in , ,

வைரக் குற்றங்கள்! (அத்தியாயம் 1) – இரஜகை நிலவன்

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ழகான வானவெளியில் சூரியன் வேகமாக கதிர்களை வீசிக் கொண்டே முன்னேறிக் கொண்டிருந்தான். மேகங்கள் அவன் கைகளுக்குள் மாட்டாமல் கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருந்தது.

அருண் பஸ்ஸிலிருந்து இறங்கி வேகமாக குர்லா ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து ஹார்பர் லைனில் வரும் குர்லா லோக்கல் ரயிலில் வருகின்ற எட்டாவது பிளாட் பாரத்தில் வந்து நின்றான். ஸ்டேஷன் மணிக்கூண்டில் நேரம் 9.30 என்றது.

‘குர்லா லோக்கல் ரயில் 9.40க்குத் தானே புறப்படும்’ என்று எண்ணியவாறு அருகிலிருந்த கான்டீனில் “ஏக் சாய் தோ” என்று ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்து சாயா வாங்கி உறிஞ்சிக் குடித்தான்.

மக்களெல்லாம் காலிலே சக்கரங்களைக் கட்டிக் கொண்டு பறந்தார்கள். எக்ஸ்பிரஸ் ரயிலில் மக்கள் வெள்ளம் பிதுங்கி வழிந்தது. எங்கோ தீ பிடித்தது போல அடித்துப் புரண்டு ஓடும் மக்கள்… ஐந்து நிமிடம் பிந்தி போனால் என்னாகி விடும் என்று கருதவே முடியாதபடி ஓடும்.. படிகளில் இறங்கும் ஆண்கள்….. பெண்கள்…… இரயில் நிலையம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

’இன்று எப்படியேனும் ஆபீஸில் பிரமோஷனைப் பற்றிக் கேட்க வேண்டும். நமக்கு பிந்தி வந்த சுரேஷிற்கு எப்படி எக்ஸிக்யூட்டிவ் போஸ்ட் கொடுக்கலாம்’ என்று மேனேஜரிடம் கண்டிப்பாக கேட்க வேண்டும்.

வீட்டிற்கு  வாழ்த்துக் கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டே கையிலிருந்த பிரிப்கேசைத் திறந்து சிகரெட்டும் லைட்டரும் எடுத்துக் கொண்டு ஒரு ஃபோர் ஸ்குவரைப் பற்ற வைத்தான் அருண்.

சிகரெட் குடிக்க அனுமதி இல்லாதத்தால், ஒரு தூண் மறைவில்நின்று கொண்டு புகையை இழுக்க ஆரம்பித்தான். இந்த மாதிரி ஆபீஸ் நேரங்களில் கனக்கூட்டம் பம்பாயில் எல்லா இரயில் நிலையங்களிலேயுமே பொங்கி வழியும். நேரம் போகாமல் கையிலிருந்த வாட்சைத் திருப்பி பார்த்தான். மணி 9:38.36 என்றது. டிஜிட்டல் கடிகாரம்.

நேரப்போக்கிற்காக சுற்றி நின்றக் கூட்டத்தை ஒரு முறை சுவாரஸியமில்லாமல் கண்களால் அளைந்தான். எங்கும் அவசரமாக மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சல்வார் கம்மீஸ்கள் அவர்களுடைய பாய்பிரண்டைப் பற்றியும் நாளைக்கு வாங்கப் போகும் புதுடிசைன் வளையல்கள் பற்றியும் பேசிக் கொண்டு ரயில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்க்ள். பேகிபான்ட் போட்டிருந்த ஒரு குரூப் மாணவர் சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வயதானப் பெண் அந்தக் கூட்டத்தை முறைத்துப் பார்த்து விட்டுத் திட்டிக் கொண்டே போனாள். இரண்டு ஆபீஸர்கள் ரயில் நேரத்திற்கு வராததால் இரயில்வே டிபார்மென்டையே நார் நாராகக் கிழித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இருவர் தேவிலால் எப்படி ராஜினாமா செய்யலாம்? என்று விவாதித்துக் கொண்டுருந்தார்கள்.

