in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 10) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9

“அம்ம .பவானி…வாத்தியார கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு வாடா….” என்ற அப்பாவின் குரல் கேட்டு ஆனந்தம் கொள்ளா மனதுடன் படிகளில் குதித்தோடி வந்தாள் பவானி.

“அட… பவா வண்டி ஓட்டுமா?” என அதியசத்துடன் கேட்டார் தினகரன்.

“ஏம்..புள்ள..ட்ராக்டரே ஓட்டும். அவளுக்கு எல்லாமே கத்துக் குடுத்துருக்கேன்”…என்றார் பெருமிதமாக ராமலிங்கம்.

“நீங்க ஒரு வைரம்” என்று ராமலிங்கத்தைப் பார்த்துப் பாராட்டினார் தினகரன்.

“ஆனா இந்த வைரத்தச் சுத்தி விஷப்பாம்புகள் இருக்கே” என்றார் அர்த்தத்துடன் ராமலிங்கம்.

“புகை நடுவினில் தீ  இருப்பது போல்… பகை நடுவினில் பரமன்  வாழுகின்றான்….”, சிரித்துக் கொண்டே “ஏழாம் வகுப்புல நடத்தின பாடம் ஞாபகத்துக்கு வருது …” என்றார் தினகரன்.

ராக்கம்மாவும், தனலெட்சுமியும் பவானியை முறைக்க அதை கண்டும் காணாதவாறு பவானி வண்டிச் சாவியை விரலில்  சுழற்றியவாறு ஏதோ சாதித்து விட்ட கர்வமாக தலை நிமிர்ந்து நடந்தாள்.

தினகரனை வீட்டின் வாசலில் இறக்கிவிட்ட பவானியின் கண்கள் சரவணன் வீட்டைத் தேடி அலைபாய்ந்தது.

“வாம்மா….வீட்டுக்குள்ள வா” என்றழைத்தார். உள்ளே வந்ததும் அவர் மனைவி அவளை வரவேற்று உபசரித்தாள்.

“காபித் தண்ணி குடிப்பீகளா?” என வாஞ்சையோடு கேட்டாள்.

தலையாட்டி மறுத்த பவானி தினகரனின் வார்த்தைக்காக காத்திருந்தாள்.

தினகரன் தன் மனைவியிடம், “ஏம்மா… சரவணன்கிட்ட ஒரு ஃபார்ம் குடுத்திருந்தேன். கவர்மென்ட் பரீட்சை எழுத… அவன் தான் கால்ல அடிபட்டு கிடக்கானே….அத இந்த பிள்ளைட்ட குடுத்தா இதுவாவது பரீட்சை எழுதட்டும்” என்று சொல்லிவிட்டு திரும்பி

“பவானி…பக்கத்துல தான் இருக்கு சரவணன் குடிசை… வாம்மா போகலாம்…” என்று அழைத்துச் சென்றார். சரவணனைக் கண்டதும் கண்களில் நீர்க்கோர்த்தது பவானிக்கு… கஷ்டப்பட்டு மனதை அடக்கிக் கொண்டாள்.

“என்னடா?…..கால் எப்டி இருக்கு…எழுந்து இரண்டு குதி குதிச்சா….எல்லாம்…சரியாயிடும்” என்று சிரித்தார் தினகரன்.

பவானியைக் கண்ட சரவணனின் கண்கள் ஆச்சர்ய சந்தோஷத்தில் விரிந்து இன்னும் பெரிதாகியது. நெடுநாள் பாராத இருவர் கண்ளும் ஒன்றையொன்றுக் கொஞ்சிக்கொண்டன. இருவரின் உடலும் தனித்திருக்க மனதும் மனதும் ஓடி வந்து தழுவிக் கொண்டது.

“அம்மா எங்கடா காணம்?” தன் குரலால் இருவரையும் யதார்த்த உலகிற்கு இழுத்தார் தினகரன்.

“தண்ணி எடுக்கப் போயிருக்காங்க…” என்றான் சரவணன் பவானியை பார்த்துக் கொண்டே.

“சரி… ஒரு நிமிஷம் இதோ வரேன்” என்று அவர்கள் தனிமையில் பேசிக்கொள்ள வழி செய்தார்.

“உட்காரு பவா….” குரலைக் கேட்டதும் மனதில் அருவி கொட்டியது. அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அமர்ந்தாள்.

