மிதிவண்டியில் இருந்து இறங்கி விட்டாள். அந்த சாலை வழியாக வந்த ஒரு பேருந்தின் ஒலி சத்தம் கேட்டு திடுக்கிட்டு இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

மணி ஆகிவிட்டதை பார்த்து பள்ளிக்கு விரைவாக சென்று தேர்வை எழுதினாள் பொன்னி.

நாட்கள் செல்ல, பொதுத் தேர்வின் பயம் பொன்னிக்கு அதிகமாக இருந்தது. பொன்னியின் பள்ளியில் “பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்வது” என்று ஆலோசனை வழங்கி இருந்தனர். அதனால் அவள் பயத்தை துரத்திவிட்டு பொதுத்தேர்வை எதிர் கொண்டால் நல்ல மதிப்பெண்ணும் பெற்றாள்.

அதன்பின்  பொன்னி கோடை விடுமுறை நாட்களில் நூலகத்திற்கு சென்று கவிதை, வரலாறு புத்தங்களை படித்து கொண்டிருந்தாள். அதிலும், மிகச்சிறந்த மேவானி கோபாலன் எழுதிய “நம்பிக்கையே நல்வாழ்வு” புத்தகம் அவளுக்கு பன்மடங்கு நம்பிக்கையை தந்தது. விடுமுறை நாட்களும் வெகுசீக்கிரமாக முடிந்து விட்டது.

இதற்கிடையில் அவள் எழுதிய கவிதைகளை பொன்னி பத்திரமாக வைத்து கொண்டாள். பொன்னி மேல்நிலை வகுப்பு சேர்வதற்கான படிவத்தை நிரப்பி விட்டு அவள் தந்தை சரவணன் கணிதப்பிரிவில், தன் மகளை சேர்த்து விட்டார்.

பிறகு வீட்டுக்கு வந்த சரவணன், “பொன்னியை பொறியியல் படிக்க எப்பாடம் மிக அவசியம் என்று தேர்வு செய்து, அதில் சேர்த்திருக்கிறேன்” என்று சொன்னார்.

பொன்னி பயத்தோடு முதல் வகுப்புக்கு  சென்றாள். அப்பொழுது அவளுக்கு பிடித்ததை போல தோழிகள் கிடைத்தனர். அனைத்து பாடங்களும் எளிமையாக இருந்த போதிலும், கணிதம் மட்டும் அவளுக்கு ஏதோ ஒரு பெரிய விஷயமாக இருந்தது.

போக  பொன்னிக்கு அதுவும் எளிதாக விட்டமையால். கணிதம் நன்கு போட்டு பார்த்தாள். அத்துடன் தன் லட்சியத்தையும் பொன்னி மறக்கவில்லை. தினமும் ஒரு கவிதை புத்தகத்தை வாசித்து கொண்டே இருந்தாள்.

இப்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு வந்துவிட்டதால் தினமும் பள்ளியில் இடைவெளி நேரத்தில் அவள் தான் எழுதிய கவிதையை தன் தோழிகளிடம் கூறுவாள்.

அதைக் கேட்ட ஒரு தோழி, “பொன்னி நல்ல எழுத்தாளர் ஆகலாம்” என்று கூறினாள்

பொன்னியின் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோசம் தெரிந்தது. சிறிது நேரத்தில் அதுவும் மறைந்து அவளது முகத்தில் கவலை சூழ்ந்துவிட்டது. ஆனால், அவள் நம்பிக்கையை தன் தோழனாக மனதில் வைத்து கொண்டாள்.

கல்கியை போல சிறந்த எழுத்தாளர் ஆக வேண்டும் எனும் எண்ணம் பொன்னியின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. மேல்நிலை பொதுத்தேர்வு நடைபெற்று நல்ல மதிப்பெண்ணும் பெற்றுவிட்டாள்.

