in ,

வானமடி நீ எனக்கு ❤ (இறுதி அத்தியாயம்) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9     பகுதி 10     பகுதி 11    பகுதி 12

ராமலிங்கம் “ஏம்மா…நீ செஞ்சது பெரிய தவறு மா….இப்படி சொல்லாமக் கொள்ளாம நீ பாட்டுக்கு தாலியை கழட்டிருக்க….முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள் கிடையாது. சடங்கு,… சம்பிரதாயம்… இதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கு…வாழ்க்கையில ஒரு ஒழுக்கம்… கட்டுப்பாடு இதெல்லாம் இருக்கணும்னு தான் பெரியவங்க சடங்கு சம்பிரதாயம் எல்லாம் வச்சாங்க… அதையெல்லாம் மதிக்கணும்.  தாலி…ங்கறது  ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு வேலி…ஆணோட மனசுல வர்ற ஆசைக்கு ஒரு தடுப்புச் சுவர். மனசு கெட்ட பாதையில போகாம இருக்கறதுக்கான கடிவாளம். அவன் உன்னை விட்டுட்டு போயிட்டான். அது உனக்கு செஞ்ச துரோகம் தான். அவனுக்கு வேறப் பொண்ணு மேல ஆசை இருக்கறது தெரிஞ்சும் நீ தான் அவன கட்டிக்கறேன்னு சொன்ன. எனக்கு என்னமோ அவன் போகப் போறது உனக்கு தெரியும்…னு நினைக்கறேன். என்ன நான் சொல்றது சரியா?” என்று ஆழமான கோபப்பார்வையுடன் கேட்டார் பவானியிடம்.

“ம்…ஆமா…தெரியும்..” மெதுவான குரலில் தலையை தாழ்த்தியபடி சொன்னாள்.

பெருமூச்சு விட்டபடி, “ஏம்மா இப்படி செஞ்ச? அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க… தைரியமா என்கிட்ட சொல்லு… நா உங்கிட்ட ஒரு நண்பனாத் தானே நடந்துட்டுருக்கேன்” என வாஞ்சையுடன் கேட்டார்.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, “நீங்க சொல்றது சரிதான்…பா.. நான்தான் முருகேசனுக்கு இந்த ஜடியா கொடுத்தேன்.  என்னோட வாழ்க்கையிலும்…அவனோட வாழ்க்கையிலும் இருக்கற ஒரே பிரச்சனை… பிடிக்காத கல்யாணம்தான்….மனசுக்கு பிடிச்சவங்களோட வாழ முடியாத வாழ்க்கை நிம்மதியை தராது. எனக்கு பிடிச்ச சரவணனை கட்டிவைக்க யாருக்கும் மனசில்ல… முருகேசனும் கவிதாவும் விரும்பறது எனக்குத் தெரியும். அதனால  தான் ….நீங்க சொன்ன மாதிரி என்னைக் காப்பாத்திக்க தான் அவனை என்னை கல்யாணம் கட்டிக்கச் சொன்னேன். தாலிங்கற வேலின்னால… என்னோட வாழ்க்கையை நான் பாதுகாத்து கிட்டேன். இனிமே யாரும் என்னை கல்யாணம் கட்டிக்க முன் வரமாட்டாங்க…..”

“ஆனா…உன் மேல..அவச் சொல் வந்துருமேமா…”என்றார் வருத்தத்துடன்.

“எப்படியும் எனக்கு ஒரு அவப்பெயர் இந்த சமுதாயம்  குடுக்கத்தான் போகுது. நான் சரவணனைக் கட்டியிருந்தா “ஓடுகாலி”…. இல்லைன்னா…”அலையறவ”  இப்படி…அதே மாதிரி இப்பவும் “ராசியில்லாதவ”..வாழாவெட்டி” இப்படி….” என்றாள் வெறுப்பான குரலில் .

“ஆனா… நாங்க சொல்ற பையனைக் கட்டிக்கிட்டா ….இந்த மாதிரி உன்ன உலகம் தூத்தாது…. உன் வாழ்க்கை சந்தோஷமாத்தான் இருக்கும். நாங்கெல்லாம் பெத்தவங்க சொல்லைக் கேட்டு வாழ்க்கை நடத்தலயா ?…” என்றார்

“நீங்க பெத்தவங்க சொல்றத கேட்கறவங்க…ஆனா நாங்க… கடவுள் சொல்றத கேட்கறவங்க. தானா ஒருத்தர் மேல ஒருத்தருக்கு வருகிற ஆழமான…உண்மையான அன்பு… கடவுளின் செயல். அது ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஏற்பட்டுட்டா அதுக்கு பேர் தான் காதல்.”