இருவரும் ஒரு நிமிடம் பேசவில்லை. “கால் எப்படி அடிபட்டது?” கேட்கும்போதே குரல் கம்மியது.

“இதுதான் ஆரம்பம் ….இன்னும் நிறைய நடக்கும்” என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தபடி.

“நாந்தான்….சொன்னேன்ல, நாம சேர்றது ரொம்ப சிரமம். என்னோட அம்மா அப்பாக்காக பொறுத்துக்கிட்டேன். இல்லன்னா உன்னக் கூட்டிட்டுப் போக எனக்குத் தெரியாதா? என்ன?”

“உன்னை தள்ளி விட்டானா?” என்று கேட்டாள் பவானி.

“அத அவனே சொன்னான். இன்னிக்கு தப்பிச்சுட்ட, ஒருநாளு உன் உசிர எடுக்காம வுட மாட்டேன்னான். பிச்சைக்காரப் பயலுக்கு வைரமணி கேட்குதோ’ன்னான். இதெல்லாம் உனக்கு தெரியணும்னு தான் சொல்றேன். கையில ஆயுதத்தை வெச்சிக்கிட்டு வெறியோட இருக்கறவன்கிட்ட அன்பைப் பத்திப் பேசி பிரயோசனமில்ல. ஆயுதத்தை கீழே போட்டா மட்டுமே ஒத்துமையா வாழ்ற வழி கிடைக்கும். வாழறதுக்கு போராடலாம். போராட்டம் மட்டுமே நிதர்சனம்னா சந்தோசமா ஒரு நொடி கூட வாழ முடியாது. நம்ம மனசுல அன்பை வளர்த்த ஆண்டவன் தான் வழி குடுக்கணும்…..” பொறுப்பாய் விவேகத்தோட பேசும் சரவணனை அதிசயமாகப் பார்த்தாள்.

:உன்னோட…..வாழ….. முடியாட்டாலும் …..உன்னோட நெ…ன….ப்பு… போதும்…..” வார்த்தைகள் திக்கி திணறி அழுகையினூடே மிதந்து வந்தது பவானிக்கு.

வாசலில் யாரோ வருவது போல இருக்க அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். சரவணனின் தாய் இவளை யாரென்று விசாரித்தாள். விபரம் தெரிந்ததும் முகம் கோபமாகச் சிவந்தது.

அவளை உள்ளே அழைத்துப் போய், “எம்புள்ளயோட வாழ்க்கை…. ஓங்கையிலதா இருக்கு….. எனக்கு இருக்கறது ஒத்தப் புள்ள…அவெ எனக்கு உசிரு. உண்மையிலேயே ஒனக்கு அவன் மேலப் பிரியம் இருந்துச்சுன்னா அவனுக்கு எதுவும் ஆகாமல் பாத்துக்க. எங்க உசிரு போனாலும் பரவால்ல….அவ.. ன்…வாழவேண்டிய…புள்ள… அவன் வாழ்க்கையைப் பாழாக்கிறாத….” கையெடுத்துக் கும்பிட்டாள்.

பவானியின் நெஞ்சில் முற்கள் குத்துவதைப் போல் இருந்தது அந்த தாயின் சொற்கள்.

கண்களில் முட்டியக் கண்ணீரைத் துடைத்தபடி “இந்த குடும்பத்திற்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கறேன்மா….கவலைப்படாதீங்க…..” அவளின் கைகளைத் தொட்டு இறுக்கிப் பிடித்து பவானி சொன்னாள்.

“நீயும் உங்கப்பாரு மாதிரி நல்லவளாத் தான் இருக்க. ஆனா சாதி சனத்த மீறி எதுவும் செய்ய முடியாது. நீ இப்ப வந்தது தெரிஞ்சா ஒன் அத்த மவன் என்ன செய்வானோன்னு பயமா இருக்கு….சரவணன் அப்பார மிரட்டிட்டுப் போயிருக்கான். அதனால நல்லா யோசன செய்யி…. இல்லன்னா….கலவரமும், … கொலையும் நடக்கும் பாத்துக்க….எல்லா…. ஒங்கையிலதான்….இருக்கு” என்று வெறுப்பும், கோபமும் கலந்த குரலில் சொன்னாள் சரவணனின் தாய்.