ஒரு பிச்சைக்கார சிறுவன் வயிற்றைத் தட்டிக் கொண்டே தலையோடு கறுப்புத் துணியால் மூடியிருந்த அந்த முஸ்லீம் பெண்ணிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் தான் அந்தப் பெண் வேகமாக…. மிக வேகமாக ஓடி வந்து பெண்கள் நிற்கின்ற பகுதிக்குப் போய் யாராவது வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் கிலோக்கணக்கில் பயம் சுமந்து கொண்டிருந்தது. அந்தக் கண்கள் யாரும் தன்னைப் பார்த்து விடக் கூடாது என்று அடிக்கடி அந்தப் பெண்களின் கூட்டத்தில் குனிந்து கொண்டாள்.

அருணுக்கு அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. இவ்வளவு பேர் நிற்கும் ரயில் நிலையத்தில் இவள் ஏன் பயந்து கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது.

இப்போதுதான் அவளைக் கூர்ந்து கவனித்தான். மஞ்சள் நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். அதில் ரோஜாப் பூக்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் கறுப்புநிற சட்டை அணிந்திருந்தாள். முகத்தில் ரோஸ் பவுடர் போட்டு கன்னம் கொஞ்சம் மென்மையாக சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தாள்.

இப்போது தான் அவள் கையிலிருந்த அந்தப் பொருளைக் கவனித்தேன். ஒரு வீடியோ கேசட் இருந்தது. இவன் தன்னையே கவனிப்பதாக உணர்ந்த அந்தப் பெண் கொஞ்சம் தள்ளி நின்று இவன் கண்ணிற்கு தென்படாமல் பெண்கள் கூட்டத்திற்குள் போய் நின்று கொண்டாள்.

குர்லா லோக்கல் ரயில் வர சி.எஸ்.டி. ஸ்டேஷனுக்கு அருகில் வேலைக்குப் போகும் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். ஏறியதும் இருப்பதற்கு இடம் தேடினார்கள். ரயில் வந்ததும் அந்தப் பெண்ணை முழுவதுமாக வேகமாக மறந்து விட்டு ரயில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தான்.

‘பம்பாய்க்கு வந்த பிறகு எனக்குக் கூட சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது’. என்று நினைத்துக் கொண்டு பெட்டியைத் திறந்து பட்டுக்கோட்டை பிரபாகரனின் ‘நடுநிசி இரகசியம்’ என்ற நாவலை விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தான்.

அவனுக்குள் ஏதோ குறுகுறுப்பு ஏற்பட ஏதோ ஞாபகம் வந்தவனாக திரும்பவும் ரயிலின் ஜன்னல் வழியாக பெண்கள் கூட்டத்தில் அந்தப் பெண்ணைத் தேடினான். அவளைக் காணவில்லை.

‘என்ன இருந்தாலும் ஒருமுறை பார்த்தவன் கண்டிப்பாக திரும்பி பார்க்காமல் போக மாட்டான்.’ என்று நினைத்துக் கொண்டே புத்தகத்தை திறந்து திரும்பவும் கதையைத் தொடர்ந்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்ற சப்தம் கேட்டுத் திரும்பிய போது அந்தப் பெண் அவன் இருந்த பெட்டியின் ஜன்னலில் அருகே வெளியே நின்று கொண்டிருந்தாள்.

“என்னையா கூப்பிட்டீர்கள்?” என்றான் அருண் இந்தியில்.

“ஆமாம்”

“என்ன விசயம்?” என்று அவன் கேட்ட போது அவள் அங்குமிங்கும் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவள், பாலத்தில் ஒருவன் வேகமாக ஓடி வருவதைக் கண்டதும், “இந்த கேஸட்டை வைத்துக் கொள்ளுங்கள். நான் அப்புறம் வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று அருணிடம் கொடுத்து விட்டு (மடியில் போட்டு விட்டு) ஓடினாள்.

பாலத்தில் ஓடி வந்தவன், படிகளில் இறங்கி இரயிலைப் பிடிக்க ஓடி வர முயல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது.

அருண் ஜன்னல் வழியாகப் பார்த்த போது அந்தப் பெண் முன்னாலே ஓடி படிகளில் ஏற அவன் அவளைத் துரத்திக் கொண்டே ஓடினான்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வைரக் குற்றங்கள்! (அத்தியாயம் 2) – இரஜகை நிலவன்