“திருமணத்த  தெய்வீக பந்தமா நினைக்கற நீங்க…. தெய்வம் படைத்த உண்மையான அன்பை மதிக்கிறது இல்ல. நீங்க தினமும் ராமாயணம் படிக்கறவர்தானே…சீதையும் ராமரும். மாலை தான் மாத்திக்கிட்டாங்க… தாலி கட்டல. உண்மையா ராமரையோ… ராமாயணத்தை மதிக்கறவங்களா இருந்தா…அதைத் தானே பின்பற்றியிருக்கணும்.

“சடங்கையும், சம்பிரதாயத்தையும்…. நானும் மதிச்சுத்தான் சரவணனை தாலி கட்டச் சொல்லி வற்புறுத்தினேன். அவர் சொன்னது சரியாப் போச்சு. எந்த அளவுக்கு சாதியில வெறி இருக்கும்கிறதை நான் இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். உங்களாலாம் மாத்த என் ஒருத்தியால முடியாது.  அதனால தான் இந்த முடிவு எடுத்தேன். நான் சரவணனுக்காக காத்திருப்பேன். எங்களுக்கான காலம் வரும்” என்றாள் பவானி தீர்மானமாக.

“அது சாத்தியமில்லம்மா…” என்றார் வருத்தத்துடன்.

“அது மனிதர்களுக்கு சாத்தியமில்ல…ஆனா தெய்வத்துக்கு உண்டு”.

“எங்க இரண்டு பேர் மனசுலயும் அன்பை உருவாக்கியது தெய்வம்-ங்கறது உண்மையா இருந்தா….அது சாத்தியமாகும்.  நான் நம்பறேன்.”

ராமலிங்கம் எதுவும் பேசாமல் எழுந்து சென்றார்.

அடுத்து வந்த ஆறுமாத காலமும் அவளைப் பற்றி அவதூறாகப் பேசியது… அக்கிராமம். சிலர் பரிதாபப் பார்வை பார்த்தார்கள். சிலர் பெண் கேட்டு வந்தார்கள். அவள் மனது சரியில்லை என்று சொல்லி வந்தவர்களை திருப்பி அனுப்பினார் ராமலிங்கம்.

பவானி தன் நிலமையிலிருந்து வெளியேற மேற்கொண்டு வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தாள். அடுத்த மூன்று வருடங்களில் வயல் வேலையிலும், சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். தன் தந்தையின் பொறுப்பை தான் ஏற்று செம்மையாக செயல்புரிந்தாள்.

மழை காலம் ஆரம்பித்தது. மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடி பயிரெல்லாம் அழிந்தது. விவசாயிகள் துன்பமுற்றனர்.

“ஏம்மா பவானி…புதுசா வந்திருக்கிற கலெக்டர், பக்கத்தூருக்கு விவசாயிகளை பார்க்க வராராம். நீயும் நம்ம கிராமத்து சார்பா மனு எழுதும்மா….நான் போய் குடுத்துட்டு வரேன்”

“நானும் வரேன்பா….மனு கொடுத்தா மட்டும் பத்தாது….நம்ம நிலமைய தெளிவா விளக்கி பார்க்க வரச்சொல்லி கூப்பிடணும். சும்மா மனுவை வாங்கி வெச்சிக்கிட்டு பின்னால் பார்க்கலாம்னு டபாய்ப்பாங்க….நா வந்து பேசறேன்.” என்றாள்

“சரிமா…நீ சொல்றதைத்தான இத்தனை நாளா கேட்டுட்டு இருக்கேன்” என்று கூறி சிரித்தார்.

சிறிது நேரம் கழித்து “பவானி….நாளைக்கு நம்ம ஊருக்கே கலெக்டர் வராறாம்.  இப்ப தான் ஃபோன் வந்துச்சு.  அவர் ரொம்ப நேர்மையானவராம். இப்பதான் புதுசா வந்து ஆறுமாசந்தான் ஆகுதாம். எல்லாருக்கும் அவ்வளவு நல்லது செய்யறாராம். அதுவும் விவசாயத்துக்கு, விவசாயிகளுக்கு நிதியுதவி செய்யறாராம். அவரை நாளைக்கு நம்ம வீட்டுல விருந்து வெக்கணும்”

“ஏம்பா…அப்படியெல்லாம் காக்கா பிடிச்சாதான் வேலை நடக்குமா?”