சரவணனிடம் “நா கெளம்பறேன், உடம்பை பாத்துக்க” என்றவளிடம்

ஒரு புத்தகத்தை நீட்டி,  “இதப்படி….. பரீட்சை நல்லா எழுதலாம்” என்றான். புரியாமல் வாங்கிக் கொண்டாள் பவானி.

தன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தும் போது வீட்டிலிருந்து தன் அத்தை ராக்கம்மா சண்டை போடும் குரல் வாசல் வரை கேட்டது.

“நீ ரொம்ப செல்லங் குடுக்கறண்ணே. குடும்பமானம் போன பொறவு வருத்தப்பட்டு ஒரு பிரயோசனுமுமில்ல. பொம்பளப் புள்ளய அடக்கி தா வெக்கணும், இல்லன்னா நமக்குத்தான் கெட்ட பேரு. நம்ம அந்தஸ்து என்ன?….கௌரவம் என்ன? நாம கால்ல போடற செருப்ப நடு வீட்ல வெச்சு பூச போட முடியுமா?….அது அது இருக்கற இடத்துல இருந்தா தான் மதிப்பு, மருவாத…. பழகறதுக்கு ஒரு தராதரம் வேணாமா? வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டலாமா?….நீ என்ன வேணா சொல்லு….நீ பவானிய அனுப்பியது தப்புத்தான்” என்று தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்த ராக்கம்மா பவானியை கண்டதும் பேச்சை நிறுத்தினாள்.

அத்தையின் பேச்சை கேட்டுக் கொண்டே வந்த பவானி எரிமலையாய் பொங்கிய தன் கோபத்தை தந்தையின் முன் காட்டக்கூடாது என தணிந்தாள்.

விறுவிறுவென்று மாடிக்கு சென்று தன் அறையைத் தாழிட்டுக் கொண்டாள். சரவணன் கொடுத்த புத்தகத்தைப் பிரித்து தேடினாள். எதிர்பார்த்தபடி அதில் ஒரு கடிதம் இருந்தது.

“என் உயிருக்கு உயிரான பவா…. நம்ம காதலுக்கு பிரச்சனை ஆரம்பிச்சுருச்சு. எங்கப்பா ரொம்ப பயப்படாறாரு…..என் உசுருக்கு ஆபத்து வரும்னு. அதனால வாத்தியார்கிட்ட சொல்லி என்னை வெளியூருக்கு அனுப்ப முடிவு செஞ்சுருக்காரு. தினகரன் சாரும் சென்னையில எனக்கு வேலைக்கு சொல்லி வெச்சுருக்காரு.

இன்னும் ஒரு வாரத்துல கட்டு பிரிச்சுருவாங்க, வேலை கிடைச்சதும் அங்க போயிருவேன். நீ தைரியமா இரு…. நமக்கு இருக்கற தடை இரண்டு தான். ஒண்ணு அந்தஸ்து…. இன்னொன்னு சாதி. இது இரண்டையும் எப்படி எதிர்கொள்ளணும்னு தினகரன் சார் எனக்கு சொல்லிருக்காரு…..அதனால இன்னும் ஒரு வருஷமோ..? இரண்டு வருஷமோ…? நமக்கான சூழ்நிலை வரும்.

எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ பி.ஜி.படிக்கணும்னு சொல்லி கல்யாணத்த தள்ளிப்போடப் பாரு. ரொம்ப எதிர்க்காத, எதிர்த்தேனா பிரச்சனை அதிகமாகும். அதனால பொறுமையா இரு… நம்ம சம்மதமில்லாம எதுவும் நடக்காது. நாம மாலை மாத்தி இயற்கையின் சாட்சியா கணவன், மனைவி ஆயிட்டோம். உன்னால எதிர்க்க முடியாத சமயத்துல அந்த ஃபோட்டாவ உங்கப்பாகிட்ட காண்பிச்சுரு. நீ எனக்கு கிடைச்ச மன நிறைவு எனக்கு இருக்கு.  எனக்கு முழு நம்பிக்கை இருக்கு . எனக்காக காத்திரு.

– உன் பிரிய சரவணன்”

(வானம் விரியும்… தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாயுள்ளம் (சிறுகதை) – பிருந்தா ரமணி, சென்னை

    கைவிடாத கல்வி (சிறுகதை) – சுமித்ரா. R