மே மாதம் விடுமுறை நாள் என்பதால் கவிதை அதிகமாக எழுதலாம் என்று மகிழ்ச்சியில் இருந்தாள் பொன்னி. அவளுக்கு பிடித்த கவிதை புத்தகங்களையும் கல்கியின் “பார்த்திபன் கனவு”, “சிவகாமி சபதம்” மற்றும் அகிலனின் “சித்திரப்பாவை “என்று பல சிறப்பு மிக்க புத்தகங்களை படித்தாள்.

பொன்னி தன் லட்சியத்திற்காக ஒவ்வொரு நிமிடத்தையும்  படிப்பதற்கும், கவிதை  எழுதுவதற்கு செலவிட்டாள். பொன்னி தினமும் தமிழை படிப்பதால் அவள் தன்னை புதுகவிஞராகவே மாற்றி கொண்டாள்.

அவளின்  கவிதை படைப்புகள் விவசாயம், அன்பு, சமுதாயம், நட்பு மற்றும் இயற்கை போன்ற பல வடிவங்களில் தோன்றியது. ஒரு நாள் தான் எழுதிய கவிதையை தன் தந்தையிடம் சொல்ல கவிதை நோட்டை எடுத்தாள். பின்பு தந்தையின் குரல் கேட்டு பொன்னி தன் கவிதை நோட்டையும் உடன் எடுத்து சென்றாள்.

அந்த நோட்டை பார்த்து, “என்ன செல்லம்மா?” என்று கேட்டவுடன்

அதை மறைத்து விட்டு, “ஒன்றும் இல்லை அப்பா” என்று சொன்னாள்.

மதியை அழைத்த சரவணன், “உங்கள் இருவருக்கும் ஓர் நற்செய்தி, பொன்னிக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது, நம் கனவு நிறைவேற போகிறது” என்று பூரிப்பில் இருந்தார் பொன்னியின் தந்தை.

இதைக் கேட்ட பொன்னிக்கு துக்கம் தொண்டையை அடைத்து கொண்டது. தம் லட்சிய கனவு இதோடு முடிந்து போனது என்று தந்தையை ஏக்கத்துடன் ஏறிட்டு பார்த்தாள்.

இப்போது அவரிடம் தம் லட்சியத்தை சொல்லக் கூடாது என்று தன் அறைக்கு சென்று அழுது, அன்று இரவு சாப்பிடாமல் தூங்கிவிட்டாள். 

பொன்னிக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த செய்திதாளுடன் இணைந்து ஒரு புத்தகம் வெளிவரும். அந்த புத்தகத்தில் பரிசு போட்டிகள் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியம் என பலபோட்டிகள் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

பொன்னி எழுதி வைத்திருந்த கவிதைகளை வார இதழுக்கு அனுப்பினாள். வார இதழை வாங்கி படிக்கவும் வாசகர்களுக்கு பொன்னியின் கவிதை மிகவும் பிடித்தது. பொன்னி வாசகர்களின் கருத்துகளை படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாள்.

இந்த வார இதழ் வந்து விட்டது. அதில் வாசகர் ஒருவர், ஆசிரியர் பொன்னி எழுதிய “தன்னம்பிக்கை” கவிதை  தளர்வுற்ற என் மனதை தன்னம்பிக்கை சுவாசமாக மாற்றிவிட்டது என்ற கருத்தை படித்த பிறகு,  பொன்னியின் முகம் செந்தாமரை மலர் போல் சிவந்து பூரிப்படைந்தது.

தொடர்ந்து பல படைப்புகளை எழுதிய பொன்னி, தன் தந்தையின் மனதை மாற்ற தான் எழுதிய “தந்தை” என்று  எழுதிய கவிதை கல்நெஞ்சையும் கரையச் செய்யும் என்ற தன்னம்பிக்கையோடு அந்த நாளிதழுக்கு அனுப்பினாள்.

அலுவலகத்தில் பணிபுரியும் பொன்னியின் தந்தையோ தினமும் செய்திதாளையும், நாளிதழ்களும் விரும்பி படிப்பவர். சரவணன் கடை வீதிக்கு சென்று வாரஇதழை வாங்கி வந்தார். அதில் பொன்னியின் கவிதையும் இருந்தது.