“என்ன செய்யறது…அவங்க செய்ய வேண்டிய வேலையை இப்படியெல்லாம் மரியாதை செஞ்சு தான் செய்ய வைக்க வேண்டியிருக்கு. “

“உண்மையான சமூக அக்கறை உள்ளவங்க இதையெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க….”

“பாக்கலாம்…வரப் போறவங்க எப்படிப்பட்டவங்க…ன்னு”..

பவானி மழையை ரசித்துக் கொண்டிருந்தாள்.  ஒவ்வொரு வருடமும் வரும் மழைக்காலம் காதல் காலத்தை நினைவுபடுத்தி இன்பமும்,வேதனையும் கலந்து  மனதை கலக்கியது.

தன்னை மாலையிட்டவன் ஒருநாள் தன்னைக் காண வரும் பொன்னான நாள் வரும் என்று நம்பிக்கையை ஊற்றி வேதனையை அழித்தாள்.

மறுநாள் கலெக்டரைப் பார்த்துவிட்டு வந்த ராமலிங்கம் மிகவும் குழப்பமாக இருந்தார்.

“ஏம்ப்பா….கலெக்டர் மனுவை வாங்க மாட்டேன்டாரா?”

“இல்லம்மா…வாங்கிட்டாங்க.. நீ சொன்ன மாதிரி நான் எதிர்பார்க்கறத செஞ்சாதான்  உங்க கிராமத்துக்கு வேண்டிய உதவி கிடைக்கும்..னு சொல்லிட்டார்மா”…

“என்ன பணம் கேட்கறாரா? இருங்க… நாளைக்கு நான் நேர்ல போய் கேட்டுட்டு வரேன்.

“ஏன்…கவர்மென்ட் சம்பளம் பத்தலயாமா?…அவங்க வேலையை செய்யறதுக்கு நாம காசு கொடுக்கணுமா? என்னப்பா…இது?..ரொம்ப அந்நியாயமா இருக்கு?” என்று சிறிது கொந்தளித்தாள்.

“இல்லம்மா…அவர் பணம் கேட்டாக் கூடப் பரவாயில்ல…. உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சாத் தான் வேலை நடக்குமாம். “நான் சம்மதம் சொல்லிட்டேன்மா..” திடுக்கிட்டாள்.

“என்ன?…என்ன..? ஏன்….எதுக்காக என்னய கேட்கறாரு?….என்னைப்பத்தி அவனுக்கென்ன தெரியும்? இப்போ இந்த மாதிரி மிரட்ட ஆரம்பிச்சிருக்காங்களா? பதவி இருந்தா என்னவேணா செய்யலாங்கற ஆணவமா ?… ஆமா…நம்ம ஊர்க்காரங்க இத எப்படி கேட்டுட்டு சும்மா இருந்தாங்க?” படபடவென பொரிந்தாள்.

“இல்லம்மா…அவர் என்கிட்ட தனியாத்தான் இதப்பத்திப் பேசினாரு. உன்னை ஏற்கனவே பொண்ணு கேட்டு வந்திருக்காராம். “

“ஓ….நம்ம ஊர்லேர்ந்தும், பக்கத்தூர்லேந்தும் இரண்டு மூணு பண்ணையார் வந்து கேட்டாங்களே…..? அவங்கள் யாராவது ஒருத்தரா இருக்கும்.. அவர் பேர் என்னப்பா?… “

“சரவணன்” அவர் மெதுவாகத்தான் சொன்னார்.

அது பவானியின் மனதில் பனிப்பாறையாக விழுந்து உடைந்தது. தலை சுற்றுவது போல இருந்தது. சந்தோஷமும், துக்கமும் ஒரு சேர மனதை ஆர்ப்பரித்தது. தன் அறைக்குச் சென்று தாழிட்டுக்கொண்டாள். அழுகையும்,…சிரிப்பும்…மாறி மாறி வந்தது.

அதே நேரம் சரவணன் மழை நின்று விட்ட தெளிவான வானத்தைப் பார்த்தான். கண்களை நிரப்பிய வானம்  முழுவதும் பவானியின் முகம் நிறைந்து காணப்பட்டது. அவன் மனதில் சொல்லிக் கொண்டான். “வானமடி நீ எனக்கு”

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரெக்கார்டு டான்ஸ் (குறுநாவல் – பகுதி 2) – நாமக்கல் எம்.வேலு

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 4) – கவிஞர் இரஜகை நிலவன்