சரவணன் பொன்னியின் கவிதையை படிக்க தொடங்கினார். அவள் இறுதியில் எழுதிய இரண்டு வரிகள் தன் மனதை வருத்தியது. சரவணன் தன் மனைவி மதியை அழைத்து “எந்த பிள்ளை என்று தெரியவில்லை இவ்வளவு அருமையாக கவிதை எழுதி இருக்கிறது பாரு” என்று ஆச்சரியத்துடன் காண்பித்தார்.

அதற்கு மதி, “ஆமாம் இவள் வருங்கால எழுத்தாளராக வருவாள்” என்றாள்.  பொன்னிக்கு சந்தோசமாக இருந்தது.

அந்த வாசகர் பொன்னியின் கவிதையை படித்துவிட்டு தன் கருத்துக்களை எழுதியது பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் பொன்னி. பொன்னியின் எண்ணமோ தன் தந்தை மனம் மாறி அவர் தன் லட்சியத்திற்காக சம்மதிப்பார் என்று அன்று இரவு சாப்பிடாமல் தூங்கிவிட்டாள்.

அப்போது அவள் கனவில் தந்தையிடம்  தன் லட்சியத்தை சொன்னவுடன் ஒத்துக்கொள்வதும். தான் வருங்காலத்தில் பெரிய எழுத்தாளராக வருவதை கண்டு பொன்னியின் தந்தை ஆனந்த கண்ணீர் விடுகிறார். அத்துடன் கனவு முடிந்து விடுகிறது.

பொன்னி தான் எழுதிய கவிதையை எடுத்து வந்து தன் தந்தையிடம் “எட்டாவது வானவில்” என்ற தலைப்பில் பொன்னி எழுதிய வரிகள் அவள் தந்தையின் நெஞ்சை உருகச் செய்து விடும் என்ற தைரியத்தோடு சொல்ல போகிறாள். பொன்னிக்கு ஒரு பக்கம் பயம் இருந்தாலும் நம்பிக்கையை துணையாக கொண்டு படிக்க தொடங்கினாள். 

 “என் லட்சியத்திற்காக உழைக்கிற 

 என் அன்பு தந்தையே 

 அந்த எட்டாவது வானவில் “!

 பல கவிதைகளை பொன்னி வாசித்து காட்டியும்,  இந்த கவிதையை வாசித்தவுடன்  பொன்னியின் தந்தை சரவணன் வியக்கத்தகும் அளவில் தன் மகளை வாரி அணைத்துக் கொண்டார்.

அதன் பிறகு அவர்,  பொன்னியை பொறியியல் பாடம் பிரிவில்  சேர்க்கும் எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு தன் மகளை ஒரு நல்ல கல்லூரியில் அவளுக்கு பிடித்த தமிழ் பாடத்தை படிக்க வைத்தார்.

பொன்னியின் கற்பனையின் மூலம் பல கவிதைகளை எழுதி கொண்டே இருந்தாள். பல மாதங்கள் அவளின் உழைப்பும், விடாமுயற்சியும் சேர்ந்து மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

பொன்னி அவள் எண்ணம் போல் பெரிய எழுத்தாளராக தன் லட்சிய குறிக்கோளை அடைந்து விட்டாள். அவள் வசந்த காலத்தில் அன்று கனவில் கண்ட அனைத்தும் இப்போது நடக்கிறது என்று மகிழ்ச்சியில் துள்ளினாள். இதை பார்த்த அவள் அப்பா ஆனந்தகண்ணீர் வடித்தார்.

கற்பனை செய்யுங்கள், உங்கள் இலட்சியத்தை எண்ணி கனவு காணுங்கள், மற்றும் தன்னம்பிக்கையை உற்ற தோழனாக கொள்ளுங்கள், உங்கள் லட்சியம் நிறைவேறும் வரை  குறிக்கோளை நோக்கி பயணியுங்கள்.

(முற்றும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!